மிரட்டும் அந்தமான் பழங்குடிகள் !!



கடந்த நவம்பர் பதினான்காம் தேதி அமெரிக்க சுற்றுலாப் பயணியும் கிறிஸ்துவ மதப் பரப்பாளருமான ஜான் செள அந்தமான்  பழங்குடிகளால் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உறையவைத்தது. அந்தமானில் உள்ள பல்வேறு தீவுகளில் உலகின் மிகப் பழங்கால  மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஜாரவா, கிரேட் அந்தமானிஸ், செண்டினலிஸ் எனப் பல்வேறு இனக்குழுக்களாகக் குட்டிக் குட்டித்  தீவுகளில் வசிக்கும் இவர்களை மனித நாகரிகம் இன்னமும் கறைபடுத்தவில்லை. உலக நாகரிகத்தின் மைய நீரோட்டத்தோடு கலக்காமல்  இன்னமும் பழங்குடிகளாக வில்லும் அம்பும் கொண்டு வாழ்ந்து வரும் இவர்களைக் காணவும், ஆய்வு செய்யவும் புரிந்து கொள்ளவும்  நூற்றாண்டுகளாகவே ஐரோப்பியர்களும் பிற முன்னேறிய சமூகத்தவர்களும் முயன்றுகொண்டிருக்கிறார்கள்.
 
இதில் கிரேட் அந்தமானிஸ் மற்றும் ஜாரவா பழங்குடிகள் ஓரளவு மனித சமூகத்துடன் இணக்கமாகப் பழகுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால், செண்டினல் மலைப் பகுதிகளில் வசிக்கும் செண்டினலிஸ் பழங்குடிகள் யாராலும் நெருங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.சுற்றிலும் மலை. எல்லா பக்கமும் அடர்ந்த காடு. சூரிய ஒளி பூமி தொடாத பல்லூழிக் கால பெரு விருட்சங்கள்... என இயற்கை  அன்னையின் மடியில் குழந்தைகள் போல் நிர்வாணம் உணராமல் வெள்ளந்தியாக வாழ்கிறார்கள். என்றாலும் இப்பழங்குடிகள் வெள்ளந்திகள்  மட்டுமல்ல. ஆபத்தானவர்களும்தான்! தங்கள் எல்லைக்குள் யார் நுழைந்தாலும் கூரிய விஷம் தடவிய அம்பு மழை பொழிந்துதான் முகமன்  சொல்வார்கள். அந்த அம்பு மழைக்கு நீங்கள் பிழைத்திருந்தால் அவர்களை தரிசிக்கலாம்.

இத்தனை ஆபத்தான பழங்குடிகளை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றத்தான் மலையேறத் துணிந்தார் ஜான் செள. அப்போதே பலரும் இது  ஆபத்தான பைத்தியக்காரத்தனம் என்றார்கள். கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட ஜான் இந்த ஆபத்தை எதிர்கொள்வதுதான், தான்  நம்பும் கடவுளுக்கு விசுவாசம் என்று நினைத்தார் போலும். தொடர்ந்து பல வருடங்களாக செண்டினல் பழங்குடிகள் பற்றிய விஷயங்களைச்  சேகரித்த ஜான், திட்டமிட்டபடி கடந்த நவம்பரில் தீவை அடைந்தார். முதல் நாள் ஒரு மீனவரோடு அந்தத் தீவின் மலை அடிவாரத்தை  அடைந்து ‘ஹலோ! ஐ லவ் யூ… ஜீசஸ் லவ் யூ...’ என்ற கத்தியிருக்கிறார். சத்தம் கேட்டதும் அவரைத் தங்களது வழக்கமான அம்பு  மழையால் விரட்ட முற்பட்டார்கள் பழங்குடிகள். அவரது நீரில் சிதையாத (Water proof) பைபிள், அம்பால் துளைக்கப்பட. உயிர் தப்பித்  திரும்பியிருக்கிறார்.

மறுநாள் மீண்டும் அந்த மீனவரிடம் தன்னை அந்தத் தீவின் கரையில் கொண்டுபோய் விடச்சொல்ல அவரும் அங்கே கொண்டு போய்  விட்டுவிட்டு வேகமாய்த் திரும்பிவிட்டார்.ஆனால், ஜான்..? அவரது மரணச் செய்தி மட்டுமே வந்தது.உண்மையில், ஜான் மட்டுமே  செண்டினல் பழங்குடிகளை நெருங்க முற்பட்ட முதல் நபர் இல்லை. முன்பும் சிலர் முயன்றிருக்கிறார்கள். அதில் சிலர் மரித்துப்  போயிருக்கிறார்கள். சிலர் தப்பித்தோம்; பிழைத்தோம் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்திருக்கிறார்கள். திரும்பி  வந்தவர்கள் சொல்லும் கதைகள் ஒவ்வொன்றுமே திகில் ரகம். கேனிபல்ஸ் எனப்படும் நரவேட்டையாடும் திரைப்படங்களில் வருமே அதை  மிஞ்சும் சம்பவங்கள்.   அது 1974… ஓர் ஆவணப்படக் குழு செண்டினல் தீவை படகில் நெருங்கியது. பழங்குடிகளுக்கான பரிசுப் பொருள்  நிறைந்த படகுடன் கரையை நெருங்கிய மறுநிமிடம் பல நூறு அம்புகள் சர் சர்ரென பாய்ந்து வந்தன. விழுந்தடித்து படகை  எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டார்கள்.

பிறகு 1981ல் ஒரு சம்பவம். ப்ரைம்ரோஸ் என்ற கப்பல் ஒன்று செண்டினல் தீவின் பவளப் பாறைகளில் மோதி தரைதட்டி நின்றது.  யாராவது வந்தால்தான் ஆச்சு என்று கேப்டன் காத்திருக்க, வந்ததோ சில நிர்வாண மனிதர்கள்! எல்லோர் கையிலும் அம்பும் ஈட்டியும்.  ஆபத்தை உணர்ந்த கேப்டன் வயர்லெஸில் கடற்படைக்குத் தகவல் கொடுக்க ஹெலிகாப்டரில் வந்து மீட்டுச் சென்றது இந்தியக் கடற்படை.கடந்த 2006 ஜனவரியில் இன்னொரு சம்பவம். இரண்டு மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது காற்றின் வேகம்  அதிகமாகவே செண்டினல் தீவுகளில் ஒதுங்கினார்கள். கொதிப்பதற்குப் பயந்து எரிவதில் குதித்த கதையானது. இரண்டு நாட்கள் கழித்ன  அவர்களின் உடல்கள் மட்டுமே அழுகிய நிலையில் கிடைத்தன. உடலெங்கும் அம்பும் ஈட்டியும் பாய்ந்த தடயங்கள். உடல்களை கடலோரக்  காவல் படை மீட்கச் சென்றபோதும் அம்பு மழை. வேறு வழியின்றி உடலைக்கூட மீட்காமல் ஓடிவந்துவிட்டனர்.

சரி, இங்கு யாருமே சென்று வரவில்லையா?

இருக்கிறார்கள். அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். 1991ல் இந்தியத் தொல்லியல் துறையின் திருலோகிநாத் பண்டிட் மற்றும்  டாக்டர் மதுமாலா சட்டோபாத்யாயா ஆகியோர் கொண்ட ஒரு குழு இந்த செண்டினல் பழங்குடிகளைக் காணச் சென்றது. பல ஆண்டுகளாக  அவர்கள் பற்றி எழுதப்பட்ட எல்லா குறிப்புகளையும் அலசி ஆராய்ந்து கொண்டு சென்றிருக்கிறார்கள். பலமுறை முயன்று அம்மக்களின்  ஒரு பிரிவினரைச் சந்தித்திருக்கிறார்கள். இவர்கள் கொண்டு சென்ற தேங்காய்களைப் பெற்றுக்கொண்ட அப்பழங்குடிகள், சற்று நேரத்தில்  உடனடியாக இந்த இடத்தைவிட்டு காலி செய்யுமாறு ஆணையிட்டிருக்கிறார்கள். இவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும்போதே  பழங்குடிகளில் இன்னொரு பிரிவினர் ஆவேசமாகக் கூச்சலிட்டபடி வந்தார்களாம்! உடனடியாக இடத்தை காலி செய்திருக்கிறார்கள்.

இந்த அனுபவம் குறித்து இப்போது மத்திய அரசின் சமூகநீதித் துறை அமைச்சகத்தின் இணை இயக்குனராக உள்ள டாக்டர் மதுமாலா  கூறும்போது, ‘‘நாங்கள் போகும்போதே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு அதற்குப் பொறுப்பல்ல என்று எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் சென்றோம். புகை வந்த இடம் நோக்கிச் சென்றபோது ஒரு பெண்ணும் அவர்களின் குழந்தைகளும் கரையில் நிற்பதைக்  கண்டோம். ஒருவன் அம்பை எங்களை நோக்கிக் குறிபார்த்தபோது நாங்கள் தேங்காய்களைத் தண்ணீரில் போட்டோம். அந்தப் பெண்  அவனது அம்பைத் தட்டிவிட்டாள். அவர்கள் தேங்காய்களைப் பெற்றுக்கொண்டார்கள். சில நாட்கள் கழித்து மீண்டும் சென்றபோது  உற்சாகமாக வரவேற்றார்கள்..!’’ என்கிறார்.

சரி; யார்தான் இந்த செண்டினல் பழங்குடிகள்?


சுமார் அறுபதாயிரம் ஆண்டுகளாக இத்தீவுகளில் வசிக்கும் இவர்களின் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழிகளில்  முதன்மையானது. செண்டினல் என்று இவர்கள் தீவுக்குப் பெயர் வைத்ததும், அதனால் செண்டினல் பழங்குடிகள் என்பதும் நாம்தான்.  இவர்கள் தங்களுக்கு வைத்துள்ள பெயர் என்ன என்று உண்மையிலேயே யாருக்கும் தெரியாது.இந்தத் தீவு எழுபத்திரண்டு சதுர கிலோ  மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு எத்தனை பழங்குடிகள் வசிக்கிறார்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கைமுறை என்ன  என்பதைப் பற்றி எல்லாம் எந்த ஆதாரபூர்வமான குறிப்புகளும் இதுவரை இல்லை.

அடர்த்தியான மரங்கள், கொடிகள் சூழ்ந்திருப்பதால் விமானங்கள், ராடார்கள், செயற்கைக் கோள்கள் மூலமும் அறிய முடியவில்லை.  வேட்டையாடுதல்தான் இவர்களின் முக்கிய தொழிலாக இருக்க வேண்டும். சுமார் இருநூற்று ஐம்பது பேர் வரை இந்தத் தீவில்  வசிக்கக்கூடும் என தோராயமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.சுனாமி வந்தபோது இந்தப் பழங்குடிகள் அழிந்திருப்பார்கள் என்றுதான் பலரும்  நினைத்தார்கள். ஆனால், சுனாமியைத் தங்கள் பூர்வீக அறிவால் உணர்ந்துகொண்ட இப்பழங்குடிகள் அது வந்த நேரத்தில் உயரமான மலை  உச்சிக்குச் சென்று தப்பித்திருக்கிறார்கள்!

இந்தளவு நுட்பமான அறிவுகொண்டவர்கள் இவர்கள். இயற்கையோடு இயற்கையாக உறைந்து வாழும் இவர்களை ஆய்வு செய்தால்  மனிதர்களுக்கு வரும் நோய்களின் வயது, என்னென்ன கிருமிகள் பழங்காலம் முதலே நம்மைத் தாக்குகின்றன, நம் ஆரோக்கியத்தின்  அடிப்படை என்ன... என்பது உட்பட பல விஷயங்கள் பற்றிப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும்.  ஆனால், அந்தத் தீவில் நுழைந்தாலே அம்பு மழை பொழிகிறது. இதில் ஆராய்வது எங்கே? இயற்கையின் அந்தக் குழந்தைகளை அப்படியே  விட்டுவிடுவதுதான் அனைவருக்குமே நல்லது.                               l

- இளங்கோ கிருஷ்ணன்