ரத்த மகுடம்-122



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘இதையும் நான் மிகைப்படுத்திச் சொல்வதாக நினைக்காதே ரணதீரா! நம் வணிகர்கள் தெரிவித்த கருத்துகளைத்தான் மாலை கோர்ப்பது போல் கோர்த்துச் சொல்கிறேன்...’’ பாண்டிய இளவரசனின் கண்களை சில கணங்கள் உற்றுப் பார்த்துவிட்டு சாளரத்தின் வழியே தன் பார்வையைச் செலுத்தினார் பாண்டிய மன்னர்.

‘‘கடலுக்குப் பெயரில்லை... ஆனால், அந்தந்த தேசத்தில் இருக்கும் முக்கியமான துறைமுகங்கள் சார்ந்து அப்பக்கத்து கடலுக்கு ஒரு பெயர் உண்டு. இப்பெயரை அந்தந்த தேசத்தவர்கள் சூட்டினாலும் வந்து செல்லும் பிற தேசத்து வணிகர்களே சம்பந்தப்பட்ட கடலுக்கும் கரையில் இருக்கும் துறைமுகத்துக்கும் நிலையான பெயரை வழங்குகிறார்கள். வரலாற்றிலும் அதுவே பதிவாகிறது...’’ நிறுத்திய அரிகேசரி மாறவர்மர் திரும்பி தன் மகன் கோச்சடையன் இரணதீரனை ஏறிட்டார்.

‘‘சரித்திரம் எழுதப்பட ஆரம்பித்த காலம் முதலே நம் பாண்டிய தேசத்தைச் சார்ந்த கொற்கைத் துறைமுகம் உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. யவனர்களும், சோனர்களும், அராபியர்களும், சீனர்களும் கடாரத்தைச் சேர்ந்தவர்களும் நாள்தோறும் சாரி சாரியாக நம் துறைமுகத்துக்கு வருகிறார்கள்; முத்துக்களை வாங்கிக் கொண்டு கலங்களில் ஏறி தத்தம் நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

சொல்லப்போனால் பாண்டிய நாட்டின் வருவாயே கொற்கையை நம்பித்தான் இருக்கிறது. அதனால்தான் சங்க காலம் முதலே பாண்டிய இளவரசர்கள் கொற்கைக்கு அனுப்பப்படுகிறார்கள். தென் தமிழகத்தை ஆளும் பொறுப்பும் இளவரசர்களிடமே ஒப்படைக்கப்படுகிறது. இதில் கிடைக்கும் அனுபவமே பிற்காலத்தில் அவர்கள் பாண்டிய அரியணையில் அமரும்போது இந்த மண்ணை ஆட்சி செய்ய உதவுகிறது.

சங்க காலம் முதலே தொடரும் இந்த வழக்கம்... பழக்கம்... இன்றும் தொடர்கிறது. இத்தனைக்கும் நடுவில் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நம் பாண்டிய நாட்டை களப்பிரர்கள் ஆண்டார்கள். நம் மூதாதையரான கடுங்கோன் மன்னர் களப்பிரர்களுடன் போரிட்டு பாண்டிய நாட்டை மீட்டதும் மீண்டும் அந்த வழக்கமே தொடர்ந்தது... அதாவது இளவரசு பட்டம் சூட்டப்பட்டதும் பாண்டிய அரச குடும்பத்தினர் கொற்கைக்கு செல்லும் மரபு.
ஏன்... உனது அரண்மனை கூட கொற்கையில்தானே இருக்கிறது..? சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனும் சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும் மதுரைக்கு விருந்தினர்களாக வந்ததை ஒட்டித்தானே மதுரைக்கே நீயும் வருகை தந்தாய்..?’’

இரணதீரன் இமைக்காமல் தன் தந்தையையே பார்த்தான். சகலரும் அறிந்த விஷயத்தை எதற்காக இவ்வளவு விரிவாக விளக்குகிறார் என்ற வினா அவனுக்கும் எழவே செய்தது. ஆனால், காரணமில்லாமல் பாண்டிய மன்னர் எதையும் பேசமாட்டார் என்பதால் காரணத்தை அறியும் பொருட்டு அவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்தான்.

அதற்கேற்ப அரிகேசரி மாறவர்மரும் அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த காரணத்துக்கு வந்தார். ‘‘கொற்கை... முத்துக் குளிப்புக்கு பெயர் பெற்ற கொற்கை... நம் தேசத்தில் இருக்கிறது... பாண்டியர்களின் துறைமுகமாக கம்பீரமாக உலக மகுடத்தில் திகழ்கிறது... இன்று நேற்றல்ல... கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்றால்... மூத்த துறைமுகம் நம் கொற்கை... நம் பகுதியில் கிடைக்கும் முத்துக்களை வாங்குவதற்காகவே உலக அரச குடும்பத்தினர் தத்தம் நாடுகளில் மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி வசூல் செய்கிறார்கள். அந்தளவுக்கு நம் முத்துக்களும் நம் கொற்கைத் துறைமுகமும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்று விளங்குகிறது...

ஆனால், ரணதீரா... உலகின் முக்கியமான பெரும் துறைமுகங்களில் ஒன்றாக கொற்கையை எவரும் கருதுவதில்லை... ஏன் என்று எப்பொழுதாவது யோசித்தாயா..?’’ நிறுத்திய அரிகேசரி மாறவர்மரின் வதனத்தில் சோகத்தின் ரேகைகள் படர்ந்தன. ‘‘கொற்கைக்கு நிகராக சங்ககாலத்தில் சோழர்களின் காவிரிப்பூம்பட்டினம் புகழ்பெற்று விளங்கியது. ஆனால், கடற்கோளால் அத்துறைமுகப் பட்டினம் அழிந்தது. கொற்கை அப்படியே கம்பீரத்துடன் இப்பொழுது வரை இருக்கிறது.

என்றாலும் பல்லவர்களின் எழுச்சிக்குப் பிறகு புகழ்பெற ஆரம்பித்த மல்லைத் துறைமுகம்தான் இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கியமான துறைமுகக்  கேந்திரம். இதைச் சொல்வது பாண்டியர்களான நாம் அல்ல... யவனர்கள், சீனர்கள், அராபியர்கள் போன்ற வெளிநாட்டவர்கள்.
காரணம், பூகோள ரீதியாக மல்லைத் துறைமுகமே அந்த நாடுகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்தப் பக்கம் இருக்கும் கடாரம் உள்ளிட்ட தேசங்களுக்கும் மல்லையே மலர் மாலை சூட்டுகிறது.

கொற்கை..? சிங்களத்துடன் கூப்பிடும் தொலைவில் இருப்பதால் சிங்களத் துறைமுகங்களுக்கு தரும் புகழில் பாதியையே இந்த தேசங்கள் கொற்கைக்கு வழங்குகின்றன. அதேநேரம் கொற்கையின் முத்துக்களை மட்டும் பாய்ந்து வந்து வாங்குகின்றன.இதையெல்லாம் இப்பொழுது ஏன் சொல்கிறேன் என்று பார்க்கிறாயா..? மீன் தன்னைத் தற்காத்துக்கொண்டு நழுவவேண்டும் என்றுதான்.

ரணதீரா... அராபியர்கள் காலம் காலமாக வணிகப் பொருட்களைக் கைமாற்றும் வேலையைத்தான் செய்து வருகிறார்கள். இதன் வழியாகவே கடல் பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தேசத்தில்... அவர்களது பகுதிகளில் எப்பொருளும் விளைவதில்லை... எப்பொருளுக்கும் நம் கொற்கை முத்துக்கள் போல் அவர்கள் தனி உரிமை கொண்டாடுவதில்லை.

ஆனால், நம் கொற்கை முத்துக்களை மொத்தமாக அராபியர்களே கொள்முதல் செய்து அதை மற்ற நாடுகளுக்கு விற்கிறார்கள். ஒருவகையில் மற்ற தேசங்கள் இதை தங்களுக்கு சாதகமாகவே பார்க்கின்றன. ஏனெனில் கடல் பகுதிகளில் கொள்ளையர்கள் அதிகம். அவர்களுடன் போர் புரிய தங்கள் நாட்டு மரக்கலங்களுடன் வீரர்களை அனுப்ப வேண்டும்... அந்த வீரர்களுக்கு மாதம்தோறும் ஊதியம் வழங்க வேண்டும். இதையெல்லாம் கணக்கிட்டுத்தான் அராபியர்களிடம் இருந்து விலை கொடுத்து பொருட்களை வாங்க மற்ற தேசங்களும் அந்நாட்டு வணிகர்களும் தயாராக இருக்கின்றனர்.

இதை அராபியர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதன் பொருட்டே தங்கள் பிரதேசத்தில் மிகப்பெரிய வணிக சாத்தை ஜித்தாவில் அராபியர்கள் நிர்மாணித்திருக்கிறார்கள். அங்கிருந்து கூப்பிடும் தொலைவில் மெக்கா இருக்கிறது. மதீனாவுக்கு செல்ல ஜித்தாவைக் கடக்க வேண்டும்.

செங்கடலில் இருந்து மரக்கலங்களில் வரும் பொருட்கள் மட்டுமல்ல... வட பாரதத்தின் பகுதியில் இருந்து சீனம் வழியாக நிலவழியில் - பட்டுச் சாலையில் - கொண்டு செல்லப்படும் பொருட்களும் ஜித்தாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய வணிக சாத்துகளில்தான் மற்ற தேசத்து வணிகர்களுக்குக் கை மாறுகின்றன.

இப்படி கை மாற்றி விடுவதன் வழியாகவே அராபிய தேசம் சீரும் சிறப்புமாக வாழ்கிறது. அளவுக்கு மீறி கொழிக்கும் இந்த வருவாய், அவர்களை அதர்மத்தின் பக்கம் மெல்ல மெல்ல திருப்ப ஆரம்பித்திருக்கிறது...’’நிறுத்திய அரிகேசரி மாறவர்மர், மெல்ல நடந்து வந்து தன் மகனின் தோளில் கைவைத்தார். ‘‘ஆம் ரணதீரா... நம் வணிகர்களிடம் இருந்து கிடைத்திருக்கும் செய்திகள் இதைத்தான் உணர்த்துகின்றன. திபெத்தியர்களுடன் கூட்டணி வைத்து அராபியர்கள் கடல் பகுதிகளில் அராஜகம் புரியத் தொடங்கியிருக்கிறார்கள். வேறு நாட்டு வணிக மரக்கலங்கள் தங்கள் அனுமதியில்லாமல் கடலில் பயணிக்கவே கூடாது என்ற நிலையை சிருஷ்டித்திருக்கிறார்கள்.

இதனால் தமிழக வணிகர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அதே அளவுக்கு சீனர்களும் அல்லல்படுகிறார்கள். எப்படி நம் கொற்கை முத்துக்களுக்கு தனிச் சிறப்பு இருக்கிறதோ அப்படி சீனத்தில் உருவாகும் பட்டுக்கும் உலக நாடுகள் மத்தியில் தனிச் சிறப்பு உண்டு. சீனப் பட்டை வைத்துதான் சீனர்கள் செல்வம் கொழிக்கிறார்கள்.

இப்பொழுது திபெத்தியர்களும் அராபியர்களும் சேர்ந்து சீனத்தின் பட்டு ஆதிக்கத்துக்கும் வேட்டு வைக்க முற்படுகிறார்கள்.இதை முறியடிக்க சீனத்தின் தாங் வம்ச அரசன் பல்லவர்களின் உதவியை நாடியிருக்கிறான்... புரிகிறதா ரணதீரா! பாண்டியர்களான நம் உதவியை சீன மன்னன் நாடவில்லை... சிங்களத்திடம் உதவி கேட்கவில்லை... வட பாரத தேசங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை. மாறாக, பல்லவர்களின் கூட்டணியை விரும்புகிறான்... இதன் வழியாக திபெத்திய - அராபியர்களின் கடல் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படுகிறான்.

இதன் காரணமாகவே தன் தளபதியை பல்லவ தேசத்துக்கு சீன மன்னன் அனுப்பியிருக்கிறான். அந்த சீன சேனாதிபதிதான் பல்லவ இளவல் ராஜசிம்மனுடனும் கரிகாலனுடனும் இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கிறான்.நம் ஒற்றர்கள் அந்த சீனனை... சீனத் தளபதியை... நம் மதுரை மாநகரத்தில் சில தினங்களாகப் பார்த்து வருகிறார்கள்; பின்தொடரவும் செய்கிறார்கள். சந்தேகப்படும் வகையில் எந்த நடவடிக்கையிலும் அவன் இறங்கவில்லை. என்றாலும் அந்த சீனன் மீது ஒரு கண் வைத்திருக்கும்படி கட்டளையிட்டிருக்கிறேன்.

எதார்த்தம் இதுதான் ரணதீரா. பாண்டியர்களான நாம் சுதந்திர அரசமைத்திருக்கிறோம். ஆனால், இன்னும் பேரரசாகவில்லை. பொறு... நடைபெறவிருக்கும் சாளுக்கிய - பல்லவப் போரில் யார் பக்கம் பாண்டியர்கள் நின்றாலும் அது நம் தேசத்துக்கு எந்த வகையிலும் பயனளிக்காது... பாண்டியர்களைப் பேரரசு நிலைக்கும் உயர்த்தாது.

பல்லவர்கள் தங்கள் நிலத்தை இன்று சாளுக்கியர்களிடம் பறிகொடுத்திருக்கிறார்கள். ஆனால், நிரந்தரமாக அல்ல. எதன் காரணமாகவோ வேண்டுமென்றே சாளுக்கியர்கள் வசம் தங்கள் தேசத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். இப்பொழுது மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள்.
எதற்காக சாளுக்கியர்களிடம் காஞ்சியை ஒப்படைத்தார்கள்... இப்பொழுது ஏன் அதை மீட்கும் போரில் இறங்குகிறார்கள்... ஆரம்பத்திலேயே ஏன் சாளுக்கியப் படைகளைத் தடுத்து நிறுத்தவில்லை..?

விருட்சங்களாக வளரும் எந்தக் கேள்விக்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. காரணமில்லாமல் பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர் இப்படிச் செய்யமாட்டார்... ஆதாயம் இல்லாமல் கரிகாலன் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளில் இறங்க மாட்டான். ஆனால், என்ன காரணம்... என்ன ஆதாயம்..? தெரியவில்லை. தெரியாமல் காலை விடுவது ஆபத்தில் முடியும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அமைதி காக்கச் சொல்கிறேன். இப்பொழுது நாம் நம் நிலப்பரப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இதில் மட்டும் கவனம் செலுத்துவதே புத்திசாலித்தனம்...’’வாஞ்சையுடன் இரணதீரனின் கேசங்களை அரிகேசரி மாறவர்மர் தடவினார். ‘‘உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன் ரணதீரா! நிச்சயம் உன் காலத்தில் பாண்டிய நாடு மேலும் விரிவடையும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உனக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை அணைக்காமல் அப்படியே பொத்திப் பொத்தி பாதுகாத்து வா. நம் சந்ததிகளிடமும் அதைக் கடத்து. பேரரசு நிலைக்கு பாண்டியர்கள் உயரவேண்டும் என்ற விதையை விதைத்துக்கொண்டே இரு. என்றேனும் ஒருநாள் அது நிறைவேறும்.

இப்பொழுது... மனதை அலைபாய விடாமல் கொற்கைக்குச் சென்று உன் இளவரசு பணிகளைத் தொடரு. அதேநேரம் பல்லவ - சாளுக்கிய நிலைகளை நோட்டமிட்டபடியே இரு. குறிப்பாக சோழர்களை... அதுவும் கரிகாலனின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிரு... இது பாண்டிய மன்னனின் கட்டளையல்ல... உனது தந்தையின் வேண்டுகோள்!’’புரிந்ததற்கு அறிகுறியாக கோச்சடையன் இரணதீரன் தலையசைத்தான். குனிந்து தன் தந்தையின் கால்களைத் தொட்டு வணங்கினான்.

அரிகேசரி மாறவர்மர் அவனை அள்ளி அணைத்தார். இரணதீரனின் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டார்.
‘‘கொற்கைக்கு இன்றே புறப்படுகிறேன் தந்தையே...’’‘‘சென்று வா... பாண்டியர்கள் வெல்லும் காலம் தொலைவில் இல்லை...’’ பாண்டிய மன்னர் ஆசீர்வதித்தார்.இரணதீரன் வெளியேறினான்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலய மணி ஒலித்தது!
‘‘சிவகாமி...’’
‘‘ம்...’’
‘‘இது மார்கழி மாதம்...’’
‘‘ம்...’’
‘‘இது பின்னிரவு நேரம்...’’
‘‘ம்...’’
‘‘குளத்து நீர் ஜில்லிட்டிருக்கிறது... ஆனால், உன் மேனி கொதிக்கிறது... என்ன காரணம்..?’’
‘‘நீங்கள்தான்... என் தேகத்தில் அலைபாயும் உங்கள் கரங்கள்தான்... நீரும் புகாத வண்ணம் என் உடலோடு இழையும் உங்கள் உடல்தான்...’’ என சிவகாமியால் எப்படிச் சொல்ல முடியும்..?மவுனமாக குளத்து நீரில் தலையை மட்டும் வெளியே நீட்டியபடி நீந்தினாள்.

கரிகாலனும் அப்படித்தான் இருந்தான். ஆனால், நீருக்குள் மூழ்கியிருந்த அவன் உடல், அவளது தேகத்தை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
எதிர்த்திட முற்பட்ட சிவகாமியின் உடல் ஒரு கட்டத்தில் குழைந்து குழைந்து சரணடைய ஆரம்பித்தது.ஆடைகள் விலகத் தொடங்க... இரு தேகங்களும் உரசி உரசி பற்றி எரியத் தொடங்கின.அதேநேரம் மதுரை தச்சர்கள் வீதிக்குள் சீனன் நுழைந்து கொண்டிருந்தான்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்