தல புராணம் -சேப்பாக்கம் ஸ்டேடியம்



சேப்பாக்கத்தில் 1934ம் வருடம் பிப்ரவரி 10ம் தேதி முதலாலது டெஸ்ட் போட்டி இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையில் நடந்தது. இந்தியாவின் கேப்டனாக கிரிக்கெட் ஜாம்பவான் சி.கே.நாயுடு இருந்தார்.
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் குவிக்க, இந்தியா வெறும் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 261 ரன்கள் எடுத்தது. இந்தியா 249 ரன்கள் அடித்து, 202 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அன்று ெடஸ்ட் போட்டிகள் நான்கு நாட்கள் கொண்டதாக நடந்தன. ஜாம்பவானான சி.கே.நாயுடு இரண்டு இன்னிங்ஸிலும் சோபிக்கவில்லை. ஆனால், அவரின் கிராஃப் அவ்வளவு சாதாரணமானதல்ல.

1926ம் வருடம் இங்கிலாந்தின் பழமையானதும், சிறப்பு வாய்ந்ததுமான மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் ஆர்தர் கில்லிகன் தலைமையில் இந்தியா வந்து விளையாடியது. பம்பாய் ஜிம்கானா மைதானத்தில் நடந்த போட்டியில் நாயுடு 153 ரன்களைக் குவித்தார். இதில் பதினோரு சிக்சர்கள் அடங்கும். அதுமட்டுமல்ல. முதல்தர கிரிக்கெட்டை 68 வயது வரை விளையாடியவர் நாயுடு.

1932ம் வருடம் முதன்முதலாக ெமட்ராஸ் மாகாணத்திற்குள் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்–்டன. இதை இந்திய கிரிக்கெட் ஃபெடரேஷன் நடத்தியது. இங்குள்ள கிளப்களுக்கிடையே இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.அப்போது ஐசிஎப்பும், எம்சிசியும் எதிரெதிரான நிலைப்பாடுகளுடன் சுதந்திரமாகவும், தனித்தனியாகவும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வந்தன. இது இளம் வீரர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனால், முரண்பட்ட இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்றிணைந்து ெமட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷன் (MCA) என்கிற பொது அமைப்பு ஒன்றை உருவாக்கின.இப்போது, மெட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷன் மாகாணத்தின் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் எடுத்து நடத்தியது. பின்னர், இந்திய கிரிக்கெட் ஃபெடரேஷனும் இந்தப் புதிய அசோசியேஷனுடன் இணைந்தது.

ஆரம்ப நாட்களில் லீக் போட்டிகளில் எம்சிசி கலந்து கொள்ளவில்லை. 1939ம் வருடமே லீக் போட்டிகளை அணியின் கேப்டன் சி.பி.ஜான்ஸ்டோன் தலைமையில் எதிர்கொண்டது. ஆல்ரவுண்டரான சி.பி.ஜான்ஸ்டோன் சிறந்த கேப்டனாக விளங்கினார்.எம்சிசி அணிக்கும், ரஞ்சி டிராபிக்கான மெட்ராஸ் அணிக்கும் இவரே கேப்டன்.

மட்டுமல்ல, எம்சிசிக்கும் மெட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷனுக்கும் தலைவராகப் பதவி வகித்தார்.இதற்கிடையே 1934ம் வருடம் நவம்பர் 4ம் தேதி முதல்முதலாக இந்தியாவில் ரஞ்சிப் போட்டிகள் தொடங்கின. இதன் முதல் போட்டியும் சேப்பாக்கத்திலே மெட்ராஸுக்கும் மைசூருக்கும் இடையே நடந்தது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரின் மகாராஜாவான ரஞ்சித்சிங்ஜி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். அவரைப் போற்றும் வகையிலேயே அவர் பெயரில் இந்தப் போட்டி உருவானது.இதற்கான டிராபியை நன்கொடையாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாட்டியாலா மகாராஜா வழங்கினார். இன்று இந்தியாவின் மிக முக்கியமான போட்டியாக மாறியிருக்கிறது ரஞ்சி டிராபி.

இதேநேரம், எம்சிசியில் முதல்முதலாக ஒரு இந்தியர் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர், மெட்ராஸ் மேயரான செட்டிநாடு குமாரராஜா எம்.ஏ.முத்தையா செட்டியார் ஆவார். பிறகு, டாக்டர் பி.சுப்பராயன் உள்ளிட்ட மேலும் சிலர் உறுப்பினர்களாக ஆகினர். 1946ம் வருட ஆரம்பத்தில் முதல்முறையாக ஸ்டேடியம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

‘‘அப்போது பி.சி.சி.ஐயின் தலைவராக இருந்த அந்தோணி டி மெல்லோ ஸ்டேடியம் வேண்டி கோரிக்கை ஒன்றை தயாரித்தார். அதை எம்சிசியும் ஏற்றுக் கொண்டது. அதனை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பினார்’’ என ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் கிரிக்கெட் வீரரும், தமிழக  கிரிக்கெட் பற்றிய நூல் எழுதியவருமான வி.ராம்நாராயண்.

இப்படியாக ஸ்டேடியம் கட்டுவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால், எப்படி கட்டப்பட வேண்டும் என்கிற ஐடியாவில் சிறிது தடுமாற்றம் இருந்தது.  
இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு, 1949ம் வருடம் நடந்த லீக் போட்டியில் முதல்முறையாக எம்சிசி அணி வெற்றி வாகை சூடியது. அப்போது கிளப் அணியில் பாதிப் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முராரி நாயுடும், சி.ராமஸ்வாமியும் (புச்சிபாபுவின் மகன்) சிறந்த பேட்ஸ்மேன்களாக விளங்கினர். இதில், முராரி நாயுடுதான் எம்சிசி கிளப்பின் சார்பாக விளையாடிய முதல் இந்தியர். பிறகு, 1952ம் வருடம் ேசப்பாக்கத்தில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்திய அணி வெற்றி பெற்றது. சுமார் பதினெட்டு வருடங்கள் கழித்து முதல் டெஸ்ட் வெற்றியைச் சுவைத்தது. அதுவும் ஒரு இன்னிங்ஸ் மற்றும் எட்டு ரன்கள் வித்தியாசத்தில்!

இந்நேரம், மெட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷனுக்கும், எம்சிசிக்கும் உட்பூசல் இருந்ததாகத் தெரிகிறது. இதனால், மெட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷன் சேப்பாக்கத்திலிருந்து வெளியேறி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நேரு ஸ்டேடியத்தில் நடத்தி வந்தது.சுமார் 1956 முதல் 1965 வரை பத்தாண்டு காலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நேரு ஸ்டேடியத்திலேயே நடந்தன. இந்நேரம் மெட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராக அண்ணாமலைச் செட்டியாரின் இளைய மகனான எம்.ஏ.சிதம்பரம் வந்து சேர்ந்தார்.

இதேபோல், 1959ம் வருடம் எம்சிசியின் முதல் இந்தியத் தலைவராக ஏ.எம்.எம்.அருணாசலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.‘‘கிளப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்ட அருணாசலத்தின் முதல் வேலையே, மெட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷன் சேப்பாக்கத்தில் உள்ள எம்சிசி கிளப்பின் மைதானத்தை வாடகைக்கு விடும்படி அரசாங்கத்துக்கு விடுத்த கோரிக்கையை சமாளிக்க வேண்டியிருந்தது.

பெவிலியனைச் சுற்றியிருந்த நிலம் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பிற்கு என்றும், எஞ்சிய நிலம் மெட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷனுக்கு ஸ்டேடியம் கட்ட வாடகைக்கு அளிக்கப்படும் என்றும் பிரச்னை சுமுகமாக முடிக்கப்பட்டது’’ என, ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் குறிப்பிடுகிறார் எஸ்.முத்தையா.

ஆக, எம்.ஏ.சிதம்பரமும், ஏ.எம்.எம்.அருணாசலமும் இதற்கான ஒரு தீர்வை எட்டினர். இதன்பிறகே, 1966ம் வருடம் மெட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷன் சேப்பாக்கத்திற்குத் திரும்பியது.ஸ்டேடியத்திற்கான அடிக்கல் 1971ம் வருடம் நடப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக கேலரிகள் கட்டி முடிக்க பத்தாண்டு காலம் பிடித்தது.இதில், ஹென்றி இர்வினால் கட்டப்பட்ட அழகான பெவிலியனும் இடிக்கப்பட்டது. ஸ்டேடியத்திற்கு முன்முயற்சி எடுத்தவரும், பி.சி.சி.ஐயின் தலைவராகவும் இருந்த எம்.ஏ.சிதம்பரத்தின் பெயரே ஸ்டேடியத்திற்கு சூட்டப்பட்டது.

மட்டுமல்ல. ெமட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷன் என்பது தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் என்றானது. இந்த ஸ்டேடியத்தில்தான் 1983ம் வருடம் தனது 30வது சதத்தை அடித்து, டான் பிராட்மேனின் செஞ்சுரி ரெக்கார்டை முறியடித்தார் சுனில் கவாஸ்கர்.

சேப்பாக்கத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இத்துடன் நிற்கவில்லை. 1986ம் வருடம் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக, இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் நடந்த டெஸ்ட் ேபாட்டி ‘டை’யில் முடிந்ததும் இங்கேதான்.

பின்னர், 1987ம் வருடம் நடந்த உலகக் கோப்பையில் ஒரு ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் ேதாற்றுப் போனது இந்திய அணி. இதுவே சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியாகும். 1997ம் வருடம் பாகிஸ்தானின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சயீத் அன்வர் இங்கேதான் 194 ரன்கள் அடித்தார். இது அன்று ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்னாக இருந்தது. ரசிகர்களிடையே பரபரப்பாகவும் பேசப்பட்டது.

இந்திய வீரர் வீரேந்திர சேவாக், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ெடஸ்ட் போட்டியில் 319 ரன்கள் குவித்ததும் இதே சேப்பாக்கம் மைதானத்திலே! டான் பிராட்மேன், பிரையன் லாராவிற்குப் பிறகு மூன்று செஞ்சுரிகள் அடித்த மூன்றாவது வீரராக ஜொலித்தார் சேவாக்.தவிர, சச்சின் டெண்டுல்கர் இந்தியாவிலுள்ள மற்ற ஸ்டேடியங்களைவிட இங்கேதான் அதிக ரன்களைக் குவித்துள்ளார். ஒன்பது டெஸ்ட்டில் 876 ரன்கள் எடுத்துள்ளார் அவர்.

கடைசியாக, சேப்பாக்கத்தில் 2016ல் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட்டில் கருண் நாயர் 303 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். சேவாக்கிற்குப் பிறகு முந்நூறுக்கும் மேல் ரன் குவித்த இரண்டாவது இந்திய வீரரானார் கருண். இப்படி சேப்பாக்க ஸ்டேடியத்திற்கென பல சாதனைகள் உள்ளன.

இந்நிலையில், 1996ம் வருடம் உலகக் கோப்பையின்போது இங்கே முதல்முதலாக பேரொளி விளக்குகளின் வெளிச்சத்தில் பகலிரவு போட்டிகள் நடந்தன. ஆஸ்திரேலியாவிற்கும், நியூசிலாந்திற்கும் இடையில் நடந்த அந்தக் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

2009ம் வருடம் ஸ்டேடியத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. இதில், ஐ, ஜே, கே என்ற மூன்று கேலரிகள் 12 ஆயிரம் பார்வையாளர்கள் பார்க்கும் வண்ணம் கட்டப்பட்டன.ஆனால், இதில் விதிமீறல் இருப்பதாகக் கூறி சென்னை மாநகராட்சி இந்த கேலரிகளுக்கு சீல் வைத்தது. பின்னர், பிரச்னை உயர்நீதிமன்றம் சென்றதும், சீல் வைத்ததை அகற்ற வேண்டும் எனத் தீர்ப்பு வந்தது.

தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட, அங்கே மூன்று கேலரிகளையும் இடிக்குமாறு உத்தரவிட்டதாகச் செய்திகள் வந்தன.ஆனால், பிரச்னை தொடர்ந்ததால் அந்த கேலரிகள் செயல்படுத்தப்படாமல் அப்படியே காட்சிப் பொருளாகவே  வைக்கப்பட்டன.
 
இதற்கிடையே, மைதானத்திற்கான குத்தகைத் தொகையை அரசுக்குச் செலுத்தவில்லை என்ற பிரச்னையும் எழுந்தது. இதையும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது.

இவ்வளவு பிரச்னைகளுக்கிடையில்தான் சர்வதேச, ஒருநாள், ஐ.பி.எல், உள்ளூர் போட்டிகளை எல்லாம் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன்!

பேராச்சி கண்ணன்

ராஜா