தமிழர் தொன்மை பேசும் பழந்தொழில்கள்



‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியின் வரிகளுக்கு விலாசமாய் வாழ்பவர்கள் தமிழர்கள். ஆதிகாலம் தொட்டே பலவிதமான தொழில்களில் ஈடுபட்டு முன்னேறிய சமூகங்களில் ஒன்றாக வாழ்ந்துவருபவர்கள் நாம்.

பழங்காலம் முதலே நம்முடன் பயணப்பட்டு நம் பரிணாம வளார்ச்சியின் பகுதியாய் இருந்த பல தொழில்கள் இன்றைய நவீன வாழ்வின் மாறுதல்களால் தம் இறுதி மூச்சை இழுத்துப் பிடித்தபடி குற்றுயிரும் குலை உயிருமாய் உள்ளன. உழவுக் கருவிகளுக்கு நன்றி சொல்லும் இப்பொங்கல் தருணத்தில் நம் பண்பாட்டின் அடையாளமாய் நிற்கும் அப்பழந்தொழில்களையும் நன்றியோடு நினைவுகூர்வோம் வாருங்கள்.

மாடுகளுக்கு லாடம் கட்டும் தொழில்

பயணத்துக்கும், பாரம் சுமக்கவும், வண்டி இழுக்கவும், உழவுக்கும் மாடுகள் அவசியப்பட்ட காலமிருந்தது. மாட்டினை ‘செல்வம்’ என்றே தமிழும் பேசியது. மாடுகள் வைத்திருக்கும் வீடுகளே செல்வந்தர்களின் வீடுகளாக மதிக்கப்பட்டன. சதா காலமும் உழைக்கிற இந்த மாடுகளின் கால் குளம்பு தேயாதிருக்க, நாம் செருப்பு அணிவதைப் போலவே, மாடுகளின் பாதங்களுக்கு ‘லாடம்’ அணிவிப்பதும் அவசியப்பட்டிருந்தது.

ஒரு காலத்தில் தெருவுக்கு ஒருவர் என இந்த லாடம் கட்டும் தொழிலில் இருந்தனர்.ஆனால் இன்றைக்கோ, இந்தத் தொழில் செய்பவர்கள் என மாவட்டத்துக்கு சிலரைச் சொல்வதே துர்லபமாய் இருக்கிறது. மாட்டு வண்டி, கூட்டு வண்டிகள் எண்ணிக்கை சரிந்ததுடன், உழுவதற்கென டிராக்டர் உள்ளிட்ட கருவிகள் வருகையாலும் மாடுகளுக்கு லாடம் கட்டுவோர் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

கடும் பாரம் சுமந்து உழைக்கிற ஒவ்வொரு மாட்டின் கால் குளம்பும் தேய்ந்துபோகும். இதனைக் காக்கும் வகையிலேயே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவசியம் அந்த மாட்டுக்கு ‘லாடம்’ கட்டப்படுகிறது. கால் குளம்பானது வெட்டினால் வளரும் திறன்மிக்கது. எனவேதான், இந்த கால் குளம்பின் மீது அதன் வடிவொத்த தகட்டினை வைத்து, அதிலுள்ள ஓட்டைகளில் கூர்மையான இரண்டு இஞ்ச் அளவிலான  இதற்கெனவே தயாரிக்கப்பட்ட ஆணிகளைக் கொண்டு இறுக்கி இந்த தகட்டை மாட்டுகின்றனர். மாட்டு–்க் கால் குளம்பின் சதைப்பகுதியில் ஆணி இறங்காமல் லாவகமாக இந்த ‘லாடம்’ கட்டுதலைச் செய்வதற்கு அனுபவ அறிவு அவசியம்.

இப்படிக் கட்டப்படும் லாடம் அதிகபட்சமாக நாற்பது நாட்களுக்குள் தேய்ந்துபோகும். ஓய்வின்றி கூடுதல் உழைப்பு கொள்கிற இந்த மாடுகளின் லாடம் தேய்ந்ததுமே, நொண்ட ஆரம்பித்து, நடை தளர்ந்து மாடுகள் படுத்துவிடும். இதனைக் காணும் விவசாயி, மாட்டுக்கு எந்த வேலையும் கொடுக்காமல், உரிய தீவனம் கொடுத்து, முழுமையான ஓய்வுதருகிறார். இதன் பின்னரே இந்த தேய்ந்த லாடத் தகடுகளை நீக்கிவிட்டு, குளம்பை லேசாகச் சீவிச் சரிப்படுத்தி அதன் மீது மீண்டும் லாடம் அடிக்கப்படுகிறது.

ஒரு மாட்டை எடுத்துக்கொண்டால், வலது, இடதென இரு புறமும் ஒரு காலுக்கு இரண்டு குளம்புகளில் இரு ‘லாடத் தகடுகள்’ பொருத்தப்படுகின்றன. இதன்படி நான்கு கால்களுக்கும் எட்டு லாடங்கள் அடிக்கின்றனர். ஒரு மாட்டுக்கு லாடம் அடிக்க இருநூறு ரூபாய் வரை கூலி வாங்கினாலும், லாடத் தகடுகள், ஆணிகள், வேலையாளுக்கு கூலி உள்ளிட்டவைகளுக்கு பாதிக்குப் பாதி செலவாகிப்போக, மீதிதான் வருவாயாம்.

நாள் முழுக்க லாடம் அடித்தாலும், ஐந்து மாடுகளுக்கு மட்டுமே லாடம் அடிக்கலாம் என்கின்றனர் இத்தொழிலில் இருப்போர். மாட்டுக்கு லாடம் அடிப்பதற்கு முன்பு, மாட்டின் வயிற்றுப் பகுதியில் கயிற்றினைக் கட்டி மர நிழலில் கீழே சாய்த்து குறைந்தது இரண்டு முதல் நான்கு பேர் சேர்ந்து கழுத்தை அழுத்திப் பிடித்துக்கொள்ள, ஒரு சில மணி நேரம் செலவழித்து வேலை பார்த்தே மாட்டுக்கான லாடங்கள் கட்டி முடிக்கப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த லாடம் கட்டும் தொழிலாளி போஸ் (60) பேசும்போது, ‘‘இன்றைக்கு மாடுகள் எண்ணிக்கை ரொம்பவே குறைந்துவிட்டன. வாகனங்கள் பயன்பாட்டினால் மாட்டு வண்டிகள் பயன்பாடு இல்லை. உழவுக்கும் மாடுகள் பயன்பாடு குறைந்துவிட்டது.

ஜல்லிக்கட்டு, எருதுகட்டுக்கு மாடு வளர்ப்போர் இருக்கின்றனர். ஆனால், இந்த மாடுகளுக்கு ‘லாடம்’ கட்டுவதில்லை. முன்னெல்லாம் மாதம் முழுவதும் வேலை இருக்கும். இப்போதோ ஒரு வாரத்துக்கு வேலைவருவதே கஷ்டம். சைக்கிளில் ஊர் ஊராகச் சுற்றி மாடுகள் வைத்திருப்போரைத் தேடிப்போயும் லாடம் கட்டுகிறோம்.

இதற்கான லாடத் தகடு, ஆணி போன்றவற்றை நாங்களே பட்டறை வைத்துத் தயாரித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. வேலைக்குப் பெரிதான வருவாயும் இருப்பதில்லை. இது தாத்தா காலத்து தொழில். மகன் கணேஷ் பாண்டி இன்ஜினியரிங் முடித்திருக்கிறார். இந்தத் தொழிலுக்கு வர வாய்ப்பில்லை. என்னுடனேயே இது முடிந்து விடப்போகிறது’’ என்கிறார்.

வெளுத்து வரும் சலவைத்தொழில்

ஊரின் அத்தனை துணிகளையும் வெளுத்து வெள்ளையாக்கும் இவர்களிடம் மிச்சமிருப்பது ‘வெளுத்துப்போன’ வாழ்க்கைதான். மதுரை சலவைத் தொழிலாளி பொன்ராமனிடம் பேசினோம். ‘‘அந்தக் காலத்துல கண்மாய்கள், குளங்கள், ஆறுகள், குட்டைகள்னு எல்லா காலமும் தண்ணி இருக்கும். ‘வண்ணார் துறைகள்’, ‘டோபி கானாக்கள்’ இருந்தன.

இன்னைக்கு துணிகளைத் தொவச்சு எடுக்க தண்ணிக்கு அலையிறோம். ரெண்டாயிரம் லிட்டர் தண்ணிய எண்ணூறு ரூபாய்க்கு விலை பேசி டிராக்டர்ல கொண்டாந்து, இந்தத் துணிங்களைத் தொவச்சி பொழப்பு நடத்துறோம். முன்பு அழுக்கு மூடை சுமக்க கழுதைகள் இருந்துச்சு. இப்போது வாடகைக்கு டிரை சைக்கிள்கள் பிடிக்க வேண்டி இருக்கு. அப்போ கரம்பையைக் கொட்டித்தேச்சா துணிங்க ‘பளிச்’னு ஆகும். வெள்ளாவியில் வச்சும் வெளுக்கலாம். பெருசா செலவிருக்காது. இப்போ சோடா, வாஷிங் பவுடர், சோப்பு, ரோஸ், நீலம், டிேனாபால், சயனிங்...னு ஏகப்பட்டது செலவழிச்சுத்தான் வெளுக்க முடியுது.

காலையில எங்க வயித்துப் பசிக்கு கஞ்சி காச்சுறமோ இல்லையோ, ஒவ்வொரு நாளும் கம்மாக்கரையில துணிக்கு கஞ்சிபோட அடுப்பு மூட்டி சட்டி வச்சு ஜவ்வரிசி மாவு காச்சுறோம். தொவச்சு, காயவச்சு, அடுப்புக்கரி போட்டபொட்டி வச்சு தேச்செடுத்து பத்திரமா கொண்டு போய் சேர்த்தா, ஒரு துணிக்கு அதிகபட்சம் பதினைஞ்சு ரூபா வாங்கலாம். ஆனாலும் இதுல வெளுப்புச் செலவுக்கே பத்து ரூபாய்க்கு மேலே போயிடுது.

மொத்தக் குடும்பமும் அதிகாலை நாலரைக்கே எழுந்து வேலையைத் தொடங்கி சாயங்காலம் ஐந்தரை மணி வரை வேலை பார்த்தாலும் நெசமாவே தலைக்கு நூறு ரூபாய் கிடைக்கிறதே கஷ்டங்க. இன்னைக்கு துணி துவைக்க இயந்திரம் வந்தாச்சு. ‘டிரைகிளீனர்ஸ்’ பெருகிப்போச்சு.

நாங்க எங்க பழந் தொழிலை மெல்ல இழந்துட்டு வர்றோம்’ என்கிறார். தினமும் ஊர்க்காரர்களுக்கு அழுக்கற்ற வெளேரென்ற மடிப்புக் கலையாத ஆடைகள் தந்த இவர்கள் சலவைத் தொழில், கசங்கிச் சுருங்கி காணாமல் போய் வருவதே உண்மை.

செருப்பு தைக்கும் தொழில்

அறுந்த செருப்புகளைத் தைத்து இணைத்து கால்களுக்கு தருகிற இவர்கள் வாழ்வு, வறுமைக் கற்களால், இயலாமை முற்களால் குத்திக் கிழிந்தே கிடக்கின்றன. மதுரை செருப்பு தைக்கும் தொழிலாளி சரவணனிடம் பேசினோம்.

‘‘அப்பா, தாத்தா, பாட்டன்னு இது பரம்பரைத் தொழிலுங்க. ஒரு காலத்துல தோலு வாங்கி அறுத்து செருப்பு தச்சுத் தர்றதுண்டு. இப்போ வெத வெதமா செருப்புங்க நூறு ரூபா வெலைக்குள்ளே கிடைக்குது. யாரு எங்களைத் தேடி வருவா? அறுந்த செருப்புகளைத் தச்சுத் தரலாம்னா, கால்ல மாட்டுன செருப்பு கொஞ்சம் கிழிஞ்சாலும் தூக்கிப்போட்டுட்டு புதுசு வாங்கி மாட்டிக்கிறாங்க. முன்னே ஷூக்களுக்கு பாலீஷ் போடுறதுண்டு. இப்போ லிக்யூடு பாலீஷ் மாதிரி கடையில கிடைக்கிறதை வாங்கி வச்சு, அவங்களே போட்டுக்கிறாங்க’’ என்கிறார்.

நவீன தொழிற்கருவிகளாலும், நுட்பத்தாலும் அத்தனை தொழில்களும் வளர்ந்துகிடக்க, இந்த ‘செருப்பு தைக்கும் தொழில்’ இன்றும் நைந்து நசிந்தே கிடக்கிறது. இப்போதும் முனை ஓட்டை கொண்ட ஊசி, கத்தி, கட்டிங் பிளேயர், உளியுடன், செருப்பை அடித்துச் சமப்படுத்தும் ‘கொட்லான்’, மாட்டியபடி செருப்பில் ஆணி அடிக்க, தைத்தெடுக்க வசதி தருகிற ‘லோஸ்’ இரும்பென அச்சு முறிந்த ஆதிகாலத் தொழிற்கருவிகளே இவர்களிடம் இருக்கின்றன.

பேச்சைத் தொடர்ந்தார் சரவணன்... ‘‘நூலு, அதுக்குத் தடவுற மெழுகு, பாலீசு டப்பா, பிரஷ் பட்டனுங்க, ஆணிங்க எல்லாமே விலை ஏறிப்போச்சுங்க. எப்பவுமே நாங்க சொன்ன கூலி, எங்களுக்குக் கிடைச்சதில்லீங்க.

ரோட்டுல கம்புல குடையைக் கட்டிக் கிடந்தாலும் பேயுற மழையும், அடிக்கிற வெயிலும் எங்க மேலதாங்க விழுது. ரொம்பப் பேரு பொழப்பில்லாம துப்புரவுப்பணிக்குப் போயிட்டாங்க. எங்க பிள்ளைங்களும் இந்தத் தொழிலுக்கு வரத் தயாராயில்லை’’ என்றார்.

பட்டறைத் தொழில்

மதுரையில் எட்டு தலைமுறை கடந்து நிற்கிறது ‘கொல்லன் பட்டறை’ தொழில். இதுவும் இப்போது நசிந்து வருவதே உண்மை. கரியைப் போட்டு, கையால் ‘துருத்தி’ சுழற்றிய காற்றில் நெருப்பு மூட்டி, இரும்படித்து, வளைத்து, தேவைக்கான பொருட்கள் வடிக்கிற இத் தொழிலில் மிதமிஞ்சிய ‘உழைப்பு’ இருக்கிறது.

பிற்காலப் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் காலத்திலிருந்தே இந்தத் தொழில் நடந்திருக்கிறது. மன்னன் அழைப்பில் ராமநாதபுரம் குசவன்குடி பகுதியிலிருந்து முந்நூறு குடும்பங்கள் மதுரை வடகிழக்கில் குடியமர்ந்து இந்த ‘பட்டறைத் தொழிலைத்’ தொடர்ந்தனர். மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிய ஈட்டிக் கம்பி வேலியையும் இவர்களே செய்தனர்.

படை ஆயுதங்கள், அரண்மனைத்தளவாடங்கள் என மன்னனுக்குப் பாதுகாப்புப் பொருட்களும் இவர்களே படைத்தனர். இத்துடன் மாடமாளிகை, கூட கோபுர இரும்பு வேலைகளிலும் கவனம் காட்டினர். மன்னரைக் கடந்து மக்கள் தேவைக்கான பொருட்கள் படைப்பில் இவர்கள் பட்டறைகள் திசை திரும்பின.

மதுரை புதூர் செய்யது அப்துல்காதர், லியாக்கத்தலி ஆகியோரிடம் பேசியபோது, ‘‘மன்னர்களுக்குப்பிறகு, ஏர் கலப்பை, வண்டி உருளை, தகரப் பெட்டிகள், இரும்புச் சட்டிகள், தள்ளுவண்டிகள், டிரைசைக்கிள்கள், வீட்டு உபயோக தளவாடச் சாமான்கள்னு மக்களுக்காக பொருட்கள் தயாரிக்க ஆரம்பிச்சிட்டோம்.

‘வாக்குப் பெட்டி’கள் முதல் தண்ணீர் லாரிகளுக்கான ’டேங்கர்கள்’ வரை ஏராள தகரப் பொருட்களை செய்கிறோம். இந்த பழந்தொழில் இன்றைக்கு அழிஞ்சுக்கிட்டு வருது. எங்களுக்குப் பின்னால இந்தத் தொழிலை யார் செய்வாங்களோ தெரி
யலை’’ என்கின்றனர்.

அழிந்துபோன ஆழ்கடல் தேடல்

மூச்சடக்கி கடலடிக்கு மூழ்கிச் சென்று பாறைகளில் ஒட்டி வளரும் முத்துச்சிப்பிகளைப் பறித்துக்கொண்டு வெகுநேரம் கழித்து கடலுக்கு வெளியில் வருகிற காரியம் லேசுப்பட்டதல்ல. அன்றைக்கு ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மணப்பாடு வரைக்கும் ஏறத்தாழ நூற்று அறுபது கி.மீ. தூரமுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதியில் எழுநூற்று எழுபது சதுர மைல் பரப்பில் இருந்த அறுநூறு படுகைகளில் இருந்து முத்துச் சிப்பிகளை நம்மவர்கள் சேகரித்திருக்கின்றனர்.

கடற்கரையிலிருந்து பதினொன்று முதல் பதினாறு கி.மீட்டர் தூரத்தில் இருபது மீட்டர் ஆழ்கடற்பகுதிகளில்தான் இந்த சிப்பிகள் சேகரிக்கப்பட்டன. கடல் அலைகள் ஆவேசமற்ற நவம்பர் முதல் மே மாதம் வரையுள்ள காலம் முத்துக்குளிப்புக்கு உகந்த பொழுதாகும். தினமும் எண்ணூறு  ஆட்கள் மூலம் குறைந்தது இரண்டு லட்சம் முத்துச்சிப்பிகள் சேகரிப்பு நடந்துவந்தது.

முத்துக்குளித்து எடுத்து வரும் சிப்பிகளில் மூன்றில் இரு பகுதி அரசுக்குச் சேர்ந்தது. இந்த வருவாய் அரசு நிர்வாகச் செலவுகளுடன், ராமேஸ்வரம், திருப்புல்லாணி உள்ளிட்ட ஆலய நிர்வாகச் செலவுகளுக்கும் அளிக்கப்பட்டதை நாயக்கர், சேதுபதி மன்னர்களின் செப்பேடுகள் காட்டுகின்றன.

வரலாற்றில் பெரிப்ளூசு (கி.பி.80), தாலமி (கி.பி.130) போன்றோர் மன்னார் வளைகுடாப் பகுதியில் கிறித்துவ ஆண்டின் தொடக்க காலத்தில் நடந்த முத்துக் குளித்தலின் உலகளாவிய சிறப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ராமநாதபுரம் கடற்கரையில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் நடந்த முத்துக் குளித்தலின் மேன்மையை எகிப்து நாட்டுப் பயணி காஸ்மாஸ் இண்டிகோ பிளஸ்டாஸ் தன் குறிப்புகளில் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

கி.பி. ஒன்பது முதல் பதினொன்றாம் நூற்றாண்டுகள் வரை இஸ்லாமிய வணிகர்கள் கீழக்கரையில் நடத்திவந்த முத்து விற்பனை வரலாற்றில் முக்கிய இடம்பிடித்திருக்கிறது. மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கடந்த காலங்களில் முத்துக் குளிப்பில் தூத்துக்குடி முன்னிலையில் நின்றது.

ஆனால், சிப்பியில் வளம், தனம் போதிய அளவு இல்லாது போய், ஒரு காலத்தில் உலகத்தையே நிமிர்ந்து பார்க்கவைத்த தமிழகத்தின் முத்துக் குளிப்புத் தொழில் நசிந்துபோய், கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக இந்த முத்துக் குளிப்பு நம்மைவிட்டுக் கழன்று காணாமல் போய்விட்டது.

இயற்கையாய் மூழ்கி முத்தெடுத்தது போய், அறிவியல்முறையில் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் தரை தொட்டு சேகரித்த சிப்பிகளில் செயற்கைமுறை
யில் முத்து உற்பத்திசெய்கிற தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிற இக்காலத்தில் அன்றைக்கு நம்மூரில் நடந்த ‘முத்துக் குளித்தல்’ ஒரு வரலாற்று நிகழ்வாக நம் சமகாலத்திலேயே மாறிப்போயிருக்கிறது.

உலையில் உருகும் மனிதர்கள்

பழைய பித்தளைப் பாத்திரங்களை ‘மூசை’ என்கிற உலைக் களனுக்குள் போடுகின்றனர். நான்காயிரம் டிகிரிக்கும் அதிக வெப்பம் தாங்கும் இந்த ‘மூசை’ உலை, சேலத்திலிருந்து ஒருவகை ‘கிராபைட்’ மண்ணில் தயாராகி மதுரை வருகிறது.

இந்த ‘மூசை’யை வேறொரு மண் பூச்சு அடுப்பிற்குள் நடுவாக வைத்து, சுற்றிலும் நிலக்கரியுடன், அடுப்புக் கரியும் கலந்து போட்டு, நெருப்பூட்டி, மண் அடுப்பின் அடிப்புறத்து துளை வழி, மோட்டார் மூலம் காற்றைச் செலுத்துகின்றனர். இதனால், ‘மூசை’யைச் சூழ்ந்த நிலக்கரி, அடுப்புக்கரி நெருப்பில் கசிந்து‘கங்காகி’ அதி தீவிர வெப்பம் தந்து, தனக்குள் இருக்கும் பித்தளைப் பாத்திரங்களை உருக்கி உலோகக் குழம்பாக்கிவிடுகிறது.

ஏற்கெனவே பலகையிலான இரு பெட்டிகளில் தஞ்சையிலிருந்து மதுரை வரும் ஒருவித பசை மண் நிரப்பி நடுவில் தேவையான வடிவங்களில் சிலை உள்ளிட்ட உருவத்தை அழுத்தி வார்ப்பெடுத்து தயாராக வைத்திருக்கின்றனர். அடுக்கிய இரு பேட்டன் எனும்  அச்சுப்பெட்டிகளின் மேல்புறப் பெட்டியில் ‘ரன்னர்’ எனும் இரு துளைகள் இருக்கின்றன.

ஏற்கெனவே காய்ச்சி தயாராக இருக்கும் பித்தளைக் குழம்பினை, இதற்கான கரண்டியில் அள்ளி பெட்டியின் மேல்துளை (ரன்னர்) மூலம் உள்புறம் ஊற்ற, உள்புற குழிப்பகுதியை உலோகக் குழம்பு சென்று சேர்ந்து, அதற்குள் இருக்கும் உருவமாக மாறுகிறது. ஆறவிட்டு, இந்த அச்சுப் பெட்டி பிரிக்கப்பட்டு பித்தளையிலான அந்த ‘படைப்புப் பொருள்’ வெளியெடுக்கப்படுகிறது.

பித்தளைக் குழம்பு ஊற்றப்பட்ட ரன்னர் பகுதியை உள்ளிட்ட தேவையற்றவைகளை வெட்டியெடுத்து, லேத்தில் தேவைக்கு மரை போட்டு, துடைத்தெடுக்கப்படுகிறது. பின்னர் கைக்கடைசலில் வழுவழுப்பாக்கி, நகாசு வேலைகள் முடித்து பாலீஷ் போட்டு எடுக்கும்போது அற்புத ‘கலைப் பொருளோ’, ‘கடவுள் சிலையோ’ நம் கைக்கு வந்து விடுகிறது.

மதுரையின் உலோகச் சிற்பக் கலைஞர்கள் சுந்தரமூர்த்தி, சக்திவேல், பழனிச்சாமி ஆகியோரிடம் பேசினோம். ‘‘முக்கிய சாமி சிலைகள் வடிக்கும்போது மட்டுமே இந்த பித்தளைக் குழம்புக்குள், சிறிதளவு ஐம்பொன் உலோகமும் சேர்த்துக்கொள்வோம். இப்படி கடவுளைப் படைக்கும் நாட்களில் விரதமிருந்து உடல், மன சுத்தம் காப்பதுண்டு.

பித்தளையில் விதவிதமான சுவாமி, அம்பாள், பிள்ளையார், கருப்பசாமி உருவங்கள் கொண்ட சிலைகள் மட்டுமல்லாது, திருவாச்சி விளக்கு, கோயில்களில் அர்ச்சகர் பக்தர்களுக்கு விபூதி வழங்குவதற்கான கபால பாத்திரம், நேர்த்திக்கான ஆளுயர அரிவாள்கள், ‘வங்கி’ உள்ளிட்ட சாமி ஆயுதங்களுடன், கதவு கைப்பிடி வரை காய்ச்சி எடுத்து ஊற்றி உருவாக்குகிறோம்.

காலத்தால் அழியாத கலைப்பொருட்கள் செய்கிற திருப்தியில் பரம்பரையாக இந்தத் தொழிலை விடாமல் செய்கிறோம். வருவாய் பெரிதாக இருப்பதில்லை. நாள் முழுக்க உலைக்களனில் வெந்தாலும், அதிகபட்ச கூலியாக கைக்கு முந்நூறுக்குள்தான் கிடைக்கும். நவீன கருவிகள் வருகை இத்தொழிலை ஓரங்கட்டிவிட்டன. எங்கள் சந்ததிகள் இத்தொழிலுக்கு வரத்தயாராக இல்லை’’ என்றனர்.
       
தொகுப்பு : செ.அபுதாகிர்