குற்றாலம் ரஹ்மத் பார்டர் பரோட்டா கடை!



லன்ச் மேப்  

அருவிக் குளியல், ஆயில் மசாஜ் மட்டுமல்ல... பார்டர் கடை பரோட்டாவும், நாட்டுக்கோழி வறுவலும் கூட குற்றாலத்தின்  அடையாளம்தான்! வாகனத்தை நிறுத்தி, ஹோட்டலுக்குள் சென்று இடம் பிடித்து சாப்பிடுவது எல்லாம் சுலபம் அல்ல! இந்த நேரத்தில்  தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆகிவிடலாம்! 1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் பீரனூர் பகுதியில் கேரள - தமிழக எல்லையில்  சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் சூழ் இடமாக பீரனூர் பார்டர் மாறியது.இதைக் கவனித்து வந்த முகம்மது  ஹசனுக்கு ‘இந்த இடத்தில் நாம் ஒரு நல்ல உணவகத்தை ஆரம்பித்தால் என்ன’ என்று தோன்றியது. உடனே ரஹ்மத் ஹோட்டலை  ஆரம்பித்தார்.

அன்று முதல் தொடர்ச்சியாக இந்தக் கடை செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் தேசிய உணவாகவே மாறிவிட்ட சுடச்சுட பரோட்டாவும்  இவர்கள் வீட்டுப் பெண்களின் கைவண்ணத்தில் தயாராகும் மசாலாவில் செய்யப்படுகிற சால்னாவும் சர்வதேச அளவில் இன்று  புகழ்பெற்றிருக்கின்றன. குறிப்பாக மிளகு சிக்கன். ஒருமுறை சாப்பிட்டவர்கள் மறுமுறை இதை உண்பதற்காகவே ஓடோடி வருகிறார்கள். முகம்மது ஹசன் இக்கடையைத் தொடங்க, அதன் பிறகு அவரின் புதல்வர் இஸ்மாயிலும்,அவரைத் தொடர்ந்து இப்பொழுது அவரின்  மகன்கள் ராஜா முகம்மதுவும்,முகம்மது ஹசனும் சுவையும் பாரம்பரியமும் கெடாமல் நடத்துகிறார்கள்.  

“1974ல தாத்தா இந்த ஹோட்டலை ஆரம்பிச்சாரு. பாட்டி ஃபஹானா நாட்டுக்கோழி சால்னா செய்வாங்க. பாட்டியோட பக்குவத்துக்கு  மக்கள் அடிமையானாங்க. இப்ப வரை அதே செய்முறைதான். இந்த மலைல விளையற பொருட்களைத்தான் பயன்படுத்தறோம். குறிப்பா  நாட்டு மிளகு. ஏன்னா இதுலதான் காரம் அதிகமா இருக்கும்...’’ என்கிறார் ராஜா முகம்மது.“விறகடுப்பு அனல்ல குழம்பை வேக வைக்கிறப்ப  அது சுண்டும். இதுதான் பரோட்டாவுக்கு சரியான பதம். தேங்காயையும் கசகசாவையும் கிரைண்டர்ல மைய அரைப்போம். சமைச்சபிறகு  கரிக்கட்டைகளை பெரிய பாத்திர மூடில பரப்புவோம். குழம்பு, வறுவல், சுக்கானு எல்லாத்துக்கும் தனித்தனி மசாலா சேர்மானம்.  திகட்டாதபடி குழம்புல தேங்காய்ப் பாலை சேர்த்தாதான் ருசியா இருக்கும்.

மல்லித்தூளைப் பொறுத்தவரை உருட்டு மல்லியை சமைக்கிறப்ப அதை அரைச்சுதான் பயன்படுத்தணும்...’’ என அடுக்குகிறார்  இளையவரான ஹசன்.குற்றாலத்தின் அடையாளமாகத் திகழும் ரஹ்மத் பார்டர் கடையின் கிளைகளை இப்போது சென்னையிலும்  கோவையிலும் தொடங்கியுள்ளனர். சுவையும் தரமும் குற்றாலம் போலவேதான். நாட்டுக்கோழி இவர்களது முக்கிய ரெசிப்பி என்பதால்  தென்காசி சுற்றுவட்டார கிராமங்களில் வளர்க்கப்பட்டு சந்தைகளுக்கு வரும் கோழிகளை வாங்குகிறார்கள். மதியம் 11 மணி முதல் இரவு 11  மணிவரை இயங்கும் இவர்களது உணவகத்தில் பிரியாணி பரோட்டா, சிக்கன் பரோட்டா... என பரோட்டாவிலேயே பல வகைகள் உண்டு  என்பதுதான் ஹைலைட்!  

-திலீபன் புகழ்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்


நாட்டுக்கோழி வறுவல்

நாட்டுக்கோழி - அரைக் கிலோ
நறுக்கிய சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது- 2 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 சிட்டிகை
சீரகத்தூள் - அரை சிட்டிகை
மல்லித்தூள் - 2 சிட்டிகை
மிளகு பொடித்தது - 1 சிட்டிகை
மல்லி, கறிவேப்பிலை - சிட்டிகை
நல்லெண்ணெய்  - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

பக்குவம்: நாட்டுக்கோழியை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்தபின் சதைகளைத் தனியாகப் பீய்த்து வைக்கவும். பிறகு கடாயில்  எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது மற்றும் மசாலா தூள்  வகைகளைச் சேர்த்து வதக்கி மசாலா வாசம் அகன்றதும் பீய்த்து வைத்த கோழியைக் கொட்டி உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீர்  தெளித்து கிளறவும். சுண்டி சுருள வறுத்ததும் மிளகுத் தூள், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். மிளகை இறுதியாகச் சேர்க்க வேண்டும்.  அப்போதுதான் சுவையாக இருக்கும்.

சால்னா


சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி (பெரியது) - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
நாட்டுக்கோழி - 500 கிராம்
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க:
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச்
இலவங்கம் - 3
மிளகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்
வெங்காயம் (பெரியது) - 2
தக்காளி (பெரியது) - 4
தேங்காய் துருவல் - 1 கப்
கரம்மசாலா தூள் - 1 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10
மிளகாய்த் தூள் - 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
கசகசா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

பக்குவம்: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு பட்டை,  இலவங்கம், மிளகு, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக  வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்க்கவும். வதங்கியதும்  துருவிய தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து வதக்கி நாட்டுக்கோழியைப் போட்டு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள்  கொதிக்கவிடவும். பரோட்டா சால்னாவுக்கு முக்கியமே நல்லெண்ணெய்தான். கோழி உடல் சூட்டை அதிகரிக்கும். அச்சூட்டை  நல்லெண்ணெய் சமன் செய்யும்.