2021 சட்டசபைத் தேர்தல்: தமிழக முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்!



இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி... அதிமுக தலைமையிலான கூட்டணி... என கட்சிகள் அணிபிரிய... மூன்றாவது அணிக்கான முயற்சிகள் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன.
அப்படி அமையும் மூன்றாவது அணி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்... வெற்றி பெறும் என ஆரூடங்களும் விவாதங்களும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் அனல் பறக்க நடந்து வருகின்றன.  

இவை எல்லாவற்றுக்கும் பின்னால் அடிநாதமாக... வேர் போல் மறைந்திருப்பது ஒன்றே ஒன்றுதான். அது, திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கக் கூடாது என்ற எண்ணம்தான்.ஏனெனில், இப்போது எதிர்க் கட்சியாக இருக்கும் திமுக, ஸ்டாலின் தலைமையில் வலுவாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆளும் அதிமுகவின் மக்கள் நல செயல்பாடுகளைவிட எதிர்க்கட்சியான திமுகவின் செயல்பாடுகள் வலுவாக இருக்கின்றன; மக்களைச் சார்ந்து இருக்கின்றன.

எனவே, முன் எப்போதையும் விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இம்முறை திமுக தமிழகத்தில் ஆட்சி செய்யும் என மக்கள் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள்; விரும்பவும் செய்கிறார்கள்.இப்படி எதுவும் நடைபெற்று விடக் கூடாது என மத்தியில் ஆளும் பாஜக நினைக்கிறது. எனவே, திமுகவுக்கு விழும் வாக்குகளைப் பிரிக்கவும், மத்தியதர வர்க்கம் திமுக பக்கம் சாய்ந்துவிடக் கூடாது என்ற குறிக்கோளுடனும் திட்டமிட்டு மூன்றாவது அணியை உருவாக்கும் செயலில் இறங்கியிருக்கிறது.

இதன் காரணமாகவே பாஜக சார்பு ‘அரசியல் வல்லுனர்கள்’ பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக வலைத்
தளங்களிலும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்டை நிறைவேற்ற பேசியும் எழுதியும் வருகிறார்கள்.வேடிக்கையாக இருக்கிறது. பொதுவாக ஆளும் அரசை எதிர்த்து தான் அரசியல் வல்லுனர்கள் களமாடுவார்கள். இதற்கு மாறாக தமிழகத்தில் எதிர்க்கட்சியை எதிர்த்து இந்த ஸோ கால்ட் ‘அரசியல் வல்லுனர்கள்’ முஷ்டியை உயர்த்துகிறார்கள்!

இந்தச் சூழலில்தான் தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பே இல்லை என பொட்டில் அறைந்து அறிவிக்கிறது புள்ளி விவரம்!
தமிழக அரசியல் வரலாற்றை மேலோட்டமாக அறிந்தவர்களுக் குக்கூடத் தெரிந்த விஷயம்தான் இது. இங்கு 1967ம் ஆண்டு முதலே திராவிட இயக்கப் பின்னணி கொண்ட திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பொருட்படுத்தத்தக்க அதிகாரத் தரப்பாகவும், சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களைத் தலைமையேற்று நடத்துவதாகவும் இருந்து வந்திருக்கிறது.

இதர கட்சிகள் இவற்றின் ஆதரவு இல்லாமல், ஒதுக்கப்பட்ட சீட்களை வெல்வதுகூட கடினம். அவ்வப்போது மூன்றாவது அணி என்ற ஒன்று உருவானாலும் வாக்கு களைப் பிரிப்பது என்பதற்கு மேல் அவற்றால் சொல்லத்தகுந்த மாற்றாக - புதிய சக்தியாக உருவெடுக்க இயலவில்லை என்பதே எதார்த்தம். மாரிஸ் டூவெர்ஜர் என்ற பிரெஞ்சு அரசியல் அறிஞர், நாம் பின்பற்றும் ‘பெரும்பான்மையே வெற்றி’ என்ற சிம்பிள் மெஜாரிட்டி ஜனநாயக வாக்கெடுப்பு முறை பற்றி பல ஆய்வுகள் செய்திருக்கிறார்.

அதில் அவர் முக்கியமாகக் குறிப்பிடுவது, இந்த ஜனநாயக முறையில் முதல் இரு இடங்களில் இருப்பவர்கள் மட்டுமே எப்போதும் பொருட்படுத்தத்தக்க காத்திரமான அரசியல் சக்தியாக இருப்பார்கள் என்பது.இதைத்தான் அரசியல் களத்தில் ‘டூவெர்ஜர் விதி’ என்கிறார்கள். ஒரு தேர்தலில் ஒரு தொகுதியில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், யாரால் எல்லாம் டெபாசிட் வாங்க இயன்றதோ அவர்களையே குறிப்பிடத்தக்க அரசியல் சக்தி என்று சொல்ல இயலும். எஞ்சியவர்களை உதிரிகள் என்றே கணக்கிட இயலும்.

உதாரணமாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் 825 முதல் 850 வேட்பாளர்கள். அதாவது, தோராயமாக ஒரு தொகுதிக்கு 20 அல்லது 21 வேட்பாளர்கள். இதில் டெபாசிட் இழந்தவர்களைக் கழித்துவிட்டுக் கணக்கெடுத்தால் 77 முதல் 97 வேட்பாளர்களே பொருட்படுத்தத் தக்கவர்களாகத் தேர்கிறார்கள். அதாவது ஒரு தொகுதிக்கு 1.97 முதல் 2.49 வேட்பாளர்களே நிஜமான போராட்டக் களத்தில் இருக்கிறார்கள்.

2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களை எடுத்துக் கொள்வோம். இவற்றில் முறையே 2748 மற்றும் 3775 வேட்பாளர்கள் இரு தேர்தல்களிலும் பங்கேற்றார்கள். இதிலும் டெபாசிட் இழந்தவர்களைக் கழித்துவிட்டுக் கணக்கெடுத்தால், ஒவ்வொரு தொகுதிக்கும் பொருட்
படுத்தத்தக்க வேட்பாளர்களாகத் தேர்வாவது 2.04 மற்றும் 2.11 வேட்பாளர்கள் மட்டுமே.

எனவே, தமிழகத் தேர்தல்களிலும் ‘டூவெர்ஜர் விதி’ சரியாகத்தான் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்த விதி இவ்வளவு துல்லியமாகச் செயல்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும் என்கிறார்கள் உண்மையான அரசியல் நோக்கர்கள். ஒன்று, மக்கள் தங்கள் வாக்குகளை வெல்ல சாத்தியமற்ற ஒருவருக்குச் செலுத்தி வீணாக்க வேண்டாம் என்று நினைப்பது; இரண்டாவது காரணம், மூன்றாவது நிலையில் உள்ள வேட்பாளர் இரண்டாவது நிலையில் உள்ள வேட்பாளரோடு மோதும் அளவுக்குத் திறனற்றவராக இருப்பது.

வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்தால் முதல் இரு வேட்பாளர்களில் ஒருவருக்கே செலுத்துவார்கள்.
வாக்குப்பதிவான மொத்த வாக்குகளில் பெரும் பகுதி முதல் இரு வேட்பாளர்களுக்கே பதிவாவதைக் கவனித்தால் மக்களின் இம்மன
நிலையை நாம் நன்கு புரிந்துகொள்ளலாம். மூன்றாவது இடத்தைப் பிடித்த வேட்பாளர் வலுவானவரா இல்லையா என்பதை இரண்டாம் இடத்தைப் பிடித்தவரோடு அவர் வாங்கிய வாக்குகளின் விகிதத்தோடு ஒப்பிட்டால் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

2014ம் ஆண்டின் தேர்தலைத் தவிர மூன்றாவது வேட்பாளர் பெரும்பாலும் இரண்டாவது வேட்பாளர் வாங்கியதில் இருபது சதவீதம் வாக்குகள் மட்டுமே வாங்கியிருக்கிறார் என்பதை கவனியுங்கள். இதன் மூலம் அவர் இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளர் அளவுக்கு வலுவானவர் இல்லை என்பதை அறியலாம்.

கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் இரண்டிலுமே திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகள்தான் தேர்தலை முன்னின்று எதிர்கொண்டன என்பதை அறிவோம். 2014ம் ஆண்டு தேர்தல் நீங்கலாக இந்தத் தேர்தல்களில் பதிவான மொத்த வாக்குகளில் 80% வாக்குகளை இந்த இரண்டு கூட்டணிக் கட்சிகள்தான் பெற்றன. இருக்கும் மொத்த இடங்களில் எல்லாவற்றையுமே இவ்விரு தலைமைகளின் கூட்டணிக் கட்சிகள்தான் பங்கிட்டுக் கொண்டன.

2009ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 37.66% வாக்குகளைப் பெற்று 13 இடங்களையும்; திமுக கூட்டணி 42.17% வாக்குகள் பெற்று 26 இடங்களையும் பெற்றன. 44.22% வாக்குகள் வாங்கி அதிமுக கூட்டணி 37 நாடாளுமன்ற இடங்களை 2014ம் ஆண்டு பெற்றது.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 51.33% வாக்குகளோடு 38 இடங்களை வென்றது.

அதே போல் 2011 மற்றும் 2016ம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்களை நோக்குவோம். முதல் தேர்தலில் 51.79% வாக்குகளைப் பெற்று அதிமுக கூட்டணி 203 இடங்களில் வென்றது. அதே சமயத்தில் திமுக கூட்டணி 39.43% வாக்குகளைப் பெற்று 31 இடங்களில் வென்றது. 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 136 இடங்களில் வென்று, 40.82% வாக்குகளைப் பெற்றது. திமுக கூட்டணி 38.79% வாக்குகளைப் பெற்றும் 98 இடங்களில் வென்றது.

இந்த இரண்டு மிகப் பெரிய கட்சிகளில் ஏதேனும் ஒன்றில் கூட்டணியில் இணைந்தால் மட்டுமே மற்ற கட்சிகளால் கணிசமான வாக்குகளைப் பெற இயலும் என்பதே எதார்த்தம். உதாரணமாக பிஜேபியைப் பார்ப்போம். 2009ம் ஆண்டு பிஜேபி பிற உதிரிக் கட்சிகளோடு இணைந்து மூன்றாம் அணி அமைத்தும், 2014ன் ஆண்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தும் நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதைவிட அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதனால் அதிக வாக்குகளைப் பெற முடிந்தது. அதாவது, கூட்டணியின் வாக்குகள்தான் பிஜேபிக்கு வருகிறதே தவிர பிஜேபியால் பொது வாக்குகளை தனக்கென கொண்டு வர இயலவில்லை.

அதேபோல் இடதுசாரிகளையும் பார்ப்போம். 2014ம் ஆண்டு தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்டுகள் தனியாகவும் 2016ம் ஆண்டின் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என மூன்றாவது அணி அமைத்தும் போட்டியிட்டனர். இரண்டு முறையுமே அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் 3 - 7% வாக்குகளையே பெற முடிந்தது. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டும் இழந்தார்கள்.

ஆனால், திராவிடக் கட்சிகளோடு இணையும்போது இவர்களின் வாக்குவிகிதம் 50% வரை உயர்வதைப் பார்க்கலாம். மேலும், போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இதுவும் திமுக அல்லது அதிமுக கட்சிகளின் ஓட்டுகள்தானே தவிர கம்யூனிஸ்டுகளுக்கான ஓட்டு இல்லை.

தேமுதிக, குட்டி குட்டி சாதிக் கட்சிகள்... என எல்லாவற்றுக்கும் இதுதான் நிலை. பாமக மட்டுமே கூட்டணிக் கட்சியோடு சேர்ந்து, தோற்கும்போதும் டெபாசிட் இழக்காத அளவுக்கான வாக்குகளைப் பெறச் சாத்தியமான கட்சியாக இருக்கிறது. ஆனால், அவர்களாலும் கூட திராவிட இயக்கக் கட்சிகளின் கூட்டணி இல்லாமல் வெற்றியை நெருங்க முடியவில்லை என்பதே கடந்த தேர்தல்கள் உணர்த்தும் பாடம்.

தமிழ்நாட்டில் மூன்றாவது அணியின் வெற்றி என்பதற்கு இதுவரை வாய்ப்பே இல்லை. இனியும், அதாவது இப்போதைய சூழலுக்கும் அதற்கான வெற்றி என்பது எட்டாக் கனவே. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தேவையற்ற மூன்றாம் தரப்புகளுக்கு ஓட்டுகளைத் தாரை வார்த்து தங்கள் வாக்கை வீணாக்க அவர்கள் விரும்புவதில்லை. இப்போதைய தமிழக முதல்வரான அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை... அவர் பாஜகவின் கைப்பாவையாகச்  செயல்படுகிறார்... பெருமளவு அதிமுகவினர் ஊழல் புரிகிறார்கள் என்ற எண்ணம்  மக்கள் மனதில் வேரூன்றியிருக்கிறது.

எனவே, 2021ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்பதும், திமுக தலைவரான ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்று நல்லாட்சி வழங்குவார் என்பதும் தெளிவாகிறது. ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை!

இளங்கோ கிருஷ்ணன்