நான்... சிற்பி பாலசுப்ரமணியம்



இலக்கியத்தின் மீது கொண்ட ஆழ்ந்த பற்றும், அதில் தனித்துவம் காணும் அயராத உழைப்பும்தான் என்னை இங்கே கொண்டு வந்திருப்பதாக நம்புகிறேன்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்தில் 1936ல் பிறந்தேன். அப்பா விவசாயி. அந்தக் காலத்தில் பள்ளிக்கூடமெல்லாம் கிடையாது. கையெழுத்து போடுகிற அளவுக்கு அப்பாவுக்கு எழுதத் தெரியும். இராமாயணம், மகாபாரதம் இப்படி கதாகாலட்சேபங்களில் கேட்டு அறிந்த ஞானம் அவருக்கு அதிகம்.

அப்பா பெயர் பொன்னுசாமி, அம்மா பெயர் கண்டியம்மாள். நீலகண்டன் என ஆண்களுக்கு வைப்பார்கள். போலவே பெண்களுக்கு கண்டியம்மாள் என அக்காலத்தில் பெயர் வைப்பதுண்டு. என் காலத்திலும் பள்ளிகள் திண்ணைப் பள்ளிகளாக சுயமாக ஆசிரியர்கள் நடத்தும் குருகுலக் கல்வி பாணியில்தான் இருக்கும். முறையான அரசுப் பள்ளிகள், பஞ்சாயத்துப் பள்ளிகள் எல்லாம் கிடையாது.

பொள்ளாச்சியில் 5ம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளிப் படிப்பு கசந்தது. பள்ளியையும் வீட்டையும் விட்டு வெளியேறி உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தேன். அப்பாவுக்கு என்னை மருத்துவராகப் பார்க்க ஆசை. ஆனால், என்னுடைய இந்தச் செயல் அவரை ஏமாற்றியது, இதனால் என்னை இப்படியே விட்டுவிட்டால் படிப்பு வாசமே இல்லாமல் போகுமென குடும்ப நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி கேரளத்தில் ஓர் ஆசிரியரிடம் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.  

மலையாள இலக்கியம், செய்யுள்கள் என படித்து வளர்ந்தவனுக்கு கல்லூரிப் படிப்பு தமிழில் வாய்த்தது. 1953ம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலைக் கல்வி, பின்னர் தமிழில் ஏதும் தெரியாதவனாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஏ ஹானர்ஸ் (தமிழ் இலக்கியம்) படிப்பில் சேர்ந்தேன். அங்கே படிக்கும்போது கல்லூரி ஆண்டு மலருக்காக நான் எழுதிய முதல் கவிதைதான் ‘ஆழ்கடலே கேள்’. என் ஆசிரியர் அந்தக் கவிதையைப் பாராட்டினார். அவர் கொடுத்த ஊக்கம் அப்படியே தமிழின் செய்யுள்கள், இலக்கியங்கள் என என்னைக் கவரத் துவங்கின.

அதில் என்னை முதலில் ஆட்கொண்டவர் பாரதியார். கி.ஆ.பெ.விசுவநாதன், தெ.பொ.மீ., ம.பொ.சி. உள்ளிட்டோரின் சொற்பொழிவுகளைக் கேட்டதாலும்; பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படித்ததாலும் தமிழ் மீது மேலும் ஆர்வம் பிறந்தது. குறிப்பாக பாரதியாரின் கவிதைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டேன்.கண்ணதாசன் நடத்திய வெண்பா போட்டிகளுக்கு நானும் கவிதை எழுதத் துவங்கிய காலத்தில் அப்போதிருந்த கவிஞர்கள் தனக்கென ஒரு புனைபெயர் கொண்டே எழுதினர். அந்த வகையில் நானும் ‘சிற்பி’யானேன்.

1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தேன். அந்நேரம்தான் நான் கவிதைகளும் எழுதத் துவங்கினேன். 1963ல் ‘நிலவுப்பூ’ என்னும் தலைப்பில் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. உடன் ‘சிரித்த முத்துக்கள்’, ‘ஒளிப்
பறவை’ என்னும் மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியிட்டேன். 1970ல் ‘வானம்பாடி’ இலக்கிய வட்டத்திற்குள் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன்.

மற்ற ‘வானம்பாடி’ கவிஞர்கள் தமிழ், தமிழ்த் தேசியம், மார்க்சியம் என்ற வெளியில் பெரிதும் நடமாடுகிறவர்கள். நான் அதனுடன் இந்திய தேசியம், காந்தியம் என்கின்ற தளத்திற்குள்ளும் இணைந்து பயணிக்கத் துவங்கினேன். ‘வானம்பாடி’ இயக்கத்தின் எங்கள் குழுவினர் அனைவரும் தமிழாசிரியர்கள் என்பது சிறப்பான ஒன்று. ‘வானம்பாடி’ இயக்கத்திற்குள் வந்தபிறகு நான் வெளியிட்ட நான்காவது கவிதைத் தொகுப்பு ‘சர்ப்பயாகம்’. இத்தொகுப்புதான் தமிழ் இலக்கிய வெளியில் எனக்கு ஓர் ஆழமான இடத்தை உறுதிப்படுத்தியது.

மகாபாரதத்தில் ஒரு சர்ப்பயாகம் உண்டு. அதைப் போல் இப்போது ஒரு சர்ப்பயாகம் தேவை. இந்த தேசமே ஒரு பரமபதம் போல் உள்ளதால் இதன் கட்டங்கள் தோறும் நச்சுப்பாம்புகள் காத்துக் கிடக்கின்றன. இந்தப் பாம்புகளை அழிக்க வேண்டுமென்றால் சர்ப்பயாகம் செய்ய வேண்டும் என்பதே அந்த கவிதைத் தொகுப்பு. புரட்சியையே நான் சர்ப்பயாகம் என சொல்லியிருக்கிறேன். மேலும் அந்த சர்ப்பயாகம் செய்த மன்னனின் பெயர் ஜனமேஜெயன். அப்படி இப்போது ஜனங்களே இந்த யாகத்தைச் செய்தால் ஜெயம் நிச்சயம் என உவமை காட்டி இந்தக் கவிதையை எழுதினேன்.  

புதிய உவமைகளும், உருவகங்களும், படிமங்களும், குறியீடுகளும் இத்தொகுப்பிற்குள் சர்வ சாதாரணமாக அமைந்து வாசகனுக்கு ஒரு புதிய அரசியல் கவிதை வெளியைக் காட்டுவதாக பல இலக்கியவாதிகளும், தமிழ் ஆர்வலர்களும் என்னைப் பாராட்டினர்.தொடர்ந்து  ‘நாய்க்குடை’, ‘மதுரை வீரன்’, ‘மௌனத் திரை’, ‘ஞானபுரத்தின் கண்கள்’, ‘சாக்கடைகள்’, ‘காலைச் சுற்றும் நாய்கள்’, ‘ஆப்பிரிக்காவின் இதயம்’ முதலிய குறியீடுகள் என என் பணி தொடர்ந்தது.

அதன்பின்னர் 1989ல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பு. அங்கேதான் எனக்கு ‘அன்னம் விடுதூது’, ‘வள்ளுவம்’, ‘கவிக்கோ’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் அமைந்தன. நானிருந்த காலத்தில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் சீராக இல்லாமல் இருந்தன. அவற்றின் செயல்பாடுகளை ஆவணப்படுத்த வேண்டி இருந்தது. என்னதான் பண்ணையார் குடும்பத்து வசதியில் புரண்டு வளர்ந்திருந்தாலும், மேல்தட்டு வாழ்வியலில் திளைத்திருந்தாலும் என் குரல் மனிதக் கட்டுகளை உடைத்து குரலற்றவனுக்கு குரலாய் ஒலிக்க வேண்டும் என நினைத்தேன்.

அதன் விளைவு புதுக்கவிதைகள் மேல் என் ஆர்வம் விழுந்தது. விளிம்புநிலை மக்களின் பாடுபொருளாக என் கவிதை இருக்க வேண்டும் என எண்ணினேன். அதிலும் கவிதைகள் எழுதத் துவங்கியதில் ‘மௌன மயக்கங்கள்’ என்ற கவிதையும், ‘சிகரங்கள் பொடியாகும்’ என்ற கவிதையும் பலரால் பேசப்பட்டது.

‘சிகரங்கள் பொடியாகும்’ எழுபதுகளில் நான் எழுதிய தலித் கவிதை. இந்தக் கதைக் கவிதையில் ஒரு தலித் பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் ஒருவரின் சாதியைக் குறிப்பிட்டு அதுவும் அவர் சார்ந்த உயர்சாதியைக் கவிதைக்குள் குறிப்பிட்டுப் பாடியதில் என் துணிச்சல் பலராலும் பாராட்டப்பட்டது.

அப்படி  மதமும், சாதியும், அரசியலும் பின்னிப் பிணைய மானுடம் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை. நகரத்துவம் எங்கும் பரவி முதலாளித்துவம் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்க என் மனம் மானுடம் சார்ந்த கவிதைகள் பக்கம் சாய்ந்தது. என் இளமைக்கால நினைவுகளும் ஒருசேர அமைய அதனுடன் இணைந்து ‘ஒரு கிராமத்து நதி’ கவிதைத் தொகுப்பு பிறந்தது. அதற்கு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தது. தொடர்ந்து சிறந்த மொழிபெயர்ப்புக்காகவும் சாகித்ய அகாடமி கிடைத்தது.

விருதுகளைத் தொடர்ந்து இந்திய இலக்கிய அமைப்பாகிய சாகித்ய அகாடமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளராக 2007 தொடங்கி 2012 வரை செயலாற்றினேன். தமிழக அரசின் பாவேந்தர் விருது, கலைமாமணி விருது, குன்றக்குடி ஆதீன கபிலாவிருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது, இலக்கியச் சிந்தனை விருது எனப் பல விருதுகள் வரிசை கட்டின.

இத்தனைக்கும் இடையில் எனக்கு திருமண பந்தம் வாய்த்தது. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெண். ஓரளவு படித்தவர். பெயர் ரங்கநாயகி. நிறைய பத்திரிகைகள் படிப்பவர். எனக்கு 24 வயதில் திருமணமானது. இப்போது வயது 85. 60 ஆண்டுகள் ஆகிவிட்டன எங்களுக்கு திருமணமாகி. செந்தில்வேல், சக்திவேல் என இரண்டு மகன்கள். அவர்களுக்கும் திருமணமாகி எனக்குப் பேரன்கள், பேத்திகள் பிறந்து அவர்களுக்கும் திருமணமாகி கொள்ளுப் பேரன்கள், பேத்திகள் எடுத்துவிட்டோம்.

புதுக்கவிதை எழுதத் துவங்கிய காலகட்டத்தில் பாரதியார் மீது கவிதை பாட ஆசைப்பட்டேன். மகாகவி பாரதியார் 25 நாட்கள் கடலூர் சிறையில் இருந்தார். அதையே கருவாக எடுத்துக்கொண்டேன். அந்தச் சிறை வாசத்துக்குப் பிறகு அவர் குறுகிய காலத்திலேயே மரண
மடைந்து விடுகிறார். இந்த கடலூர் சிறைக் காலத்தின்போதுதான் தன் வாழ்க்கையைப் பின்னோக்கி அவர் சிந்திப்பதாகவும், தன் படைப்புகள், வாழ்வின் ஓட்டம் என அனைத்தையும் நினைப்பதாகவும் 25 நாட்கள் 25 விதமான சிந்தனைகள் என ஒருசேர நானே கற்பனையில் ஒரு கவிதைத் தொகுப்பு எழுதினேன். அதன் பெயர் ‘பாரதி கைதி எண் 253’.

கைது செய்யப்பட்டு அவருக்குக் கொடுக்கப்பட்ட எண் 253. அதனாலேயே இந்தத் தலைப்பு.என் 73ம் வயதில் அனைத்துக் கவிதைகளையும் என்சிபிஎச் ஒன்று சேர்த்து இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டுள்ளனர். நான் சாகித்ய அகாடமியில் பதிப்பாசிரியராக இணைந்து பாரதியார் கவிதைத் தொகுப்பு முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு வந்தேன். கட்டுரைகள் பலவற்றை தேர்ந்தெடுத்து அதனையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறோம்.

அதைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய வரலாற்றை ‘புதிய தமிழ் இலக்கிய வரலாறு’ என மூன்று தொகுதிகளாக நானும் நீலகண்டனும் இணைந்து கொண்டு வந்தோம். அது தவிர நிறைய கருத்தரங்கங்கள் நடத்தியிருக்கிறோம். பெரியசாமித் தூரனின் வீட்டில் இருந்த கையெழுத்துப் பிரதி நினைவுக்குறிப்புகளைப் பெற்று அதை பதிப்பித்திருக்கிறோம். மலையாளத்தின் இலக்கியங்கள் பலவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.
இப்போது தமிழ்நாடு அரசின் நூல்களுக்கான விருதை மூன்றாவது முறையாக வாங்கியிருக்கிறேன். மீண்டும் சாகித்ய அகாடமியின் முக்கிய பொறுப்பில் அமர்ந்திருக்கிறேன்.

இளம் எழுத்தாளருக்கு என் வார்த்தைகள்... புதியவை படைக்கும் முன் பழைய இலக்கியங்களைத் தேடிப் படியுங்கள். வாழும் காலத்தில் முன்னோடிகளாக இருக்கும் படைப்பாளிகளை நேசித்து வாசியுங்கள். முடியுமானால் இந்திய எழுத்தாளர்களையும் அயலக எழுத்தாளர்களையும் அவர்களின் நூல்கள் மூலமாக அறிமுகம் செய்து கொள்ளுங்கள். சமூகத்துக்கு உண்மை என்று படுவதை உறுதியாகச் சொல்லுங்கள். எதை எழுதினாலும் இயல்பாகவும் அழகாகவும் கூறுங்கள். உங்கள் அனுபவத்தை உங்கள் மொழியில் சொல்ல முயலுங்கள். இந்த ஆறு வாசகங்களையும் படைப்பாளியாக விரும்பும் இளைஞர்கள் சிறந்த எழுத்தை செதுக்கிக் கொள்ளும் அடிப்படைகளாகக் கொள்ளலாம்.

செய்தி:  ஷாலினி நியூட்டன்

படங்கள்: சதீஷ் தனபாலன்