தொல்(லைக்) காப்பியம்



தமிழ் சினிமாவின் ஸ்டெப்னிஸ்!

கதாநாயகனோட தலைமுடி அசைஞ்சாலும், கதாநாயகியோட தாவணி பறந்தாலும் கைதட்டி விசிலடிக்க பெரிய கூட்டமே இருக்கு. காமெடியன் போடுற கடிக்கும், வில்லன்கள் வாங்குற அடிக்கும் கூட கைதட்டல்கள் உண்டு. ஆனா தண்டவாளத்துல கொட்டுன கருங்கல் மாதிரி, கடைசி வரைக்கும் மீட்டப்படாத ஸ்வரங்கள் மாதிரி, தமிழ் சினிமால பல கேரக்டர்கள், ஸ்கூட்டருக்கு பின்னால ஸ்டெப்னி போல முக்கியத்துவம் தெரியாமயே முடிஞ்சு போயிடுதுங்க.

ஒரு படத்தோட திரைக்கதையில முக்கியமான டுவிஸ்டுகளுக்கு வித்திட்டாலும் அந்த கேரக்டருங்களோட முக்கியத்துவம் மூணாறு மிஸ்ட் மாதிரி கடந்து போயிடுதுங்க.வீட்டுல சாம்பார் வைக்க பருப்பு இல்லாட்டியும், நாட்டுல நடக்கிற பிரச்னைக்கெல்லாம் தீர்ப்பு சொல்ல செருப்பு போட்டுட்டு கிளம்பறவங்கதான் ஊர் நாட்டாமைகள்.

ஹை பட்ஜெட் நாட்டாமை விஜயகுமார்ல இருந்து, மீடியம் பட்ஜெட் நாட்டாமை வினுசக்கரவர்த்திக்கு வந்து, லோ பட்ஜெட் நாட்டாமை ‘கரகாட்டக்காரன்’ சண்முகசுந்தரம் வரைக்கும் ஷார்ப்பான சொற்களால் சொல்லாத தீர்ப்புகள் இல்லை.  நாம வருஷத்துல ஆயுதபூஜை அன்னைக்குதான் கிடைக்கிற இடத்திலெல்லாம் சந்தனம் வைப்போம். ஆனா உடம்புல ஒரு பார்ட் விடாம சந்தனம் தேய்ச்சு, வருஷம் முழுக்க ஆயுதபூஜை கொண்டாடும் ஆட்கள் நம்ம தமிழ் சினிமா நாட்டாம அய்யாக்கள்தான்.

‘தாத்தா நான் பார்த்தேன்’னு சிறுவர்களையும் சாட்சி சொல்ல அழைச்சு, சிறுவர்களின் ஓட்டுரிமைக்காக பாடுபட்ட வல்லவர்கள்! சொந்தக்காரன் சாட்சி சொல்ல வந்தா ‘செல்லாது செல்லாது’னு ரெக்கமெண்டேஷனை நிராகரித்த நல்லவர்கள். கேஸ் கொடுத்தவன்ல ஆரம்பிச்சு, பலான கேஸோட போனவன் வரை எல்லோரையும் 18 வருஷம் ஊர விட்டு தள்ளி வச்சு, செல்போன் டவர்கள் இல்லாதப்ப சிம் கார்டு இல்லாமயே, அவர்களை நாட் ரீச்சபள் ஆக்கினவர்கள்தான் நம்ம தமிழ் சினிமாவில் வரும் நாட்டாமைகள்.

குடும்ப நல கோர்ட்டை விட அதிகமா டைவர்ஸ் கேஸை பார்த்தவர்கள் நம்ம நாட்டாமைகள். அதுலயும் ‘சம்மூவா, வுடுறா வண்டிய’னு விஜயகுமார் குதிரை வண்டில போறத சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரியோட ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ல லைவ்வா காட்டலாம். படத்துல கோட்டை மாதிரி காட்டுற இவரு வீட்டுல பொழுதுக்கும் வெத்தல போட்டு புளிச் புளிச்சுன்னு துப்பி, இப்ப செங்கோட்டையா பண்ணி வச்சிருக்காருன்னு இவரு மேலயே ஒரு பிராதும் இருக்குது.

பழைய பைக்கை ஸ்டார்ட் பண்றதை விட கஷ்டமானது பஞ்சாயத்தை ஸ்டார்ட் பண்றது. ‘காலண்டர்னா தேதியை கிழிக்கிறதும், கபடின்னா கோட்டை அழிக்கிறதும் சகஜம் தானேப்பா’, ‘வண்டுன்னா தேன் எடுக்கிறதும், சிண்டுன்னா பேன் எடுக்கிறதும் சகஜம்தானேப்பா’, ‘இஷாந்த் ஷர்மான்னா பந்தை போடுறதுக்கு, ரோஹித் ஷர்மான்னா பந்தை ஆடுறதுக்குமா இருக்கறது சகஜம்தானேப்பா’னு பஞ்சாயத்தை தொடங்கவே நாலஞ்சு பன்ச் டயலாக் வச்சிருப்பாங்க! அந்தளவுக்கு செய்யுற தொழிலை தெய்வமா நினைச்சு செய்வாங்க.  

‘நெல்லு போட்டா நெல்லு முளைக்கும், சொல்லு போட்டா சொல்லு முளைக்கும், ஆனா கல்ல போட்டா காலு வலிக்
கும்’னு வாய்க்கு வந்ததை அடிச்சு விட்டாலும், கிராமம் சார்ந்த படங்களில் நாட்டாமைகளுக்கு அப்புறம் நாம கண்டுக்காம விடறது அடியாட்களைத்தான்.Pubக்கு வெளிய தடியாள் நிக்கிறதும், ஃபைட்டுன்னா அடியாள நொக்குறதும் சகஜம்னு ஓணாண்டி புலவரே ஓதி வச்சிருக்காரு. கேப்டன், தான் வச்சிருந்த 1978 மாடல் யமஹா பைக் கிக்கர உதைச்சதை விட, இந்த அடியாளுங்கள உதைச்சதுதான் அதிகம்னு லைலா காலேஜ் புள்ளி விவரம் சொல்லுது.

சமையல் செய்யற கரண்டில ஆரம்பிச்சு தண்ணியடிக்கிற அடி பம்பு வரை; ஸ்ப்ளெண்டர் சைலன்ஸர்ல ஆரம்பிச்சு ஸ்கார்ப்
பியோ பம்பர் வரை இவங்க அடிவாங்காத பொருளே இல்லை. நாம பரவாயில்ல. தெலுங்குல தென்னை மரத்த வேரோட புடுங்கி தலையில அடிக்கிறாங்களாம்! கரண்டு கம்பத்த புடுங்கி காலுலயே அடிக்கிறாங்களாம்!

வானத்துல இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பறந்ததை விட, விஷால், விஜய்கிட்ட அடி வாங்கி இவங்க பறந்த நேரம்தான் அதிகம்.
ஆத்துல, மேட்டுல, காட்டுல, ரோட்டுல, வீட்டுல, வீட்டு மேல ஓட்டுலனு இவங்க பறந்து போயி விழாத இடமே இல்ல!

கொஞ்சம் வேகமா விஷாலை ஒரு கிக் விடச் சொன்னா, சந்திரனுக்கு போயி தண்ணி இருக்கான்னு பார்த்துட்டு திரும்பி கூட வந்திடுவாங்க.
தொடைக்கு மேல ராஜ்கிரண் வேட்டி கட்டுறப்ப அவரு டவுசர் போட்டிருக்கிறதுதான் நமக்கு தெரியும். ஆனா, அந்த டவுசர் என்ன டிசைன்னு அடியாட்களுக்குதான் தெரியும். அத்தனை தடவ அவரு காலுக்கு அடியில bodyய படுக்க போட்டிருக்காங்க!

மிஷ்கின் படத்துல அட்டண்டென்ஸ் ஆர்டர்படி ஒவ்வொருத்தரா அடி வாங்குவாங்க. அதே சமயம் வில்லன் ஆர்டர் போட்டா கும்பலா போயும் உதை வாங்குவாங்க. டப்பா பவுலர் சிக்குனா தவான் அடிக்கிற சிக்ஸ் கூட தொண்ணூறு மீட்டர்தான் போகும். ஹீரோகிட்ட அடிவாங்கிட்டு இவங்க முன்னூறு மீட்டர் போயி விழுவாங்க!

தனது வாழ்நாள் முழுக்க வில்லனுக்கு செட்டப்பாகவும், கொடுக்கிற ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடுற சுந்தரிகளாகவும் கலைப்பயணம் முழுக்க கப்பல் ஓட்டுற சைடு வில்லிகள்தான் நாம அடுத்து பார்க்கப் போறது. பத்துப்பாட்டு தெரியாத தமிழன் கூட இருக்கான். ஆனா, குத்துப்பாட்டு தெரியாத தமிழன் இல்லை. இந்த குத்துப்பாட்டுக்கு ஆடுற ஸ்கூலுக்கு டீச்சர் டிஸ்கோ சாந்தின்னா, தலைமை ஆசிரியை தங்கத்தாரகை சில்க் ஸ்மிதா!
ஃபுல்லா ஏசியை போட்டுட்டு போர்த்திட்டு தூங்குற லாஜிக்தான், அம்புட்டு அழகான சில்க்கை கடைசி வரைக்கும் படம் முழுக்க வர ஹீரோயினா போடாம விட்டது.

சின்ன வீடா நடிச்சு நடிச்சே பெரிய பங்களா வீடு கட்டுனவங்க Y.விஜயா. ஹீரோயினா இருக்குமளவு அழகு இருந்தாலும், வில்லனுக்கு செட்டப்பாவோ சின்ன வீடாவோ மட்டும் ஏன் நடிச்சாங்க என்ற கேள்விக்கு கூகுளில் கூட ஆன்சர் இல்லையாம். வில்லனோட ஆசைநாயகியா வந்தே பல இளைஞர்கள் மனச மோசம் செஞ்சவங்க அனுராதா. தமிழ் சினிமாவுல வில்லன்களுக்கு இடது பக்கத்துல இதயம் இருக்கோ இல்லையோ இவங்க கண்டிப்பா இருப்பாங்க. பட்டை சாராயம் முதல் ஃபாரின் சரக்கு வரை வில்லன்களுக்கு இவங்க ஊத்திக்கொடுக்காத சரக்கே இல்லை.

எல்லாம் ஒழுங்கா போயிக்கிட்டு இருக்கிறப்போ, கூட்டணி மாறுற மருத்துவர் அய்யா மாதிரி டக்குன்னு ஹீரோவுக்கு உதவப் போயி டெபாசிட் இழந்திடுவாங்க!அடுத்து வர வாரங்களில் சினிமாவில் கண்டுக்கப்படாம போன கேரக்டர்களான ‘கூட இருந்தே குழி தோண்டுற நண்பன், நட்புக்கு உயிர் தரும் தற்கொலைப் படை நண்பன், அரை லூசா முழு லூசான்னு தெரியாத ஹார்லிக்ஸ் ஆன்ட்டிக்களான அம்மா, மூஞ்சியை முறைச்ச மாதிரியே வச்சிருக்கும் அப்பாக்கள்’னு ஒண்ணுவிடாம பார்ப்போம்!    

 - தோட்டா ஜெகன்