ரத்த மகுடம்-131



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘இதற்காகவா நிலைகுலைந்திருக்கிறீர்கள்..?’’ நிதானமாகக் கேட்டார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்..? விளையாடுகிறீர்களா..?’’ படபடத்த விக்கிரமாதித்தர் சாளரத்தை நோக்கித் திரும்பினார். கீழே தெரிந்த காஞ்சி மாநகரத்தின் நடமாட்டத்தை அவரது கருவிழிகள் ஆராயவில்லை. மாறாக வானில் தெரிந்த வெளியை சலனமற்று பார்த்தன.அவரது நடமாட்டத்தையே ஸ்ரீராமபுண்ய வல்லபரின் கண்கள் ஆராய்ந்துகொண்டிருந்தன.
கணங்கள் யுகங்களாயின. வானில் பறந்த ஐந்து புறாக்கள் விக்கிரமாதித்தரை நடப்புக்கு இழுத்து வந்தன. இமைக்காமல் பறந்த புறாக்களையே பார்த்தவர் சட்டென திரும்பினார்.

முன்பு அவர் திரும்பி ஸ்ரீராமபுண்ய வல்லபரை ஏறிட்டபோது அந்தப் பார்வையில் வெறுமை படர்ந்திருந்தது. இப்பொழுதோ கூர்மை பரவியிருந்தது. ‘‘போர் அமைச்சரே...’’ என்று அவர் அழைத்தபோது அந்த அழைப்பில் தோரணை வெளிப்பட்டதை சாளுக்கிய போர் அமைச்சர் உணர்ந்து கொண்டார். அதற்கேற்ப ‘‘உத்தரவிடுங்கள் மன்னா...’’ என்று அவர் பதிலளித்தார். விக்கிரமாதித்தரின் உதடுகளில் புன்னகை பூத்தது. ‘‘இங்கு வாருங்கள்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் அவர் அருகில் சென்றார்.‘‘ஐந்து புறாக்கள் பறக்கின்றன...’’ சாளுக்கிய மன்னர் சுட்டிக் காட்டினார்.

‘‘ஆம் மன்னா... அது என்றும் நம் மாமன்னராகத் திகழும் தங்கள் தந்தையார் இரண்டாம் புலிகேசி அவர்களின் போர் முறையை நமக்கு உணர்த்துகிறது... நடக்கவிருக்கும் சாளுக்கிய - பல்லவப் போரில் நாம் வெற்றிபெறுவோம் என அறிவிக்கிறது...’’
‘‘உண்மையாகவா..?’’‘‘சத்தியமாக...’’‘‘எனக்கென்னவோ வேறொன்று தோன்றுகிறது...’’மன்னரே சொல்லட்டும் என அமைதியாக நின்றார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.

‘‘என் தந்தையார் ஐந்து முறை பல்லவர்கள் மீது போர் தொடுத்தார்... அதில் நான்கு முறை சாளுக்கியர்களே வெற்றிபெற்றார்கள்... ஐந்தாவது முறை...’’
‘‘அந்த நிலை இப்பொழுது ஏற்படாது மன்னா...’’ சட்டென சாளுக்கிய போர் அமைச்சர் இடைவெட்டினார். ‘‘ஆறாவது முறை வெற்றி நமக்குத்தான்... அதாவது ஐந்து வெற்றிகள்... பறக்கும் புறாக்கள் அதைத்தான் உணர்த்துகின்றன...’’
‘‘உறுதியாகச் சொல்கிறீர்களா..?’’
‘‘தீர்மானமாகச் சொல்கிறேன்...’’

‘‘ஆனால், நம் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் என்கிறாரே பாண்டிய மன்னர்..?’’
‘‘அவரால் அப்படித்தான் சொல்ல முடியும்...’’
‘‘அப்படியா..?’’

‘‘ஆம் மன்னா... தட்சிணப் பிரதேசத்தில் இருந்து வரும் படைகளிடம் ஒரு தமிழ் மன்னர் தோற்பதை இன்னொரு தமிழ் மன்னர் விரும்பமாட்டார்... ஏனெனில் வெற்றி பெறும் தட்சிணப் பிரதேச படைகள் அடுத்து தன்னைத்தான் குறி வைக்கும் என்பது அவருக்குத் தெரியும்...’’
‘‘பல்லவர்கள் தமிழர்களா..?’’‘‘தமிழர்களாக நிலைபெற்றவர்கள்...’’

‘‘எப்பொழுது முதல்..?’’‘‘தங்கள் தந்தையாரால் தோற்கடிக்கப்பட்ட மகேந்திரவர்ம பல்லவன் காலம் முதல்... அவன் எப்பொழுது சமணத்தை கை
கழுவி சைவத்தை ஏற்றானோ அப்பொழுதே அவனையும் தமிழனாக மக்கள் ஏற்க ஆரம்பித்துவிட்டார்கள்...’’
‘‘சாளுக்கியர்களான நாமும் சைவர்கள்தானே..?’’

‘‘ஆம்... அதனால்தான் பல்லவர்களைத் தோற்கடித்து தட்சிணப் பிரதேசம் முதல் உறையூர் வரை தமிழர் ஆட்சியை நிறுவப் போகிறோம்... காலூன்றி நிலைபெற்றதும் பாண்டியர்களையும் வீழ்த்தி தென்னகம் முழுக்க கோலோச்சப் போகிறோம்... சக்கரவர்த்தியாக நீங்கள் முடிசூடப் போகிறீர்கள்...’’
‘‘அதற்காக நாம் மேற்கொண்ட முயற்சி பிழை என்கிறார் அரிகேசரி மாறவர்மர்... சிவகாமியை ஓர் ஆயுதமாக நாம் உருவாக்கியது நாம் செய்த பெரும் தவறு என சுட்டிக் காட்டுகிறார்...’’‘‘நாம் செய்தது சரி என காலம் அவருக்குப் புரிய வைக்கும்...’’
‘‘எப்படி..?’’

‘‘இப்படித்தான் மன்னா...’’ என்றபடி விளக்க ஆரம்பித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘முதன் முதலில் நம் மாமன்னரும் தங்கள் தந்தையாருமான இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தபோது மகேந்திர வர்மர் மன்னராக இருந்தார். அப்போது நரசிம்மவர்ம பல்லவன் பதின் பருவத்து இளைஞன்; இளவரசன். அக்காலத்தில்தான் பல்லவ நாட்டில் கற்கோயில்கள் எழுப்பப்பட்டு வந்தன. தலைமைச் சிற்பியாக ஆயனச் சிற்பி இருந்தார். அவரது மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமியை அன்றைய பல்லவ இளவரசரான நரசிம்மவர்மன் விரும்பினான். அவளையே உங்கள் சிறிய தந்தையும் சாளுக்கிய ஒற்றராக பல்லவ நாட்டில் பவுத்த துறவியாக நடமாடியவருமான நாகநந்தியும் விரும்பினார்.

ஆனால், சிவகாமி நேசித்தது பல்லவ இளவரசனை. எனவே அவளை நாகநந்தி நம் தலைநகரான வாதாபிக்கு கவர்ந்து சென்றார். நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் ஆசியுடன் அவளைச் சிறை வைத்தார்.அவளை மீட்க நரசிம்மவர்மன் முடிவு செய்தான். பல்லவ நாட்டின் மன்னனாக, தான் பதவியேற்றதும் பெரும் படையைத் திரட்டி சாளுக்கியர்களான நம் மீது போர் தொடுத்தான். அந்த யுத்தத்துக்கு பல்லவ சேனாதிபதி பரஞ்சோதி தலைமை வகித்தான்.

குருேக்ஷத்திரப் போரில் பாண்டவர்கள் கையாண்டது போன்ற... கலிங்கத்தை அசோகச் சக்கரவர்த்தி நசுக்கியது போன்ற... அசுரப் போர் வியூகத்தை அமைத்து நம் தலைநகரான வாதாபியை பல்லவர்கள் தாக்கினார்கள்... தீ வைத்துக் கொளுத்தினார்கள். சிவகாமியை மீட்டுச் சென்றார்கள்.

அப்போரில் சாளுக்கியர்களான நாம் தோல்வி அடைந்ததற்கும் அந்த யுத்தத்தில் நம் மாமன்னரான இரண்டாம் புலிகேசியின் சிரசு சீவப்பட்டதற்கும் காரணம் பல்லவர்கள் அல்ல...’’

‘‘என்ன சொல்கிறீர்கள் போர் அமைச்சரே... பல்லவர்கள் அப்போரில் வெற்றி பெறவில்லையா..?’’ விக்கிரமாதித்தரின் புருவம் உயர்ந்தது.
‘‘இல்லை மன்னா...’’‘‘பிறகு யார் வெற்றி பெற்றார்கள்..?’’‘‘ஆயனச் சிற்பியின் மகள்... உங்கள் சிறிய தந்தையால் விரும்பப்பட்ட நாட்டியத் தாரகை... சிவகாமிதான் வெற்றி பெற்றாள்... ‘என்னை சிறை வைத்திருக்கும் இந்த வாதாபியை தீக்கு உணவாக்குகிறேன்...’ என்று அவள் செய்த சபதம்தான் வெற்றி பெற்றது...’’‘‘ஒரு வாதத்துக்கு நீங்கள் சொல்வதை ஏற்றாலும்... அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு..?’’

‘‘இதற்கு என தாங்கள் குறிப்பிடுவது அந்த நாட்டியத் தாரகை... ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமியின் வளர்ப்புப் பேத்தியாக நாம் இன்று உலவ விட்டிருக்கும் சிவகாமியை... நமது ஆயுதத்தைக் குறிப்பிடுகிறீர்களா..?’’

‘‘ஆம் போர் அமைச்சரே... அப்படி நாம் நடமாடவிட்டதே பிழை என சுட்டிக் காட்டுகிறார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர். ஏனெனில், ஆயனச் சிற்பியின் மகள் எந்தப் பெண்ணையும் வளர்க்கவும் இல்லையாம்... எந்த சிறுமியையும் தன் வளர்ப்புப் பேத்தியாக அறிவிக்கவும் இல்லையாம்... மாறாக ஒரு சிறுவனைத்தான் தன் பேரனாக வளர்த்தாராம்...’’‘‘அதனால் என்ன மன்னா..?’’ சலனமின்றி கேட்டார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.

‘‘என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்... நாம் உருவாக்கிய ஆயுதமே அல்லவா தவறாகப் போய்விட்டது... அதனால்தானே நான் நிலைகுலைந்து தவிக்கிறேன்...’’‘‘அதற்கு அவசியமே இல்லை மன்னா... நாம் உருவாக்கிய ஆயுதம் சரியானது... அது இலக்கை நோக்கிப் பாய்ந்து தன் கடமையைச் செய்துகொண்டிருக்கிறது... தங்களை சமாதானப்படுத்த இப்படிச் சொல்லவில்லை. உள்ளதை உள்ளபடி அறிவிக்கிறேன்...’’ கம்பீரமாகச் சொன்னார் சாளுக்கிய போர் அமைச்சர்.விக்கிரமாதித்தர் அவரை உற்றுப் பார்த்தார்.

‘‘மன்னா... நீங்கள் தடுக்கத் தடுக்க சிவகாமி என்னும் இளம்பெண்ணைத் தயார் செய்து... அவளை சாளுக்கியர்களின் ஆயுதமாக உருவாக்கி... அவள் ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமியால் வளர்க்கப்பட்ட பேத்தி என அறிவித்து... இப்போதைய பல்லவ மன்னனான பரமேஸ்வரனின் வளர்ப்பு மகள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி... பல்லவர்கள் மத்தியில் ஊடுருவவிட்டது யார்..?’’
‘‘நீங்கள்தான்...’’

‘‘நான் யார் மன்னா..?’’
‘‘எனது அமைச்சர்... என் மகனின் குரு...’’
‘‘விநயாதித்தனுக்கு நான் குருவாக இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... தங்கள் அமைச்சரவையில் எந்தத் துறைக்கு நான் அமைச்சன் மன்னா..?’’
‘‘போர் துறைக்கு...’’

‘‘இதை ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா..?’’
‘‘எப்போது அதை நான் மறுத்தேன்..?’’
‘‘நல்லது மன்னா... நமது மாபெரும் சைன்யத்தை என் பொறுப்பில் விட்டிருக்கிறீர்கள்... பல்லவர்களைப் பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை என்னிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள்... இதை நினைத்து நினைத்து உருகிக் கொண்டிருக்கும் நான் உங்களைத் தலைகுனிய வைப்பேனா..?’’

‘‘போர் அமைச்சரே...’’
‘‘மன்னா... பாண்டிய மன்னர் தங்களிடம் அந்தரங்கமாக இத்தகவலைச் சொன்னது இருக்கட்டும்... அதைக் கேட்டு நீங்கள் நிலை
குலையலாமா..? எங்கள் போர் அமைச்சர் தவறு செய்யமாட்டார் என்று அல்லவா நீங்கள் நம்பியிருக்க வேண்டும்!’’
‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரே...’’

 ‘‘...’’
‘‘மன்னா... ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி எந்தப் பெண்ணையும் வளர்க்கவும் இல்லை... எந்த சிறுமியையும் தன் பேத்தியாகக் கருதவும் இல்லை என்பதைக்கூட அறியாமலா உங்கள் போர் அமைச்சன் இருப்பான்..?’’
‘‘...’’
‘‘தெரிந்தேதான் ஒரு ‘சிவகாமி’யை உருவாக்கியிருக்கிறேன்... அவளையும் பல்லவர்கள் மத்தியில் ஊடுருவவிட்டிருக்கிறேன்... எதற்குத் தெரியுமா மன்னா..? பழைய சிவகாமி வாதாபியை எரித்தாள்... நம் சிவகாமி பல்லவர்களைப் பூண்டோடு எரித்துச் சாம்பலாக்குவாள்... அந்த சிவகாமி சாளுக்கியர்களுக்கு தோல்வியைக் கொடுத்தாள். இந்த சிவகாமி பல்லவர்களைப் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்ற உங்கள் சபதத்தை நிறைவேற்றுவாள்... ஒரு சிவகாமியால்் நிகழ்ந்தது இன்னொரு சிவகாமியால் சரிசெய்யப்பட்டால்தான் அது சாளுக்கியர்களுக்குப் பெருமை சேர்க்கும்.

அதற்காகத்தான் பாடுபடுகிறேன். என்னை நம்புங்கள்...’’ தழுதழுத்த ஸ்ரீராமபுண்ய வல்லபரை நெருங்கி தன் மார்போடு அணைத்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்களிடம் தெரிவிக்காமல் நான் மதுரை சென்றதும்... சில கணங்களுக்கு முன் உரிய பதில்களை உங்களுக்கு நான் தெரிவிக்காததும் எனது தவறுதான். மன்னித்து விடுங்கள்...’’‘‘மன்னா... என்ன இது... என்னிடம் போய்...’’‘‘உங்களிடம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் யார்..? சாளுக்கிய தேசத்துக்காகவே வாழும் எங்கள் போர் அமைச்சர்... நான் யார்..? உங்கள் பிரதிநிதி... அப்படியிருக்க மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு..?’’
‘‘மன்னா...’’‘‘இப்போது சொல்லுங்கள்... நீங்கள் தயாரித்த ஆயுதமான ‘சிவகாமி’ யார்..?

பல்லவ இளவரசி என்று கருதி ரகசியமாக நாம் அடைத்து வைத்திருக்கும் ‘சிவகாமி’ யார்..? ஆயுதமான சிவகாமியும் பல்லவ இளவரசியான சிவகாமியும் ஒரே உருவத்தில் இருப்பதற்கான காரணம் என்ன..?’’‘‘அது மட்டும் போதுமா மன்னா அல்லது ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமி எந்த சிறுவனை தனது பேரனாக வளர்த்தார் என்றும் தங்களுக்குத் தெரியவேண்டுமா..?’’ கேட்டுவிட்டு தன் கண்களைச் சிமிட்டினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.   

‘‘கரிகாலரே...’’‘‘ம்...’’ என்றபடி சிவகாமியின் கொங்கைகளுக்கு இடையில் தன் முகத்தைப் பதித்தான் கரிகாலன்.‘‘உங்களைக் காண ஒருவர் துடிக்கிறார்...!’’‘‘யார்..?’’ கேட்ட கரிகாலனின் கரங்கள் அவளது பின்னெழுச்சிகளை அழுத்தின.‘‘நம் பாட்டி. ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி!’’

(தொடரும்)
 
கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்