சாயி



ஷீரடி பாபாவின் புனித சரிதம்

நீ எந்த காரியத்தை செய்து கொண்டிருந்தாலும், எங்கிருந்தாலும், எதைச் செய்தாலும் என்னையே நினைவில் நிறுத்தி உன் வேலையைச் செய். அதை நான் வெற்றியடையும்படி செய்வேன்.
- பாபா மொழி

‘‘நீங்கள் உங்கள் இருக்கையில் இருந்து எழுந்திருங்கள்... நான் அதில் உட்காரணும்!’’ என்று நாநாவல்லி கேட்டதும் எல்லா பக்தர்களும் திடுக்கிட்டார்கள். காரணம், பாபாவிற்குக் கோபம் வந்தால் என்னவாகும் என்று தெரியும். நாநாவல்லியைப் பொசுக்கி விடுவார் என பயந்தார்கள். மேலே என்ன விபரீதம் நடக்கப்போகிறதோ, அதைப் பார்க்கத் தயாரானார்கள்.
ஆனால் நடந்ததோ வேறு!

எதிர்பாராமல் இப்படிக் கேட்டதை, பொறுமையுடன் சமாளிப்பதுதானே பாபாவின் குணம். சிரித்துக் கொண்டே பாபா தன் இருக்கையிலிருந்து எழுந்து, முன்னே வந்து, ‘‘நாநாவல்லி, இதோ பார்... நான் என் இடத்திலிருந்து எழுந்துவிட்டேன். உனக்கு அந்த இடம் வேண்டுமா? அடேய், இந்த இருக்கை, உன்னைப் போல பரம பக்தர்கள் உட்காருவதற்குத்தான் இருக்கிறது. போய் உட்கார்’’ என்றார்.

‘‘பாபா, பாபா, எனக்கு ரொம்ப சந்தோஷம். பாபா எனக்குத் தன் இருக்கையைக் கொடுத்தார்’’ என்று சொல்லி, குதித்துக்கொண்டே அதில் போய் உட்கார்ந்தான்! பாபா உட்காருவதைப் போலவே உட்கார்ந்து இடது கையை கட்டை மீது வைத்தான். மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். பாபாவும் இந்த விளையாட்டை ரசித்தார்.

நாநாவல்லி சந்தோஷமடைந்தான். குழந்தைகளும் அவன் செய்கையைக் கண்டு மகிழ்ந்தார்கள். அடுத்த வினாடி நாநாவல்லி எழுந்து, பாபாவின் எதிரில் நின்றான்.‘‘பாபா, பாபா... நீங்கள் தெய்வம். எனவேதான் என்னைப் போன்ற பைத்தியத்துக்கு உங்கள் இருக்கையைக் கொடுத்தீர்கள்’’ என்று சொல்லி, அவர் காலில் விழுந்து, தேம்பித் தேம்பி அழுதான். இதைக் கண்ட மக்கள் வியந்தார்கள். சந்தோஷம் என்றால் குதிக்கிறான். பாபாவை சிம்மாசனத்திலிருந்து எழுப்பி, அதில் ஆனந்தமாக உட்காருகிறான். பிறகு என்னடாவென்றால் தேம்பித் தேம்பி அழுகிறான்.
இவை பாபாவின் லீலைகளோ... யாருக்கும் புரியவில்லை.

பாபா அவனை அணைத்துக்கொண்டார். ‘‘பாபா, நான் தவறு செய்துவிட்டேன். நான் குற்றவாளி. எனக்குத் தண்டனை கொடுங்கள். என்னைப் பஸ்பமாக்குங்கள். நான் ஏன் உங்கள் சிம்மாசனத்தில் உட்கார்ந்தேன்? எப்படி உட்கார்ந்தேன்?’’ பாபா அவனை சாந்தப்படுத்தி விட்டுச் சொன்னார்... ‘‘நாநாவல்லி, நீ எந்தத் தவறையும் செய்யவில்லை. இந்த உலகத்திலுள்ள உங்கள் எல்லோரின் துன்பத்தைத் துடைக்கத்தான் நான் தயாராகி வந்திருக்கிறேன். அப்படியிருக்க, என் இருக்கை எம்மாத்திரம்? நான் உன்னுடைய ராமன்.

நீ என்னுடைய ஹனுமன். எவ்வளவு காலம்தான் ராமனே சிம்மானத்தில் உட்காருவது? எவ்வளவு காலம்தான் ஹனுமன் கை கட்டி, வாய் பொத்தி, காலடியில் உட்காருவது? இதை மாற்றத்தான் நான் வந்திருக்கிறேனப்பா! ஹனுமன், ராமன் இடத்தில் உட்காரணும். ராமன், ஹனுமனின் இடத்தில் இருந்து துக்கத்தைச் சற்று ஏற்றுக்கொள்ளட்டும் என்பதற்காகத்தான் விட்டுக் கொடுத்தேன். நாநாவல்லி, அழுவது உனக்கு அழகல்ல. உன் வழக்கம் போல பெரிதாக ‘பூ... பூ...’ என்று கத்திக் கொண்டே, சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு வெளியே போ. அவர்களை மாமரத்தில் ஏற்றி, மாங்காய் தின்னக் கொடு... கிளம்புங்களடா பசங்களா..!’’

அதைக் கேட்டு பிள்ளைகளும் தயாரானார்கள்.கண்களைத் துடைத்துக் கொண்ட நாநாவல்லி, ‘பூ... பூ...’ என்று கூச்சலிட்டுக் கொண்டே, உயரமாகக் குதித்து, குழந்தைகளை அழைத்துச் சென்றான். சிறிது நேரத்தில் மாயமானான்.பாபா மறுபடி தன் இருக்கையில் அமர்ந்தார். மயிர்க்கூச்செறியும் அந்த சம்பவம் முடிந்தது.

‘‘மகல்சாபதி! பக்கீரின் இந்த இருக்கை, பார்ப்பதற்கு சுகமானது, விலைமதிப்பற்றது என்று நீங்கள் நினைப்பதுபோல் அல்ல. இங்கு உட்காருவது ரொம்பக் கஷ்டம். எல்லா மக்களின் சுக துக்கம், வேதனை, கவலை போன்ற இன்னல்களால் தயார் ஆனது இந்த இருக்கை. நான் சில சமயம் சிரித்துக்கொண்டிருந்தால், இன்னொரு பக்கம் அநேக சாய்பாபாக்கள் ஆக்ரோஷத்துடன் இருப்பார்கள். பலவித இன்னல்களை நான் ஒருவனே எப்படி அனுபவிப்பது? என்னுடைய சகிப்புத்தன்மைக்கும் ஓர் எல்லை உண்டு. ஆனால், தெய்வம்தான் எஜமானர்.

 அவர் எனக்கு ஊக்கம் கொடுக்கிறார். எனவேதான் நான் தைரியமாக இந்த ஆசனத்தில் அமர்கிறேன். என்மேல் பொறாமைப்படுபவர்களும் இருக்கிறார்கள். எங்கு கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசுகிறார்களோ, அங்கு எனக்கு விரோதிகள், பொறாமைப்படுபவர்களைப் பற்றியும் நான் கவலைப்பட வேண்டியிருக்கிறது. ஏனென்றால், அவர்களை நல்வழிக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது. எப்படி இயேசு மகான், ஆட்டு மந்தையிலிருந்து வழி தவறிய ஆட்டைப் பற்றி கவலைப்படுகிறாரோ, அதைப் போலவே நானும் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

என்னுடைய நாநாவல்லி மிகவும் வெகுளி, உலகம் தெரியாதவன். எதற்கும் ஆசைப்படமாட்டான். எந்த நாளும் எதையும் கேட்டதில்லை. ஆனால், அவன் இன்று ஒரே ஒரு நிமிடம் என்னுடைய இருக்கையில் உட்கார அனுமதி கேட்டான். இந்த அனுமன் புண்ணியம் செய்தவன். பைத்தியமாக இருந்தாலும், எதைக் கேட்க வேண்டும் என்று தெரிந்திருந்தது. இப்பொழுது, கேட்பதற்கு ஒன்றும் மிஞ்சவில்லை...’’

இவ்வாறு சொன்ன பாபா, கைகளை உயர்த்தி, ‘‘எல்லோருக்கும் எஜமானன் ஒருவரே!’’ என்று கூறி ஆசீர்வதித்தார்.ஒருநாள் காலை பாபா மசூதியில் பல் துலக்கி, முகம், கை, கால் அலம்பிக் கொண்டு திரும்பினார். பிறகு ஒரு முறம் எடுத்தார். அதில் பக்தர்கள் கொடுத்த கோதுமை மூட்டையிலிருந்து, கோதுமை அளந்து நிறைய எடுத்துக்கொண்டார். எந்திரத்தில் அதைப் போட்டு அவரே அரைக்கத் தொடங்கினார்.

கூடியிருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் இதைப் பார்த்தார்கள்.எதற்காக பாபாவே அரைக்கிறார்? அவருக்கு மாவின் அவசியமென்ன? அவர் கேட்டாலே பல பேர் பலவித உணவுகளைக் கொண்டுவந்து கொடுக்கும்போது, எதற்காக இவருக்கு மாவு?இதைப் பற்றி அவரிடம் கேட்க யாருக்கும் துணிவில்லை. ஷாமாவும் அப்பொழுது அங்கிருந்தார். அவரும் மூச்சுவிடவில்லை.
எந்திரத்தில் கோதுமை அரைபடும் ‘கர்... கர்...’ என்கிற ஓசையைக் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்க்க வந்தார்கள். பாபா எதைப் பற்றியும் கவலைப்படாமல், மாவு அரைத்துக் கொண்டிருந்தார்.

ஊரில் கூடியிருந்த பெண்கள், தங்களுக்குள் பேசலானார்கள்.‘‘ஏண்டி மஞ்சுளா? நாம் இங்கே இவ்வளவு பெண்கள் இருக்கும்போது பாபாவே ஏன் மாவு அரைக்கிறார். இது நல்லாவா இருக்கு?’’
‘‘இல்லைதான்... ஆனால்..’’
‘‘என்ன ஆனால்?’’

‘‘பாபாவே அரைக்கிறார் என்றால், எப்படிக் கேட்பது? கோபித்துக் கொண்டால்?’’
‘‘அதற்காக நாம் சும்மா இருக்க முடியுமா?’’
நான்கு பெண்கள் மேலே ஏறி, பாபாவிடம் வந்தார்கள். பாபா அவர்களை லட்சியமே செய்யவில்லை.
‘‘பாபா... நீங்கள் எழுந்திருங்கள். நாங்கள் அரைக்கிறோம்!’’

‘‘வேண்டாம்!’’
‘‘முடியாது. நாங்கள் அரைக்கிறோம்...’’
‘‘வேண்டாம் என்றேனே... கீழே போங்கள்! இல்லாவிட்டால் அடி விழும்...’’
‘‘சரி, அடியுங்கள்...’’
‘‘நான்தான் போ என்கிறேனே!’’

‘‘பாபா, எழுந்திருங்கள் பேசாமல்’’ என்று மஞ்சுளா அதிகாரம் செய்து, கீழே உட்கார்ந்து எந்திரத்தின் பிடியைத் தொட்டாள்.
‘‘எழுந்திரு... கையை விடு... இது உங்கள் வேலையல்ல, ஓடுங்கள்...’’ என்று பாபா விரட்டினார்.

ஆனால் நான்கு பெண்களும் பாபாவைத் தள்ளிவிட்டு மாவு அரைக்க உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களைத் திட்டி விட்டு, பாபா எழுந்து அங்கும் இங்கும் நடை போட்டார்.
நான்கு படி அரைத்தாயிற்று. நிறைய மாவு வந்தது. கோதுமை தீர்ந்தது. அரைத்த நான்கு பெண்களும் ஏழைகள். எனவே அரைத்ததற்குக் கூலியாக மாவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். பாபாவும் இவர்களுக்கெல்லாம் அப்போதைக்கு அப்போது ஏதாவது கொடுப்பார். ஏழை பாழைகளுக்கு உதவுபவர்.

‘‘இந்த மாவை என்ன செய்யப் போகிறார்?’’ - ஒருத்தி இன்னொருத்தியைக் கேட்டாள்.
‘‘இதனால் பாபாவிற்கு என்ன உபயோகம்?’’
‘‘இதை நாலு பாகம் செய்து, ஒவ்வொருவரும் ஒரு பாகத்தை வீட்டிற்கு எடுத்துப் போகலாம். இது நமக்குத்தான்!’’
‘‘ஆமாம்... பாபா கருணை வள்ளல்..’’

‘‘பின்னே என்ன?’’
அரைத்த மாவை நாலு பாகமாக்கி, முறத்தில் ஆளாளுக்கு எடுத்துப்போகத் தயாரானார்கள்.
பாபா பார்த்துக்கொண்டிருந்தார்.

‘‘அடிப் பெண்களே! எங்கே கிளம்பி விட்டீர்கள் மாவை எடுத்துக்கொண்டு? இது என்ன, உங்க அப்பன் வீட்டுச் சொத்தா? இவ்வளவு மாவையும் எடுத்துக்கொண்டு போய், ஊர் எல்லையில் கொட்டுங்கள். ஊர் முழுதும் மாவினால் சூழப்பட்டு இருக்கட்டும். ஓசியிலிலேயே சாப்பிடப் பார்க்கிறீர்கள்? மாவு அரைத்து அரைத்து கொள்ளையடித்துப் போக வந்தீர்களா? என்னுடைய கோதுமை அது. நான் என்ன உங்களிடமிருந்து கடனாகவா அதை வாங்கினேன்? அந்த மாவை நீங்கள் எடுத்துப் போக முடியாது. ஓடுங்கள்..’’ என்று பாபா கத்தினார்.

கூட்டத்தினரைப் பார்த்து, ‘‘என்ன நீங்களெல்லாம் வேடிக்கை பார்த்து நிற்கிறீர்கள்? சங்கடம் வந்தால் பயந்து அழுகிறீர்கள்! ஆனால் அதைத் தடுக்க எந்த உபாயமும் யோசனையும் செய்வதில்லை. அதைப் பற்றி யோசிக்க வேண்டாமா? சரி, சரி, போங்கள்... அந்தப் பெண்களுக்கு உதவுங்கள். இல்லாவிட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள்! போங்கள்... போங்கள்..’’ என்றார்.
கூட்டத்தினர் பாபாவின் கட்டளைப்படி மாவை எடுத்துக்கொண்டு ஊர் எல்லைக்குக் கிளம்பினார்கள்.

‘‘மகல்சாபதி, நீங்கள் எல்லா பொறுப்பையும் ஏற்று நடவடிக்கை எடுங்கள். ஊரைச் சுற்றிப் பெருங்காற்று வீசும். எங்கேயும் பிளவு, வெடிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த ராட்சஸி பிளவு, வெடிப்பிலிருந்துதான் உள்ளே வருவாள். எல்லோரும் போங்கள். சீக்கிரம்..’’ அவர் சொல்படியே, அவரைத் தனியாக விட்டுவிட்டு, மற்ற அனைவரும் சென்றார்கள். வழியில் அண்ணா சாகேப் தாபோல்கர், பாபா சொன்னதின் அர்த்தம் என்ன என்று மகல்சாபதியைக் கேட்டார்.

‘‘அண்ணாசாகேப்! பாபாவின் செய்கை ஒவ்வொன்றும் மிக ஆழமானது! அவருடைய லீலை அளவிட முடியாதது. அவருடைய காரியம் நம்பவே முடியாதது. பிறகு அது என்னவென்று தெரியும். நீங்கள் பார்த்துக் கொண்டேயிருங்கள். ஊரெல்லாம் ஒரே காலரா நோய் பரவுகிறது. ஷீரடியைச் சுற்றியுள்ள இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது. அங்கு சாவு பெருத்த அளவில் நிகழ்கிறது. காலரா நோய் என்னும் அரக்கியை அடக்க, பாபா இப்படியொரு யோசனை சொல்லியிருக்கலாம். ஊரைச் சுற்றிய எல்லைப் பகுதிகளில் மாவின் கோடு போட்டுவிட்டால், ஷீரடி அந்த அரக்கியிடமிருந்து தப்பி பிழைக்கும்!’’

அண்ணா சாகேப் தாபோல்கர் ஆச்சரியப்பட்டார். அவருடைய மனதில் பல கேள்விகள் எழுந்தன. ‘இந்த மாவு அரைக்கும் யோசனைக்கும், அதை உபயோகப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம்? அந்த மாவை எங்கே கொட்டணும்? மாவிற்கும் காலரா நோய்க்கும் என்ன சம்பந்தம்? இந்த ரகசியம் என்கிற முடிச்சு, எந்த வகையில் அவிழும்?’

‘பாபா பெரிய யோகி. தத்துவ ஞானி. அவருடைய சரித்திரமே அற்புதமானது. அவருடைய செயல் முதலில் ரகசியமானதாக இருந்தாலும், பிறகு தெரியவரும்போதுதான் அவரின் புத்திக் கூர்மை பளிச்சிடும். இப்படிப்பட்ட அற்புத லீலைகளைப் புரிவதில் வல்லவர். இவற்றையெல்லாம் குறித்து, பாபாவைப் பற்றி ஒரு காவியம் எழுதணும்’ என்று எண்ணிக் கொண்டார் தாபோல்கர்.
ஆனால் பாபா இதற்கு அனுமதி கொடுப்பாரா?

‘நிச்சயம் கொடுப்பார். அவருடைய ஆசீர்வாதத்தால், என் எண்ணம் நிறைவேற வேண்டும்!’
பாபாவின் தடுப்பு நடவடிக்கையால், காலரா நோய் ஷீரடிக்குள் வரவில்லை. அந்த பயத்திலிருந்து விடுபட்ட அண்ணா சாகேப் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். இப்பொழுது, காவியம் இயற்றுவதில் முனைப்பாக இருந்தார்.பாபா ஒரு யோகியாவார்.

யோகத்தின் எல்லா குணாதிசயங்களையும் நன்கு அறிந்து, பயின்றவர். எந்தக் கடினமான யோகப் பயிற்சியானாலும் செய்வார். ஒரு நாள் அவர் உடல் உறுப்புகளை சர்வசாதாரணமாகக் கழற்றி வைக்கும் யோக ஆசனத்தைச் செய்தார். அவருடைய முழு உடலிலிருந்து முதலில் இரண்டு கைகளும் வெவ்வேறாகின. பிறகு சரீரத்திலிருந்து இரண்டு கால்களையும் பிரித்தெடுத்தார். இப்படி எல்லா அவயங்களையும் உடம்பிலிருந்து எடுத்தார். இப்படி விலக்கிய துண்டுப் பாகங்கள், மசூதியில் வெவ்வேறு பகுதிகளில் விழுந்தன!

நடுநிசி. ஓர் அப்பாவி பக்தன் சொல்லி வைத்தாற்போல அச்சமயம் அங்கு வந்தான். மசூதியிலிருந்து அப்போது எல்லா பக்தர்களும் போய் விட்டிருந்தார்கள்.
துனியின் ஜுவாலை மட்டும் தெரிந்தது. பாபாவின் உடம்பு பாகங்கள் எல்லாவிடத்திலும் பரவிக் கிடந்தன. இப்படி ஒரு பயங்கரமான காட்சியை அவன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை. எனவே, பயந்துவிட்டான்! ‘‘கொலை... கொலை...’’ என்று ஈனமான குரலில் கத்தினான். ‘‘பாபாவை யாரோ வெட்டி விட்டார்கள்...’’

(தொடரும்...)

‘‘இந்த உலகத்திலுள்ள உங்கள் எல்லோரின் துன்பத்தைத்
துடைக்கத்தான் நான் தயாராகி வந்திருக்கிறேன்.’’

‘‘நான் சில சமயம் சிரித்துக்கொண்டிருந்தால், இன்னொரு பக்கம் அநேக
சாய்பாபாக்கள் ஆக்ரோஷத்துடன் இருப்பார்கள்.’’

வினோத் கெய்க்வாட்

தமிழில்: பி.ஆர்.ராஜாராம்