ஈக்கோகேப்ஸ்யூல் வீடு



ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் சுலபமாக தூக்கிச் செல்லக்கூடிய வீட்டை வடிவமைத்திருக்கிறார்கள் ஸ்லோவாக்கியாவின் கட்டடக் கலைஞர்கள். 14.7 அடி நீளமும், 7.9 அடி அகலமும் கொண்ட இந்த வீட்டுக்குள் ஒரு கிச்சன், சாப்பிடுவதற்கு தனியாக ஒரு டைனிங் பகுதி, ஒரு டாய்லெட், குளிப்பதற்கு ஒரு வெந்நீர் ஷவர், துணிமணிகள் வைக்க ஓர் இடம் என எல்லா வசதிகளும் இருக்கின்றன.

தவிர, மழை நீர் சேகரிப்பு வசதியும் உள்ளது. அதனால் தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு நொடி கூட இடைவெளியில்லாமல் குளிர்சாதனப் பெட்டி இயங்கும் இந்த வீடு, வெயிலடிக்கும் இடத்தில் சூரிய சக்தி மூலமும், காற்றடிக்கும் இடத்தில் குட்டி காற்றாலை மூலமும் தனது பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும்.  கேப்ஸ்யூல் + இயற்கைக்கு உகந்ததாக உள்ளதால் ‘ஈக்கோகேப்ஸ்யூல்’ வீடு என்று இதனை அழைக்கின்றனர். l

எட்டாவது அதிசயம்

உலகின் ஏழு அதிசயங்களுக்கு இணையான இயற்கையின் படைப்புகளுக்கும் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள், புரொஜெக்ட்கள், டிசைன்களுக்கும் கொடுக்கப்படுகிற ஒரு கௌரவ பட்டம்தான் இந்த எட்டாவது அதிசயம்.

இது அதிகார பூர்வமற்ற ஒரு பட்டம். இருந்தாலும் ஏழு அதிசயங்களைப் போல இதற்கும் தனி மரியாதை உண்டு. உலகப்புகழ் பெற்ற மல்யுத்த வீரர் ஆந்த்ரே தி ஜெயண்ட், எட்டாவது அதிசயமாக புகழப்பட்டார். காரணம், அவரின் எடை 236 கிலோ, உயரம் 7 அடி 4 அங்குலம். இதுபோக ‘கிங்காங்’ கதாபாத்திரமான ராட்சத சிம்பன்ஸியும் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகிறது.

த.சக்திவேல்