பள்ளிகள் திறந்தாச்சு…புக்ஸ் எங்கே?



‘‘‘இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்காக நம் மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும்’ என்ற நோக்கத்தில் பாடத்திட்டங்களை மாற்ற அரசு திட்டமிட்டது. இந்தத் திட்டத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்து நடைமுறைப்படுத்தியது. அதன்படி கடந்த வருடம் 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களில் மாற்றம் செய்து அச்சடித்துக் கொடுத்தது.

நடப்பாண்டில் 2, 7, 10, 12க்கு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். அதையும் அரசு செய்தது. அடுத்த வருடம்தான் 3, 4, 5, 8க்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். ஆனால், அதை இந்த வருடமே அமல்படுத்தப்போவதாக திடீரென அறிவித்தது!இதனால்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 3, 4, 5, 8ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் இன்னும் முழுமையாக பல பள்ளிக்கூடங்களுக்கு வந்து சேரவில்லை...’’ என பிரச்னையின் அடிப்படையை விவரிக்கிறார் பேட்ரிக் ரெய்மாண்ட். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இவர்.

‘‘நம் பள்ளிக்கல்வி முப்பருவ பாடத்திட்ட முறையைக் கொண்டது. அதாவது ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு புத்தகம் என வருடத்துக்கு மூன்று புத்தகங்கள். இதுதான் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இருந்தது. ஆனால், இந்த வருடம் முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ பாட முறையை ரத்து செய்துவிட்டு ஒரே பாடப்புத்தக முறையை அறிமுகப்படுத்தப்போவதாக அரசு அறிவித்தது. இதனால் 9ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் சரியாக வந்து சேரவில்லை.

அத்துடன் ஏற்கனவே மாற்றம் கொண்டுவந்த சில பாடப்புத்தகங்களும் மாணவர்களின் கைகளுக்கு முழுமையாகச் சேரவில்லை. இதில் 6ம் வகுப்பு சமூக அறிவியலும், 7ம் வகுப்பு ஆங்கில மீடியம் அறிவியலும், 10ம் வகுப்பு கணிதமும் அடங்கும்...’’ என்று சொல்லும் அவர் மேற்சொன்ன குளறுபடிகளுக்கான காரணங்களையும் அடுக்கினார்.

‘‘தேர்தல் நடந்ததால் சுணக்கம் ஏற்பட்டிருக்கலாம். இந்த ஆண்டிலேயே 3, 4, 5, 8ம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களைக் கொண்டு வரப்போவதாக கடைசி நேரத்தில் அரசு முடிவெடுத்தது.

அதனால் புத்தகங்களை அச்சிடுவதில் பிரச்னையைச் சந்தித்திருக்கலாம். எது எப்படியானாலும் திட்டமிட்டபடி அரசு நடந்துகொண்டிருந்தால் இந்த வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்குப் பிரச்னை வந்திருக்காது. மத்திய அரசின் நீட் தேர்வு, சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் போன்றவற்றைக் கருத்தில் வைத்து பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது ஓரளவுதான் சரியானது.

ஆனால், ஒருசில போட்டித் தேர்வுகளுக்காகத் திடீர் திடீரென பாடத்திட்டங்களை மாற்றிக்கொண்டிருப்பது ஆசிரியர் - மாணவரிடையே குழப்பத்தைத்தான் உண்டாக்கும். இப்போதைக்கு 3, 4, 5ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஒருசில மாவட்டங்களில்தான் கிடைக்கிறது. 8ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் முழுவதுமாகக் கிடைக்கவில்லை. ‘அவை ஆன்லைனில் இருக்கிறது. பிரிண்ட் எடுத்து வகுப்புகளை நடத்துங்கள்’ என அதிகாரிகள் சொல்கிறார்கள்.

மாணவர்களின் கையில் பாடப்புத்தகங்கள் இல்லாமல் எப்படி ஆசிரியர்கள் பாடம் எடுப்பது? வசதியிருக்கும் மாணவர்கள் வேண்டுமானால் பிரிண்ட் எடுத்துப் படிக்கலாம். வசதி குறைவானவர்கள் என்ன செய்வார்கள்? இதனால் பள்ளிகள் திறந்தாலும் பெரிதாக ஒரு பயனும் இல்லை...’’ என்கிறார் பேட்ரிக் ரெய்மாண்ட்.

டி.ரஞ்சித்