பரிதலா ரவி படுகொலை செய்யப்பட்டதற்கு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிதான் காரணமா?



போஸ்ட் மார்ட்டம்-14

இந்த நேரத்தில்தான் சிம்கார்ட் நழுவி செல்லில் விழுந்த கதையாக சூரிக்கு ஒரு மேட்டர் சிக்கியது!ஜில்லா பரிஷத் தேர்தல்கள் பற்றிய கலந்துரையாடலுக்காக பரிதலா ரவி அனந்தப்பூர் கட்சி அலுவலகத்திற்கு வரப் போகிறார்...

ரைட்... அன்றே ரவியை போட்டுத் தள்ளிவிட வேண்டியதுதான். ஏனெனில் வேறு வாய்ப்பு பிறகு கிடைக்காது. கட்சியின் தொண்டனாக எளிதில் ரவியை நெருங்கி விடலாம்...யோசித்த சூரி, முகூர்த்தத்துக்கு நேரம் குறித்தார்.

ஜூலகண்டா சீனிவாச ரெட்டி தன்னுடன் நாராயண ரெட்டி, ரெகமய்யா என்று ஒரு டீமையே இணைத்துக் கொண்டு ஜனவரி 23, 2005 அன்று அனந்தப்பூர் கிளம்பினார்.அங்கே ஏற்கெனவே அவர்களுக்காகக் காத்திருந்த ராம்மோகன் ரெட்டி என்ற வங்கி ஊழியரின் இல்லத்தில் தங்கினார்கள்.
தாமோதர் ரெட்டி, நாராயண ரெட்டி, ஓபி ரெட்டி, வடே சீனா, ரங்கநாயகலு, கொண்டா... என்ற கூட்டணி பெரிதானது.ஜனவரி 24, மதியம் 1 மணி.நடப்பதைக் குறித்து அறியாமல் தன் மனைவி சுனிதாவுடன் கட்சி அலுவலகத்துக்கு வந்தார் ரவி.சுனிதா மகளிர் அணி பக்கமாகச் சென்று அவர்களுடன் பேச ஆரம்பித்தார்.ரவி தனது கட்சிப் பிரமுகர்களுடன் உரையாடினார்.கட்சி அலுவலகம் முழுக்க ரவியின் ஆட்கள்.

நம்மை மீறி யார் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்ற மனநிலையில் ரவியின் ஆட்கள் அலட்சியமாக நின்றார்கள்.தவிர, வருபவர்களை பரிசோதிக்கும் வசதியும் அனந்தப்பூர் கட்சி அலுவலகத்தில் இல்லை. சொல்லப் போனால் அதற்கான தேவை அதுநாள் வரை ஏற்படவே இல்லை...இதையெல்லாம் யோசித்துத் தானே தன் திட்டத்தையே சூரி தீட்டினார்..?
கட்சிப் பிரமுகர்களுடன் ரிலாக்ஸாக ரவி பேச...

அவரை நோக்கி எவ்வித சந்தேகமும் யாருக்கும் எழாதபடி ஜூலகண்டா சீனிவாச ரெட்டியும், நாராயண ரெட்டியும் நடந்து வந்தார்கள்.யாரோ கட்சித் தொண்டர்கள் போல... ஏதோ சிபாரிசு கேட்டு வந்திருக்கிறார்கள்... ரவியின் ஆட்கள் தலையைச் சிலுப்பி பான்பராக்கை மெல்ல...
‘என்னப்பா விஷயம்..?’ என்று கேட்பதற்கு ரவி தயாராக...ஜூலகண்டா சீனிவாச ரெட்டியும், நாராயண ரெட்டியும் அவரை நெருங்கவில்லை.

மாறாக, சரியான இடைவெளிக்கு வந்ததும் - Gun Point - ஜூலகண்டா சீனிவாச ரெட்டி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரவியை நோக்கிச் சுட்டார்!அந்தக் குண்டு ரவியின் உடலைத் துளைப்பதற்குள் -அடுத்த ஷூட்.இம்முறை சுட்டது நாராயண ரெட்டி.

மூன்றாவது தோட்டா ஜூலகண்டா சீனிவாச ரெட்டியின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்தது.நான்காவது தோட்டா, நாராயண ரெட்டியின் பிஸ்டலில் இருந்து சீறியது!அந்த இடத்திலேயே பரிதலா ரவி சரிந்தார்... ஆன் த ஸ்பாட் அவரது உயிர் பிரிந்தது.

பரிதலா ரவியை முதலில் சுட்டது நாராயண ரெட்டியா அல்லது ஜூலகண்டா ரெட்டியா என்ற சர்ச்சை இப்பொழுதும் சீமாந்திராவிலும் தெலுங்கானாவிலும் சுற்றிச் சுற்றி வருகிறது.முதல் குண்டு ஜூலகண்டா ரெட்டியின் துப்பாக்கியில் இருந்துதான் வெடித்தது என ரவியின் ஆட்கள் சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள் என்பதால் அதையே ஏற்கலாம்.

இந்தச் சம்பவம் நடைபெற்றபோது இரண்டு நாட்கள் கேஷுவல் லீவில் சூரி சிறையிலிருந்து வெளியே வந்திருந்தார் என பரிதலா ரவியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள்.‘நோ... சூரி பரோலில் ‘அப்பொழுது’ வரவேயில்லை...’ என அரசுத் தரப்பு மறுக்கிறது!
உண்மை என்ன என்பது சூரிக்கே வெளிச்சம்!ஆனால், ஒன்று. பரிதலா ரவியைச் சுட்ட ஜூலகண்டா ரெட்டியும் நாராயண ரெட்டியும் சம்பவம் நடந்த இடத்தில் பிடிபடவில்லை!எப்படி இருவரும் தப்பித்தார்கள்?புரியாத புதிர்.

அடுத்தடுத்து துப்பாக்கி வெடித்ததால் ஏற்பட்ட சத்தத்தில் தொண்டர்கள் சிதறி ஓடியிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் தப்பிக்கவும் முடிந்தது என்கிறது சிபிஐ. ஆனால், துப்பாக்கியைக் காட்டி தாங்கள் மிரட்டியதால்தான் பாதுகாவலர்களும் தங்களது ஏகே 47ஐ கீழே போட்டார்கள் என சிபிஐ விசாரணையில் கொலையாளிகள் தெரிவித்தார்கள். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த வகையில் சூரியை முதல் குற்றவாளியாக அறிவித்தது.

சிபிஐக்கு வேலையே வைக்காமல் குற்றவாளிகள் அனைவரும் தினம் ஒருவர் வீதம் அவர்களாகவே நேரில் வந்து சரணடைந்தது தனிக்கதை. கொலைக் குற்றவாளியான ஜூலகண்டா சீனிவாச ரெட்டி, தான்தான் ரவியைக் கொலை செய்ததாக டிவிகளுக்கு பேட்டி கொடுத்தது அடுத்த சுவாரஸ்யம்.அப்படியானால் இன்னமும் சுவாரஸ்யங்கள் இருக்கிறதா..?

இருக்கிறது! ஒருவேளை அன்றைய தினம் பரிதலா ரவியை சுட்டுக் கொல்ல முடியாவிட்டால் தேர்தல் தினத்தன்று ஜில்லா பரிஷத் அலுவலகம் அருகில் ஸ்கூட்டர் குண்டு வைத்து ரவியைக் கொலை செய்ய ப்ளான் பி-யை சூரி போட்டிருந்தார்!சம்பந்தப்பட்ட ஸ்கூட்டரையும் குண்டையும் மேலும் சில ஆயுதங்களையும் சிபிஐயும், போலீஸும் கைப்பற்றி ப்ளான் பி உண்மைதான் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டினர்.

எல்லாம் சரி... பரிதலா ரவி படுகொலை செய்யப்பட்டதற்கு தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் ரியாக்‌ஷன் என்ன..?

“இந்தக் கொலையைச் செய்ய வைத்திருப்பது முதல்வர் ராஜசேகர ரெட்டி..! ரவி இதற்கு முன் பல முறை குறி வைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால், இப்போதுதான் முடிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடலில் இருந்து ஒரேயொரு புல்லட்தான் மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. ஆந்திரப் பிரதேச சிறப்பு போலீஸ் பட்டாலியனைக் கொண்டு ராஜசேகர ரெட்டிதான் திட்டமிட்டு இந்தப் படுகொலையைச் செய்திருக்கிறார்..!” என்று நேரடியாகவே தாக்கினார் நாயுடு.

ரவி இறந்ததால் காலியான பெனுகுண்டா தொகுதிக்கு மறுதேர்தல்  அறிவிக்கப்பட்டது. தெலுங்கு தேசத்தின் சார்பில் கொலையான பரிதலா ரவியின்  மனைவி சுனிதாவே நிறுத்தப்பட்டார்.

காங்கிரஸ் தரப்பில் பானுமதி  நிறுத்தப்படவில்லை. இனியும் அந்த மாவட்டத்தில் குடும்பப் பூசலால்  ரத்தக் களரி ஏற்படுவதை, தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்த முதல்வர்  ராஜசேகர ரெட்டி, பானுமதிக்குப் பதிலாக போயா ராமுலு என்பவரை  வேட்பாளராக அறிவித்தார்.

ஆனாலும் தெலுங்கு தேசம் கட்சி வலுவாக இருக்கும்  அனந்தப்பூர் மாவட்டத்தை காங்கிரஸ் கோட்டையாக மாற்ற வேண்டி தெலுங்கு  தேசத் தொண்டர்கள் மீதான கொலை வெறி மட்டும் நிறுத்தப்படவில்லை.

சுனிதா  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த அன்றே பெரும் கலவரமாகி ஆறு தொண்டர்கள்  போலீஸின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள். இந்தக் கலவரத்திற்காக  2000 தெலுங்கு தேசத் தொண்டர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ்  சார்பில் நின்ற ஸ்ரீராமுலு எப்பாடுபட்டாவது சுனிதாவைத் தோற்கடித்து  ரவியின் குடும்ப ஆதிக்கத்தை தடுக்க நினைத்தார். தெலுங்கு தேசத் தொண்டர்களை  தன் பக்கம் திசை திருப்ப சாம, பேத, தான தண்ட வழிகள் அத்தனையையும்  பயன்படுத்தினார் ஸ்ரீராமுலு.
பணம் கொடுப்பது, அவர்கள்  மீதுள்ள வழக்குகளைக் காட்டி கைது பயத்தை ஏற்படுத்துவது, கைது செய்தது...  சிறையில் அடைத்தது என்று அத்தனை அட்டூழியத்தையும் காங்கிரஸ் அரசு இந்த  இடைத்தேர்தலில் செய்தது. இவைஅனைத்தும் பல தொலைக்காட்சிகளில்  கேண்டிட் கேமிராவில் பிடிபட்டு ஒளிபரப்பப்பட்டன.

இத்தனை எதிர்ப்புகள்  இருந்தும் பரிதலா ரவியின் மீதிருந்த அபிமானத்தால் அவரது மனைவி சுனிதா  19 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த ஓட்டுகளுக்குக்  காரணம் ரவியின் மீதான பயம் அல்ல... ரவி கொஞ்சம் தொகுதி மக்களுக்காகச்  செய்திருக்கும் நல்ல விஷயங்களுக்காகவும்தான் என்கின்றன மீடியாக்கள்!

(தொடரும்)  

கே.என். சிவராமன்