தொல்(லைக்) காப்பியம்



பொன்மொழிகள் என்னும் புண்மொழிகள்!

வாட்ஸ் அப்பு, ஃபேஸ்புக்னு குரூப்பா குட்மார்னிங் சொல்லுற கொடூர கும்பல் ஒண்ணு கூர்க்காவே தூங்கற நேரத்துல கூட சத்தமே இல்லாம சைலண்டா பொன்மொழிகள் என்கிற பேருல ‘புண்’மொழிகளைப் போட்டு பாரத தேச கோட்டையிலே பாஷைகளின் மீது பரிதாபமே படாம பத்துப் பக்கமும் ஓட்டைய போட்டுக்கிட்டு இருக்கு.
ரியாலிட்டி ஷோல காம்பயர் செய்யறவங்க கூட மாத்தி மாத்தி நாலு கோட்டுதான் போடறாங்க. ஆனா, ஓசில நெட் தர சிம்மை வைச்சுக்கிட்டு பொழுதுக்கும் ஏதாவது Quoteட போட்டு பயங்காட்டிக்கிட்டே இருக்கானுங்க.  

செவுத்துல பார்க்கிற ‘இங்கு அசுத்தம் செய்யாதீர்கள்’ என்கிற வாக்கியத்துக்கு கூட ‘இப்படிக்கு விவேகானந்தர்’னு சேர்த்து பொன்மொழியாக்கறானுங்க; ‘இது பெண்கள் இருக்கை’னு பேருந்துல எடுத்த வாக்கியத்தை கூட புத்தர் சொன்னாருனு சிரிக்கிறானுங்க.

செத்துப் போனவர்களை டிஸ்டர்ப் பண்ணணும்னா, அவங்க சமாதிக்கு போய் தியான டிராமா பண்ணலாம். இல்ல ஒரு படி மேல போய் சபதம் பண்ணலாம். ஆனா, அவங்க எழுதாததை எழுதுன மாதிரி போட்டு பாவம் மட்டும் பண்ணக்கூடாது மை டியர் சன்!

புத்தர், விவேகானந்தர், அப்துல் கலாம்... இந்த மூணு பேரை வைச்சுதான் எவனோ எழுதுன எழுத்தை தரதரன்னு இழுத்து வந்து நம்ம கழுத்தை அறுக்கிறானுங்க.

போன வாரம் கேரளால இடிச்ச கட்டடத்துக்கும் மார்ட்டின் லூதர் கிங் விட்டுப்போன வெற்றிடத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்குமோ அதே மாதிரி இவனுங்க எழுதற பொன்மொழிக்கும் பின்னால போடுற பேருக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல!‘11 மாடிய இடிக்கிறத பார்க்க ஆயிரம் பேருண்டு, பஸ்ல ஏறுனா நம்ம Bodyய இடிக்கறானுங்களே அதை கேட்க யாருண்டு? - அப்துல் கலாம்’னு அனுப்புறான் சார் ஒருத்தன்!

இந்த மாதிரி ஆட்களெல்லாம் ஸ்மார்ட்போன் வைச்சிருந்தா வள்ளுவர் கோட்டத்தை வாங்கித் தரேன்னு நல்லா கல்லாவே கட்டலாம்.
‘ஏப்ரல் மாசம் பல பேரு ஆக மாட்டான் daddy, அதற்கு காரணம் ஆடி - புத்தர்’னு பார்வேடட் மெசேஜ் ஒண்ணு வருது. அடேய்களா... தான் உண்டு தன் வேலை உண்டுன்னு எதுக்குமே ஆசைப்படாம, கோவப்படாம உச்சா போயிட்டு ஓரமா படுத்திருந்தவரை எழுப்பி கூட்டியாந்து இப்படி அசிங்கப்படுத்துறீங்களேடா?  

‘மனுஷன் கண்டுபிடிச்சதுலயே மோசமானது மூணு; பணம், பரீட்சை மற்றும் பொண்டாட்டி’னு விவேகானந்தர் சொன்னதா எழுதுறானுங்க. கடல்ல பாறை தேடி தியானம் பண்ணினவரை, ஏதோ கல்யாணத்தை வெறுத்து சந்நியாசம் போன சாமியார் மாதிரி மாத்தி வச்சிருக்கானுங்க!

ஆக, விவேகானந்தர் சொன்னது இவனுங்க எவனுக்கும் தெரில; இவனுங்க இப்ப இப்படியெல்லாம் சொல்வானுங்கன்னு விவேகானந்தருக்கும் தெரில!
இப்படி விரல்ல நக்கல் பண்ணி படிக்கிறவனுக்கு வாயடைச்சு விக்கல் வர வைக்கிறது ஒரு டைப்புனா, படிக்கிறப்பவே feeling வந்து சீலிங் fanல தூக்குல தொங்க வைக்கிறது இன்னொரு டைப்பு.

‘தலையும் தலையும் முட்டிக்கிட்டா கொம்பு முளைக்கும், தண்ணி கலக்காம ஊத்திக்கிட்டா தலை வலிக்கும்’னு காந்தி சொன்னதா நேத்து ஒரு பொன்மொழியைப் படிச்சு டென்ஷனாகி தலை நிமிர்வதுக்குள்ள, ‘எனக்கு 56 இன்ச் நெஞ்சு வேண்டாம், எங்க ஊர் பள்ளிக்கூடத்துக்கு அஞ்சாறு பென்ச் போதும்’ன்னு நரேந்திர மோடி சொன்னதா இன்னைல இருந்து ஒண்ணு ஒவ்வொருத்தர் போன்லயும் பன்னு தின்னுக்கிட்டு இருக்கு.

தமிழ்நாட்டுல கையெழுத்து போடத் தெரியாதவன் கூட உண்டு. ஆனா, கருத்தும் கவிதையும் எழுதத் தெரியாதவனே இல்லைனு சொல்லலாம். பாத்ரூம் முன்புறத்துல ஆரம்பிச்சு ஆட்டோ பின்புறம் வரைக்கும் எழுத இடம் இருந்தா போதும், ஏர்ல பூட்டுன எருமையாட்டம் கருத்தா உழுதுடுவானுங்க. கொஞ்சம் கேப் கிடைச்சா போதும், கவிதை கட்டுரை கிடைக்குதோ இல்லையோ கருத்தும் பொன்மொழியும் நிச்சயம்.  

நாட்டுல வோட்டு திருடர்களுக்கு அப்புறம் அதிகமா இருக்கிறது quote திருடர்கள்தான். எவனோ இங்கிலீஷ்காரன் பெத்த பொன்மொழிக்கு, இன்ஷியலை மாத்திட்டு, அப்படியே டப்பிங் பண்ணி தன்னோட பொன்மொழியா உதிர்த்து கைதட்டலை வாங்கி கைப்பைல போட்டுக்கிட்டு போயிடுவாங்க பல பெரிய மனுஷங்க. Peg போடாத பணக்காரன் கூட உண்டு. ஆனா, நாட்டுல பொன்மொழிகளாலும் தலைகீழா நின்னாலும் தோணாத தத்துவங்களாலும் நிரம்பிய book போடாத பணக்காரனே இல்ல.

முந்தாநாள் வரைக்கும் போலீஸ் தேடுற கேடியா இருந்துட்டு பொசுக்குன்னு கல்வி daddyயா மாறுற பலபேருக்கு முதல் புராஜெக்டே பொன்மொழிகளால் புள்ளி வச்சு கருத்துக்களால் கோலம் போட்ட புத்தகங்கள்தான்!

கூஜாவுக்குள்ள இருக்கிற தண்ணிய குடிக்க காக்கா கல்லை எடுத்து உள்ள போட்டா ஒரு லாஜிக் உண்டு. கடல் தண்ணிய குடிக்க எதுக்கு? அணில் ஓட எதுக்கு ஆக்சிலேட்டரு? இல்ல எமன் ஏறி வர எருமைக்கு எதுக்கு இண்டிகேட்டரு..? பணம் இருக்கிறவன் பேசுறதெல்லாம் பொன்மொழிதான், காசு இருக்கிறவன் கொட்டாவி விட்டா கூட கருத்துதான்!

இனிமேல் நாட்டுல எவனாவது quoteகளை எழுதணும்னா, அவனுங்களை ஒரு குயர் நோட்டு வாங்கி வீட்டுல எழுத சொல்லணும். இல்லை அவனுக்கே அவனை ஒரு fake id உருவாக்கச் சொல்லி அது கூட chatல எழுத சொல்லணும். அதுவுமில்லன்னா நடுநிசி நேரத்துல நேஷனல் ஹைவேல ரோட்டுல உட்கார்ந்து எழுத சொல்லணும்.

அதை விட்டுட்டு அடுத்தவன் கண்ல படறா மாதிரி எழுதுனா, அவன் அடுத்த ஜென்மத்துல அணையை மூட தெர்மாகோல் ஐடியா தரவனா உலகமே தெரியாம வாழ்ந்து சாகணும்!

தோட்டா ஜெகன்