வலைப்பேச்சு



@RahimGazzali - உலகம் முழுவதும் வருடத்தின் கடைசி நாளில் எக்ஸ்பயரி ஆகிவிடுகிறது காலண்டர்கள்.

@secmindvoices - அலையடித்துக் கொண்டிருக்கும் கடலை வெறிக்கும் மனதிற்கு. காலில் வந்து மோதும் கிளிஞ்சல்கள் தன் அழுத்தத்தை அழுத்திச் சொல்லி செல்கிறது... ஒரு ஆறுதலாக!

@Firdaus_Tweetz - ஒவ்வொரு நாளும் நீ சந்திக்கும் கடைசி நாள் என்று நீ செயல்படும்போது உன்னை விட புத்திசாலி இந்த  பாரினில் எவனும் இல்லை..!

@Vikki_Twits - அளவோடு பழகினால் அதன் அளவும் குறையாது - மரியாதை

@yaadhu143 - உன்னைக் காட்டிய‌‌ வெளிச்சம் மட்டும் ஒளி; மற்றவை எல்லாம் இருள்.

@skpkaruna - போன மாதம் கார்த்திகை தீபம் 10 நாட்கள் விழாக்களும் திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்டது. எட்டாம் நாள் பெரிய தேர் உலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இப்போது சிதம்பரம் ஆருத்ரா தேர்த் திருவிழா மட்டும் நடைபெறுகிறது. இடைப்பட்ட நாட்களில் என்ன பெரிய மாற்றம் வந்துருச்சு? அதே ஊரடங்குதானே?

@Kannan_Twitz - நம்முடைய இருப்பு அவசியமென்பது ஆரம்பத்தில் பெருமையாகத் தெரிந்தாலும் ஒரு கட்டத்தில் அதுவே நமக்கு பெரும் சிறையாகி விடுகிறது!

@_Ragul_im - உயரப் பறக்கும் பறவை உயரத்தை கணக்கில் கொள்வதில்லை, இருப்பிடத்தை அடைய இருக்கும் தொலைவை மட்டும் இலக்காகக் கொள்வதால்!

@Kayal82973707 - துடிப்பது இதயத்தின் இயல்பு என்பதாலேயே கவனிக்கப்படுதல் அரிதாகிறது...

@MadhuBharathi_M - வாழ்க்கையில் சில இடங்களில் விளையாடவும் பல இடங்களில் விளையாடத் தெரிந்தவர்களாகவும் இருப்பது மிகவும் நல்லது.

@ManjuAkshaya - தேவையில்லாமல் எவரும் நம்மைவிட்டு விலகுவதில்லை. நாம் காட்டிய அன்பு அவர்களுக்கு தேவையற்றதாக இருக்கக்கூடும்.

@Gokul Prasad - கடந்த ஒரு வாரமாக ஏதேனு மொரு புதிய படத்தைப் பார்ப்பதற்கான மனநிலையே வாய்க்கவில்லை. முன்னமே பார்த்துவிட்ட படத்தை மீண்டும் பார்க்கலாம் என நேற்றிரவு தோன்றியதும் திக்கென்று ஆகிவிட்டது. வயதாகிக் கொண்டிருப்பதன் அறிகுறியா?

@SHIJA25 - தமிழகத்திற்கு நலத்திட்டங்களை பெறும் நோக்கத்திற்காகவே மத்திய அரசை ஆதரிக்கிறோம் - ஓ.பி.எஸ்.
- AIMSக்கு நட்டுவெச்ச ஒரு செங்கல்ல கூடவா உங்களால வாங்க முடியல சென்றாயன்!?

@Abukathija - சோத்துக்கு கஷ்டப் பட்டவர்கிட்ட சொந்தத்த பத்தி கேட்டுப்பார்... அவமானத்தை அடுக்கடுக்காக அடுக்கி வைப்பார்..!

@Kt__nisha294 - ‘மெச்சூரிட்டி’ இல்லையென திட்டாதீர்கள்... உங்களை நேசிப்பவர் உங்களிடம் குழந்தையாக இருந்துவிட்டுப் போகட்டுமே!

@kalvetu - மாட்டின் காம்பைப் பிடித்து இழுத்து பால் திருடுவது வதையா இல்லையா? மாட்டு வண்டி & மாடுகளை வேளாண் தொழிலில் பயன்படுத்துவது வதையா இல்லையா?

@Sridhar Subramaniam - ‘காசு இருந்தால் செட்டில் ஆகி விட வேண்டியதுதானே’ என்று கரித்துக் கொட்டுவதை வழக்கமாக சிலர் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஒருவேளை உழைக்க இயலாதவர்களாக இருக்கலாம். எனவே, காசு இருந்தும் உழைத்துக்கொண்டே இருப்பவர்களைப் பார்த்து இவர்
களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; ஏன் இப்படி அனாவசியமாக அலைகிறார்கள் என்று தோன்றலாம்.

ஆகையால் அவர்களுக்குத் தெரிந்த ஒரு விளக்கத்தை கொடுக்க முயல்கிறார்கள். அவற்றில் ஒன்று ‘அவனுக்குப் பேராசை’ என்பது.
உழைப்பவர்கள், வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலானோர் காசுக்காக தங்கள் துறைகளில் நுழைவதே இல்லை. அதனால்தான் அதீத செல்வம் குவிந்த பின்னும் கூட இவர்கள் ரிடையர் ஆவதில்லை. பில் கேட்ஸின் நோக்கம் காசு சம்பாதிப்பது இல்லை. அற்புதமான மென்பொருள்கள் தயாரிப்பதாக இருந்தது. இப்பொழுது அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை விட்டு விலகி விட்டாலும் கேட்ஸ், மெலிண்டா ஃபவுண்டேஷன் மூலம் தொடர்ந்து உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

போலவே, பீட்டில்ஸ் இசைக் குழுதான் உலகில் முதன் முதலில் பில்லியன் வருமானத்தை ஈட்டிய இசைக் குழுவினர். அவர்களின்
நோக்கமும் காசு இல்லை. அற்புதமான இசையை உருவாக்குவதாகவே இருந்தது. எழுபதுகளிலேயே பீட்டில்ஸ் குழு கலைந்து விட்டாலும் அதன் பிரதான பாடகர் பால் மெக்கார்ட்னி இன்றும் ஆல்பங்கள் வெளியிடுகிறார். 2020ல் கூட அவரது புதிய ஆல்பம் ஒன்று வெளியானது.

ஜே.கே.ரவ்லிங்தான் எழுத்தாளர்களிலேயே முதல் பில்லியனர். அவர் இனிமேல் சும்மா இருந்தாலே ஹாரி பாட்டர் நாவல்களில் இருந்து வரும் ராயல்டியிலேயே இன்னும் 15 தலைமுறை ராஜ வாழ்வு வாழலாம். ஆனால், இன்னும் உழைத்துக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

இவர்கள் உழைக்கப் பிறந்தவர்கள்; உழைப்பை மதிப்பவர்கள். தங்கள் அரிய மானுடப் பிறப்பை சோஃபாவில் உட்கார்ந்து, பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு, டிவி பார்த்துக் கழிப்பதை வெறுப்பவர்கள். அதனால்தான் வெற்றியாளர்களாக வலம் வந்தார்கள்; வருகிறார்கள்.

‘காசு இருந்தால் செட்டில் ஆகிவிடலாம்’ என்று சொல்பவர்கள் பெரும்பாலும் காசில்லாத, உழைக்க விரும்பாத சோம்பேறிகளாகத்தான் இருக்க வேண்டும். நமது இலக்கு எது, நமது உழைப்பின் நோக்கம் எது என்று தேடுவோம். தூக்கமின்றி அதனைத் துரத்துவோம். நமது பிறப்பிற்கும் ஓர்அர்த்தத்தை உண்டுபண்ணிவிட்டுப் போவோம்.

@Teacher 01234 - சாதனை புரிய ஆசைப்படுபவன் புத்தகத்தோடு இருப்பான்; சாதனை புரிந்தவன் புத்தகத்தில் இருப்பான்..!

@prakasht_ - கண்ணோட்டம் என்பது பொதுவாக இருக்க வேண்டும்; குறைகளை மட்டுமே சுமந்து கொண்டு இருக்கக் கூடாது.

@Paadhasaari Vishwanathan - கால இடத்துக்குக் கட்டுப்படாத கருணையானது எதையும் எப்போதும் எடைபோடாது. கால இடத்துக்குக் கட்டுப்பட்ட மனமானது தன்னைத் தவிர்த்து எதையும் எப்போதும் எடைபோடும்.

@M_MOHAMED_1 - மனசாட்சி மவுனம் கொண்ட பிறகு உண்மையைக் காட்சிப் படுத்த முடியாது.

@Tk Kalapria - இவ்வளவு வருடங்கள், ஏமாற்றம், தோல்வி பற்றிய எப்போதுமான நினைவுகள், மெய்வருத்தியதற்கு கொஞ்சம் கூலி என்று கழிந்து விட்டது. இனிமேல் என்ன புதிதாக வந்து தூக்கி நிறுத்தி விடப்போகிறது.

வாழ்க்கை ஒன்றும் அள்ளிக் கொடுத்து விடாது. கிள்ளித்தான் கொடுக்கும்.
வருக புத்தாண்டே. உனக்குச் சொல்ல என்னிடம் புதிய செய்தி ஒன்றும் இல்லை. பழைய கருப்பு வெள்ளைப் படங்களும் பதின்ம வயது நினைவுகளும்தான்.

அதையே எத்தனை காலம் சொல்லிக் கொண்டிருப்பாய் என்று நானே என்னைக் கேட்டுக்கொள்கிறேன். பிறரும் கேட்கிறார்கள். ஏதாவது புதிய, பழைய புத்தகங்கள் படிக்க முடிந்தால் போதும். சிறு பையன் ஓட்டிச் செல்லுகிற வட்டைப் போல எதையும் ஏற்றிச் செல்லாத இந்த வாழ்க்கையைப் பற்றி எழுதாமலும் இருக்க முடியாது. முடிந்ததை எழுதலாம். பிடிக்கிறவர்கள் படிக்கட்டும். விரும்புகிறவர்கள் அழைக்கட்டும். அழைக்க மறுக்காத ஒருத்தி எல்லாருக்கும் இருக்கிறாள் தன் மடி விரித்து.