சித்து விளையாட்டு



சரவணன் சந்திரன் -8

சித்தர்கள் பாவம் சும்மா விடாது


அரசாங்க அலுவலர்கள், அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் இந்த மாஃபியா வலைப்பின்னல் அழுத்தமாக நாற்காலி போட்டு  அமர்ந்திருக்கிறது. அந்த இறை மருத்துவரின் பின்புலத்தில் ஊடகத்தில் பெரிதும் மதிக்கப்படுகிற, மாற்று அரசியல் பேசும் அரசியல்வாதி  இருக்கிறார் என்று கேள்விப்பட்ட போது அதிர்ச்சியாக இருந்தது. போலிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருப்பவர்கள்  பெரும்பாலும் அரசியல்வாதிகளின் பினாமிகள் என்பதை அந்த அலுவலக வாயிலில் தேநீர் விற்றுக் கொண்டிருப்பவரிடம் கேட்டால்கூட  தயங்காமல் சொல்லி விடுவார். இந்திய வாழ்வியலில் மனிதர்களின் வாழ்நாள் கூடியிருக்கிறது. அதே சமயம் அதற்கு இணையாக மரபணு  நோய்களும் பெருகியிருக்கின்றன. அலோபதி கொள்ளைக்கு எதிராக இயற்கை வழியில் கரை சேர மக்கள் நினைப்பது இயல்பானது.  சரியான கரங்களில் நம்மை ஒப்படைக்கும்போது சில சமயங்களில் ஆரோக்கியமானதும்கூட.

ஆனால், மக்களின் நம்பிக்கையில் வேட்டு வைக்கும் இதுபோன்ற போலிகளை அடையாளம் கண்டு களைய வேண்டிய பொறுப்பு  எல்லோருக்கும் இருக்கிறது. அலோபதி மருத்துவத்தைக் கட்டுப்படுத்த இருப்பதைப் போல இவற்றைக் கட்டுப்படுத்தவும் அதிக  அதிகாரங்கள் கொண்ட புதிய அமைப்பொன்றை உருவாக்க வேண்டும். ஏனெனில், ஏற்கனவே இருக்கிற அமைப்பு யார் கவனமும் படாத  துறை என்பதால், கொழுத்துச் செல்லரித்துப் போயிருக்கிறது. அதைப் புத்தாக்கம் செய்வதோடு, எழுபதுகளில் சுழற்றியதைப் போல  சாட்டையை அரசு இப்போது உடனடியாகச் சுழற்ற வேண்டும். தகுதியான திறமையான இயற்கை மருத்துவர்களை முன்னிறுத்தி இந்த  விவகாரத்தில் அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் இந்த விஷயத்தில் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. ஒரு இலட்ச  ரூபாய் கொடுத்து  விட்டு ஸ்லாட் கேட்டால் யாருக்கு வேண்டுமானாலும் தருவோம் என்பது முறையல்ல. மக்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற  போலிகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். முறையான மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்களை  முன்னிறுத்துவதிலே அக்கறை காட்ட வேண்டும்.அதேபோல் முழுப்பக்க விளம்பரம் என்கிற பெயரில் போலிகள் ஊடுருவுவதை  பத்திரிகைகளும் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும். மக்கள் நலன் சார்ந்து ஊடகத் துறையும் இயங்க வேண்டிய தேவை உருவாகி  விட்டது. முகத்திற்கு நேராக மக்கள் கேள்வியெழுப்பத் தயாராகி விட்ட சூழலை ஊடகங்களும் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடம்  மதிப்பிழந்தால் முதலுக்கே மோசம் என்பது எல்லா தொழில்களுக்கும் பொருந்தும்தானே?

தவிர இந்த விவகாரத்தில் அவர்களை ஆதரிப்பவர்கள்கூட அறியாமையிலேயே இதைச் செய்கிறார்கள் என்பதை உள்ளே இருந்து  பார்த்தவன் என்கிற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். விழிப்பு நிலை என்பது தேடலின் வழியாக நிகழ்வது. இன்றைக்கு  பக்கம் பக்கமாகப் பேசலாம். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், சில வருடங்களுக்கு முன்புவரை நானேகூட அந்த போலிச்  சித்தரின் தாழ் பணிந்துதான் கிடந்திருந்தேன் என்பதையும் மறுக்க முடியாது. அவர் கொடுத்திருந்தால் அரளி விதையைக்கூட கேள்வியே  கேட்காமல் ஒரே மடக்கில் குடித்திருப்பேன். இதை ஒரு கண் திறப்பு நிலையாகக் கருதி இனியாவது விழிப்போடு இருந்தால் நலம்  என்றுதான் மன்றாடுகிறேன். பக்கத்தில் நிறைய சாவுகளைப் பார்த்து விட்டதன் காரணமாகவே இதைக்கூட குற்றம் சாட்டும் தொனியில்  சொல்லாமல் இறைஞ்சும் தொனியிலேயே கேட்கிறேன்.

நெருங்கிய தோழியின் மரணச் செய்தி வந்தபோது கை கால் உதறப் பதறிய காட்சி இப்போதும் கனவில் வருகிறது. எல்லா  மாற்றங்களுக்கும் ஏதோவொரு வகையில் பின்புல அச்சாணியாக இருக்கும் ஊடக உலகமும் இதைப் புரிந்து கொள்ளும் என உளமார  நம்பவும் செய்கிறேன். சித்தர்கள் பாவம் சும்மா விடாது என ஊர்ப் பக்கமெல்லாம் சொல்வார்கள். அப்படி பாவத்தில் வீழ்ந்தவர்கள் குறித்த  கதைகளையும்கூட நிறையக் கேட்டிருக்கிறேன். நவபாஷாண சிலை செய்த போகரின் காலடியில் இருந்து இதை எழுதிக்  கொண்டிருக்கிறேன். போலிகளுக்கு இந்தக் கூற்றில் எள்ளளவும் பயமில்லை என்பதே பயணித்துக் கண்ட உண்மை. போகர்தான்  அவர்களுக்கு விரைவில் பயத்தை உருவாக்கி அருள வேண்டும்.

இதையெல்லாம் எழுதுவதால் சித்தர் பாவம் வந்து விடுமோ என்கிற பயமெல்லாம் நூறுசதவீதம் எனக்கில்லை. இப்படிச் சொல்வது  மிகையாகக்கூட இருக்கலாம் என்றாலும், இத்துறை சார்ந்த நம்பிக்கையின்படி போகரிடம் அனுமதி கேட்ட பிறகே இந்தக் காரியத்திலும்  இறங்கினேன். தவிர, இந்தத் துறையில் இருக்கிற நேர்மையான, உண்மையான சித்தர்கள் போலிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக  பாராட்டத்தான் செய்வார்கள். இந்தத் துறையில் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மைச் சித்தர்கள் எழும்பி வந்து உண்மைகளை வெளிச்சம்  போட்டுக் காட்ட வேண்டும். உண்மை என்கிற உருக்கிய தங்கத்தின் மஞ்சள் ஒளி வலியோடு இருக்கும் மக்களின் முகங்களில் பரவட்டும்.  துன்பப்பட்டவர்களுக்கு ஒளிகாட்டுவது உண்மைச் சித்தர்களின் கடமையும்கூட. மக்களின் வலியை உணரும் எவரும் உண்மைச் சித்தரே!

(முற்றும்)

அலோபதி மருத்துவத்தைக் கட்டுப்படுத்த இருப்பதைப் போல இவற்றைக் கட்டுப்படுத்தவும் புதிய அமைப்பொன்றை உருவாக்க வேண்டும்!  

இந்தத் துறையில் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மைச் சித்தர்கள் எழும்பி வந்து உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்!