பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக...



தெர்மாகோல்... மீம்ஸ்... ஈபிஎஸ் Vs ஓபிஎஸ்... கொரோனா கால ஊழல்கள்... பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக...

மனம் திறக்கிறர் அமைச்சர் செல்லூர் கே.ராஜு

மீடியாக்களிலும், மீம்ஸ்களிலும் அதிகம் உச்சரிக்கப்பட்ட; உச்சரிக்கப்படும் ஒரே அதிமுக அமைச்சரின் பெயர் செல்லூர் கே.ராஜு. எந்த ஒரு விஷயத்தையும் உடைத்துப் பேசுபவர். ‘பஞ்ச்’ டயலாக் பேசுவதில் திரை பிரபலங்களையே மிஞ்சி விடுபவர்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழக கூட்டுறவுத் துறையின் அமைச்சராக இருப்பவர். அடிப்படை உறுப்பினரிலிருந்து அமைச்சர் வரை, இன்றைய தமிழக அரசியல் சூழல், மத்திய அரசின் செயல்பாடுகள், வருகிற சட்டமன்றத் தேர்தல் நிலவரம்… போன்ற பல கேள்விகளுக்கு அவருக்கே உரிய பாணியில் அசால்ட்டாக பதில்களை அள்ளி வீசினார்.   

உங்கள் அரசியல் பயணம்…
சிறு வயதிலிருந்தே புரட்சித்தலைவர் ரசிகன். அவர் கட்சி தொடங்கும் போது பள்ளி மாணவன். அந்தநேரத்தில் ‘புரட்சி நடிகர் எம்ஜிஆர் மன்றம்’ எங்கள் பகுதியில் பிரபலம். படித்துக்கொண்டே, செய்தித்தாள்கள் போடும் வேலை செய்து கொண்டு, மன்றத்தின் செயல்பாடுகளிலும் பங்கெடுத்து அதன் தலைவராகவும் ஆனேன். 1981ல் கட்சிக்குள் தேர்தல் நடத்திய போது வட்டச் செயலாளராகத் தேர்வானேன். அடுத்த ஆண்டே இளைஞரணி தொடங்குகையில் மாவட்டத் துணைச் செயலாளர் பதவியையும் பெற்றேன்.

தலைவர் 1980 தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் நின்றார். அப்போது அவருடன் நெருக்கமாகும் வாய்ப்பு பழக்கடை பாண்டி மூலமாக அமைந்தது. தலைவரை அடுத்து அம்மா வந்தார்கள். அவர்களுக்கும் பிரம்மாண்டமாக மீட்டிங் எல்லாம் நடத்தினோம்.

கட்சிக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த எனக்கு 96ல் அம்மா கவுன்சிலர் சீட் கொடுத்தார்கள். அதில் வென்று மதுரை மாநகர் எதிர்க்கட்சித் தலைவரானேன். ஐந்தாண்டுகள் முடிவில் மேயராக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. சில காரணங்களால் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி யைச் சந்தித்தேன். மேற்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

மீண்டும் 2011ல் மதுரை மேற்குத் தொகுதியில் நின்று ஜெயித்தேன். அந்த வெற்றி இன்றளவும் நீடித்து, தொடர்ந்து இரு முறை ஒரே துறையின் அமைச்சராக இருக்கிறேன். 2000ல் மதுரை மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்று அந்த வேலையையும் சிறப்பாகச் செய்து
வருகிறேன்.

பள்ளி, கல்லூரி காலங்கள்…

மாணவனாக இருக்கும்போதே பீடி - சிகெரட் பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என்ற நோக்கில் ‘நண்பர்கள் சீரமைப்புக் குழு’ என்று வைத்திருந்தோம். பள்ளியில் படிக்கும் போதும், தியாகராஜா கல்லூரியில் பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படிக்கும் போதும் NCCஇல் இருந்தேன். அது என்னை ஒரு ஒழுக்கமுள்ள மாணவனாக மாற்றியது. அந்தக் காலத்தில் எங்கள் பகுதிகளில் திருவிழா சமயங்களில் இரட்டை அர்த்த
வசனங்களோடுஆபாசமாக அரங்கேறும் ஓரங்க நாடகங்களுக்கு பதிலாக பட்டிமன்றம், வழக்காடு மன்றத்தை மாற்றாக வைத்தோம். அதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா, விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்… போன்றோரை முதன்முதலில் பொதுவெளியில் பேச வைத்தோம்.  

புத்தக வாசிப்பு…

சின்னச் சின்ன கதைகள், ஆர்.கே.நாராயணனின் நீதிக் கதைகள், எங்க மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எழுதின கதைகள், புதினம், வார இதழ்கள், ‘சாவி’யில் வந்த கட்டுரைகள், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் மணியனுடைய பயணக் கட்டுரைகள்… என்று படித்திருக்கிறேன், படித்தும் வருகிறேன். ஏதாவது ஒரு பேப்பர், துண்டுச் சீட்டில் என்ன எழுதப்பட்டிருந்தாலும் அதை எடுத்து படிக்கும் வழக்கம் சிறு வயதிலிருந்தே தொடங்கிவிட்டது.      
குடும்பப் பின்னணி…

வீட்டில் நான் ஒரே பையன். எனக்கு மூத்தவர்கள் இரு அக்காக்கள். நான் பிறந்த ஒரு வருடத்திலேயே அப்பா தவறிட்டார். அம்மா எப்போதுமே உழைப்பு... உழைப்புதான். அதிகாலை மூன்று மணிக்கே வியாபாரம் பார்க்கப் போய்விடுவார்கள். இரண்டாவது அக்காதான் எல்லாம் பார்த்துப்பார்.  
இன்றும் நான் அரசியலில் தொய்வில்லாமல் உழைப்பதற்கு குடும்பம் ரொம்ப முக்கியம்.

அதிலும் மனைவி ஜெயந்தியின் அன்பு அளப்பரியது. இன்னும் கூட என்னை மாற்றிக்க முடியாதது மனதில் பட்டதை டக் என சொல்லிவிடுவதுதான். இது இயற்கையாகவே வந்தது. அரசியலில் இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என சொல்வார்கள். ஏன்… ஒருமுறை அம்மா கூட, ‘எதையும் பேசிறக்கூடாதுப்பா.  பார்த்து பேசணும்’னு அறிவுரை சொன்னார்கள். சின்னப் பிள்ளையிலிருந்து வந்ததை மாற்ற முடியவில்லை.   

ஜெயலலிதா இருந்தபோது அதிமுக ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்ததாக சொல்வார்கள். அப்படித்தான் இப்போதும் இருக்கிறதா?
பொதுவாக ஓர் ஆளுமை மிக்க தலைவர் இருக்கும் போது, அதற்குக் கீழ் இருப்பது வேறு. ஆனால், ஒரு தலைமையிலிருந்து மற்றொரு தலைமை மாறும் போது பல மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம்.

அதிமுகவில் புரட்சித் தலைவர் காலத்திலிருந்தே பல கோஷ்டிகள் இருந்திருக்கிறது. ராணுவக் கட்டுப்பாடு எந்த நேரத்தில் என்றால் தேர்தல் காலங்களிலே, நம் வேட்பாளரை எதிர்த்து எந்த வேலையும் செய்யக் கூடாது; பிடிக்கிறதோ இல்லையோ நம் கட்சி வேட்பாளரான அவருக்கு ஓட்டு கேட்க வேண்டும்; ஓட்டு போட வேண்டும். இதுதான் கட்டுப்பாடு.

முன்பு அம்மா மட்டும் முடிவெடுப்பார்கள். இப்போது உள்ள தலைமை மாவட்டச் செயலாளர்கள், இன்னும் பல முக்கியமானவர்களிடம் கருத்து கேட்டு, மேல்மட்டத் தலைவர்களின் ஆலோசனையுடன் முடிவெடுக்கிறார்கள். கூட்டுத் தலையாகச் செயல்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதோடு, அதிகாரக் குவியல் முழுவதும் தில்லியில்தான் இருக்கிறது என்று தொடர்ந்து கூறப்படுகிறதே?

அதிகாரக் குவியல் என்பது இன்று மட்டுமல்ல... எப்போதுமே உண்டு. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு திமுக முக்கிய காரணம். அந்த நேரத்தில் கலைஞர் முல்லைப்பெரியார் பிரச்னையில் குரல் கொடுத்தபோது, கேரள அரசுக்கு சாதகமாக காங்கிரஸ் நடந்துகொண்டது.

அதேபோல் ஈழத்தமிழர் பிரச்னையில் கலைஞர் எவ்வளவோ நடவடிக்கை எடுத்திருந்தாலும் இறுதிப் போரில் அவரால் முடியவில்லையே. போரை நிறுத்தியாச்சு என்று சொல்லி, அங்கே போர் நடத்தினார்கள் அல்லவா?

இது எல்லா காலத்திலும் உண்டு. வலுவான மாஸ் லீடர்கள் இல்லாதபோது அதிமுக மீது குற்றங்கள் சாட்டப்படுகிறது. எளிமையான முதல்வராக இருப்பதால் எல்லோரையும் பார்க்கிறார், வைக்கிறார். நான்கு நாள் கூட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கம் இருக்காது என்று சொன்னார்கள். ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்து சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருப்பதற்கு முதல்வரின் சாதுர்யமான நடவடிக்கைகளே காரணம்.

பொதுவாக மத்திய - மாநில அரசுகள் இணக்கமாக இருக்கும்போதுதான் மாநிலத்திற்குத் தேவையான நிதிகள் பெறுவது, திட்டங்கள் செயல்படுத்துவது என எல்லாமே முடியும். இது இயற்கையான ஒன்றும் கூட. எப்போதுமே மாநிலத்தின் அதிகாரம் மத்தியில் குவிந்திருக்கிறது. அதுவும் தனித்து ஓர் இயக்கம் மத்தியில் அதிக பெரும்பான்மையோடு இருக்கும் போது சொல்லவே தேவையில்லை.

அதனால் மாநில மக்களுக்கு தேவையானதைப் பெறுவதற்கு நீக்குப் போக்காக நடந்து கொள்வது நியதி. இணக்கமாகவும், அதேவேளையில் தமிழக மக்களுக்கும், கலாசாரத்திற்கும் பாதிப்புகள் வரும்போது எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டும்தான் இருக்கிறோம். இந்த கொரோனா பேரிடர் சமயத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?

2006ல் திமுக செய்தார்கள். அதேமாதிரி 2016ல் அம்மா கடன் ரத்து பண்ணினார்கள். அந்த நேரங்களில் பயிர்க் கடன் வாங்கினால் வட்டி கட்ட வேண்டும். ஆனால், இப்போது அரசே வட்டியினை ஏற்றுக் கொள்கிறது. அசல் மட்டும் கட்டினால் போதும். அதனால் 90% வசூல் வந்துவிடுகிறது. அப்படி கட்டியவர்களுக்கு உடனே அடுத்து கடன் கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இரு பருவங்களாக இது நடைபெறுகிறது. அதனால் இப்போதைக்கு தள்ளுபடி செய்வது இயலாத ஒன்று. இந்த ஆண்டு 11 ஆயிரம் கோடி ரூபாய் அறிவித்திருக்கிறோம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஏறக்குறைய 50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.8,915 கோடி பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் கொடுத்திருக்கிறோம். சம்பா, குறுவை தொகுப்பு களுக்கும் மாநில அரசு அறிவிக்கிறது.

இன்று எல்லாமே ஆன்லைனாக மாறியிருப்பதால் ஊழலும் தடுக்கப்படுகிறது. அப்படி ஊழல் நடந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் செய்கிறோம். ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’னு தலைவரே சொல்லியிருக்கிறார்.

கொரோனா காலத்திலும் அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?
பொதுவாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தான் செய்வார்கள். இது எல்லாக் காலத்திலும் உண்டு. ஆளுங்கட்சியின் செயல்பாடுகளில் ஏதாச்சும் ஒரு குறை சொன்னால்தான் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி இருப்பது தெரியும். ஆளுங்கட்சியைப் பாராட்டிக் கொண்டே போகவும் முடியாது.

மகாத்மா காந்தியே ஆட்சி செய்தாலும், ஏன்... நம்ம அண்ணா, கர்மவீரர் காமராஜர்… போன்றவர்கள் திரும்ப ஆட்சி செய்தால் கூட குற்றம் குறை சொல்லத்தான் செய்வார்கள். அது அவர்களின் கடமை. கொரோனா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் வாடகை வீட்டில் இருப்பவர்கள். எனவே இனி வரும் காலங்களிலாவது வீட்டு வாடகை முறைமை சட்டத்தினை அரசு தீவிரப்படுத்துமா?

தனி ஒருவரது சுதந்திரத்தைப் பறிக்க முடியாது. முதலீடு போட்டு கட்டியிருக்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் வீட்டு உரிமையாளர்களே முன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டு வாடகை முறைமை சட்டம் இருந்தாலும் பின்பற்ற மாட்டேன் என்கிறார்கள். நம்மிடம் ஒன்று சொல்லி அங்கு ஒன்று எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். பாகிஸ்தான் மாதிரி ஒரு சர்வாதிகார சட்டமோ அல்லது மிசா சட்டம் மாதிரி கொண்டு வந்தால்தான் பயப்படுவார்கள்.  

உங்களை வைத்து வரும் மீம்ஸ்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
திராவிட இயக்கத்தில் அண்ணா, ‘மாலையும் வரும், கல்லெறியும் சொல்லெறியும் வரும். இதையெல்லாம் தாங்கிக் கொண்டால்தான் பொது வாழ்க்கை. தம்பி கோபத்தைத் தவிர்த்துவிடு’ எனச் சொல்லி யிருக்கிறார்.

நாங்கள் எல்லாம் அண்ணா, புரட்சித் தலைவர், அம்மா ஆகியோரின் பிள்ளைகள். பொது வாழ்வில் சொல்லடியும் வரும், கல்லடியும் வரும் என்பது எங்களுக்குத் தெரியும். மாலை போடும்போது மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோமே. அதேபோலத்தான் இதையும் ஏற்றுக் கொள்கிறேன்.  
தெர்மாகோல்…

அதை நான் சொல்லவில்லை. அதிகாரிகள் சொன்னதுதான். நான் ஓர் அமைச்சராக இருந்துகொண்டு அதிகாரிகளைக் காட்டிக் கொடுக்
கக்கூடாது. அவர்களும் நல்ல நோக்கில்தான் செய்தார்கள். ஆனால், செயல்படுத்திய விதம் தவறு.

இதே முறையினை கலிபோர்னியா, சீனா, ஜப்பான், ஏன்... நம் நாட்டில் ராஜஸ்தான், தில்லி பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் செயல்படுத்தி இருக்கிறார்கள். அதிகாரிகள் சொன்னதால் எப்படி இருக்கும் எனப் பார்க்கலாம் என்றுதான் போனேன். ஆனால், அந்நிகழ்வு சாதாரணமாக இருந்த செல்லூர் ராஜுவை உலகம் முழுவதும் தெரியும் செல்லூர் ராஜுவாக ஆக்கியது.

அதிமுக இபிஎஸ் - ஓபிஎஸ் என்று இரண்டு மட்டுமல்ல, சசிகலாவோடு சேர்ந்து மூன்று பிரிவாக இருக்கிறது என்கிறார்களே?

அது வெளியில் சொல்வது. கட்சியின் நலன் என்னும்போது எல்லோரும் ஒன்றாகிவிடுவோம். 48 ஆண்டுகள் முடிந்து 49ம் ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது என்றால் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை சகிப்புத்தன்மையோடு இருப்பதால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.
சிற்சில முரண்பாடுகள் இருந்தாலும் தேர்தல் வரும் போது ஒரு வேட்பாளர் இரட்டை இலையில் நிற்கிறார் என்றால் எல்லோருமே வேலை பார்ப்போம்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டும் கூட்டணிக் கட்சிகள் அவரை எங்கும் முன்னிறுத்தவில்லையே? 

அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் தலைமையில்தான் கூட்டணி. மற்றவர்கள் தலைமையை நாங்கள் ஏற்கவில்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரங்களில் தொகுதி ஒதுக்கீடு, எத்தனை சீட், நாம் செய்யும் வேலைகளுக்கு அந்த நேரத்தில் இணக்கமாக இருக்கிறார்களா… என்பதையெல்லாம் பொறுத்துத்தான் அமையும்.

இப்போதும் எங்கள் கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தவர்கள் இருக்கிறார்கள். பொதுவாக எந்த கூட்டணியும் நிரந்தரமானது கிடையாது.
மத்திய அரசு இயற்றும் அவசரச் சட்டங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?மாநிலத்தின் உரிமைகளைப் பாதிக்காமல், அதேவேளையில் அதிகாரத்தைப் பறிக்காத அளவிற்கு இருக்க வேண்டும் என்றுதான் ஒரு மாநிலத்தின் அமைச்சர் என்கிற முறையில் சொல்வேன்.  

செய்தி: அன்னம் அரசு

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்