ஒரு டப்பிங் ரைட்டரின் சக்சஸ் ஸ்டோரி!வைகுந்தபுரம் விஜய் பாலாஜி



‘சலங்கை ஒலி’, கமல் நடித்த நேரடி தமிழ்ப் படமல்ல. தெலுங்கில் ஹிட் அடித்த ‘சாகர சங்கமம்’ படத்தின் டப்பிங் மூவி. ஆனாலும் பலர் அதை நேரடி தமிழ்ப் படம் என்றே இப்பொழுது வரை நினைக்கின்றனர்.
அந்தளவுக்கு தமிழாக்கம் துல்லியமாக இருந்ததுதான் காரணம்.அதைவிட துல்லியமான தமிழாக்கத்துடன் சன் டிவியில் ‘உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பானது ‘வைகுந்தபுரம்’. இப்படத்தையும் அல்லு அர்ஜுன் நடித்த நேரடித் தமிழ்ப் படம் என்றே மக்கள் நினைத்தார்கள். தெலுங்கில் மெகா ஹிட் அடித்த ‘ஆல வைகுந்தபுரம்லு’ படத்தின் டப்பிங் என்பதை நம்ப மறுக்கிறார்கள்.

காரணம், உதட்டசைவுக்கு ஏற்ற தமிழ் வசன உச்சரிப்பு... காட்சிகளில் தென்படும் ஹோர்டிங்குகளில் தமிழ் எழுத்துக்கள்... ஊர்ப் பெயர்கள்... கையில் ‘தினகரன்’ பேப்பர்... சமுத்திரக்கனி கேரக்டருக்கு தூத்துக்குடி ஸ்லாங்... என நேரடி தமிழ்ப் படத்துக்கான அத்தனை உழைப்பும் இந்த டப்பிங் படத்தில் பளிச்சிட்டது.விளைவு... பார்வையாளர்கள் அனைவரும் ஒருமனதாக சன் டிவியின் பெர்ஃபெக்‌ஷனை பாராட்டுகிறார்கள். சன் டிவியோ பெருந்தன்மையாக இது விஜய் பாலாஜியின் உழைப்பு என கைகாட்டுகிறது.

இதற்கு முன் அல்லு அர்ஜுனின் ‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய படங்களை தமிழ்ப் படுத்தியிருக்கும் விஜய் பாலாஜி, தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கியிருக்கிறார். ‘‘நம்ம தமிழ் இண்டஸ்ட்ரீல நிறைய திறமைசாலிகள் அப்பவும் இருந்தாங்க; இப்பவும் இருக்காங்க. முன்னாடி தேவநாராயணன் சாருக்கு இப்படி பாராட்டு கிடைச்சிருக்கு. அப்படி ஒரு பாராட்டு இப்ப எனக்கும் கிடைச்சிருக்கறது சந்தோஷமா இருக்கு. இதுக்கெல்லாம் காரணம் சன் டிவிதான்...’’ நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் விஜய் பாலாஜி.

‘‘டப்பிங் படங்களுக்கு டயலாக் எழுதுறது சவால்னா, டப்பிங் பேசுற கலைஞர்களை தேர்வு செய்வது இன்னொரு சவால். இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா சார்கிட்ட நான் அசிஸ்டென்டா ஒர்க் பண்ணும் போது, டயலாக் போர்ஷனை ஹேண்டில் பண்ணியிருக்கேன். அந்த அனுபவம்தான் இப்ப நேர்த்தியா டப்பிங் பண்றதுக்கான விதை.

‘வைகுந்தபுரம்’ படத்தின் ஒரிஜினலான ‘ஆல வைகுந்தபுரம்லு’ தெலுங்குப் படம்னாலும் தென்இந்தியாவுல மிகப் பெரிய அளவுக்கு ஹிட் ஆச்சு. நாம எல்லாருமே கனெக்ட் ஆகற ஒரு எமோஷன் அந்தப் படத்துல இருந்ததுதான் இதுக்கு காரணம். திரைக்கதையும், மேக்கிங் ஸ்டைலும் அவ்வளவு ஃப்ரெஷ். இந்த ப்ளஸ் களாலும் சன் டிவியில் டெலிகாஸ்ட் ஆனதாலயும்தான் ‘வைகுந்த புரம்’ பேசப்படுது. இதுல என் ஒர்க் அணில் மாதிரிதான்...’’ அடக்கத்துடன் சொல்லும் விஜய் பாலாஜி, தன் குழுவினருடன் சேர்ந்து 12 நாட்களில் இதன் அவுட்புட்டை கொண்டு வந்திருக்கிறார்.

‘‘பாடல்களை பா.விஜய் எழுதினார். தமிழ்ப் படம் மாதிரி தெரியணும்னு சில விஷயங்களுக்கு சிஜி பண்ணினோம். சன் டிவிதான் இதுக்கான வசதிகளை செய்து கொடுத்தது...’’ மகிழ்ச்சியில் திளைக்கிற விஜய் பாலாஜி, ரஜினியின் ‘பாபா’, கமலின் ‘ஆளவந்தான்’ ஆகிய படங்களிலும் வேலை செய்திருக்கிறார். இவரது ஒரிஜினல் பெயர், ‘சுரேஷ்’.

‘‘பூர்வீகம் தஞ்சாவூர். அப்பா, அரசு ஊழியர். அம்மா, இல்லத்தரசி. வீட்ல நான் மூணாவது பையன். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிருக்கேன். ஸ்கூல் படிக்கும்போதே, சினிமால இன்ட்ரஸ்ட். ‘கரகாட்டக்காரன்’ தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி சாராலதான் சென்னை வந்தேன். அப்ப ராயப்பேட்டையில் இருந்த அவரோட ஆபீசில்தான் ஏழு வருஷ வாசம். அங்கிருந்து அடுத்த ஸ்டெப் ட்ராவல். இயக்குநர்கள் ராமநாராயணன் சார், பாலு ஆனந்த் சார், சி.ரங்கநாதன் சார், சுரேஷ்கிருஷ்ணா சார், ராஜீவ்மேனன்சார்னு பலர்கிட்டே ஒர்க் பண்ணினேன். கலைஞானம் சார்கிட்ட ஸ்கிரிப்ட் ஒர்க்கும் பண்ணியிருக்கேன்.

இதுல எனக்கு பெரிய பிரேக் கிடைச்சது சுரேஷ்கிருஷ்ணா சார்கிட்டதான். ‘ஆளவந்தான்’ல கடைசி அசிஸ்டென்டாக சேர்ந்து ‘பரட்டை என்கிற அழகு சுந்தரம்’ வரை ஒர்க் பண்ணினேன். செல்வராகவன் சார் தெலுங்கில் முதன்முதலில் இயக்கின ‘ஆடவாரி மாட்லகு அர்த்தமே வேறலே’ - தமிழ்ல இந்தப் படம்தான் ‘யாரடி நீ மோகினி’னு ரீமேக் ஆச்சு - படத்தின் தயாரிப்பாளர் நாக அசோக்குமார் சார்தான் தெலுங்கில் என்னோட ‘மௌனராக’த்தையும் தயாரிச்சார். அவர் தமிழ்ல தயாரிச்ச ‘என்னவளே’யில் நான் ஒர்க் பண்ணியிருந்ததால, தெலுங்கில் டைரக்ட் பண்ற வாய்ப்பு எனக்கு அமைஞ்சது.

என்னோட ஒரிஜினல் பெயர் சுரேஷ். ஆனா, ‘என்னவளே’ பட இயக்குநர் பெயரும் சுரேஷ்னு இருந்ததால, என் பெயரை மாத்திக்கிட்டேன். ‘மௌன ராகம்’ படம் சரியா போகல. அதனால, மறுபடியும் படம் இயக்கறதுல ஓர் இடைவெளி வர, ஸ்கிரிப்ட்கள் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். எனக்கு தெலுங்கு, கன்னடம் ஓரளவு தெரியும்.

அப்புறம் ‘சிறுத்தை’ சிவா சார்கிட்ட ‘சிறுத்தை’யில் தொடங்கி ‘விஸ்வாசம்’ வரை டப்பிங்ல ஒர்க் பண்ணினேன். இது போக, பாலாஜி சக்திவேல் சாரின் ‘வழக்கு எண்’ல டிஸ்கஷன்ல இருந்தேன். அப்புறம் அவரோட ‘ராரா ராஜசேகர்’ல எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராகவும் வேலை பார்த்தேன்.
மணிரத்னம் சார் ‘பொன்னி யின் செல்வன்’ முதல் முயற்சியில் இருக்கும்போது அவர்கிட்ட கொஞ்சம் ஒர்க் பண்ணின அனுபவமும் உண்டு.

மணி சார்கிட்ட இருந்தப்ப அவரோட அசோசியேட் சிவா சாரின் நட்பு கிடைச்சது. அவர் இந்தியில் உள்ள சச்சின் டெண்டுல்கர் டாகுமெண்ட்ரிக்கு திரைக்கதை எழுதியிருந்தார். அதோட தமிழ் டப்பிங்கை எனக்கு கொடுத்தார். அந்த ‘சச்சின் பல கோடி கனவுகள்’தான் என் முதல் டப்பிங் புராஜெக்ட்...’’ என புன்னகைப்பவரின் மனைவி பூமதி, ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

‘‘தெலுங்குல நான் இயக்கின ‘மௌனராகம்’ படத் தயாரிப்பாளர் நாக அசோக்குமாரால அல்லு அர்ஜுனின் ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’வை தமிழ்ல டப் பண்ணும் வாய்ப்பு அமைஞ்சது. அது தமிழ்ல ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’னு வெளியாச்சு. அதோட தமிழ் டயலாக்கை நான் எழுதினேன். அது எனக்கு ஒரு டர்னிங் பாயிண்ட். அதைப் பார்த்துட்டு அல்லு அர்ஜுன் சாரே பாராட்டியிருக்கார். அவங்களோட ‘கீதா ஆர்ட்ஸு'ம் சேர்ந்து ரெஃபர் பண்ணினதாலதான் சீரஞ்சீவி சாரோட ‘சைரா நரசிம்ம ரெட்டி’யை டப் பண்ணினேன். அதுல சிரஞ்சீவி சாருக்காக அரவிந்த்சாமி சாரை பேச வச்சோம். அதுவும் நல்ல ரீச்.

இடையே, ராஜீவ்மேனன் சார்கிட்ட ‘சர்வம் தாளமயம்’லஅசோசியேட்டாகவும், ‘புத்தம் புது காலை’யில் ஒரு போர்ஷனும் ஒர்க் பண்ணினேன்...’’ என்ற விஜய் பாலாஜி, ‘வைகுந்தபுரம்’ குறித்து பேச ஆரம்பித்தார்.‘‘போன பொங்கலுக்கு ‘ஆல வைகுந்தபுரம்லு’ ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிச்சது. அதுல இடம்பெற்ற ‘புட்ட பொம்மா...’ ஸாங், மாஸ் ஹிட்.

இந்தப் படத்தை சன் டிவில தீபாவளிக்கு தமிழ்ல டப் செய்து ஒளிபரப்பப் போறாங்கனு சொல்லித்தான் என்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சாங்க. கீதா ஆர்ட்ஸ் பண்ணிவாசு சார், அல்லு அர்ஜுன் சார், என்னோட புரொட்யூசர் நாகா சார்னு எல்லாரும் என்மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சாங்க. அந்தப் பெயரைக் காப்பாத்தணும்னு முடிவு செய்தேன்.

இதுக்கு முன் நான் டப் செய்த ‘என் பெயர் சூர்யா’ல பாட்டெழுதின பா.விஜய் சாரும், நானும் சேர்ந்து இதுல எழுத ஆரம்பிச்சோம். ‘புட்ட பொம்மா’வை தமிழ்ல அதே வார்த்தையோடு கொடுத்தது ஒரு சவால்தான். ‘புட்ட பொம்மா’ ஹிட் வார்த்தைனால அதை மட்டும் அப்படியே வச்சுட்டு மத்ததை தமிழாக்கினோம். ‘வைகுந்தபுரம்’ டெலிகாஸ்ட் ஆனபிறகு இண்டஸ்ட்ரீல இருந்து பாராட்டுகள் குவியுது. அல்லு அர்ஜுன் சாரும் ஹேப்பி.

நான் முதல்ல இயக்கின தெலுங்குப் படம், என் கதை கிடையாது. அதனால இந்த முறை என் கதையை இயக்க முடிவு செய்திருக்கேன். அது தமிழ்லயா இல்ல தெலுங்குலயா என்பதை கடவுள் தீர்மானிப்பார். ஆனா, படம் டைரக்ட் பண்ணப் போறது உறுதி. 2021ல அது நிறைவேறும்னு நம்பறேன்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் விஜய் பாலாஜி.

செய்தி:  மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்