அறையில் ரகசிய கேமராக்கள்...பெண்களே அதை அறியலாம்!



சமீபத்தில் வந்த செய்தி பெண்கள் அனைவரையும் அதிர வைத்தது. காரணம் ரகசிய கேமரா!சென்னையிலுள்ள பெண்கள் விடுதி ஒன்றில்  ரகசிய கேமராக்களை பொருத்தி பெண்கள் உடை மாற்றுவது உட்பட சகல நடவடிக்கைகளையும் கண்டு ரசித்த அந்த விடுதியின் நிர்வாகி  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, அந்த நிர்வாகி எப்படி கைதானார் என்பது  குறித்து.யெஸ். மொபைலில் குறிப்பிட்ட appஐ தரவிறக்கம் செய்து அதன் மூலம் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதை அந்த விடுதியில்  தங்கியிருக்கும் பெண்கள் கண்டறிந்திருக்கிறார்கள்!இது சாத்தியமா? ஆம். சாத்தியமே. ஆனால், வெறும் app மட்டும் இதற்கு பயன்படாது.  மறுக்கவில்லை. இச்செயலியை வைத்து சோதிக்கும்போது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் அருகில் சென்றால் ஒலி எழுப்பும். ரிமோட்  மூலம் இயங்கும் டிவி, சென்சார் முறையில் இயங்கும் தண்ணீர் குழாய் என அனைத்தையும் காட்டும்.

என்றாலும் துல்லியமான முடிவுகள் கிடைக்காது. காந்தப்புல விசைகளை இந்த app கண்டறிகிறதுதான். ஆனால், இதை ஆப் இல்லாமலும்  கூட தெரிந்து கொள்ளலாம்! அப்படியானால் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதை எப்படிக் கண்டறிவது?செல்போனில் வீடியோ எடுத்தால்  பார்க்க முடியும். உதாரணமாக, ரிமோட் போன்றவற்றில் இருக்கும் சிறிய infra light-ஐ சாதாரணமாகப் பார்க்க முடியாது. அதையே வீடியோ  எடுத்தால் தெரிந்து கொள்ளலாம். போலவே செல்போனில் பேசியபடி  ரகசிய கேமராக்களின் அருகில் சென்றால் கைபேசியில் அதிர்வுகள்  ஏற்படும். ஓகே. தாங்கள் தங்கும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை எப்படி பெண்கள் அறியலாம்?முதலில் தங்கப்  போகும் அறையில் தேவையற்ற பொருட்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.

சம்பந்தம் இல்லாமல் ஒயர்கள் இணைப்பில் இருந்தாலோ, சுவரில் ஓட்டைகள் போடப்பட்டிருந்தாலோ சந்தேகம் கொள்ளுங்கள்.  பூந்தொட்டிகள், மின் சாதனப் பொருட்கள், கடிகாரம், வைஃபை மோடம், கேபிள் டிவி பாக்ஸ் ஒயர்கள் ஆகியவற்றை சோதித்துப் பாருங்கள்.  ஸ்விட்ச் போர்டு அனைத்தும் இயங்குகிறதா என்பதை ஒன்றுக்கு இருமுறை பரிசோதியுங்கள். இரவில் விளக்குகள் அனைத்தையும்  அணைத்தபிறகு இருட்டில் சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் எல்இடி லைட் எரிகிறதா..? எச்சரிக்கை அடையுங்கள். சில  மைக்ரோபோன்களுக்கு இண்டிகேட்டர்கள் இருக்கும். அது காட்டிக் கொடுத்து விடும்.இதுபோக சில பொருட்கள் ஆன்லைனில்  கிடைக்கின்றன. உதாரணமாக Radio frequency detector (RF detector) கொண்டு சோதனை செய்யும்பொழுது அறையில் ரேடியோ  சிக்னல்கள் ட்ரான்ஸ்மிட் சாதனங்கள் (தகவல்களை ஓரிடத்தில் பதிவு செய்து மற்றொரு கருவிக்கு அனுப்பும்) இருப்பதை உறுதிப்படுத்தும்.  இதை உபயோகிக்கும்போது வைஃபை, ப்ளூடூத், லேப்டாப் போன்றவற்றை ஆஃப் செய்து விடுங்கள்.

Camera lens detector சந்தையிலும் கிடைக்கிறது. பயனுள்ள சாதனம். RF detector wireless device ட்ரான்ஸ்மிட் செய்வதைக் கண்டறியும்.  தகவல் அனுப்பும் மோடம், அதிக தூரம் வரை அலைவரிசையை சோதிக்கும் மெமரி கார்டு பதிவு கருவி ஆகியவை கொண்ட camera lens  detector பெண்களுக்கு பெஸ்ட் சாய்ஸ். பர்ஸ், பேக் என எளிதில் இதை எடுத்துச் செல்லலாம்.உடை மாற்றும் அறையில் கண்ணாடியில்  ரகசியக் கேமராக்கள் இருக்கிறதா அல்லது அது டிரான்ஸ்பரன்ட் கண்ணாடியா என்பதை விரல் சோதனை மூலமே அறியலாம். கையை  கண்ணாடியின் அருகில் வைக்கும் போது வழக்கமாக பாதரசம் பூசிய கன்ணாடி காட்டும் அமைப்பை மாற்றிக் காட்டினால்... கரெக்ட்,  அறையில் நடப்பதை யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! சிறிய அளவிலான, motion sensitive கேமராக்களில் மெல்லியதாக கிளிக்  சத்தம் கேட்கும் அல்லது இயங்கும்போது லேசான ஒலி எழுப்பும்.ஸோ, பெண்களே அச்சம் வேண்டாம். எந்த தொழில்நுட்பம் உங்கள்  அந்தரங்கத்தை அம்பலப்படுத்த முயற்சிக்கிறதோ அதே தொழில்நுட்பத்தைக் கொண்டு உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்!        
                               
-திலீபன் புகழ்

எப்படி தரவிறக்கம் செய்வது?


கூகுள் ஆப் ஸ்டோரில் - Detect Hidden Cameras and Microphones - என்று டைப் செய்தால், Techno95 என்ற நிறுவனத்தின் ஆப்  கிடைக்கும். இதில் விளம்பரத் தொல்லைகள் இருந்தாலும், ஆஃப்லைன் மூலம் விளம்பரத் தொல்லை இல்லாமல் பயன்படுத்த முடியும்.Detect by Radiation Meter என்ற முதல் ஆப்ஷனை தேர்வு செய்தால், இருக்கும் அறையில் 37 என்ற அளவில் ரேடியோ அலைகள் உள்ளது  என்று காட்டும். அதில் X, Y, Z என்று ஒவ்வொரு கதிருக்கும் எவ்வளவு அலைநீளம் இருக்கிறது என்பதை தெரிவிக்கும்.பெரும்பாலோர் இந்த appயையே பயன்படுத்துகின்றனர். ஆனால் 50%தான் இதன் உண்மைத்தன்மை இருக்கும்.

சில சாதனங்கள்:

Wireless RF Signal Detector CC308 Multi Function


ANTI SPY WIRELESS DETECTOR


கேமரா, ரெக்கார்டர் என அனைத்து வகையையும் இவை கண்டறியும். இதன் துல்லியமான அளவு 10 மீட்டர் வரை இயங்கும். தகவலை  பெற்றுக்கொள்ளும் தன்மை 100 - 30000MHz. கேமரா ரெக்கார்டர் இருக்கும் இடத்தை சத்தம் எழுப்பியும், வெளிச்சத்தால் மின்னச் செய்தும்  காட்டும். மாதக்கணக்கில் பேட்டரி தாங்கும். வைப்ரேட்டர் மோடில் வைத்து ஒருவருக்கும் சந்தேகம் எழாதபடி பயன்படுத்தலாம்.

KKmoon Anti Spy lens Detector

இணையதள சிக்னல் மறைவாக உள்ள கேமராக்களை அறிய இது உதவும். மட்டுமல்ல, உயரமான இடங்களில் உள்ள ரகசிய  கேமராக்களையும் கண்டறியும். இதன் frequency அளவு 6500MHz. தண்ணீரிலும் இயங்கும். நீண்ட நேரம் பேட்டரி தாங்கும். சிறிய ரக  கேமராக்களையும் கண்டறிந்துவிடும்.