செங்குத்தான வீதி!



சாலையில் நடந்து செல்வதே சாகசம். செல்ஃபி எடுத்தால் சறுக்கி கீழே விழ வேண்டும். கைத்தடி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. இரு சக்கர வாகனமாக இருந்தாலும் கூட, பின் சக்கரங்கள் மூன்று இல்லாமல் வண்டி ஓர் இடத்தில் நிற்காது.

இவையெல்லாம் சொல்லும்போதே ஏதோ ஒரு மலைப்பகுதியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது ஒரு அழகான வீதி! நியூசிலாந்தின் டியூன்டின் நகரில் கடலிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது பால்டிவின் வீதி. ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும் வரை செங்குத்தாகவே செல்கிறது பால்டிவின்.

உயரமான மலையில் எந்தவிதமான உபகரணங்களுமின்றி ஏறுவது போல மக்கள் சாலைகளில் ஊர்ந்தும் நடந்தும் செல்கின்றனர். ‘உலகின் செங்குத்தான வீதி’ என்று கின்னஸ் ரிக்கார்டிலும் இடம் பிடித்துவிட்டது. இப்போது நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று!