கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-15



நோய் தீர்க்கும் பன்னீர் விபூதி

‘‘முருகனோட அருள் கட்டபொம்முவுக்கு பரிபூரணமா இருந்தது. அதனாலதான் எத்தனையோ சுதந்திரப் போராட்டத் தியாகிகள் இருந்தாலும் இப்ப வரை அவர் புகழ் உச்சத்துல இருக்கு. தேசத்துக்காக உயிர் விடுவது சாதாரண விஷயமில்லை... அப்படிப்பட்ட பாக்கியத்தை முருகன் கட்டபொம்மு
வுக்கு கொடுத்திருக்கார்!

சாமியை வணங்கிட்டா பிரச்னையே வராதுனு நினைக்கறோம். உண்மை என்னன்னா... தன்னை வணங்கினவங்களை மட்டும் கடவுள் காப்பாத்தினா அது லஞ்சம் வாங்கினா மாதிரி!அடிப்படைல சாமி நீதிபதி. தெரிஞ்சோ தெரியாமலோ நாம பல குற்றங்களை செய்திருப்போம். ஆக, அது ஆதாரங்களோட நிரூபிக்கப்பட்டா நீதிபதி எப்படி தண்டனை வழங்குவாரோ... அப்படி சாமியும் நமக்கான தண்டனைகளை வழங்கறார்...

தன்னை வணங்கறதாலயே யாருக்கும் அவர் பாரபட்சம் காண்பிக்கறதில்ல! உடனே அப்பறம் ஏன் சாமியை கும்பிடணும்கிற கேள்வி எழும். இதுக்கான விடை மன்னிப்பு! தண்டனை கிடைச்சாலும் கருணை மனு அனுப்பறது இல்லையா அது மாதிரி...’’ தெளிவாக பதில் சொன்ன நாகராஜன், ‘‘என்ன கண்ணா... இப்ப உன் கேள்விக்கு விடை கிடைச்சுதா..?’’ என்று கேட்டார்.

‘‘கிடைச்சுது தாத்தா...’’ என்றான் கண்ணன். ‘‘அப்ப பெரிய பெரிய மகான்களுக்கும் இது பொருந்துமா சித்தப்பா..?’’ சுவாதி கேட்டாள்.
‘‘மகான்களுக்கும் நமக்கும் ஒரே சாமிதானே சுவாதி? உனக்கு ஆதிசங்கரர் தெரியும் இல்லையா..? அவரையே ஒரு தடவை காசநோய் படாதபாடு படுத்துச்சு. அப்ப திருச்செந்தூர் வந்து முருகன் மேல சுப்ரமணிய புஜங்கம் என்ற கவிதையை பாடி வழிபட்டார். பக்தியோட செந்தூர் முருகன் விபூதிய உடம்பு முழுக்க பூசிட்டு முருகன் பாதமே கதின்னு இருந்தார். அவரோட காச நோய் இருந்த இடம் தெரியாம ஓடிப்போயிருச்சு!’’

‘‘என்ன சித்தப்பா சொல்றீங்க..? செந்தில் முருகன் விபூதிக்கு அவ்வளவு மகத்துவமா?’’ சுவாதியின் குரலில் ஆச்சர்யம். ‘‘பின்னே... பன்னீர் விபூதினா சும்மாவா? அங்க பன்னீர் மரத்தோட இலைல கட்டிதான் விபூதி தருவாங்க. விபூதியும் பன்னீர் இலையோட வாசனையும் சேர்ந்து ஆளத் தூக்கும். அந்த பன்னீர் இலை எல்லாத்துலயும் சொல்லி வெச்சா மாதிரி பனிரெண்டு நரம்புகள் மட்டும்தான் இருக்கும். இது முருகனோட பன்னிரு கைகளைக் குறிக்கும்!

அதனாலயே இங்க விபூதி வாங்கறது முருகன் கையால விபூதி வாங்குவதற்கு சமம்! இதை பூசிக்கிட்டா நோய்கள் எல்லாம் ஓடியே போயிடும்! செல்வம் தழைச்சி வளரும்!’’‘‘விபூதி பூசினா நோய் அகலும் என்பது வரை ஓகே தாத்தா... ஆனா, அதெப்படி விபூதியால செல்வம் வரும்..?’’ கண்ணன் பட்டென்று கேட்டான்.

‘‘விபூதினா செல்வம்னு அர்த்தம் கண்ணா... 350 வருஷங்களுக்கு முன்னாடி இதே திருச்செந்தூர்ல என்ன ஆச்சு தெரியுமா..?’’ நாகராஜன் கதைக்குள் புகுந்தார்.‘‘ஏழைங்க வயித்துல அடிக்காதீங்க சாமி... எங்க உடல வருத்தி நீங்க சொன்ன வேலையெல்லாம் செஞ்சோம்... இப்ப இப்படி ஏமாத்தறீங்களே..?’’ கூலித் தொழிலாளர்கள் வருத்தத்துடன் ல தேசிக தம்பிரான் சுவாமிகளிடம் மன்றாடினார்கள்.
பதிலுக்கு தம்பிரான் சிரித்தார்.

பல நாட்களாக அவர் திருச்செந்தூர் கோயிலின் மேலை கோபுரத்தை கந்தன் அருளால் நன்முறையில் கூலி ஆட்களைக் கொண்டு கட்டிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்துக்கான வேலை முடிந்ததும் தொழிலாளிகளுக்கு கூலியாக விபூதியைத் தருவார்.

தந்துவிட்டு தன் கைகளால் கூலியாட்களின் கையை சட்டென்று மூடுவார். ‘‘விநாயகர் சன்னதி அருகில் சென்றுதான் கையைப் பிரித்துப் பார்க்க வேண்டும்!’’ என அன்புக் கட்டளையிடுவார்.

வேலையாட்களும் அவர் சொன்னபடியே விநாயகர் சன்னதி அருகில் சென்று கையைத் திறந்து பார்ப்பார்கள். விபூதிக்கு பதில் அன்று அவர்கள் செய்த வேலைக்கு ஏற்ப தங்கக் காசுகள் மின்னும்!இந்த அதிசயம் பல நாட்களாகத் தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால், கோபுரத்தின் ஆறு நிலைகளைக் கட்டி முடித்த மறுநாளிலிருந்து சுவாமிகள் தந்த விபூதி விபூதியாகவே இருந்தது! தங்கமாக மாறவில்லை!இதைக் கண்டதும்தான் வேலையாட்கள் சுவாமிகளை நிற்க வைத்து கேள்வி கேட்டனர்.

‘‘இப்பிடி சிரிச்சா என்ன சாமி அர்த்தம்..? பதில் சொல்லுங்க...’’ கூட்டத்தில் இருந்த ஒருவன் தைரியமாகக் கேட்டான்.சுவாமிகள் அமைதியாக கண்களை மூடினார். செந்தில்நாதனை மனமுருக வேண்டினார். ‘‘முருகா! ஒன்றும் இல்லாத ஆண்டி நான். எப்படி இவர்களுக்கு கூலியைக் கொடுப்பேன்? நேற்று வரை விபூதியை தங்கமாக மாற்றி எனக்கு அருள் செய்த நீ இன்று அதையும் நிறுத்தி விட்டாய்! இனிமேல் அடியேன் என்ன செய்வேன். ஒன்றும் விளங்கவில்லையே...’’

அவரது உள்ளக் குமுறல் கண்களில் நீராக வழிந்தது. செந்தில்நாதன் தாமதிக்காமல் அவரது மனக்கண்ணுக்கு காட்சி தந்தார். “தேசிகா! காயல்பட்டணத்தில் இருக்கும் வள்ளல் சீதக்காதியிடம் நான் அனுப்பியதாகச் சொல். அவர் தரும் தானத்தை மறுக்காமல் வாங்கி வா. கோயில் திருப்பணி இனிதே நடைபெறும்!’’உடனே சீதக்காதி வள்ளலைச் சந்திக்க தேசிகர் விரைந்தார்.

அப்போது தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் செய்துவிட்டு வறுமையில் இருந்தார் சீதக்காதி. தேசிகர் வந்து கேட்டவுடன் தன்னிடம் இருந்த உப்பு நிறைந்த மூட்டையை தானமாகத் தந்தார்.

தேசிகரும் மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கி வந்து செந்தில்நாதன் சன்னதியில் வைத்து மூட்டையைப் பிரித்தார். அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் அகண்டு விரிந்தன! மூட்டையில் இருந்த உப்பு, செந்தில்நாதன் கருணையால் தங்கமாக மாறியிருந்தது! பிறகென்ன... திருப்பணி இனிதே நடைபெற்று, ஒரு குறையும் இல்லாமல் நிறைவுபெற்றது.

புரோகிதர்களால் கும்பாபிஷேகத்திற்காக நல்ல நாள் ஒன்று குறிக்கப்பட்டது. ஆனால், செந்தில் நாதன் கும்பாபிஷேகத்தின்போது தேசிகர் திருச்செந்தூரில் இருக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார்.தேசிகர் வருந்தவே இல்லை. இன்முகத்தோடு திருச்செந்தூரை விட்டு வெளியேறினார்.

குறித்த நன்னாளில் கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது. அதை அனைவருக்கும் முன்னால் நின்று கொண்டு தேசிகர்தான் நன்கு தரிசனம் செய்தார்!
முருகனின் ஆணையை மீறி இவர் எப்படி இங்கு வந்து தரிசனம் செய்கிறார்..? புரியாமல் ஊரே திகைத்தது.

அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தேசிகரின் உருவம் கற்பூரம் போல் காற்றில் கரைந்தது. தேசிகர் தன் யோக சக்தியின் பலத்தால் சூட்சும வடிவம் தரித்து கும்பாபிஷேகத்துக்கு வந்துள்ளார் என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது! ‘‘விபூதியை தங்கமா மாத்தி செந்தில் நாதன் அருளால தேசிகர் கட்டின கோபுரத்தை இன்னிக்கும் திருச்செந்தூர்ல பார்க்கலாம். அதை விபூதி கோபுரம்னே சொல்லுவாங்க...’’ என்றார் நாகராஜன்.‘‘புரியுது தாத்தா...’’ கண்ணன் தழுதழுத்தான்.

‘‘இன்னொரு சம்பவமும் இருக்கு... சொல்றேன் கேளு...’’ நாகராஜன் கண்சிமிட்டினார்.கிபி 1803. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலம். திருச்செந்தூரில் வழக்கம் போல் பூஜை நடந்து கொண்டிருந்தது.அப்போது யதார்த்தமாக தூத்துக்குடியின் கலெக்டர் கோயிலுக்கு வந்தார். தன் பூனைக் கண்களால் அங்கு நடக்கும் பூஜையை எதுவும் புரியாமல் பார்த்தார். உற்சவ மூர்த்திக்கு (அதாவது சண்முக மூர்த்திக்கு) அர்ச்சனை முடிந்து ஆரத்தி காட்டும் சமயம்.

அர்ச்சகர்கள் வழிபாட்டின் ஓர் அங்கமாக முருகனுக்கு சாமரம் வீசினார்கள். அதைப் பார்த்த கலெக்டர்‘களுக்’ என்று சிரித்தார். அவர் சிரிப்பதைப் பார்த்த தலைமை அர்ச்சகருக்கு கோபம் தலைக்கேறியது.‘‘துரை அவர்களே! ஏன் இப்போது சிரிக்கிறீர்கள்?’’ உஷ்ணமாகக் கேட்டார்.
‘‘சிலைக்கு எதற்கு விசிற வேண்டும்..? அதற்கு வியர்க்குமா..?’’ துரை நக்கலாகக் கேட்டார்.

‘‘இது சிலை அல்ல! எங்கள் செந்தில்நாதன்! அவருக்கு நிச்சயம் வியர்க்கும்...’’ என்று ஏதோ ஒரு ஆவேசத்தில் சொல்லிவிட்டார் தலைமை அர்ச்சகர்.‘‘அப்படியா... சரி. விசுறுவதை நிறுத்துங்கள். அவருக்கு வியர்க்கிறதா என்று பார்க்கிறேன்!’’ நகைத்தபடி துரை கட்டளையிட்டார்.

சுற்றி இருந்தவர்கள் திணறி விட்டனர். தலைமை அர்ச்சகர் மட்டும் பயப்படவில்லை. சுவாமிக்கு விசிறிக் கொண்டிருந்தவர்களை நிறுத்தச் சொன்னார். செந்தில்நாதனின் அனைத்து ஆபரணங்களும் அவரால் களையப்பட்டன. அப்போதுதானே சுவாமிக்கு வியர்ப்பது நன்றாக கண்களுக்குத் தெரியும்!கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே செந்தில்நாதனின் உடலில் வியர்வை வழிய ஆரம்பித்தது! வியர்வையால் முருகன் கட்டியிருந்த ஒற்றை வேஷ்டி அவர் உடலோடு ஒட்டிக்கொண்டது! துடைக்கத் துடைக்க வியர்வை வழிந்து கொண்டே இருந்தது.
இதைப் பார்த்த துரை, தன் தவறை உணர்ந்தார். செந்தில்நாதனுக்கு காணிக்கையாக ஒரு வெள்ளி பாத்திரத்தைக் கொடுத்தார்...

‘‘அந்தப் பாத்திரம் இன்னிக்கும் கோயில்ல இருக்கு. செந்தில்நாதன் மகிமையை இன்னும் சொல்லிட்டே இருக்கலாம். அவன் கண்டிப்பா உன் மகனுக்கு பேச்சும் ஞானமும் கொடுத்து உன் பிரச்னையை தீர்த்து வைப்பான்... கவலையேபடாம திருச்செந்தூர் போயிட்டு வா!’’ என்றார் நாகராஜன்.

எப்படிச் செல்வது?

திருச்செந்தூர் முருகன் கோயில்(அறுபடை வீடுகளில் ஒன்று)செல்லும் வழி: திருச்செந்தூர் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை ஐந்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாலை நான்கு மணி முதல் இரவு 10 மணி வரை

(கஷ்டங்கள் தீரும்)
 
ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்