ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்கே.என்.சிவராமன் -31

ஓவியம்: ஸ்யாம்


துடிக்கும் இதயத்துடன் குரலின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கரிகாலன் கதவைத் திறந்தான். வலது காலை எடுத்து வைத்து அறைக்குள்  நுழைந்தான்.தன்னைத் தொடர்ந்து சிவகாமியும் அறைக்குள் வந்ததையோ அல்லது அந்த அறையின் உட்புற அழகையோ கவனித்து ரசிக்கும்  நிலையில் அவன் இல்லை.பார்வை ஒரே இடத்தில்தான் நிலைகுத்தி நின்றது. அந்த இடமும் அவனை இப்படியும் அப்படியும்  அசையவிடாமல் கட்டிப்போட்டது. இத்தனைக்கும் அது வெறும் நாற்காலிதான். ஆனால், சாதாரண இருக்கை அல்ல. சிம்மாசனம்!வியப்பும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் சந்தேகமும் ஒருசேர கரிகாலன் மனதில் எழுந்தன. பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் பெரு வணிகர்  மாளிகையில் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்ட இருக்கைகளும் அதில் வைர வைடூரிய கற்கள் பொருத்தப்பட்டும் இருக்கலாம்; இருக்கவும்  செய்தது. அவனே பலமுறை அதைப் பார்த்திருக்கிறான். அதில் அமர்ந்தபடிதான் பெருவணிகர் அவனுடன் பேசவும் செய்திருக்கிறார்.

ஆனால், சிம்மாசனம்..? வாய்ப்பே இல்லை. பல்லவ நாட்டின் செல்வ வளத்தை தீர்மானிப்பவராகவும் அதிகரிப்பவராகவுமே இருந்தாலும்  மன்னருக்கு, தான் சமம் அல்ல என்பதை எப்போதுமே பெரு வணிகர் நினைவில் வைத்திருப்பார். அதனாலேயே அரண்மனையை  அலங்கரிக்கும் பொருட்களையோ மன்னர் பயன்படுத்தும் சாதனங்களையோ தன் மாளிகையில் அவர் வைத்துக் கொள்ளவும் இல்லை;  பயன்படுத்தவுமில்லை. அப்படியே விலையுயர்ந்த பொருட்கள் தனக்குக் கிடைத்தாலும் அதை மன்னருக்கே காணிக்கையாகச் செலுத்துவார்.
அப்படிப்பட்ட பெரு வணிகரின் மாளிகையில், அதுவும் அவரது அந்தரங்க அறையில் மன்னர் அமரும் சிம்மாசனத்துக்கு சமமான இருக்கை  எப்படி வந்தது..? ஒருவேளை இங்கு சாளுக்கிய மன்னர் வருகை தரலாம் என்பதற்காக சிம்மாசனத்தின் மாதிரியில் ஓர் இருக்கையை தயார்  செய்திருக்கலாம். அதற்காக அதில் மன்னராக இல்லாதவர் எப்படி அமரலாம்..?

‘‘என்ன பார்க்கிறாய் கரிகாலா..?’’ பிசிறில்லாமல் வாளின் கூர்மையுடன் ஒலித்த குரல் கரிகாலனின் சிந்தனையை அறுத்து எறிந்தது.  நிமிர்ந்து குரலுக்கு உரியவரை ஏறிட்டவனின் கண்களில் மரியாதையும் பக்தியும் குடிபுகுந்தது. எழுந்த கேள்விகள், கேட்க நினைத்த  வினாக்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் கரைந்தன.தன்னையும் மீறி ஓடோடிச் சென்று சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவரின்  முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். ‘‘எழுந்திரு குழந்தாய்...’’ பாசத்துடன் குரல் ஒலித்தது.கட்டுப்பட்டு எழுந்தவன் முட்டி  போட்டு பாதங்களைத் தொட்டு வணங்கினான். குரலுக்கு உரியவர் அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். மீண்டும் பாதங்களைத்  தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டு பவ்யமாக எழுந்தவன்,குரலுக்கு உரியவரின் முன்னால் கைகட்டி நின்றான்.

இதுவரை கரிகாலனுக்குப் பின்னால் நின்றிருந்த சிவகாமி, இப்போது அவனைக் கடந்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவரின் அருகில்  நின்றாள். தன் கைகளால் அமர்ந்திருந்தவரின் தோளைப் பற்றினாள்! பற்றிய கரங்களை குரலுக்கு உரியவர் வெகு பிரியத்துடன் பிடித்தார்.இதனைக் கண்ட கரிகாலனின் கண்கள் அகல விரிந்தன.‘‘என்ன பார்க்கிறாய் கரிகாலா..?’’ புன்னகையைக் கசியவிட்ட குரலுக்கு உரியவரை  அந்தக் கணத்தில் மீண்டும் உச்சி முதல் உள்ளங்கால் வரை மரியாதையுடன் பார்த்தான்.அந்த சிம்மாசனம் அவருக்காகவே தயாரிக்கப்பட்டது  போல் நீக்கமற அதில் அமர்ந்திருந்தார். இடது காலை மடித்தும் வலது காலை உயர்த்தி குத்துக்காலிட்டும் சிம்மாசனத்தில் வைத்திருந்தார்.  கம்பீரம் என்றால் அப்படியொரு கம்பீரம். எழுந்து நின்றால் நிச்சயமாக சராசரியான பெண்களைவிட அதிக உயரம் இருப்பார். அந்த  உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு.

அடர் சிவப்பும் இல்லாமல் மென் சிவப்பும் இல்லாமல் மத்திம சிவப்புப் புடவையை அணிந்திருந்தார். தலைக் கேசம் முடிச்சிடப்பட்டிருந்தது.  நெற்றிச்சுட்டியும் கழுத்தில் தொங்கிய நகைகளும் தங்கள் பிறவிப் பயனை அடைந்தன. அவர் அசையும்போதெல்லாம் அசைந்து தங்கள்  மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. புருவ மத்தியில் வட்டமாகத் தீட்டப்பட்டிருந்த திலகமும் நாசியில் ஜொலித்த வைர மூக்குத்தியும் அவரது  அந்தஸ்தை எதிராளிக்கு பறைசாற்றின.  இத்தனையும் மீறி அந்த முகத்தில் ஜொலித்த உறுதியும் கண்களில் வழிந்த அன்பும் கரிகாலனை  நெகிழ வைத்தன. ‘‘தங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை தாயே...’’ கண்கள் பனிக்க பதில் சொன்னான்.‘‘நானும்தான்!’’ கலகலவென்று  சிரித்தபடி சொன்ன சிவகாமி, குனிந்து அந்த அம்மையாரின் முகத்தைத் தடவினாள். ‘‘உங்கள் பிள்ளையுடன் பேசிக்கொண்டிருங்கள்... அவர்  களைத்திருக்கிறார்! பருகுவதற்கு பழரசம் கொண்டு வருகிறேன்...’’ கரிகாலனைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு உட்புறமாக விரைந்தாள்.

அவள் செல்வதையே கண்கள் இடுங்க கரிகாலன் பார்த்தான். காஞ்சிக்கு புதியதாக வந்திருப்பவள் என பல்லவர்களின் புரவிப்  படைத்தளபதியான வல்லபனால் தன்னிடம் அறிமுகம் செய்யப்பட்டு  முழுதாக ஒரு திங்கள்கூட ஆகவில்லை. இடைப்பட்ட நாட்களில்  இருவரும் தனித்திருந்த வேளைகளிலும் அவரவர்களின் பின்புலம் குறித்து உரையாடியதில்லை. அப்படியிருக்க தன் பெரிய தாயாரை  அவளுக்கு எப்படித் தெரியும்..? சிவகாமியின் செயல் அவனுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது என்றால் அடுத்து ஒலித்த பெரிய தாயாரின் குரல்  அவனை அதிர்ச்சியின் விளிம்புக்கே அழைத்துச் சென்றது.‘‘சரியான பெண்ணைத்தான் பிடித்திருக்கிறாய்! நம் குடும்பத்துக்கு ஏற்ற மணமகள்!  உன் தந்தையும் தாயும் தேடியிருந்தால்கூட இப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை உனக்குக் கிடைத்திருக்காது!’’ துள்ளியபடி ஓடிய  சிவகாமியைப் பார்த்தபடியே சொல்லிவிட்டு அவனை நோக்கித் திரும்பினார்.

பிரமை பிடித்தபடி கரிகாலன் நின்றான். பெரிய தாயார் என்ன சொல்கிறார்..? ‘‘தாயே...’’ குழப்பத்துடன் அவரது கண்களை நோக்கினான்.‘‘சிவகாமி எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டாள்!’’‘‘எல்லாவற்றையும் என்றால்..?’’ கரிகாலனுக்கு சொற்கள் வர மறுத்தன.‘‘மல்லைக் கடற்கரையில் நீங்கள் சந்தித்தது முதல் காபாலிகனின் ஓலையைக் கண்டு காஞ்சி மாநகரத்துக்குள் நீங்கள் நுழைந்தது வரை!’’‘‘எப்போது தாயே..?’’‘‘சில நாழிகைகளுக்கு முன்..?’’கரிகாலன் பேச்சிழந்து நின்றான். அதைக் கண்டும் காணாததுபோல் புன்னகை பூக்க  அவனது பெரிய தாயார் தன் உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘சத்திரத்தில் அவளைத் தங்கச் சொல்லியிருந்தாயாமே! ஏதோ ஒரு கடிகை  மாணவன்... பார்க்க பாலகன் போன்று இருந்தானாம்... அவன் வந்து உனக்கு ஆபத்து என்றதும் பதறிவிட்டாளாம். இந்தப் பக்கமாக நீ  வருவாய் என்று அவன் சொன்னதும் ஓடோடி வந்தாளாம்...’’‘‘நீங்கள் அவளைச் சந்தித்தது..?’’

‘‘இந்த மாளிகை வாயிலில். கோயிலுக்குச் சென்றுவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தேன். நிலைகொள்ளாமல் தவித்துக்  கொண்டிருந்தவளை அழைத்து என்னவென்று விசாரித்தேன். உன்னைப் போலவே என் முகத்தைக் கண்டதும் எல்லாவற்றையும்  கொட்டிவிட்டாள்! அவள் சொன்ன அங்க அடையாளங்கள் உன் தோற்றத்துக்கு பொருந்தி வந்தன. உன்னைத்தான் குறிப்பிடுகிறாள்  என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை!
’இமைக்காமல் தன் பெரிய தாயாரையே கரிகாலன் பார்த்தான். பெற்றவர்  இல்லை. ஆனால், பெற்றவருக்கும் மேலாக பாலூட்டி சீராட்டி வளர்த்தவர். அதனாலேயே இவரையும் சரி, பெரிய தந்தையையும் சரி,  ஒருபோதும் அவன் அந்நியராகக் கருதியதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் ‘தாயே... தந்தையே...’ என்றுதான் அழைத்து வருகிறான்.  எந்தக் காரியம் செய்தாலும் பெரிய தாயாரின் ஒப்புதலைப் பெற்றபிறகே தன் தந்தை செய்வார்.

அதையே தனயனும் கடைப்பிடிக்கிறான். தங்களுக்கு குழந்தை இல்லையே என அவர்களும் வருத்தப்பட்டதில்லை. கரிகாலனும்  அப்படியொரு நினைப்பு அவர்களுக்கு வர அனுமதித்ததில்லை.எப்போதும் அன்பையும் தன் நலத்தையும் மட்டுமே பெரிய தாயார் பெரியதாக  நினைப்பார் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அதை அணு அணுவாக அனுபவித்தும் வருகிறான்.ஆனால், முதல்முறையாக அந்த  அறையில் அவனுக்கு பலவிதமானஐயங்கள் எழுந்தன. கோர்வையாக பெரிய தாயார் நடந்தவற்றைச் சொன்னாலும் பல இடங்களில் அவை  முரண்பட்டன. உறையூரில் இருக்க வேண்டியவர் காஞ்சிக்கு எப்போது வந்தார்... ஏன் வந்திருக்கிறார்... பெரிய தந்தையும், தந்தையும் என்ன  செய்கிறார்கள்... வந்தவர் எப்படி பெரும் வணிகரின் மாளிகையில் தங்குகிறார்... கதவைத் திறந்து தன்னை வரவேற்ற சாளுக்கிய போர்  அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கும் தன் பெரிய தாயாருக்கும் என்ன தொடர்பு... குறிப்பாக சிம்மாசனத்தில் அமரும் அதிகாரம்...

பல்லவர்களின் தோழர்களாக, அவர்களது நலம் விரும்பிகளாக தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழ்ந்து வருகையில் திடீரென  சாளுக்கியர்களுடன் நெருக்கம் ஏன்..? எப்போதையும் விட இப்போதல்லவா பல்லவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்... இழந்த  நாட்டை அவர்கள் மீட்க உதவ வேண்டியது நம் கடமையல்லவா..?  கேள்விகள் விழுதாகி மரமாகி தோப்பாகப் படர்ந்தன. கரிகாலனின்  உடல் நடுங்கியது. சிவகாமியின் மீதான சந்தேகம் தன் பெரிய தாயாரின் மீதும் திரும்புவதை எந்தநோக்கில் எடுத்துக்கொள்வது..? இது  தேசத் துரோகமா அல்லது தேச நலனா..?

‘‘என்ன கரிகாலா அமைதியாகி விட்டாய்..?’’கேட்ட பெரிய தாயாருக்கு பதில் சொல்வதற்காக கரிகாலன் வாயைத் திறந்தான். அதற்குள்  வேறொரு இடத்திலிருந்து சொற்கள் வந்து விழுந்தன.‘‘சிவகாமி எப்போது வருவாள் என ஆவலுடன் உங்கள் மகன் எதிர்பார்க்கிறான்...  அப்படித்தானே..?’’ கேட்டபடியே உள்ளறையிலிருந்து முகமெல்லாம் மலர்ச்சியுடன் கம்பீரமாக நடந்து வந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர்,  கரிகாலனின் தோளைத் தட்டி கண்சிமிட்டிவிட்டு சிம்மாசனத்துக்கு அருகில், ஒரு படி கீழே போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.‘‘சின்னஞ்சிறுசுகள் அல்லவா... அப்படித்தான் இருக்கும்...’’ சாளுக்கிய அமைச்சரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு கரிகாலனை ஏறிட்டார்  பெரிய தாயார்.கரிகாலன் சிலையென நின்றான்.மடி கனத்தது. அதிலிருந்த சுவடிக் கட்டுகளும்தான்!

(தொடரும்)