பிரசாந்த் சபதம் - இனி வருடத்துக்கு நாலு படங்கள்!



‘‘பெர்சனலா எனக்கு செஞ்ச வேலையையே திரும்பத் திரும்பப் பண்றது பிடிக்காது. புதுசு புதுசா எதாவது செய்யணுங்கிறது என் குணம்.  ‘நோ பெய்ன், நோ கெய்ன்’கிறதுல தெளிவாக இருக்கேன். அதுக்காக எந்த உழைப்புக்கும் எப்பவும் தயாராக இருக்கேன். இதுக்கு ‘ஜானி’ ஒரு  நல்ல உதாரணம். இதில் க்ரைம், ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடினு எல்லாமே இருக்கு. பசியா வர்றவங்களுக்கு சூடா நாலு பரோட்டாவைப்  பிச்சுப்போட்டு சுர்ருன்னு சால்னாவை ஊத்தினா அதுதான் டேஸ்ட்! ருசி தொண்டையில் நிக்க, ‘நல்லாயிருக்கணும்பா’ன்னு வாழ்த்திட்டுப்  போவாங்க. அப்படித்தான் நம்ம படம் ‘ஜானி’ இருக்கும்...’’ ஃபுல் ஸ்விங்கில் இருக்கிறார் பிரசாந்த். ஜிம் பாடியில் ஜம்மென்று வந்து  அமர்கிறார்.

இடைவெளி விட்டு வருகிற ‘ஜானி’ எப்படியிருக்கும்?

என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகனோட முதல் சந்தோஷம் என்ன தெரியுமா? சவால்ல ஜெயிக்கிறது! ஒரு கேரக்டர்ல நுழைஞ்சு, அதை  அப்படியே 100 சதவீதம் எடுத்திட்டு வந்திட்டா, அதுதான் சந்தோஷத்தின் உச்சம். என் கேரியரில் இது செய்யாத கேரக்டர். வித்தியாசமா  இருக்கு. ஒரு காலத்தில் படத்தில் நடிகர் இருந்தால் போதும்னு இருந்தது. அடுத்து கதை நல்லாயிருந்தால் படம் நல்லாயிருக்கும்கிற  நிலை மாறியது. இப்ப திரைக்கதை சும்மா விறுவிறுன்னு போகணும்னு வந்து நிக்குது. ‘ஜானி’ அந்த இடத்தில் இருக்கு. என் சினிமா  பயணத்தை யோசித்துப் பார்த்தால் அழகா இருக்கும்.

பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, மணிரத்னம், ஷங்கர்னு செய்தது எல்லாமே வேற வேற படங்கள். எல்லோரும் எனக்குப் பல  வண்ணங்களைக் கொடுத்து அழகு பார்த்தாங்க. இன்னிக்கு டிரெண்டா ஆகியிருக்கிற, பேய்ப்படங்களுக்கு முன்னமே ‘ஷாக்’னு ஒரு படம்  கொடுத்தோம். அப்புறம் ‘பொன்னர் சங்கர்’ மறைந்த கலைஞர் ஐயா கைவண்ணத்தில் வந்தது. அப்புறம் அப்பா நடித்த அதே வேடத்தை  இந்தியாவிலேயே யாரும் செய்யாத விதமாக நானே நடிச்சு ‘மம்பட்டியான்’ வந்தது. அப்படி பார்க்கும்போது ‘ஜானி’ என் கேரியரில்  முக்கியமான படம்.

கொஞ்சம் கதைப் பின்னணியைச் சொல்லலாமே பிரதர்!

வாழ்க்கையில வேகமா முன்னேற நியாயமா இருக்கணுமா, இல்லையா! குறைந்தபட்ச நேர்மையாவது அவசியமா இல்லையாங்கிற ரீதியில்  படம் போகும். ‘இது சரி, இது தப்பு’ன்னு உலகம் எதையெதையோ சொல்லும். ‘அதைப்பத்தி கவலைப்படாதே. உனக்கு எது சரின்னு  தோணுதோ, அப்படிச் செய்...’னு சிலர் சொல்வாங்க. ஆனால், எடுத்துக்கொண்ட விஷயத்தை எப்படி அடையலாம்னு இந்தப்படத்தில்  இருக்கு. காலம் போற போக்கையும் வேகத்தையும் பார்த்தால் இனிமேல் நல்லது கெட்டதுன்னு தனித்தனியே பிரிச்சு யோசிச்சு செய்ய  நேரம் இருக்குமா தெரியலை.

வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கு. அதைத் தவிர்க்க முடியாது. ஆனால், ஊரோட ஒண்ணாப்போன்னு சொல்வாங்க இல்லையா, அப்படி  எப்படி வாழ்றதுனு படம் சொல்லும். திரைக்கதை பரபரனு இருக்கும். அடுத்தது என்னனு ஆர்வமா கண் இமைக்காம எதிர்பார்க்கிற மாதிரி  இருக்கும். எண்ணிக்கையில் அவ்வளவு நடிகர்கள் இருக்காங்க. பிரபு, ஆனந்தராஜ், ஷாயாஜி ஷிண்டே, சந்தியா, அசுதோஷ் ராணா, சஞ்சிதா  ஷெட்டி, ஆத்மா, தேவதர்ஷினினு எக்கச் சக்க நட்சத்திரக்கூட்டம். ஏதோ  ஒரு நல்ல குடும்பத்திற்குள் வந்து பேசிட்டுப் போற மாதிரி  இருக்கும் படம்.

பாடல்கள் இல்லையே... உங்க படங்களில் அது கவனம் பெறுமே...


விறுவிறுன்னு போற படத்தில பாட்டு தனியா நிற்கிற மாதிரி இருந்தது. அதனால நல்ல பாடல்கள் போட்டு ரெடியா இருந்தும் அதைப்  பயன்படுத்தலை. ஆனால், கதையின் பின்னணி இசைக்கு ரொம்ப மெனக்கெட்டிருக்கோம். ரஞ்சன் என்பவருக்கு 25 நாட்களை தாராளமாகக்  கொடுத்தோம். அருமையான பின்னணி இசை வந்திருக்கு. படத்தை அதுவே ஒரு கட்டத்தில் தூக்கிட்டுப்போகும்.

உங்களுக்கு என்ன குறைச்சல்... ஏன் இவ்வளவு இடைவெளி..?


நீங்க மட்டும்தான் இதைக் கேட்கலை... நேரம்னு சொல்ல வேண்டியிருக்கும். சினிமா உயிருன்னு கிடந்திருக்கேன். சினிமாவைத் தவிர  ஒண்ணுமே தெரியாது. எனக்கு கிடைச்ச நல்ல இயக்குநர்கள் வேறு யாருக்கும் அவ்வளவு கிடைச்சதில்லை. ‘பொன்னர் சங்கரு’க்காக ஒரு  சரித்திரப் படத்தின் கதாநாயகன்னு கலைஞர் ஐயா வசனத்தில் நாலு வருஷத்தைப் பார்க்காமல் நடித்தது எல்லாம் எனக்கு  இன்னமும்சந்தோஷம். ‘மம்பட்டியான்’ ரெண்டு வருஷம் எடுத்த சினிமா. உடம்பை இன்னும் குறைச்சு இன்னும் பொருத்தமாக அடுத்த  வருடத்திலிருந்து களம் இறங்குறேன். வருடத்திற்கு மினிமம் இரண்டு படங்கள். மேக்ஸிமம் நாலு படங்கள். அதுதான் டார்கெட்.

இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்லணும்னா கேட்ட கதைகள் அவ்வளவு எனக்குப் பொருத்தமா இல்லை. ‘அட, வந்து  இறங்குவோம், ஒரு கை பார்ப்போம்’னு உடனே முடிவெடுக்கிற மாதிரி அமையலை. அதுவும் ஒரு காரணம். கேரக்டரை நம்ம லெவலுக்கு  கொண்டு வரணும்னு நினைச்சதுபோய், கேரக்டருக்குள்ளே நாம் எந்த அளவுக்கு இறங்கணும்னு நினைக்க ஆரம்பிச்சிருக்கேன். அதோட  என்னிடம் மக்கள் காட்டும் அன்பையும், எதிர்பார்ப்பையும் நான் இப்ப புரிஞ்சு வைச்சிருக்கேன். நல்ல உழைப்புக்குப் பின்னாடி வெற்றி  தேடிக் கொண்டு வருகிற படங்கள் அமையும்னு நம்பறேன்.

-நா.கதிர்வேலன்