மை தீட்டிய வழிகள்



அந்தகாரம். அடர் மழை... அடர் இருள்... அடர் காடு. தொட்டால் ஒட்டிக் கொள்ளும் இருட்டு. மழையைக் குழைத்த மையிருட்டு. இருளின் பிசுபிசுப்பு மழையில் கரைந்தோடுவது போன்றும் இருந்தது. திடீரென கண்ணுக்கு ஒரு முழம் தூரத்தில் உலகம் முடிந்துவிட்டதுபோல இருட்டின் சுவர். எதுவுமே தெரியவில்லை. எந்த திக்கில் திரும்பினாலும் இருளன்றி வேறில்லை. அடுத்த ஓர் அடியை எந்தப் பக்கம் வைப்பது? எதிரில் இருப்பது பள்ளமா, மரமா, சுவரா, விசும்பா? சூனிய பெருவெளியில் திசை தொலைந்துபோன விண்கல் போல இருந்தான்.

எப்படி இங்கே வந்தோம் என்பது ஒரு தத்துவார்த்தக் கேள்வியாக, புதிராக அவன் உள்ளே எழுந்தது. திசையோ, பாதையோ தெரியவில்லை. மனிதன் உருவாக்கிய பல கோடி செயற்கைப் பொருள்களில் ஒன்றுகூட அவன் கண்ணில் படவில்லை. கட்டடம், வாகனம், மைல்கல், செங்கல், பிளாஸ்டிக் காகிதம், மின்விளக்கு வெளிச்சம் ஏதாவது ஒன்று தெரிந்தாலும் அவனுக்குக் காலம் புலப்படும்.

காலதேச வர்த்தமானங்கள் அற்ற பெருவெளி. அங்கிருந்த மரங்களும்கூட இன்னதென்று தெரியவில்லை. இருட்டு இருட்டு இருட்டு. மழை மழை மழை. குளிர் குளிர் குளிர். அடிவயிறு வரை ஆடியது. கைகள், கால்கள் ஈரத்தால் பழுத்துவிட்டன. செயற்கை, இயற்கை இரண்டுமே அவனுக்கு வழிகாட்ட உதவவில்லை.

அவள் இங்கா வரச் சொன்னாள் என்ற சந்தேகம் துளிர்விட்டது. சந்தேகத்தை ஆராய்ச்சி செய்யும் மனநிலைகூட இல்லை. தேவை, அவள் வீடடைய ஒரு பாதை. அதுதான் அவனுடைய இனிய லட்சியமாக இருந்தது. ஒரு வெளிச்சம் அதற்கு அடுத்த லட்சியம். பிறகு, குளிருக்கு இதம். பாதை, வெளிச்சம், இதம் எல்லாமே அவளாகவும் இருக்கலாம். இங்கேதான் அருகே இருக்கிறாள் என்ற ஒரு சொட்டு எரிபொருளில் ஓடிக்கொண்டிருந்தது மன இயந்திரம்.

‘‘பெடகாடு எனச் சொன்னால் யாருக்கும் தெரியாது. பொட்டன் காட்டில் ஒரு வியூ பாயின்ட் இருக்கும். அதில் நின்று பார்த்தால், இடதுபுறம் ஓர் அரசமரம் தெரியும்...  அந்த மரத்தடியை ஒட்டி ஒற்றைத் தடம் தெரியும். அதிலே இருநூறு மீட்டர் நடந்தால் அங்கே ஒரே ஒரு வீடுதான் இருக்கும். அதுதான் எங்கள் வீடு...’’ அவள் சொல்லும்போது எல்லாமே தூரமாகத் தெரியவில்லை. அவள் பேசிய மலையாளமும் தமிழ் போலவே புரிந்தது. அவள் சொன்னபடி இதுவரைக்கும் தட்டுத் தடுமாறி வந்துவிட்டான். இங்கே பக்கத்தில்தான் பெடகாடு. கைக்கெட்டும் தூரத்தில் அந்த வனதேவதை, கண்ணாமூச்சு காட்டுகிறாள். வியூ பாயின்ட் எங்கே எனக் கேட்க வேண்டும்.

அந்த டீக்கடைக்காரர்... ‘‘பெடகாடோ?’’ என அதிர்ந்து, காட்டு மாடுகள் அலையுமே என்பதை மலையாளத்தில் சொன்னான்.  இங்கே எந்தப் பாதையும் பாதையாக இல்லை.சென்னையிலிருந்து கம்பம் ஒரு பஸ். அங்கிருந்து கட்டப்பனா செல்ல ஒரு பஸ். அங்கிருந்து வேன். முதல் நாள் இரவு தொடங்கிய பயணம். அவள் சொன்ன டீக் கடையும் இருந்தது. வேன்காரன் சொன்னபடி வந்து இறக்கிவிட்டான். காலையில் மதுரையில் பஸ்காரன் நிறுத்தியபோது, ரெண்டு இட்லி. மதியம் கம்பம் வந்து சேர்ந்தபோது, மீன் குழம்பு சாதம். கட்டப்பனாவில் புட்டு. இப்படியான ஆகாரமார்க்கம்.

அவள் சொன்ன வழியில்தான் வந்தான். இரண்டு பஸ்களில் மாறி... தொடர்ந்து ஒரு வேன் பயணம். இடுக்கி மலை. இடுக்கியில் இருந்து மூணாறு போகிற சாலையில் பொட்டன் காடு எனச் சொன்னாள். சாலை என்றதும் சென்னை- திருச்சிஹைவே மாதிரி மனதில் உருவான சித்திரம் தவறிழைத்துவிட்டது. இது சாலை அல்ல, காடு. மலைக்காடு. அதில் ரோடு. அவள் சொன்ன டீக்கடை எல்லாமே சரியாக இருந்தது.

இந்த ராத்திரியில் டீக்கடையின் கதவைத்தட்டி பொட்டன் காடு போகிற வழி கேட்டபோது, அந்த டீக்கடை ஆசாமி மிரண்டது தெரிந்தது. அது டீக்கடை அல்ல... டீ வீடு. வீட்டின் கதவுதான் டீக்கடைக்கும் கதவு. ஒவ்வொரு பலகையாகக் கழற்றி, ஓரமாக அடுக்கினால் கடை. மூன்று பலகைகள். ஒரே ஒரு பலகையை மட்டும் கழற்றினால் வீட்டு வாசல். ‘‘யாரானு?’’ என்றான் கண் சுருக்கி.

‘‘பெடகாடு... பெடகாடு போகணும்...’’
‘‘பெட...காடோ?’’ என அவன் இழுத்ததில் தெரிந்தது அதன் தூரம்.‘‘அங்கே சொர்ணா வீடு தெரியுமா?’’ என்றான்.
‘‘சொர்ணாவோவ்?’’ என யோசித்தார். ‘தெரியவில்லை’ எனத் தலையசைத்தார். அது வழக்கம்போல இயங்கும் டீக்கடைகூட இல்லை. யாராவது வழி தவறி வந்தால், தொலைதூரத்தில் இருந்து வன அதிகாரியோ, தேயிலைத் தோட்ட அதிகாரிகளோ வந்தால் அடுப்புப் பற்றவைத்து டீ போட்டுத் தருவார்கள்.

‘‘இருந்து காலையில் கண்டுபிடிக்கலாம். இருட்டில் செல்வது சரியில்லை...’’ என அவர் மலையாளத்தில் சொன்னது இத்தனை வீரியமாக அப்போது புரியவில்லை.சொர்ணா வீட்டுக்குத் தெள்ளிய தமிழில் முகவரி தந்திருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த இடம் முகவரியால் ஆனது அல்ல... அடையாளங்களால் ஆனது.கருவேல மரம், அதைக்கடந்த சிற்றோடை, மேற்கே ஒரு பெரிய பாறை, அதன் மீதேறி இறங்கினால் சறுக்கிச் செல்லும் சரளைச் சரிவு, அங்கே தென்படும் ஓர் ஒற்றையடிப்பாதை, மேற்கு நோக்கி நடந்தால் தென்படும் புதர் மரங்கள்... இப்படித்தான் சொல்லலாம்.

மனதில் ஓடிய வழியில் குமார் சென்றுகொண்டிருந்தான். வழிகாட்டியது செல்போனில் தெரிந்த அந்த முகம். அந்த மை தீட்டிய விழிகள். அதுதான் இவ்வளவு தூரத்துக்கு வழிகாட்டியது. அதுவே மேலும் காட்டும். ஒரு மின்னல் வெட்டியபோது தூரத்தில் காட்டு மாடு நின்று ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

முட்டி வீசினால் நூறடி தாண்டி விழுவோம். ஒரு மலைக்காட்டின் இருட்டு மழையில் ஒரு மாடும் ஒரு மனிதனும்  நனைந்து தேடும் வினோதமான உயிரியல் வேட்கை. புல் மேயும் மாட்டின் வேட்கையும் சொர்ணாவைத் தேடி வந்த குமாரின் வேட்கையும் தராசின் சம பாரமாக இருக்குமா? இல்லை, வேறா? ஏறத்தாழ ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்தாகிவிட்டது. இன்னும் சில நூறு மீட்டர் தூரத்தில் ஒளிந்திருக்கிறாள் அந்த தேவதை. மறைந்து ஜாலம் காட்டும் மாயமோகினி. சில நூறு மீட்டரில் பதுங்கியிருக்கும் சொர்க்கம். இந்தத் தருணம்... அது மட்டுமே அவன் இயக்கியது.

ஒரு வார திட்டமிடல், ஒரு முழு நாள் பயணம். எல்லாமே செல்போனில் பூத்த அவளுடைய புன்னகைக்கு. அது மட்டும்தானா? அவள் கண்களிலும் ஒரு புன்னகை இருந்தது. அவளால் உதட்டாலும் கண்களாலும் சிரிக்க முடிந்தது. கண்களில் புன்னகையை மிஞ்சிய ஒரு காந்தம் இருந்தது. சுண்டி இழுக்கும் காந்தம். இமைகள் வழி புரட்டிப்போடும் புயல் வீசியதை உணர்ந்தான். நடுக்காட்டில் யாருமற்ற வெளியில் உடல் நடுங்கும் குளிரில் உள்ளிருந்த ஒரு தீபம், ஒரே ஈர்ப்பு... அவள் சிரிப்பு. மைதீட்டிய அந்த விழிகளின் சிரிப்பு.

இருட்டு, கண்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகியது. சற்றே புதர் குறைந்திருந்த வழி பாதை எனப்பட்டது. டீக்கடைக்காரர் தோராயமாக ஆள்காட்டி விரலை நீட்டிக் காட்டிய வழி இதுவாகத்தான் இருக்கும் என ஏற்றுக்கொண்டான். கடைக்காரர் இன்னொன்றையும் சொன்னார். ‘‘இந்த அந்தகாரத்திலா..?’’ அதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த மலையையும் குளிரையும் இருட்டையும் அவளிடம் ஒப்படைக்க வேண்டிய தன்னையும் ஒரு வரம்போல நினைத்தான். சொர்ணா...ஆ!
சொர்ணாவை முதன்முதலாகப் பார்த்தது ஒரு முடி வெட்டும் கடையில் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். குமார் வழக்கமாகச் செல்லும் கடைதான். ஆவடிக்கு குடிவந்த நாளிலிருந்து அந்தக் கடையில்தான் முடி வெட்டிக் கொண்டிருந்தான். அந்தக் கடைக்குப் புதிதாக முடிவெட்டும் வேலைக்கு வந்து சேர்ந்தான் எலீசா.

50 வயதுக்கான பரப்பில் இருந்தது அவனுடைய வயது வரம்பு. 70 சதவிகிதம் மலையாளமும் 30 சதவிகிதம் தமிழ் போன்ற ஒன்றையும் கலந்து பேசினான். தலை, வழுக்கை ஏறியிருந்தது. அதை சரிக்கட்ட தாடியை ஈடுகட்டியிருந்த அந்த லாவகம் பிடித்திருந்தது. திறமைசாலி. எந்த மண்டையை எப்படிக் கையாளவேண்டும் என அறிந்திருந்தான். எலீசா ஒருவித சோகத்தில் இருந்தான். அது தாடி ஏற்படுத்திய தோற்றமா, உள்ளே ஏதேனும் சோகம் அடர்ந்து கிடக்கிறதா எனப் பிரித்தறிய இயலவில்லை.

அன்று கடையில் போய் அமர்ந்ததும் கண்களைத் துடைத்துக்கொண்டு, ‘‘வாங்க சாரே...’’ என அழைத்தான். கண்கள் ஈரம் பாய்ந்து சிவந்திருந்தன.
‘‘சாரே... குறைச்ச சமயம் கடைய கண்டுட்டோ? இந்தா வரும்...’’ என ஓடினான். அவன் சொன்னதை மலையாளத்தில் சரியாக இப்போது எழுத முடிந்ததா என எனக்கும் சரியாகத் தெரியவில்லை.

எலீசா வரட்டுமெனக் கடையில் இருந்த அன்றைய தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்தான் குமார். சுவாரஸ்யமான கள்ளக்காதல் செய்திகள், ஊழல்கள், நடிகர்களின் அரசியல், சினிமா முயற்சிகள் என வழக்கமாகத்தான் இருந்தன.

அப்போதுதான் அந்த செல்போன் மணி. எலீசா செல்போனை மறந்து வைத்துவிட்டுப் போயிருந்தான். அது வீடியோ கால். அதில் தெரிந்தது ஒரு பெண் முகம். போனை கையில் எடுத்து அந்த முகத்தைப் பார்த்தான். முகமல்ல அது... ஜொலிக்கும் தங்கம். அசந்துபோய் பார்த்தபடி இருந்தான். அது, இன்னொருத்தரின் போனை எடுத்துப் பேசுகிற அளவுக்கு குமாருக்கு தைரியத்தையும் ஈர்ப்பையும் கொடுத்தது. பச்சை பட்டனை அழுத்தச் செய்தது அவனுள் விழித்த ஆண்மை. அழுத்த வைத்தது அவளுடைய பெண்மை.

அப்போது அந்த வீடியோவில் தோன்றியவள்தான் சொர்ணா. குமாரின் முகத்தைப் பார்த்தவுடன் அவள் முகத்தில் ஒரு மெல்லிய அதிர்ச்சியோடு கூடிய மகிழ்ச்சி. பெரிய விழிகளை மேலும் அதிகம் உருப் பெருக்கிப் பார்த்தாள். அது, மிகுந்த பாவனைகள் நிரம்பியதாக இருந்தது. பாவாடையும் முண்டும் மட்டும் கட்டிய ஒரு பெண்ணை அத்தனை நெருக்கமாகப் பார்ப்பது குற்றம்போல உணர்த்தியது.

‘‘ஓ... எண்ட அச்சன் அவிட இருக்கின்னோ?’’ என்ற அதிர்ச்சி வினா.‘‘மறந்து வெச்சிட்டு போயிட்டாரு...’’ என்று துல்லியமாகத் தமிழில் சொன்னான். ஆனால், அவளுக்குப் புரிந்தது. சிரித்தாள்.‘‘நிங்களுடைய பேர் குமார் அல்லே? அச்சன் பறைஞ்சுட்டுண்டு...’’ என்றாள்.
‘‘என்னைத் தெரியுமா?’’

‘‘வளர நன்னாயிட்டு அறியாம்...’’ நெஞ்சில் வைத்துச் சொன்னாள். தன்னையே அங்கே வைத்ததுபோல, எல்லாமே உயர் பாவனைகள்.
அடுத்து அவள் கேட்ட கேள்விதான் அதிர்ச்சியின் உச்சம். ‘‘நிங்ஙளு எப்போழானு என்ன நோக்கான் வருன்னது?’’
குமாருக்கும் மலையாளம் புரிந்தது. ‘எப்போ வருவே?’ என்கிறாள்.

‘‘நானா... எதுக்கு?’’
‘‘எந்தினுவென்னு நிங்ஙள்க்கு அறியில்லே?’’
‘எதுக்குன்னு தெரியாதா?’ என்கிறாள் என்பது புரிந்தது.
அந்த மை விழியும் புன்னகையும் நெற்றிச் சுருக்கமும் கன்னக் குழியும் அவனை மயக்கி, செல்போனில் சொருகிப் போட்டது.
‘‘எதுக்கு வரணும்? எனக்குப் புரியலை...’’

‘‘நேரிட்டு கண்டால் மனசிலாவும்...’’
அப்போதுதான் இந்தப் பொட்டன் காடு, பெட காடு என வழி சொன்னாள்.
‘‘அச்சன் வந்நிட்டுண்டு. ஈ நம்பர் ஒண்ணு நோட் செய்தோளு. அச்சன் அறியருது...’’ வேகமாக எண்ணைச் சொன்னாள். ரகசிய எண். குருதியில் ஊடுருவிய செல் இலக்கம்.அப்பாவுக்குத் தெரியாமல் என்னைப் பார்க்கப் போகிறாளா? எதற்கு? புரிந்தும் புரியாமல் இருந்தது. தவறும் குற்றமும் செய்யத்தூண்டும் அழைப்பு. குமாருக்கு எல்லையில்லா ஆசையிருந்தது.

இதோ இப்போது ராத்திரியில் அங்கே வந்து நிற்கிறான் குமார். இனி ஓரடி எடுத்து வைக்க முடியாது. குமாருக்குக் கண்கள் சொருகின. விழுந்துவிடுவோம் எனப் பயந்தான். நரிகளோ, நாய்களோ கடித்துக் குதறுமோ? தூரத்தில் ஒலிக்கும் ஓர் ஊளைச்சத்தம் செவியில் நிரம்பியது. அதுதான் அவளா? கீழே விழுவதைத் தடுக்க அப்படியே சுருண்டு அமர்ந்தான். பார்வை மங்கியது. விடியும் வரை உயிரைப் பாதுகாப்பது இயலுமாவெனத் தெரியவில்லை. அவனை அவனால் போர்த்தி சூடேற்ற முயன்றான்.

யாரோ நடந்துவரும் சத்தம். மிருகமா... மனிதனா? ஈரடி காலடி. மனித நடமாட்டம். நெருங்கும் மனித வாசனையை உயிரால் நுகர்ந்தான். கண்கள் ஏங்கின. வருவது யார்? உயிர் துளிர்க்க ஓர் உபாயம். அது... அது... அவளேதான். அதே பாவாடை முண்டுடன் வந்தாள். ‘‘எண்ட குமார் இத்தன காலம் தாமசிக்கின்னு?’’ என மிகச் சாதாரணமாய்க் கேட்டாள்.

ஜீவனை எல்லாம் ஒன்று திரட்டி அவள்தான் அவள் என அறிந்து குமாரின் உதடுகள் துடித்தன. ‘‘சொர்ணா...’’ என்றான் பரவசத்தோடு.
சாதாரணமாக அவன் அருகே அமர்ந்தாள். காத்து வைத்திருந்த உயிரை அவள்மீது சாய்த்துவிட்டுக் கண் மூடினான். அவள் ஒரு போர்வையாக அவன்மீது படர்ந்தாள். ஊனுக்குள் திரண்டிருந்த சூட்டால் தன்னை மீட்பதை அவன் கனவுபோல உணர்ந்தான். ஒரு நொடியா, ஒரு யுகமா? காலம் அளக்கக் கருவியில்லாத சூனியத் தனிமை. தானும் அவளாக மாறிவிட்டோமா? அவள் அவனாக மாறிவிட்டாளா? உடல்களை உருக்கி ஓர் அச்சில் வார்த்துவிட்ட மாயம். அவன் அப்படியே கிடந்தான். அப்படியே கிடக்கத்தான் விரும்பினான்.

விறகு பொறுக்கப் போகும் ஒரு மலைவாசிப் பெண், குமாரைப் பார்த்தாள். வெட்ட வெளியில் வெளிறிப்போய் விழுந்து கிடந்தவனைக் கண்டு அச்சம் கொண்டு அலறினாள். ஆகாயம் பார்க்கக் கிடந்தது, உயிர் இறைஞ்சும் வெற்றுடல். எப்படியோ தகவல் கிடைத்து கேரள போலீஸ் உதவியுடன் ஆம்புலன்சில் சென்னைக்குக் கொண்டுவந்து போட்டார்கள். ஏன் அங்கு போனான், என்ன நடந்தது என்று முன்னுக்குப் பின்னாகச் சொன்னான். சொர்ணாவைக் காட்டிக்கொடுக்க அவன் விரும்பவே இல்லை. நடந்த உண்மையை யாரிடமும் சொல்லவில்லை. ஊர் சுற்றிப் பார்க்கச் சென்றேன் என அவன் சொன்ன காரணத்தை யாரும் நம்பவில்லை.

கட்டிலில் கிடந்து அவன் பிதற்றும் வாக்கியங்களின் பொருள் புரியாமல் தவித்தது அவனுடைய குடும்பம். இடுக்கிக்குப் போனதாகப் பிதற்றினான். பெடகாடு என்றான். ஒன்றும் புரியவில்லை. ‘அவனிடம் எதையும் கேட்க வேண்டாம். அப்படியே விட்டுவிடுவோம்’ என அவனுடைய அப்பா சொல்லிவிட்டார்.

சில மாதங்களாகவே அவன் இடுக்கி மாவட்டப் பகுதிகளை கூகுள் மேப்பில் பார்த்துக்கொண்டிருந்ததை அவரும் கவனித்து வந்தார். அவனுடைய நிலை உணர்ந்து மிகவும் கவனமாகப் பாதுகாத்து வந்தார். மகன் மாத்திரைகளைச் சரியாகப் போட்டுக்கொண்டு வருகிறானா என மனைவியிடமும் விசாரித்தார். அவனே போட்டுக்கொள்கிறான் எனச் சொல்லியிருந்தாள் மனைவி.

இடுக்கிக்கு போய் வந்ததாக அவன் புலம்பியபடி இருந்தான். இரவும் பகலும் உணவு உறக்கமின்றி கூச்சலிட்டபடியே இருந்தான். சொர்ணா என்பது யார் என்பதும் தெரியவில்லை. குமாரை நினைத்து அவனுடைய அப்பா மிகவும் கலங்கிப்போனார். கட்டிலுக்கு அடியில் அத்தனை மாத்திரைகளும் பேப்பரில் சுற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்ததைக் கண்டெடுத்தார். குமாரைக் கண்டித்தார்.

அவன் உறக்கமற்ற கண்களால் வெறித்துப் பார்த்தான். அது அச்சமூட்டுவதாக இருந்தது. டாக்டர் மருத்துவமனையில் ஒரு வாரம் இருக்கட்டும் என ஆலோசனை சொன்னார். கொஞ்சம் கொஞ்சமாக அவன் அந்த ஊர்களை, பெயர்களை காற்றில் கரைந்த புகையென இழந்துகொண்டிருந்தான். மாத்திரைகள் அவனைச் சோர்வடையச் செய்தன.

மருத்துவமனையில் இருந்து வந்த மறுநாள் குமார், சலூனுக்குப் போய் எலீசாவை விசாரித்தபோது, ‘அவர் இல்லை’ என்றார்கள். சொர்ணாவின் போன் ‘நாட் இன் யூஸ்’ என்றே இருந்தது. இரவில் குடையோடு வந்தவள், தன்னை நெஞ்சோடு அணைத்துக்கொண்டது நினைவில் இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து ஒன்றாக ஆகிவிட்டது நினைவிருந்தது. இரண்டு தனித்தனி உடல்களாக உணர முடியாத ஆகர்ஷணம் இப்போதும் சிலிர்த்தது.

அப்புறம் என்ன ஆனது எனத் தெரியவில்லை. அவை எல்லாமே எட்டமுடியாத புதிர்களாக மூளைக்குள் புதைந்திருந்தன. மாத்திரைகளில் இருந்து வெளியேறும் மார்க்கங்களை யோசித்தான். புதிர்களை அவிழ்க்கும் உத்திகளை மருந்துகள் தடுத்துக்கொண்டிருப்பது அவனுக்கு நன்கு தெரிந்தது.
இந்த முறை மாத்திரைகளைச் சாப்பிட்டதற்கான தடயங்களை உருவாக்கினான். பாத்ரூமில் அவற்றை உடைத்துப் பொடியாக்கி நீரில் கரைத்து மறையவைத்தான். மாத்திரை உரிக்கப்பட்ட வெற்று அட்டைகள் குடும்பத்தினரை ஏமாற்றிக் கொண்டிருந்தன. குமார் இன்னொரு முறை பெடகாடு போய்வர தயாராகிக் கொண்டிருந்தான்.

புதிய எண்ணிலிருந்து சொர்ணாவிடமிருந்து போன் வந்தது. ‘‘நீங்க மயங்கி விழுந்துட்டீங்க. நான் ஆட்களைக் கூட்டிவர ஊருக்குப் போனேன். திரும்பி வந்தபோது நீங்கள் அங்க இல்லை. எப்ப வருவீங்க. நான் அதே இடத்தில் காத்திருப்பேன்...’’ என்று மட்டும் சொன்னாள்.

ஹேப்பி ஷா

சென்ற ஆண்டில் வாங்கிக் குவித்த விருதுகளை எல்லாம் சேர்த்தணைத்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்திருக்கிறார் த்ரிஷா. அதில் ‘96’க்காக பதினொரு அவார்டுகளும், மலையாள ‘ஹே ஜூடு’க்காக மூன்றும் என்பதில் த்ரிஷ் ஹேப்பியோ ஹேப்பி.  

தெலுங்கில் ரஜினியின் ரீல் மகள்!

‘தர்பார்’ நிவேதா தாமஸ், மீண்டும் டோலிவுட்டில் பரபரக்கிறார். அங்கே நானியுடன் நடித்து வரும் ‘வி’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பிற்காக மணாலி சென்று திரும்பியிருக்கிறார். வரும் மார்ச் மாத இறுதியில் யுகாதி விருந்தாக ரிலீஸாக உள்ள இதில், அதிதி ராவ் ஹைதரியும் மிளிர்கிறார்.

இசைப் பெண்!

பிரிட்டனின் நியூ டேலன்ட் இசையமைப்பாளர் சௌமிக் தத்தாவின் ‘jangal’ இசை ஆல்பம் வெளிநாடுகளில் சக்கை போடுபோடுகிறதாம்.
இந்த சௌமிக்கின் இசையமைப்பில், புது ஆல்பம் ஒன்றை கொண்டு வருகிறார் நித்யாமேனன். அழகாகப் பாடுவதில் கில்லாடியான நித்யா, இப்போது சிதாரும் இசைக்க கற்றுக்கொண்டிருக்கிறார்.  

பிசி ஷ்ரத்தா

உற்சாகத்தில் பூரிக்கிறார் ‘விக்ரம் வேதா’ ஷ்ரத்தா நாத். விஷாலின் ‘சக்ரா’வைத் தொடர்ந்து, மீண்டும் மாதவனுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

ரம் பேபி

பிரகாஷ்ராஜின் ‘உன் சமையலறையில்...’ படத்தில் சடுசடுத்த பெங்களூரு பர்ஃபி சம்யுக்தா ஹொனர்டு, நீண்ட இடைவெளிக்குப் பின் ‘ரெட் ரம்’ மூலம் கோலிவுட் வருகிறார். இவருக்குப் பிடித்தது சாலையோர கையேந்தி பவனில் உண்பது!

தமிழ்மகன்