தல - sixers story 23



உலக வரலாற்றில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணியில் உருவான Fabulous Four!

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை எப்போதுமே சர்வதேச அளவில் மின்னக்கூடிய ஒரு நட்சத்திர வீரர் இருந்து கொண்டேதான் இருப்பார்.

அணி, தொடர் தோல்விகளில் துவண்டுகொண்டிருக்கும் போதும் கூட ஏதோ ஒரு வீரர் சர்வதேச சாதனைகளைச் செய்துகொண்டே இருப்பார்.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று கிரிக்கெட்டின் அத்தனை துறைகளிலும் எப்போதும் ஒரு மாஸ்டரைக் கொண்டிருக்கும் அணியாகவே இந்திய அணி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வருகிறது.1996 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு இந்திய அணியில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது.

அதாவது ஒரே நேரத்தில் நான்கு மாஸ்டர் பிளேயர்ஸ் உருவானார்கள்.அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு அணியிலும் உலகின் அதிசிறந்த நான்கு வீரர்கள் ஒரே சமயத்தில் விளையாடியதில்லை.அந்த நான்கு வீரர்களையும் கிரிக்கெட் உலகம் செல்லமாக Fabulous Four என்று அழைத்தது.சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகிய நான்கு ஜாம்பவான்களே அவர்கள்.

கிரேக் சாப்பல், இந்திய அணிக்கு பயிற்சியாளரானதும் இந்த நட்சத்திர ஆதிக்கத்தை ஒடுக்க நினைத்தார்.அணி என்பது கூட்டு முயற்சி, தனிப்பட்ட வீரர்களின் நட்சத்திர அந்தஸ்தால் தனிப்பட்ட அவர்களுக்குத்தான் பெருமையே தவிர, அணிக்கு எந்தவித லாபமும் இல்லை என்று கருதினார்.

அவரது கருத்து சரியானதா என்கிற விவாதத்துக்கு எல்லாம் போக வேண்டாம்.ஆனால் -உலகின் தலை சிறந்த Fab Four வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் கூட இந்தியாவால் உலகக் கோப்பையைப் பெற முடியவில்லை என்கிற யதார்த்தத்தை நாம் ஜீரணித்துத்தான் ஆகவேண்டும்.

இத்தனைக்கும் இளம் வீரர்களாக சேவாக், யுவராஜ்சிங், மொகம்மது கைஃப் உள்ளிட்டவர்கள் உள்ளே நுழைந்து கலக்கிக் கொண்டிருந்தாலும் மேற்கண்ட நால்வர் அணியின் ஆதிக்கமே கோலோச்சிக் கொண்டிருந்தது.நட்சத்திர ஆதிக்கத்தை வெறுத்த சாப்பலோடு முதலில் மோதியவர் கங்குலிதான்.கங்குலியின் ஃபார்ம் குறித்து சாப்பல் கேள்வி எழுப்ப, இந்திய கிரிக்கெட் அணியில் பூகம்பமே எழுந்தது.

யாராலும் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருந்த தாதாவையே, சாதாரண ஒரு கோச் கேள்வி கேட்பதா என்று ரசிகர்களும் பொங்கினார்கள்.
ஆனால் -முன்னணி வீரர்களைக் குறிவைத்து சாப்பல் எழுப்பிய பிரச்னைகள் ‘டெக்னிக்கலாக’ சரியானவையே என்றுதான் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதினார்கள்.

கிரிக்கெட் வாரியம் தனித்தனி யாக சாப்பல், கங்குலி போன்றோரோடு பேசி அப்போதைக்கு பிரச்னையை ஊத்தி மூடினார்களே தவிர, அது நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டேதான் இருந்தது.இந்தச் சூழலில்தான் தோனி சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி இருந்தார்.

ஒரு மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் இருந்த இந்திய கிரிக்கெட், தோனியை உள்வாங்கிக் கொண்டது என்பது இயல்புதான்.
தோனியின் வருகைக்கு சற்று முன்னதாக மிகப்பெரும் எதிர்பார்ப்பாக அணிக்குள் நுழைந்திருந்த மற்றொரு விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், தொடர்ச்சியாக பேட்டிங்கில் சொதப்பிக் கொண்டிருந்ததும் தோனியின் இடத்தை உறுதிப்படுத்தியது.

இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சொதப்பியிருந்த தோனிக்கு, ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாகவோ என்னவோ இலங்கை அணியின் இந்திய சுற்றுலா அமைந்தது.

கிரேக் சாப்பலின் கறாரான கண்காணிப்பு, அணியின் முன்னணி வீரர்களின் ஃபார்ம் குறித்த விவாதங்கள் ரசிகர்களிடையே சூடு பிடித்துக் கொண்டிருந்தது போன்ற சூழலில் அப்போதைய உலகின் நெம்பர் 2 அணியோடு இந்திய அணிக்கு தொடர்.தன்னை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு எப்போதுமே கிரிக்கெட் பேட்டால்தான் பதில் சொல்வார் சச்சின்.

சாப்பல், அதுவரைக்கும் சச்சினை எதுவும் கேட்கவில்லை.இருப்பினும் -இன்று கங்குலியைக் கேட்பவர், நாளை நம்மையும் கேட்க எவ்வளவு நேரம் ஆகுமென்று நினைத்தாரோ என்னவோ, இலங்கை அணியை முதல் இரண்டு போட்டிகளில் போட்டு வெளுத்தார் சச்சின்.

தொடர்ந்து இரு போட்டிகளிலும் சச்சின் ‘ஷைன்’ ஆகி இந்தியா வெல்ல, மூன்றாவது போட்டி புனே நகரில் நடக்க இருந்தது.போட்டி நடக்க இருந்த நாளுக்கு முதல் நாள் ஒரு டிஸ்கொதே நிகழ்ச்சியில், புனே நகரத்து விஐபிகள் தந்த வரவேற்பில் இந்திய அணியினர் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.

ஹாஸ்டல் வார்டன் மாதிரி கிரேக் சாப்பல் கண்காணித்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு வீரராக டிஸ்கொதே நடந்த ஹாலுக்கு வரத் தொடங்கினர்.
சிறுநகரப் பையனான தோனிக்கு இதுமாதிரி பார்ட்டிகள் புதிது.

அந்த கிளப்பின் வாசலில் விஷயம் கேள்விப்பட்டு நூற்றுக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அபிமான வீரர்களைப் பார்க்க குழுமியிருந்தார்கள்.
முதலில் வந்தவர் யுவராஜ்சிங்தான். அடிப்படையிலேயே ஜோவியலான குணம் கொண்ட யுவராஜ், ஒரு பார்ட்டி பறவையும் கூட.

“183 மனிதர் வருகிறார்...” என்று திடீரென டீஜே அலற, ஹர்பஜன் சிங் மற்றும் இர்ஃபான் பதானோடு வந்துகொண்டிருந்த தோனி, சட்டென்று வெட்கப்பட்டு பதானுக்கு பின்னால் போய் மறைந்து நின்றுகொண்டார்.

இர்ஃபான் பதானோ தோனியைவிட அதிகமான நாண உணர்வு கொண்டவர். அவர் ஹர்பஜன் சிங்கின் பின்னால் ஒளிந்துகொள்ள முயற்சிக்க, வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ‘ஓ’வென்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

ஏற்கனவே முதல் ஆளாக பார்ட்டிக்கு வந்து, கையில் கண்ணாடித் தம்ப்ளரோடு அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்த பயிற்சியாளர் சாப்பலை இந்த ஆரவாரம் எட்டியதுமே, என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தார்.அச்சம், நாணம், பயிர்ப்பு, மடம் என்றெல்லாம் கலவையான உணர்வுகளோடு காலில்கோலம் போட்டுக்கொண்டு நின்றுகொண்டிருந்த தோனியைப் பார்த்துப் புன்னகைத்து “கமான் மை பாய்...” என்று அழைத்தார்.இந்த மனிதருக்கு சிரிக்கக்கூடத் தெரியுமாவென தோனிக்கு ஆச்சரியம்.

(அடித்து ஆடுவோம்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்