சார்பட்டா பரம்பரை: நாம் அறியாது கடந்து வந்த வரலாற்றை பேசும் படம்!



மனம் திறக்கிறார் ஒளிப்பதிவாளர் முரளி.ஜி

‘‘ஆரம்பத்தில் கேமராமேன் என்ற இலக்கே கிடையாது. அம்மா நல்லா வரைவாங்க. எனக்கும் ஆர்ட் வந்தது. மியூசிக் மேல் ஆர்வம் வந்து படிக்க ஆரம்பிச்சேன். கர்நாடக சங்கீதத்தில் இருக்கிற கடினத்தில் எனக்கு அந்நியத்தன்மை இருந்தது. கும்பகோணம் கலைக்கல்லூரியில் ஓவியம் படிச்சேன். அதோட ஓவியத்தின் மீட்சியாக அசைவுறு ஓவியமாக சினிமாவைப் பார்த்தேன்.

தொடர்ந்து பூனா திரைப்படக் கல்லூரியில் படிச்சேன். என்னை வெளிப்படுத்த இசை, ஓவியம், சினிமான்னு அடுத்தடுத்து வந்தேன். அப்படித்தான் சினிமா பக்கமும் வந்தேன். என்னை எக்ஸ்பிரஸ் பண்ணத்தான் இப்ப சினிமாவை தேர்ந்தெடுத்திருக்கேன்னு சொல்லணும்...” மனதை வார்த்தைகளில் நிறுத்திப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் முரளி.ஜி. ‘மெட்ராஸ்’, ‘காலா’, ‘கபாலி’ எனத் தொடர்ந்து ‘சார்பட்டா பரம்பரை’ வரை பயணம் நீள்கிறது. கல்லூரி பட்டப்படிப்பு படத்திற்காகவே சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெற்றவர்.

ஒளிப்பதிவை எப்படி வரையறுக்கலாம்..?

எல்லோரும் ஒருங்கிணைந்து ஸ்க்ரிப்ட்டுக்கு வேலை செய்றதுதான் சினிமா. டைரக்டரோட பார்வைதான் சினிமாவோட பார்வை. ஒரு டைரக்டர் ஒரே கதையை வேறவேற மாதிரி எடுக்க முடியும். அது ஸ்கிரிப்டின் மொழி வழியே அமையுது. காட்சி மொழியை சரியானபடிக்கு மனதில் கொண்டு வந்து டைரக்டர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் எல்லாரும் சேர்ந்து செய்வதுதான் சினிமா.

இதில் ஒருத்தருக்கான இடமே இல்லை. இதில் ஒருத்தர் மட்டும் வேலை செய்தால் அது கதையோடு ஒன்றிப்போகாது. என் படங்களின் வழி ஒளிப்பதிவாளர் தெரியக் கூடாதுன்னு நினைப்பேன். காட்சி வழியாகவே சொல்லியாகணும்னா அப்படிச் செய்யலாம். மீதி நேரங்களில் கதைக்குள் ஒளிந்து, ஒட்டித்தான் வரணும். ஒவ்வொரு காட்சிக்கும் ஒளிப்பதிவு அமைகிற விதம் பற்றி ஒரு முடிவிருக்கு.

பா.இரஞ்சித் கூட தொடர்ந்து வேலை செய்றீங்க…

ரஞ்சித் பழக்கம் சினிமாவிற்கு வந்த பிறகுதான். ‘அட்டக்கத்தி’ செய்ய முடியலை. ஓவியம் சார்ந்தவனாக இருந்ததால் நல்லாயிருக்கும்னு அவருக்கு தோன்றியிருக்கலாம். படிப்படியாக இசைவு வந்து அவரது அரசியல், அவரோடு டிராவலில் பங்கேற்றபோது புரிந்தது. எனக்கு பிடிச்சிருக்கிற படங்களையும் அவர் எடுத்தார். மீடியத்தை கையாள்வதில் அவருக்கு நல்ல Expressionனோட மொழியும் இருக்கு. அவரோட சேர்ந்து வேலை செய்வதில் கிடைக்கிற ஒத்திசைவும், அலைவரிசையும் தொடர்ந்து அவருடன் இருப்பதற்கு காரணமாக அமையுது.

ரஜினி மாதிரி பெரிய ஸ்டார்களோட வேலை பார்க்கும்போது பதட்டம் வருமே…

எனக்கும் இருந்தது. அவரோ உயர்ந்த இடத்தில் இருக்கார். அவர் 100 படம் பண்ணியிருக்கார்ன்னா, 101வது படமாக இது சுமுகமாக அமையணும். கெடுத்திடக்கூடாது. அவருடைய அணுகுமுறையைப் பார்க்கவே நமக்கு ஆர்வமாக இருக்கும். ஒரு சக டெக்னீஷியனுக்கு என்ன முக்கியத்துவம், மரியாதை கொடுக்கணுமோ அதையும் கொடுத்து அழகான நட்போடும் நடத்துவார். அவர் நமக்கு நல்ல comfortable zone கொடுப்பார்.
அவருக்கே சினிமா மேல் அலாதியான passion இருக்கு. பெரிய ஸ்டாராக இருந்தாலும் நெருங்கிப் பார்த்தால் எளிமையாக இருக்கிறார். புது நடிகன் நடிக்க வர்றமாதிரி வர்றது இன்னும் ஆச்சர்யமாக இருக்கு.

அவருக்கு புதிய கதையாடல்கள், புது டைரக்டர்கள்னு நடிக்க ஆசையாயிருக்கு. அடுத்ததாக அரசியல் அவரை எடுத்துப் போகலைன்னா இன்னும் நடிச்சிட்டு இருப்பார்னு தோணுது. இவ்வளவு வலிமையான இடத்தில் இருக்கிறவர், இன்னும் அணுக முடியாமல் கூட இருக்கலாம். ஆனால், எளிமையாகவே இருக்கார். சின்ன வளர்ச்சி, அதிகாரம் இருக்கிறவர்கள் நண்பனையே கீழே வைச்சு பாக்கிற இடத்தில் அவர் இப்படி இருப்பது புதுமையே.

சக ஒளிப்பதிவாளர்களில் வேலைப்பாட்டில் யார் கவர்கிறார்கள்?

அப்படிக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சினிமா டீம் ஒர்க். அப்படித்தான் ஒரு படைப்பு நிறைவடையுது. டீம் செட் ஆகலைன்னா சிரமம். சமயங்களில் கம்யூனிகேஷன் சிரமமாக இருக்கும். ஒரு ஒளிப்பதிவாளன் படம் சரியாக பண்ண முடியலைன்னா அதற்கு நிறைய புறக் காரணங்கள் இருக்கு. இப்ப தமிழ் சினிமாவில் ஒரிஜினாலிட்டியை ஹிட் பண்றதுக்கான எல்லா முயற்சிகளும் இங்கே நடக்குது. அதை முன்மொழிகிற படங்கள் இங்கே உருவாகுது.

வணிக சினிமாவில் எந்த சுவாரஸ்யத்தையும் குறையாமல் கொடுக்கிற நிறைய கதையாடல்களும், ஒளிப்பதிவாளர்களும் இங்கே வந்தாச்சு. 200 ரன் எடுக்க வேண்டியதற்கு, 199 ரன் எடுத்தவனை தோல்வியாளனா கருதுகிற விஷயம் இருக்குல்ல, அதை பாராட்ட முடியாது.

கிராமத்தில் 199 மார்க் எடுக்கிறதுக்கும், நகரத்தில் எல்லா நல்ல சூழலையும் பயன்படுத்தி 200 மார்க் எடுக்கிறதுக்கும் வித்தி யாசம் இருக்கா இல்லையா..? சூழல்தான் தீர்மானிக்குது. ஒவ்வொரு கலைஞனுக்கும் அதுக்கான தருணமும் வாய்ப்பும் அமைகிறபோது பிரமாதப்படுத்தி வெளியே வரமுடியும். அதனால் இங்கே யாரையும் முதன்மைப்படுத்தி பார்க்கக்கூடாது.

ஓவியங்கள் வரைவதிலும் முனைப்புடன் இருக்கிறீர்கள்…

சிறந்த ஓவியனாக வரவேண்டும் என்பதே இன்னமும் ஆசையாக இருக்கிறது. அதற்கு நடுவில் கற்றுக்கொண்ட இந்தப்படிப்பும் தொழில் செய்ய உதவுகிறது. இதனால் கொஞ்சம் வசதியும் குறைந்தபட்ச தேவைக்கான பணமும் கிடைக்கிறது. இப்பவும் வரைந்து கொண்டே இருக்கிறேன். சினிமா உடன் பயணப்படுகிற நண்பர்களையும் மனதுக்கு பிடிக்கிறது. ஒரு படத்தின் கடைசி வரையிலும் இருக்கிறேன். ஒரு படைப்பு போய் மக்களைச் சென்றடைந்து, அவர்களின் ரியாக்‌ஷன் வரும் வரை காத்திருக்கிறேன்.

ஒரு படம் செய்து, உடனே அடுத்த படம் போய் விட விருப்பம் இல்லை. இப்படி மறுத்த படங்களை சொல்ல முடியும். ஒரு வேலை முடிந்து, முழுமை அடைந்து அதன் விளைவைப் பார்க்காமல் எனக்கு திருப்தி வராது. இப்போது செய்திருப்பது ‘சார்பட்டா பரம்பரை’. தமிழ்ச் சூழலில் முக்கியமான படம். நாம் அறியாது கடந்து வந்த வரலாற்றை பேசும் படம். பா.இரஞ்சித் அரசியல் ரீதியாகவும் இதில் பார்வைகளை வைத்திருக்கிறார். அனுபவமாக மாறக்கூடிய படத்தில் நான் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி.

வாழ்க்கை பற்றி...

அப்பாவும், அம்மாவும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள். அப்பா தினமும் காலையில் எழுந்து ஏர் ஓட்டி விட்டுத்தான் பள்ளிக்குப் போவார். குறுவிவசாயிதான் நாங்க. எனக்கு விவசாயம் சார்ந்த வாழ்வியல் முறை ரொம்பப் பிடிக்கும். நான் இருக்க விரும்புகிற இடமெல்லாம் என் ஊரும், நிலமும்தான். மனைவி அருள்மொழி பேராசிரியையாக இருந்து இப்போது குழந்தைகள் தருணி, வருணியை விரும்பி பார்த்துக்கிறாங்க.
இன்னும் பக்குவமானவனாக முயற்சிக்கிறேன். அதற்கான பயிற்சியாக இந்த முழு வாழ்க்கையை எடுத்துக்கிறேன்.

நா.கதிர்வேலன்