ரத்த மகுடம்-57



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

நீள் வட்டத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.கிழக்கிலும் மேற்கிலும் மட்டும் சற்றே உயரமான இருக்கைகள். அதில் கிழக்குத் திசையைப் பார்த்து சிம்மாசனம் வைக்கப்பட்டிருந்தது.  அதற்கு நேர் எதிராக மேற்குத் திசையில் இருந்த இருக்கை சிம்மாசனம் உயரத்தில் சற்றே குறைந்த வேலைப்பாடுகளுடன் காணப்பட்டது.

இவ்விரண்டுக்கும் இடையில் இருபுறங்களிலும் உயரம் குறைவான அதேநேரம் வேலைப்பாடுகளில் குறை வைக்காத இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
சிம்மாசனத்தில் சாளுக்கிய மாமன்னரான விக்கிரமாதித்தர் வீற்றிருந்தார். அவருக்கு நேர் எதிரில் மேற்குத் திசையில் இருந்த இருக்கையில் அனந்தவர்மர் அமர்ந்திருந்தார். எஞ்சிய இருக்கைகளில் சாளுக்கிய அமைச்சர்களும் அறிஞர் பெருமக்களும்.

சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர், சற்றே சங்கடத்துடன் அனந்தவர்மருக்கு அருகில் அமர்ந்திருந்தார்.சொல்லப்போனால் அந்த அறையில் இருந்த அனைவருமே விவரிக்க இயலாத உணர்வுகளுடன்தான் வீற்றிருந்தார்கள். மன்னரை கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை இதுநாள்வரை ஏட்டளவில்தான் படித்திருந்தார்கள். முதல் முறையாக அதுபோன்ற ஒரு நிகழ்வை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். எனவே சங்கடமும் துக்கமும் ஒருசேர அவர்களது மனதை ஆக்கிரமித்திருந்தன.

அவர்களைத் தவிர அந்த அறையில் வேறு யாரும் இல்லை. சாமரம் வீசும் பணியாளர்கள்கூட அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு இருக்கைக்குக் கீழேயும் வெள்ளிக் குடுவையில் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. அறைக் கதவு தாழிடப்பட்டிருக்க... சாளரங்கள் இறுக்கமாக மூடியிருக்க... வெளியே சாளுக்கிய வீரர்கள் பல அடுக்கு காவலில் நின்றுகொண்டிருந்தார்கள்.

‘‘மன்னர் அவர்கள் தவறாக நினைக்கக் கூடாது...’’ இளைய சகோதரர் என்ற முறையில் ஒருமையில் அழைக்கும் உரிமை இருந்தும் அதைத் தவிர்த்துவிட்டு அரசருக்குரிய மரியாதையை அளிக்கும் விதமாக அனந்தவர்மர் அமைதியைக் கிழித்தபடி பேச்சை ஆரம்பித்தார்.
‘‘எதற்கு..?’’ இடைவெட்டினார் விக்கிரமாதித்தர்.

‘‘இப்படியொரு சூழல் ஏற்பட்டதற்காக...’’‘‘எந்தச் சூழலைக் குறிப்பிடுகிறீர்கள்..?’’ சாளுக்கிய மன்னர் பிசிறில்லாமல் கேட்டார்.சுற்றிலும் இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அனந்தவர்மர் பதில் அளித்தார். ‘‘தங்களை விசாரிக்க நேர்ந்ததை...’’‘‘நான் அதைக் குறிப்பிடவில்லை...’’ என்றபடி தன் பங்குக்கு அங்கிருந்தவர்களை தனித்தனியாக உற்றுப் பார்த்தார் விக்கிரமாதித்தர்.

‘‘ஏற்கனவே அறிவிக்கப்பட்டுதானே இன்று குழுமியிருக்கிறோம்..? தவிர முறைதவறி ஒருவரும் நடக்கவில்லையே... இங்கிருக்கும் அனைவருமே சாளுக்கிய தேசத்துக்காக தங்கள் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள்; அர்ப்பணித்தும் வருபவர்கள். எனவேதான் தவறாக நினைக்க இதில் என்ன இருக்கிறது என்ற பொருளில் ‘எதற்கு..?’ என வினவினேன்... நல்லது... சுற்றி வளைக்காமல் நேரடியாக விசாரணைக்குச் சென்றுவிடலாம். நான் தயாராக இருக்கிறேன்...’’

நிதானமாகச் சொன்ன சாளுக்கிய மன்னர், தன் வலக்கையை உயர்த்தி எதையோ சொல்ல வந்த அனந்தவர்மரைத் தடுத்தார். ‘‘தேவைப்பட்டாலன்றி குறிக்கிடமாட்டேன். இந்த அறைக்குள் நடப்பது நாம் அறையை விட்டு விலகியதுமே அகன்றுவிடும். எனவே சங்கடம், தயக்கங்களை உதறிவிட்டு நீங்கள் அனைவரும் உங்கள் மனதில் இருக்கும் ஐயங்கள், வினாக்கள் ஆகியவற்றைக் கேளுங்கள்.

மந்திராலோசனையில் நாம் எப்படி நடந்துகொள்வோமோ... வெற்றி மட்டுமே இலக்கு என்ற நிலையில் யுத்த தந்திரங்கள் குறித்து அலசி ஆராய்வோமோ... பரஸ்பரம் குரலை உயர்த்தி நாம் சொல்வதே சரி என வாதிடுவோமோ... அப்படி இங்கும் நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை... வேண்டுகோள்.

ஏனெனில் விக்கிரமாதித்தன் என்னும் தனி மனிதனான நான் முக்கியமல்ல... சாளுக்கிய தேசம்தான் நமக்கு முக்கியம். நம் தேசம் தென்னகம் எங்கும் பரந்து விரிய வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் வாதாபியில் இருந்து புறப்பட்டு காஞ்சிக்கு வந்திருக்கிறோம்.
இதற்கு இடையூறாக மன்னனான நானே இருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள். அந்த நினைப்புக்கு வலுசேர்க்கும் விதமான ஆதாரங்களும் உங்களிடம் இருக்கின்றன எனக் கருதுகிறேன்!

அவை அனைத்தையும் இங்கு மனம் திறந்து கொட்டுங்கள். உங்கள் அனைவரது கேள்விகளுக்கும் இறுதியாக பதில் அளிக்கிறேன்... ஒருவேளை எனது பதில்கள் உங்களுக்கு திருப்தியாக இல்லாவிட்டால்... மன்னர் பதவியில் இருந்து நான் விலக வேண்டும் என நீங்கள் முடிவெடுத்தால்...

அதற்கு நான் கட்டுப்படுவேன்! நடக்கவிருக்கும் பல்லவர்களுடனான போரில் சாதாரண சாளுக்கிய வீரனாக என் பணியை குறைவில்லாமல் செய்வேன்; சாளுக்கியர்களின் வெற்றிக்காகப் பாடுபடுவேன்! ஏனெனில் உங்களைப் போலவே எனக்கும் சாளுக்கிய தேசம்தான் முக்கியம்...’’நிறுத்திய விக்கிரமாதித்தர் சிம்மாசனத்தில் சாய்ந்து அமர்ந்தார்.

‘‘எங்களைப் புரிந்துகொண்டதற்கு நன்றி மன்னா...’’ தன் இருக்கையிலிருந்து முன்னோக்கி நகர்ந்தார் அனந்தவர்மர். ‘‘முதலில் என் ஐயங்களைக் கேட்கிறேன்... ஒருவகையில் இங்கிருக்கும் அனைவர் மனதிலும் இக்கேள்விகளே ஊசலாடுகின்றன என நினைக்கிறேன்...’’

இதைக் கேட்டு விக்கிரமாதித்தரின் கண்கள் பளிச்சிடும் என அனந்தவர்மர் எதிர்பார்த்தார். ஏனெனில் சாளுக்கிய மன்னராகும் தகுதி மூத்த மகன் என்ற உரிமையில் அவருக்கே இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இளையவரான விக்கிரமாதித்தர் பட்டம் ஏறினார்.

எனவே, தன்னை அரியாசனத்திலிருந்து அகற்றும் வேலையை அண்ணனான, தானே செய்வோம் என விக்கிரமாதித்தர் கணித்திருக்கலாம்... அதன் ஒரு பகுதியாக இந்த விசாரணைக் கூட்டத்தை, தான் கூட்டியிருக்கலாம் என்று விக்கிரமாதித்தர் நினைக்கலாம்.

அப்படி நினைக்க வேண்டும் என்றுதான் ‘அனைவரது சார்பாகவும் நானே கேட்கிறேன்...’ என்ற அர்த்தத்தில் விசாரணையையும் தொடங்கினார்.ஆனால், எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் கற்சிலையென சலனமற்று விக்கிரமாதித்தர் அமர்ந்திருந்தது ஒருவகையில் அனந்தவர்மரை துணுக்குறவே செய்தது.

அதை புறம்தள்ளியபடி பேச ஆரம்பித்தார்.‘‘மன்னா...’’‘‘அடைமொழிகளைத் தவிர்த்துவிடலாம்... விஷயத்துக்கு வாருங்கள்...’’ விக்கிரமாதித்தர் இடைவெட்டினார்.‘‘நல்லது...’’ தொண்டையைக் கனைத்தார் அனந்தவர்மர். ‘‘சிறந்த மதியூகியான ராமபுண்ய வல்லபரை நமது போர் அமைச்சராக நாம் பெற்றிருக்கிறோம்... இது சாளுக்கியர்கள் செய்த பாக்கியம்...’’

புருவங்கள் தெறித்துவிடும் வகையில் இதைக் கேட்டு ராமபுண்ய வல்லபர் தன் புருவங்களை உயர்த்தினார்.ஆனால், அவரது ஆச்சர்யத்தையோ அதிர்ச்சியையோ விக்கிரமாதித்தரும் அனந்தவர்மரும் பொருட்படுத்தவில்லை.தன் உரையாடலைத் தொடர்ந்தார் அனந்தவர்மர்: ‘‘சாளுக்கியர்களின் நலன் கருதி... பல்லவர்களை வீழ்த்த ராமபுண்ய வல்லபர் திட்டமிட்டார். பல்லவர் படையின் உபசேனாதிபதியாக கரிகாலன் இருந்தாலும் அவன் மொத்த படையையும் வழிநடத்தும் வல்லமை படைத்தவன்.

அவனளவுக்கு அசுவங்களைக் கையாளத் தெரிந்தவர்கள் இந்த பரத கண்டத்திலேயே இல்லை என்கிறார்கள். அப்படிப்பட்ட அவனை சாளுக்கியர்களின் பக்கம் இழுக்க நமது போர் அமைச்சர் முடிவு செய்தார். இதன் வழியாக பல்லவர்களின் பலத்தை சரி பாதிக்கும் மேலாகக் குறைக்க முடியும் என கணக்கிட்டார்.

அடிப்படையில் கரிகாலன் சோழ வம்சத்தைச் சேர்ந்தவன். சிற்றரசருக்குரிய அந்தஸ்துடன் அவனது பரம்பரை பல்லவ மன்னர்களுக்கு அடங்கியிருக்கிறது. எனவே, அதே அந்தஸ்தை சோழர்களுக்கு வழங்குவதுடன் தன்னாட்சி அமைக்கும் உரிமையையும் அவர்களுக்கு வழங்கினால் கண்டிப்பாக நம் பக்கம் சோழர்கள் வருவார்கள் என நம் போர் அமைச்சர் கணித்தார். இந்த ஏற்பாட்டுக்கு சாளுக்கிய மன்னரான நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை...’’ நிறுத்திவிட்டு விக்கிரமாதித்தரை உற்றுப் பார்த்தார் அனந்தவர்மர்.

மேலே சொல்லும்படி சாளுக்கிய மன்னர் சைகை செய்தார்.தொடர்ந்தார் அனந்தவர்மர்: ‘‘என்றாலும் உங்களை இணங்க வைக்க முடியும் என ராமபுண்ய வல்லபர் உறுதியாக நம்பினார். எனவே நீங்கள் ஒப்புக்கொள்ளாதபோதும் சாளுக்கியர்களின் நலனுக்காக கரிகாலனை நம் பக்கம் இழுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தார். கரிகாலனின் தந்தையை சிறைப் பிடித்தார். கரிகாலனின் பெரிய தாயாரை காஞ்சிக்கு அழைத்து வந்து மாளிகைச் சிறையில் அடைத்தார்.

இவ்விஷயங்களைக் கேள்விப்பட்டு கரிகாலன் காஞ்சிக்கு வருவான் என சரியாகவே ஊகித்தார். அதற்கு ஏற்பவே அவனும் வந்தான். அவனிடம் சாளுக்கியர்களின் கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். ஆனால்... அதை அவன் ஏற்கவில்லை. அத்துடன் சிறையிலிருந்த தன் தந்தையை மீட்டு அவரையும் அழைத்துக்கொண்டு தப்பிவிட்டான்.

காஞ்சி மாநகரம் இன்று சாளுக்கியர்களின் வசம் இருக்கிறது. நம் வீரர்கள்தான் கோட்டை முதல் எல்லா இடங்களிலும் காவலுக்கு நிற்கிறார்கள். அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கரிகாலன் தன் தந்தையுடன் தப்பித்திருக்கிறான் என்றால்... அதற்கு ஒரே காரணம்... நீங்கள்! கடிகையில் பயிலும் ஒரு பாலகனை உங்களுக்கும் கரிகாலனுக்கும் இடையில் தூது செல்ல நியமித்து அவன் வழியாக ரகசியப் பாதை வழியே கரிகாலனைத் தப்பிக்க வைத்திருக்கிறீர்கள்! இது முதல் குற்றம்!

கரிகாலனுக்கு உதவிய பாலகனைக் கையும் களவுமாக ராமபுண்யவல்லபர் பிடித்துவிட்டார். பொதுமக்கள் முன்னிலையில் அவன் மீது விசாரணையும் நடைபெறத் தொடங்கியது. ஆனால், அந்த விசாரணை மண்டபத்தில் இருந்து அந்த பாலகனை மீட்டுச் சென்றிருக்கிறான் கரிகாலன். காரணம் ‘ஐந்து புறாக்கள்’!

சாளுக்கியர்கள் மட்டுமே காலம் காலமாகக் கையாளும் இந்தப் போர் தந்திரத்தை பல்லவர்களின் உபசேனாதிபதியான கரிகாலன் கடைப்பிடித்திருக்கிறான் என்றால்... அந்த ரகசியத்தை நீங்கள்தான் அவனுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். இது இரண்டாவது குற்றம்!

வாதாபியில் இருந்து நம்முடன் வந்த சாளுக்கிய இளவரசரும் உங்கள் மைந்தருமான விநயாதித்தர் எங்கே..? அவரை அமைச்சர்களுக்குக் கூட தெரியப்படுத்தாமல் எங்கு என்ன விஷயமாக அனுப்பி வைத்திருக்கிறீர்கள்..? ஒருவேளை விநயாதித்தர்தான் கரிகாலனுக்கு உதவிய பாலகனோ என்ற ஐயம் எங்களுக்கு எழுந்திருக்கிறது!’’

அழுத்தம்திருத்தமாக அனந்தவர்மர் இப்படிச் சொன்னதும் அந்த அறையே மயான அமைதியில் ஆழ்ந்தது. ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு அனந்தவர்மர் மீண்டும் தொடங்கினார்.‘‘சிவகாமி என்பவள் நமது போர் அமைச்சரின் மகத்தான ஆயுதம். பல்லவர்களை வேருடன் அழிக்கும் ஆற்றல் அந்த ஆயுதத்துக்கு உண்டு. அப்படிப்பட்ட நம் ஆயுதத்தின் ரகசியத்தையும் கரிகாலனிடம் வெளிப்படுத்தி அவனை எச்சரிக்கை அடையச் செய்திருக்கிறீர்கள்... இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன..?’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்