திருத்தப்படும் விக்கிபீடியா… திரிக்கப்படும் வரலாறு! பதிவு செய்தலின் யுத்தம்



இன்றைய நவநாகரிக டெக் உலகில் ஊடகம் என்ற சொல்லின் பொருளே மாறிவிட்டது. ஊடகங்கள் யாரோ ஒரு தனிநபர் அல்லது சிறு குழுவின் கையிலிருந்தது போய், சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் என பொதுமக்களும் பங்கேற்கும் ஒன்றாக மாறிவிட்டன. அப்படி நம் காலத்துக்கு ஏற்ற நவீன கலைக் களஞ்சியமாகவும் பொது ஊடகமாகவும் திகழும் மாபெரும் வலைத்தளம் விக்கிபீடியாதான்.

இன்று எந்த ஒரு தலைப்பு தொடர்பாகவும் ஒருவருக்குத் தேவையான தகவல்களை விக்கிபீடியாவைத் தட்டி தெரிந்துகொள்ள இயலும். மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் விக்கிபீடியா ஒரு வரம். ஆங்கிலத்தில் தொடங்கப்பட்டாலும் விரைவில் தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளிலும் நுழைந்தது விக்கிபீடியா. இன்று ஆங்கிலத்தில் மட்டும் நாலு கோடி பதிவர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

ஆனால், இன்று அதன் பதிவு களே விஷமிகளாலும் ஆளும் அதிகாரத்தரப்பினராலும் இன்னும் பல சமூக விரோதிகளாலும் வேண்டுமென்றே திருத்தப்படுகின்றன, திரிக்கப்படுகின்றன என்பதுதான் துயரம். இதன் மூலம் வரலாறு என்பதை தங்களுக்குச் சாதகமானதாக மிக லாகவமாக மாற்ற முயல்கின்றனர் ஒரு தரப்பினர்.  விக்கிமீடியா பவுண்டேஷன் என்ற நிறுவனம் தனது வலைத்தளமான விக்கிபீடியாவைத் தொடங்கியதன் நோக்கமே, ஒரு கலைக் களஞ்சியம் ஒட்டுமொத்த சமூகத்தினராலும் உருவாக்கப்படுவதாக இருக்க வேண்டும் என்ற ஜனநாயக அடிப்படைதான்.

ஜிம் வேல்ஸ் மற்றும் லேரி சேங்கர் என்ற இருவரும் விக்கி உரிமையாளர்கள். அவர்கள், ‘நடுநிலைமை என்பதே விக்கி பீடியாவின் தாரக மந்திரம்’ என்கிறார்கள். அதனால்தான், எந்தத் தலைப்பைக் குறித்து எவர் ஒருவர் கட்டுரை எழுதினாலும் அதனை எடிட் செய்யும் உரிமை அதன் பதிவாளர்கள் அனைவருக்கும் உரியதாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முரண்பட்ட கருத்துக்களுக்கு இடையே உரையாடலை உருவாக்குவதையும் அதன் மூலம் பொது உண்மை என்று ஏதும் இருந்தால் அதை நோக்கிச் செல்வதுமே இதன் நோக்கம்.

எப்போதும் பாசிசத்தையும் பொய்யையும் புரட்டையுமே நம்பிக் கொண்டிருக்கும் வலதுசாரி சக்திகளுக்கு இந்த ஜனநாயகத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் எரிச்சலைத் தருகின்றன. அதனால்தான் இதனுள்ளே பதிவாளர்கள் போல் ஊடுருவி அதனை தங்கள் புரட்டான கருத்தியலுக்கு ஏற்ப மாற்ற முயல்கிறார்கள்.இந்த திருத்தல் வேலை என்பது எப்போதும் நடப்பதுதான். முன்பு இது அரிதாக நடந்துகொண்டிருந்தது. இப்போது, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஜரூராக நடக்கத் தொடங்கிவிட்டது என்பதுதான் விஷயம்.

இந்தியாவின் வரலாறு, பண்பாடு தொடர்பான கட்டுரைகள் தொடங்கி, சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகள் வரை அனைத்தையும் தங்கள் கருத்தியலுக்கு ஏற்ப உண்மைக்கு மாற்றாக திருத்த முயல்கிறார்கள் ஆளும் வலதுசாரிகள்.இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த ஆண்டு நடைபெற்ற சிஏஏவுக்கு எதிரான தில்லி மாணவர்கள் போராட்டம் தொடர்பான விக்கிபீடியா கட்டுரைகளில் தொடர்ந்து
வலதுசாரிகளால் செய்யப்படும் திரிபுகள்தான்.

இந்த வருடம் (2020) பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்திருந்தபோதுதான் பிரச்னையைத் தொடங்கினார்கள் சங் பரிவார் கும்பல். இரண்டு மாதங்களாக அமைதியான முறையில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அரசு ஆதரவு ஊடகவியலாளர்கள், ‘டிரம்ப் வருகையை ஒட்டி சர்வதேச லாபி செய்கிறார்களா இஸ்லாமியர்கள்?’ என்று வெறுப்புவாதம் கக்கினார்கள்.
ஆனால், அதற்கு முதல் நாள் தில்லியின் தென் கிழக்குச் சாலையில் அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தவர்களைக் குறிப்பிட்டு, பிஜேபியின் தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா, ‘டிரம்ப் இருப்பதால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். அவர் சென்றுவிட்டால் எங்களை உங்களால் (காவல்துறையால்) கட்டுப்படுத்த இயலாது’ என்று கிட்டத்தட்ட மிரட்டும் தொனியில் சொன்னார்.

பிப்ரவரி 25ம் தேதி இதை எல்லாம் குறிப்பிட்டு, ‘வடகிழக்கு தில்லி வன்முறை’ என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதினார் ஒரு கட்டுரையாளர். அன்று காலை 9:51 மணிக்கு அவர் அந்தக் கலவரத்தில் என்ன நடந்தது என்பதை முதல் கட்டமாகப் பதிவு செய்கிறார். கொஞ்ச நேரத்தில் அவர் இதனை மேலும் விரிவாக மேலதிகத் தகவல்கள் சேர்த்து மேம்படுத்துகிறார். பிறகு, மற்ற கட்டுரையாளர்களும் அவர்களுக்குத் தெரிந்த விவரங்களை, விடுபட்டவைகளைச் சேர்த்தும், அழகான சொற்களை இணைத்து மொழியை வளமாக்கியும் அக்கட்டுரையை மேலும் பொலிவாக்கத் தொடங்கினார்கள்.

அப்போது ஒரு பெயரிலி பிஜேபியின் கபில் மிஸ்ரா பெயரை அக்கட்டுரையில் இருந்து நீக்கிவிட்டு, வாரிஸ் பதான் என்ற இன்னொருவரின் பெயரை இணைக்கிறார். அவரும் சிஏஏ தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னவர்தான் என்றாலும் தில்லி கலவரத்தோடு தொடர்புடையவர் அல்ல என்பதால் கட்டுரையாளர் அவர் பெயரை இந்தக் கட்டுரையின் மையம் கருதி நீக்கித் திருத்தம் செய்கிறார்.

பிறகு இன்னொரு அநாமதேயர் அமைதியான முறையில் என்ற சொல்லை வில்லங்கமான பொருள்தரும்படியாக மாற்றி, போராட்டக்காரர்கள் தொடர்பான தவறான சித்திரத்தை உருவாக்க முயல்கிறார். இதைக் கண்ட கட்டுரையாளர், உடனடியாக அதனை நீக்கி விட்டு பழையபடிக்கு அமைதியான முறையில் என்ற சொல்லை இணைக்கிறார்.சிறிது நேரத்தில் இன்னொரு அனானி, ‘சிஏஏ சட்டத்தைத் தடுப்பதற்கான போராட்டம்’ என்பதை, ‘அமெரிக்க அதிபரின் வருகையை முன்னிட்டு சர்வதேச கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் போராட்டம்’ என்பதாக மாற்றுகிறார். அதையும் கட்டுரையாளர் மீண்டும் சீரமைக்கிறார்.

இப்படி, வரிசையாக ஒருவர் பின் ஒருவராக வந்து அவர்கள் அரசியலுக்குச் சாதமாக மாற்ற முயன்றபடியே இருந்தனர். ‘ஒரு கட்டுரை வலையேற்றப்பட்ட ஓரிரு நாட்களிலேயே அடிக்கடி திருத்தப்படுகிறது எனில் அது அனிச்சையானது அல்ல. அதற்குப் பின்னால் ஒரு கும்பலின் திட்டமிட்ட கைவரிசை இருக்கிறது’ என்கிறார் விக்கிபீடியா நிறுவனர். நாம் இதனை கவனிக்க வேண்டும். மிகச் சில மாதங்களுக்கு முன்பு நம் கண் முன்னே அரங்கேறிய ஒரு படுபாதகம்.

இத்தனை வீடியோக்கள், இத்தனை ஊடகங்களில் இத்தனை செய்திகள், பதிவுகள் இருக்கும் விஷயம் தொடர்பான கட்டுரை ஒன்றையே இந்த சங்பரிவார கும்பல் இவ்வளவு துணிச்சலாக மாற்றத் துணிகிறார்கள் எனில், இந்தியாவின் புராதன வாழ்வை, வரலாற்றை அது தொடர்பான பண்பாட்டுத் தகவல்களை, தரவுகள் எல்லாம் இவர்கள் கையில் கிடைத்தால் எவ்வளவு மாற்றியிருப்பார்கள். எப்படியெல்லாம் திருத்தி எழுதியிருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வரலாற்றை மாற்றி எழுதுவது, தங்களுக்கு ஏற்ப வளைப்பது என்பதை வாஜ்பாய் தலைமையிலான பிஜேபி அரசின் முரளி மனோகர் ஜோஷி கலாசாரத்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே துவக்கிவிட்டவர்கள்தான் இவர்கள். சரஸ்வதி நதி ஆய்வு தொடங்கி, கீழடி வரை இவர்களின் வரலாற்றுத் திரிபு வாதப் பதிவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்று விக்கியிலும் இந்த யுத்தத்தை முன்னெடுக்கிறார்கள். உண்மையை எவ்வளவு ஆழத்தில் புதைத்தாலும் அது காலத்தில் மேல் எழுந்துதான் வரும். அதனை யாரும் மறைக்க முடியாது என்பதே விதி. சமயத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதனை மறந்துவிடுகிறார்கள். அதுதான் சிக்கல்.

இளங்கோ கிருஷ்ணன்