இந்தியாவில் மங்காத்தா ஆடும் மெடிக்கல் மாஃபியாக்கள்!



தலைப்பைப் படித்துவிட்டு இது ஏதோ போலி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பற்றியது என்று நினைக்க வேண்டாம்.

மருந்து என்ற உயிர் காக்கும் அமுதத்தை சந்தைப் பொருளாக்கி, லாப வெறியால் பெரும் கார்ப்பரேட்டுகள் எப்படி பல்லாயிரம் கோடி மக்களின் வாழ்வோடு விளையாடுகிறார்கள் என்று தெரிந்தால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். பிஜர் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற மிகப் பெரிய மருந்துக் கம்பெனி ஒன்றின் முன்னாள் தலைவர் சமீபத்தில் ஒரு விஷயத்தை வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

‘இந்த பார்மஸி தொழிலுக்கும் கொள்ளை கும்பலுக்கும் என்ன வித்தியாசம்? அவர்களும் பணத்தை அள்ளுகிறார்கள். இந்தத் தொழிலும் கோடி கோடியாகக் கொட்டுகிறது. கொள்ளை சம்பவங்களிலும் உயிர்ச் சேதம், பாதிப்புகள் உள்ளன.
இங்கும் அது நிறைய உள்ளன.அரசியல்வாதிகள், அதிகாரிகளை லாபி செய்துதான் கொள்ளையர்கள் வாழ்வார்கள். கிட்டத்தட்ட மிகப் பெரிய மருந்துக் கம்பெனிகள் கூட அப்படித்தான் நடந்துகொள்கின்றன!’ அவரது இந்தப் பேச்சில் உண்மை இல்லாமல் இல்லை.

இன்று லாபத்துக்காக மருந்துக் கம்பெனிகள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தரமற்ற வேதிப் பொருட்களை கலப்படம் செய்வதில் தொடங்கி போலி மருந்துகளை பெரிய நிறுவனங்களே உற்பத்தி செய்வது வரை எல்லா மட்டத்திலும் இந்த பஞ்சமாபாதகம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

மருந்துக் கம்பெனிகள் மக்களின் ஆரோக்கியத்தைக் காக்கவே இருக்கின்றன என்று நீங்கள் நம்பினால் அந்த எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். தவறான மரணங்கள், போலிகள், ஊழல்கள், நீதியை வளைத்தல்கள், போலியான ஆய்வுக்கட்டுரைகள், போலி கருத்து கணிப்புகள், மறைமுக அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், மர்ம மரணங்கள் என அனைத்து அநீதிகளும் நிறைந்துள்ள துறையாக மருந்துத் துறை இருக்கிறது.

அதிலும் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் அவர்களின் முதலீடும் அதிகம். அவர்களின் கணக்குகளும் அதிகம்.பீட்டர் சி காட்ஸி என்ற மருத்துவர் ‘Deadly Medicines and Organised Crimes: How Big Pharma has Corrupted Health Care’ என்ற சற்றே நீளமான தலைப்பு கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். புத்தகத்தின் தலைப்பு எளிமையாக, சுருக்கமாக மொழிபெயர்த்தால் ‘உயிர் பறிக்கும் மருந்துகள் மற்றும் திட்டமிட்ட குற்றம்’ என்று வரும்.

தன் நீண்ட கால மருத்துவப் பணி மற்றும் கள ஆய்வுகள், தொடர்ச்சியான வாசிப்புகள் மூலம் மருந்துக் கம்பெனிகள் செய்யும் தகிடுதத்தங்கள் எல்லாவற்றையும் தோலுரித்துக் காட்டுகிறார் காட்ஸி. பல்வேறு மருத்துவ ஆய்வு இதழ்கள் மற்றும் மாநாடுகளில் நூற்றுக்கணக்கான ஆய்வுகளைச் சமர்ப்பித்துள்ள காட்ஸியின் இந்தப் புத்தகம் இப்போது அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.சில மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதற்கு அந்நிறுவனங்கள் அதற்கான தயாரிப்புச் செலவுதான் காரணம் என்று சொல்கின்றன.

இது முழு உண்மை இல்லை. பெரும்பாலான மருந்துகள் அதிக விலை வைக்கப்படுவதற்குப் பின் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்குக் கொடுக்கும் லஞ்சம், உள்ளூர் பிரமுகர்களுக்குத் தரப்படும் கமிஷன், மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்குமான கமிஷன், நிறுவனத்துக் கான கொள்ளை லாபம் என பல காரணிகள் உள்ளன என்கிறார்.

அதேபோல் ஒரு குறிப்பிட்ட மருந்துக்கான ஆய்வு, அதற்கான தேவை ஆகியவற்றைக்கூட போலியாக நடத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரச்னை சமூகத்தில் அதிகம் இருப்பதுபோல் போலியாக ஆய்வுக் கட்டுரைகள் உருவாக்கி அதை விலைக்கு வாங்கப்பட்ட அறிவுஜீவிகள், மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ மாநாடுகளில் சமர்ப்பிக்கச் செய்து, அங்கிருக்கும் நடுவர் குழுவையும் விலைக்கு வாங்கி, அரசுக்குப் பரிந்துரை செய்யச் செய்து, அரசு தரப்பைக் கட்டுப்படுத்தி மக்கள் தலையில் அதை தேவையே இல்லாமல் கட்டும் வேலையைச் செய்கிறார்கள் என்கிறார்.

இதை எல்லாவற்றையும்விட உச்சம் மருந்துக் கம்பெனிகளின் மருந்துகள்தான் மக்களின் உயிரைப் பறிப்பதில் இதய நோய்களுக்கும் கேன்சருக்கும் அடுத்து மூன்றாவது நிலையில் இருக்கின்றன என்று டாக்டர் பீட்டர் சொல்வதுதான்! ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நோயால் இறந்தவர்களில் பாதிப் பேர் சிலவகை மருந்துகளை சரியாக உட்கொண்டதால் இறந்தவர்கள்தான்! அப்படியானால் மீதிப் பேர் அவர்கள் அரைகுறையாக உண்டதாலும், தவறாக எடுத்துக்கொண்டதாலும், அதிகப்படியான டோஸ் எடுத்ததாலும் இறந்தவர்கள் என்கிறார்.

இதை வெறும் சுவாரஸ்யமான நடையலங்காரத்துக்காக அவர் சொல்லவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். சரி, மேல்நாடுகளில்தானே அப்படி நடக்கிறது என்று ஆறுதல் அடைய வேண்டாம். அளப்பரிய தனிமனிதச் சுதந்திரமும் சட்டத்தின் பாதுகாப்பும் நிறைந்த, ஒப்பீட்டளவில் ஊழல் குறைந்த மேற்குலக நாடுகளிலேயே இந்த கதிதான் என்றால் லஞ்சமும் ஊழலும் மலிந்துகிடக்கும் நம் நாட்டில் இந்த பகாசுர மருந்து மாஃபியாக்கள் என்னென்ன வேலைகள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று யோசிக்கவே திகிலாக இருக்கிறது.

வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்ட பல மருந்துகளை நாம் இன்னமும் தடை செய்யாமல் பயன்படுத்திவருகிறோம். அந்த நிறுவனங்கள் அவர்களின் நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கிறதே என்று உற்பத்தியை நிறுத்திவிடவில்லை. அதை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மனசாட்சியே இல்லாமல் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்தே இந்த மருந்துக் கம்பெனிகளின் மனித நேயம் எவ்வளவு மகத்தானது என்று நாம் புரிந்துகொள்ளலாம்.மருந்து நிறுவனங்கள்தான் அப்படி என்றால் அவர்களிடம் சரக்குகளை வாங்கும் ஏஜென்சிகள் அவர்களுக்கு மேல். வணிகரீதியான இலக்கை மட்டுமே மனதில் ஏற்றிக்கொண்டு அவர்கள் ஓடுகிறார்கள். போலியான மருந்து தேவையை உருவாக்குவது, சரக்கைப் பதுக்குவது, விலையை ஏற்றுவது என்று இவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளும் சிறிதல்ல.

தடைசெய்யப்பட்டவை, எச்சரிக்கப்பட்டவை, தவறான தகவல்கள் உள்ளவை என எல்லாவகைகளையும் மக்களின் தலையில் கட்ட தயாராகவே உள்ளார்கள். மருந்துகளை ஒழுங்குமுறை செய்வதற்கான போதிய சட்ட அமைப்புகள் இல்லாததும், தலைவிரித்தாடும் லஞ்சமும் இந்த சீரழிவுகளை எல்லாம் தடுத்து நிறுத்த இயலாததாகச் செய்கின்றன.

நம் நாட்டில் பெரும்பாலான மருத்துவர்கள் இதுகுறித்தெல்லாம் எதுவுமே பேசுவதில்லை. அடிப்படை மருத்துவமே பற்றாக்குறையாக இருக்கும் ஒரு தேசத்தில் தரமான மருத்துவ சேவை பற்றி நினைப்பது எங்கே?

அத்தி பூத்தாற்போல் இப்படியான அராஜகங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மருத்துவர்களின் குரல்கள் அதே வேகத்தில் அமைதியாக்கப்படுவதையும் கவனிக்கலாம். இந்தக் குரல்கள் யாரால் எப்படி அமைதியாக்கப்படுகின்றன என்று நாம் சொல்ல வேண்டியதே இல்லை. எல்லாம் நமது மருந்து அரசர்களின் கைங்கரியம்தான்.

எல்லாவற்றிலும் காசு சம்பாதிப்பது என்ற ஒன்றிலேயே குறியாக இருக்கும் மனிதர்கள் ஆபத்தானவர்கள். இவர்கள் சக மனிதர்கள் வாழ்வை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த மனிதகுல இருப்பையே அழித்துவிடும் மோசமான அழிவு சக்திகள். இப்படியானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கா விடில் அது அனைவருக்குமே பிரச்னைதான்.                             

இளங்கோ கிருஷ்ணன்