புதுசு கண்ணா புதுசு!



ஆத்தி... சென்ற இதழில் தெலுங்குப் பட உலகமான டோலிவுட் மற்றும் கன்னடப் பட உலகமான சாண்டல்வுட் ஆகிய woodகளில் கலக்கும் கலர்ஃபுல் நியூ அட்மிஷன்களைக் குறித்து எழுதினாலும் எழுதினோம்... வாசகர்கள் பரபரவென தொலைபேசியிலும் கடிதங்களிலும் டின் கட்டிவிட்டார்கள்!அதெப்படி இந்திப் படவுலகமான பாலிவுட் மற்றும் மலையாளப் பட உலகமான ‘மல்லுவுட்’ ஆகிய இண்டஸ்டிரிகளில் அசத்தும் புதுமுக ஹீரோயின்கள் விடுபடலாம் என வறுத்து விட்டார்கள்.வாசகர்களின் அன்பான கோரிக்கைகளை ஏற்று பாலிவுட், மல்லுவுட்டில் கலக்கும் புது ஹீரோயின்கள் குறித்த அறிமுகம் இங்கே...

கியாரா அத்வானி

பயோபிக் படங்களின் மீது நம் காதலை தெறிக்கவிட்ட ‘எம்.எஸ்.தோனி’யில் அறிமுகமானவர் கியாரா அத்வானி. அதில் ஹோம்லி குல்ஃபியாக பளபளத்தவர் கரண் ஜோகரின் ‘லஸ்ட் ஸ்டோரீஸி’ல் மாடர்ன் வெர்ஷனில் ஹார்ட்டீன் லைக்ஸ் அள்ளினார். மும்பையில் பிறந்த கியாரா, டோலிவிட்டிலும் கொடி பறக்கவிட்டார். மகேஷ்பாபுவின் ‘பரத் அனே நேனு’வில் ஜாலி லாலியாக டேக் ஆஃப் ஆனவர், இப்போது பாலிவுட்டிலும் கிளாமர் பாயசமாக இனிக்கிறார்.

யெஸ். அங்கே செம ஸ்டிராங்காக லேண்ட் ஆகிவிட்டார். ‘அர்ஜுன் ரெட்டி’ இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’, அக்‌ஷய்குமாரின் ‘லக்ஷ்மி பாம்’ மற்றும் ‘குட்நியூஸ்’ படங்கள் தவிர விஷ்ணுவர்தன் இயக்கும் ‘ஷீர்ஷா’விலும் கியாராவின் ஆட்சிதான்.

சம்யுக்தா மேனன்

தமிழில் வெளியான ‘களரி’, ‘ஜூலைக் காற்றில்’ படங்களில் நமக்கு அறிமுகமான பொண்ணு சம்யுக்தா மேனன். பாலக்காட்டு மல்கோவா. மலையாள ‘பாப்கார்னி’ல் இன்ட்ரோவானவர், அதனையடுத்து வெளியான ‘தீவண்டி’ மூலம் திகுதிகுவென மல்லுவுட்டை மயக்கினார்.

‘உயரே’, ‘ஒரு எமந்தன் பிரேமகதா’ சம்யுக்தாவின் கிராஃபை ஸ்டெடியாக்கின. அடுத்து ஆகஸ்ட்டில் வெளியாகக் கூடிய ‘கல்கி’ படத்திற்காக பிரமாண்ட வினைல் ஹோர்டிங்ஸில், தான் இடம்பெற்றதைப்பார்த்து சந்தோஷத்தில் பூரிக்கிறார் சம்மு.

அன்னா பென்

கோலிவுட்டிலும் கவனம் ஈர்த்த ‘கும்பளாங்கி நைட்ஸி’ல் பேபி மோல் ஆக கலக்கியவர். கொச்சியில் பூத்த கோவைப்பழம். மலையாள ஸ்கிரிப்ட் ரைட்டரான பென்னி நாராயணம்பலத்தின் மகள். எப்போதோ விக்ரம் நடித்த ‘மஜா’ அவர் எழுதின ஸ்கிரிப்ட்தான்.

எர்ணாகுளத்தில் ஃபேஷன் டிசைனிங் முடித்த அன்னா, அதே கையோடு சினிமாவிற்குள் வர பஹத் பாசில்தான் காரணமாம். தான், அறிமுகமான முதல் படத்திலேயே ‘சிறந்த அறிமுக நடிகை’க்கான பெயர் வாங்கியதில் அன்னா, ஆல்வேஸ் ஹேப்பி.                           

ஈஷா குப்தா

அட! குளுகுளுக்கிறாரா ஈஷா?! தெலுங்கில் ராம் சரணின் ‘வினய விதேய ராமா’வில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஈஷா குப்தா, மும்பை மாடல். ‘ஃபெமினா மிஸ் இண்டியா’ டைட்டில் வின்னர். தில்லியில் பிறந்து வளர்ந்தவர். ஏர்ஃபோர்ஸ் ஆபீசரின் செல்ல மகள். மணிப்பூரில் மாஸ் கம்யூனிகேஷன் என கெத்து காட்டும் ஈஷா, படிக்கும் காலத்திலேயே மாடலிங் மங்காத்தா.

அவர் ‘திறமை காட்டிய’ கிங் ஃபிஷர் காலண்டர் பார்த்து பாலிவுட் அழைப்பு விடுக்க... ‘ஜானட் 2’, ‘ரஸ்தம்’ என பொண்ணுக்கு ஆரம்பமே அதிரடி ஹிட்டுகள். இப்போது அஜய்தேவ்கனின் ‘டோட்டல் தமால்’ என பரபரக்கிறார். தெலுங்கில் அவர் நடித்த படம் ஒன்று, ‘யார் இவன்’ என்று தமிழிலும் எட்டிப் பார்த்துள்ளது!

அனார்கலி மரிக்கர்

கேரள ரசிகர்கள் முணுமுணுக்கும் துறுதுறு டால்பி அனார்கலி மரிக்கர். இயக்குநர் வினீத் னிவாசன் தயாரித்த ‘ஆனந்தம் படத்தில் அறிமுகமாகி அங்கே பிருத்விராஜ், ஆசிப்அலி, ஜெயராம் படங்கள் என மினுமினுத்தவர். திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் படித்து முடித்த அனார்கலிக்கு சினிமா பின்னணியும் உண்டு.

அவரது அப்பா, சினி போட்டோகிராபர். அக்கா லட்சுமி மரிக்கர், குழந்தை நட்சத்திரமாக மல்லுவுட்டின் மனதைத் தொட்டவர்.எனவே அனார்கலியின் சாய்ஸும் சினிமாவானது. சமீபத்தில் வெளியான ‘உயரே’வில் பார்வதிமேனனுடன் ஸ்கோர் செய்ததில் அனார்கலியின் முகத்தில் ஜொலிக்கிறது புன்னகை.

கிரி(த்)தி சனன்

பாலிவுட்டின் யூத்ஃபுல் சப்ஜெக்ட்களில் துள்ளலாக ஜொலிக்கும் பொண்ணு கிரி(த்)தி சனன். பஞ்சாபி பாதாம்கீர். அப்பா மும்பையின் பிசி ஆடிட்டர். அம்மா, பேராசிரியை என்பதால், இவரது படிப்பும் டாப் ரகம்தான். யெஸ். பி.டெக் முடித்தவர்.

படிக்கும்போதே மாடலிங்... கமர்ஷியல் என மினுமினுத்ததில் டோலிவுட்டில் மகேஷ்பாபுவின் ‘நெனுக்கடினே’ கிடைத்தது. அப்புறம் ஹைதராபாத்திலிருந்து ஸ்டிரைட் ஃபிளைட்டில் மும்பை டிராவல். இந்தியில் நம்ம பிரகாஷ்ராஜ் மெயின் ரோலில் நடித்த ‘ஹீரோபன்டி’யில் அறிமுகமானவர் இப்போது வரப்போகும் ‘ஹவுஸ்ஃபுல் 4’ வரை மாடர்ன் மயிலாக துள்ளிக்கொண்டிருக்கிறார்!

தாரா சுதாரியா

இந்த சம்மருக்கு வெளிவந்த ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் 2’வின் செம கூல் ஹீரோயின் தாரா சுதாரியா. திகட்டும் கிளாமர் ஏரியாவில் புகுந்து கலக்கும் புதுமுகம். மும்பையில் பிறந்த பார்சி  ஏஞ்சல். ட்வின்ஸான தாரா, தன் தங்கை பியாவுடன் இணைந்து கிளாசிக்கல், பாலே, மாடர்ன் டான்ஸ் என ஸ்டெடியாக ப்ராக்டீஸ் செய்தவர். பாலிவுட் சேனல் ஒன்றில் காம்பியர், டிவி சீரியல்ஸ் என படிப்படியாக சினிமாவைத் தொட்டவர், பாடகியாகவும் கலக்குகிறார். ‘‘2019 என் லக்கி இயர். இந்த வருஷம்தான் நான் ஹீரோயினானேன். அடுத்து ரிதேஷ் தேஷ்முக்குடன் ‘மர்ஜாவானி’ல் நடிக்கிறேன்...’’ என சிலிர்க்கிறார் தாரா.

சான்யா மல்கோத்ரா

‘தங்கலி’ல் அமீர்கானின் மகளாக நடித்தவர் சான்யா மல்கோத்ரா. இங்கே அவரது போட்டோ ஷூட்டை பார்த்ததும், ‘அந்த சைலன்ட் வாலா இது?’ என உங்கள் வாயில் விரலை வைக்க வேண்டாம். பொண்ணு இப்போ ரொமாண்டிக், காமெடி ஜானரில் அட்டகாசமாக அசத்துது. தில்லியில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி பர்ஃபியான சான்யா, டிகிரி படிக்கும்போதே பாலே மற்றும் நடனத்திலும் பிச்சு உதறியிருக்கிறார்.

அந்த பச்பச் உதறலே சின்னத்திரை டான்ஸ் ஷோக்களில் மிளிர வைத்து அமீர்கானின் படமே பொண்ணுக்கு கிடைத்தது. ‘‘இனி நோ சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ்...’’ என சொல்லும் சான்யா, சமீபத்தில் வெளியான ‘போட்டோகிராப்’பில் ரொமாண்டிக்கிலும் தேறிவிட்டார் ஜரூராக!

ஐஸ்வர்யா லட்சுமி

சாய்பல்லவியின் பாதையில் பயணிக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. சாயைப் போலவே ஐஸும் எம்பிபிஎஸ் முடித்தவர். இவரும் நிவின்பாலியின் (‘நிஜங்களுடே நாட்டில் ஓரிடவேள’) படத்தில்தான் அறிமுகம்.  ஆனால், சின்னதொரு வித்தியாசம். சாய் பல்லவி ஒரு ஹோம்லி சிட்டு. ஐஸ் செம ஹாட் லட்டு!

மெடிசின் படிக்கும்போது, பத்திரிகை ஒன்றின் அட்டையை அலங்கரித்தார். போதாதா... அதிர்ஷ்டக் காற்று வீச ஆரம்பித்துவிட்டது. யெஸ். மாடலிங் ஆஃபர்ஸ் குவிந்து அங்கிருந்து பெரிய திரைக்கு வந்திருக்கிறார். ‘மாயநதி’, ‘விஜய் சூப்பரும் பவுர்ணமியும்’ என அடுத்தடுத்து சிக்சர் ஹிட்களை சிதறவிடும் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தர்.சி. - விஷால் கூட்டணியில் உருவாகும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.

அஞ்சு குரியன்

கேரளாவில் கோட்டயத்தில் பிறந்த அஞ்சு குரியன், ஷார்ட் ஃபிலிம்ஸ், மியூசிக் வீடியோஸ் என றெக்கை கட்டி பறந்தவர். யூடியூப்பில் அஞ்சுவின் குறும்படம் ஒன்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கண்ணில் பட்டுவிட, ‘நேரம்’ படத்தில் நிவின்பாலியின் தங்கையானார். அடுத்து, ‘பிரேம’த்திலும் தங்கை கேரக்டரில் அப்ளாஸ் அள்ளினார்.

தொடர்ந்து சிஸ்டர் சிண்ட்ரோமில் சிக்காமல், மினிமம் பட்ஜெட் படங்களின் ஹீரோயினாக இப்போது புன்னகைக்கிறார். ஆக்டிங்கில் அஞ்சு அசத்திய படங்களில் ஒன்று, சமீபத்தில் வெளியான ‘ஜீபூம்பா’. கோலிவுட்டிற்கும் வாங்க பாஸ்!     

தொகுப்பு:மை.பாரதிராஜா