இலக்கு 500-நெல் ஜெயராமனின் பாதையில் நடக்கத் தொடங்கியிருக்கிறார் ராஜிவ்



‘‘அய்யா நெல் ஜெயராமனின் கனவே ஐநூறு பாரம்பரிய நெல் ரகங்களையாவது மீட்டெடுக்கணும் என்பதுதான். அவங்க 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தாங்க. இதுல நூறு நெல் ரகங்களாவது விவசாயிகள்கிட்ட போய்ச் சேரணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க.
தவிர, அந்த நூறு ரகங்களும் அப்படியே அரிசியா மக்களுக்குக் கிடைக்கணும்னு இலக்கு வச்சு வேலை செய்தாங்க. ஆனா, கடந்த 2018ம் ஆண்டு புற்றுநோயால் இறந்திட்டாங்க.

அவங்க கனவையும், இலக்கையும் மனசுல வச்சிட்டுதான் நான் இந்தப் பணியை எடுத்து செய்திட்டு இருக்கேன்…’’ நெகிழ்வாகவும், தன்னம்பிக்கையாகவும் பேசுகிறார் ராஜிவ். இவர், தமிழகம் அறிந்த விவசாயியான நெல் ஜெயராமனின் அண்ணன் மகன். தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பாதுகாத்து வந்தவர் நெல் ஜெயராமன். அவர் காலமானதும் அவரின் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் இனி என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. இப்போது அதைத் திறம்பட நடத்தி வருகிறார் ராஜிவ்.

‘‘நான், நெல் ஜெயராமனின் ரெண்டாவது அண்ணனின் மகன். காஸ்ட் ஆடிட்டிங் படிச்சிருக்கேன். சித்தப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடம்புக்கு முடியாம இருந்தப்ப மருத்துவமனையில் பக்கத்துல இருந்து கவனிச்சேன். அப்ப டாக்டர்கள் சித்தப்பாவை உடம்பு முக்கியம்னும் எந்த வேலையும் செய்யக்கூடாதுனும் சொன்னாங்க. ஆனா, சித்தப்பா அதைத் தாண்டி ரெண்டு வருஷமா நெல் திருவிழாவும், உணவுத் திருவிழாவும் நடத்தினாங்க. இன்னும் ரெண்டு மாசத்துல இறந்திடுவோம்னு தெரிஞ்சும் தளராமல் தன்னுடைய பணியை தொடர்ந்தாங்க.

அப்பதான் இதன் கரு எந்தளவுக்கு முக்கியம்னு எனக்குப் பட்டுச்சு. அதனால, அவர் இறந்தபிறகு அவர் விட்டுப்போன பணியைத் தொடரணும்னு முடிவெடுத்தேன். அய்யா நம்மாழ்வார் கூடவும் சித்தப்பா நெல் ஜெயராமனுடனும் பயணிச்ச முன்னோடி விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு இப்ப சித்தப்பாவின் இந்த அரிய பணிகளைத் தொடர்றேன்...’’ நிதானமாக ஆரம்பித்தார் ராஜிவ்.

‘‘திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கம் கிராமத்துல ‘பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ என்கிற பெயர்ல ஒரு நெல் மையத்தை ஐந்து ஏக்கர்ல சித்தப்பா உருவாக்கி வச்சிருந்தாங்க. இங்கதான் அவங்க கண்டுபிடிச்ச 174 நெல் ரகங்களையும் பாதுகாத்திட்டு வர்றோம். இதுதவிர, சுத்தியிருக்கிற நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களிலும் இப்படியான ஒரு நெல் மையத்தை விவசாயிகளின் வயல்கள்ல உருவாக்கினாங்க.

அதாவது மையம்னா கட்டடம் கிடையாது. எல்லாமே வயல்கள். ெரண்டு ஏக்கர், நாலு ஏக்கர்னு ஒதுக்கி பாரம்பரிய நெல்லை அதுல விளைய வைப்பாங்க. ஏன்னா, அந்தப் பகுதிகளைச் சுத்தியிருக்கிற விவசாயிகளை அங்க இணைச்சு பாரம்பரிய நெல் விதைகளைக் கொடுக்கவும், அது பத்தின விவரங்களைச் சொல்றதுக்கான களமா இருக்கணும்னும் செய்தாங்க.  

தவிர, நெல் திருவிழாவையும் உணவுத் திருவிழாவையும் சிறப்பா நடத்தி வந்தாங்க. அவங்க இறக்கிறதுக்கு முன்னாடிகூட கடைசியா ஆதிரெங்கத்துல விவசாயிகள் ஒண்ணா இருந்து தொடர்ச்சியா நெல் திருவிழா நடத்தணும்னு சொன்னாங்க. ஏன்னா, நெல் திருவிழாங்கிறது பாரம்பரிய நெல் விளைவிக்கிற விவசாயிகள் ஒண்ணு கூடி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துக்கிற இடமா இருக்கிறதாலதான்.

அப்புறம், உணவுத் திருவிழாங்கிறது பாரம்பரிய நெல்லில் இருந்து வரும் அரிசியில் என்னவெல்லாம் பண்ணலாம்ங்கிறதை பேசுற இடம். இதுல சத்துமாவு, தோசைமாவு தயாரிக்கிறது, குழந்தைகளுக்கான உணவுகள் செய்வதுனு இருக்கும். இது எல்லாவற்றுக்கும் தனித்தனியா பாரம்பரிய அரிசிகள் இருக்கு. குறிப்பா, பெண்கள்கிட்ட இந்த அரிசி ரகங்களை கொண்டு சேர்க்கும்போதுதான் குடும்பங்களுக்குள்ள பாரம்பரிய அரிசி போய்ச் சேரும்னு சித்தப்பா நெல் ஜெயராமன் நினைச்சாங்க. அதனால, இந்தத் திருவிழாக்களை அவங்க முன்னெடுத்தாங்க.

அவங்க இறந்தபிறகு முதலாமாண்டு அஞ்சலி நிகழ்ச்சியில் ஒரு தீர்மானம் போட்ேடாம். முதல்ல அவர் உருவாக்கிய பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தை அவர் பெயர்ல மாத்தவும், அதன்வழியா நெல் திருவிழாவும் உணவுத் திருவிழாவும் நடத்தவும் முடிவெடுத்தோம்.

அப்பதான் முன்னோடி விவசாயிகள் என்னை இந்தப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளரா நியமிச்சாங்க. அதன்பிறகு இந்த நெல் பாதுகாப்பு மையத்தை ‘நெல் ெஜயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு ைமயம்’னு பெயர் மாத்தினோம். இந்த ஆண்டு நெல் திருவிழாவும் உணவுத் திருவிழாவும் நடத்தினோம். இந்த லாக்டவுன்ல கூட நமக்கு நெல் திருவிழா நடத்த அனுமதி கிடைச்சது. நான்காயிரம் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கினோம். இங்க 500 விவசாயிகள் நேரடியா வந்து கலந்துகிட்டாங்க. மீதி 3 ஆயிரத்து 500 பேருக்கு பார்சல் அனுப்பினோம். இதுல வேளாண் பல்கலைக்கழகத்தையும் இணைச்சு செய்தோம்.

முன்னாடி சித்தப்பா நெல் ஜெயராமன் நெல் திருவிழாவுல விவசாயிகளுக்கு விதை நெல் மட்டும் கொடுத்திட்டு இருந்தாங்க. நாங்க கொஞ்சம் அட்வான்ஸா போய் இந்தமுறை விதைநெல் மட்டுமில்லாமல் நாத்துகளையும் இலவசமா கொடுத்தோம். நாத்து வளர்றதுக்கு 15 நாட்கள் ஆகும். அதுக்காக சிலர் சோர்வாகக் கூடாதுனு பாதுகாப்பு மையத்துல வளர்த்து விவசாயிகள்கிட்ட கொடுத்தோம். அவங்க நேரடியா போய் நாத்தை வயல்ல நடவேண்டியதுதான். அப்புறம், உணவுத் திருவிழாவ சிறப்பா செய்து முடித்தோம்...’’ எனப் பெருமையாகக் குறிப்பிடுபவர் நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் தற்போதைய பணிகள் பற்றி தொடர்ந்தார்.

‘‘எங்க நோக்கமே பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தை எல்லா மாவட்டத்திலும் உருவாக்கணும் என்பதுதான். பொதுவா, அந்தந்த மாவட்டத்துல அந்தந்த மண்ணுக்கேற்ப விளையிற பாரம்பரிய நெல் விதைகள் இருக்கும். அதை அந்த விதை வங்கியில் கிடைக்கிற மாதிரி கொண்டு வரணும். ஏன்னா, இப்ப பாரம்பரிய நெல் வேணும்னா எங்ககிட்டதான் வரணும்.

ஒரு விவசாயி பாரம்பரிய நெல்லுக்காக ஆதிரெங்கம் வரை வரக்கூடாது. இதுக்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் நூறு ஏக்கர்ல சித்தப்பா பெயர்ல பாரம்பரிய நெல் மையம் உருவாக்க இருக்கோம். இந்த நூறு ஏக்கரும் ஒரே இடத்துல இருக்கணும்ங்கிற அவசியமும் இல்ல. ஒருத்தர்கிட்ட பத்து ஏக்கர்ல இருக்கலாம். இன்னொருத்தர் பத்து ஏக்கர்ல போட்டிருக்கலாம். ஆனா, அந்த மாவட்டத்துக்குள்ள இருக்கணும். அவ்வளவுதான்.
இதுக்காக பத்து விவசாயிகளை உருவாக்கினா போதும். தேவைப்படுகிற விவசாயிகள் இந்த பத்து விவசாயிகளை அணுகி பாரம்பரிய நெல்லை வாங்கிக்கலாம். விதைகளைப் பரிமாறிக்கலாம். இதுசம்பந்தமா அரசுகிட்டயும் பேசியிருக்கோம்.

அடுத்ததா, பாரம்பரிய நெல் ரகங்கள் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறோம். குறிப்பா, பள்ளிகள், கல்லூரிகள்ல இதுபத்தி பேசுறோம். இப்ப போலியான பாரம்பரிய அரிசி மார்க்கெட் நிறைய வந்திடுச்சு. சிவப்பு அரிசின்னாலே அது நம்ம பாரம்பரிய அரிசினு மக்கள் நினைக்கிறாங்க. அப்படி கிடையாது. சிவப்பு அரிசியில் ஒட்டுரகமும் இருக்குது. அதனால, அதைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கு.

தவிர, பாரம்பரிய அரிசியில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, காட்டுயானம், குள்ளங்கார், பூங்கார், தூயமல்லி, ஆத்திரத்தைச்செடி, சிவப்பு கவுனி, குழி வெடிச்சான், கொத்தமல்லி சம்பானு பத்து ரகங்கள்தான் மக்களுக்குத் தெரியும். மீதி ரகங்களையும் நாங்க கொண்டு சேர்க்க முயற்சி செய்றோம். அதை எப்படி கண்டுபிடிக்கிறதுங்கிற விஷயங்களையும் கருத்தரங்கங்கள், சமூகவலைத்தளங்கள் மூலம் எடுத்திட்டு போறோம்.

இப்ப ஆர்கானிக் கடைகள்ல கூட சரியான பாரம்பரிய அரிசியை விற்கிறாங்களானு தெரியல. அதனால நாங்க விவசாயிகள்கிட்ட நேரடியா வாங்க முயற்சி செய்ங்கனு மக்களை வலியுறுத்துறோம். நிறைய விவசாயிகள் சமூகவலைத்தளங்கள் மூலம் தங்களின் உற்பத்தியை விற்பனை செய்றாங்க. அந்தமாதிரியான பாரம்பரிய நெல் விவசாயிகள் யார் என்பதை அடையாளம் காட்டுறோம்.   

அப்புறம், புது விவசாயிகளுக்காக ஒரு வாட்ஸ்அப் எண் கொடுக்குறோம். அவங்க அந்த எண்ணுக்கு போன் பண்ணி தங்களின் சந்தேகங்களைக் கேட்டுக்கலாம். ஒரு பயிரை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்ல போட்டு என்ன பண்ணணும்னு கேட்டா அதுக்கான தீர்வை பதினைஞ்சு வருட அனுபவம் உள்ள விவசாயிகளை வச்சு சொல்ல வைக்கிறோம்.

விற்பனை நேரத்துல அந்த விவசாயிகள் கேட்டுக்கொண்டால் நேரடியா வாடிக்கையாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தர்றோம். அது நெல்லா இருந்தாலும் சரி, அரிசியா இருந்தாலும் சரி. இதெல்லாமே சித்தப்பா ஜெயராமனின் கனவுகள். இதை நோக்கியே எங்கள் பயணமும் இருக்கும்...’’ என்கிறார் ராஜிவ்.

பேராச்சி கண்ணன்