தத்தெடுக்கப் பிறந்த காதல்



காதலித்து, மணம் முடித்து குழந்தை பெற்றவர்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கே ஒரு குழந்தையால் காதல் பிறப்பெடுத்திருக்கிறது. சமூக சேவை எனும் ஒரு புள்ளியில் சந்தித்த  இரண்டு இதயங்கள்தான் திலக்ராஜ் - தனலட்சுமி. இன்றும் தம்பதி சகிதமாக பல ஆதரவற்றோர் இல்லங்களில் களப்பணியாற்றும் இவர்களுக்குள் காதல் பூத்த கதை, இதுவரை கேட்டறியாததொரு  கவிதை!

‘‘சென்னை தௌசண்ட் லைட்தான் நான் பிறந்து வளர்ந்த இடம். ஸ்கூல் படிக்கும்போதே சமூக சேவைகள்ல ஈடுபாடு. வீணாக்கப்படுற உடைகள், பொருட்களை எல்லாம் ஃபிரண்ட்ஸோடு சேர்ந்து  சேகரிச்சு ஏதாவது அனாதை இல்லங்களுக்குக் கொண்டு போய்க் கொடுப்போம். காலேஜ் முடிச்சதும் ‘சேவைக் கரங்கள்’னு ஒரு என்.ஜி.ஓ ஆரம்பிச்சேன். டெக்னிக்கல் கோர்ஸ் ஒண்ணு முடிச்சதால  ஹெச்.சி.எல்ல வேலை கிடைச்சது. பிழைப்புக்கு வேலை... மனசுக்கு சேவைன்னு வாழ்க்கை போயிட்டிருந்தது.

எங்க குடும்பம் மிடில் கிளாஸ்தான். அப்பா பிசினஸ் செஞ்சிக்கிட்டிருந்தார். எனக்கு ஒரு அக்கா, ஒரு தம்பி. என்னோட சமூக சேவைகளை வெட்டி வேலைன்னு நினைக்காம இருக்கற மாதிரி பெ £ண்ணு கிடைக்கறது கஷ்டம்னு புரிஞ்சுது. அதனாலயே கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலை. அக்காவுக்கு அப்புறம் தம்பிக்கு கல்யாணம் முடிக்கச் சொல்லிட்டேன். என்.ஜி.ஓ சார்பா அடிக்கடி அனாதை  இல்லங்களுக்குப் போவேன்.

அங்க இருக்குற குழந்தைகளை என் குழந்தைகளா நினைச்சுப்பேன். ‘இதுதான் நம்ம குடும்பம்... இப்படித்தான் நம்ம வாழ்க்கை’ன்னு முடிவே பண்ணியிருந்தப்பதான்  தனலட்சுமியோட அறிமுகம் கிடைச்சது!’’ என்ற திலக்ராஜ் நிறுத்த, விட்ட இடத்திலிருந்து தனலட்சுமி தொடர்ந்தார்.

‘‘நான் சென்னை எஸ்.ஐ.இ.டி காலேஜ்ல எம்.ஏ டூரிஸம் - டிராவல் படிச்சிட்டு ஸ்டேண்டர்டு சார்ட்டட் பேங்க்ல வேலை பார்த்துட்டிருந்தேன். ஸ்கூல் காலத்திலேயே நேஷனல் சர்வீஸ் ஸ்கீம் வாலன் டியர். 17 வயசுல இருந்து ப்ளூ க்ராஸ் மெம்பர். சோஷியல் சர்வீஸ்னா முன்னாடி நிப்பேன். அப்படி ஒரு அநாதை இல்லத்துக்குப் போயிருந்தப்பதான் இவரை முதல்முதலா மீட் பண்ணினேன்.
‘ஹெச். ஐ.வி.யால பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பெரியார் நகர்ல ஒரு இல்லம் இருக்கு.

டைம் இருந்தா அங்க வாங்க’ன்னு திலக் நட்பா கூப்பிட்டார். சரின்னு ஒரு நாள் போனேன். பெத்தவங்க செஞ்ச தப்பால கொடூர நோய் தாக்கி பரிதாபமா துடிக்கிற அந்தக் குழந்தைங்க என்னை ரொம்ப பாதிச்சுட்டாங்க. என் வாழ்நாள் மொத்தத்துக்கும் சேர்த்து அன்னிக்கு அழுதேன். அதுல ஒரு குழந்தை, பிறந்து மூணு மாசம் கூட ஆகாத பிஞ்சு. அப்பா அம்மா அதை ஆதரவில்லாம போட்டுட்டுப் போயிட்டாங்க. ஆனா, சோதிச்சுப் பார்த்ததுல குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லைன்னு சொன்னாங்க. அந்தக் குழந்தை அவ்வளவு அழகு. நாமே இதை தத்தெடுத்து வளர்க்கலாமேன்னு தோணிச்சு.

ஆனா, கல்யாணம் ஆகாத பொண்ணுக்கு தத்துக் கொடுக்க சட்டம் இல்ல. ரொம்ப யோசிச்சேன். என்னை மாதிரியே சேவை மனப்பான்மை இருக்குற திலக் நிச்சயமா என் மனசைப் புரிஞ்சிக்கிற  கணவரா இருப்பார்னு தோணிச்சு. நேரா அவர்கிட்டயே போய் சொல்லிட்டேன். அவர் பதற்றப்படல... நல்லா யோசிச்சி முடிவெடுப்போம்னு சொன்னார். யோசிக்க... யோசிக்க... எனக்கு அவர்தான்  அவருக்கு நான்தான்கிற எண்ணம்தான் உறுதியாச்சு’’ என தனலட்சுமி பேச, திலக்கும் அவரோடு சேர்ந்தார்.

‘‘கல்யாணத்துக்கு சம்மதிக்காத பையன் சம்மதிச்சானேன்னு எங்க வீட்ல சந்தோஷம். ஆனா, தனம் சைடுல எக்கச்சக்க எதிர்ப்பு. அவங்க சம்மதத்துக்காக ரொம்பக் காத்திருக்க வேண்டியிருந்தது.  ரெண்டு மூணு முறை எங்க குடும்பமும் அவங்க குடும்பமும் சந்திச்சிப் பேசினப்புறம்தான் எல்லாம் சுமுகமாச்சு. ஆனா, அதுக்குள்ள நாங்க பெரிய இழப்பை சந்திச்சிட்டோம்’’ என திலக் சோகம் க £ட்ட, அதற்குள் தனலட்சுமி கண்கள் நனைந்துவிட்டன.

‘‘எங்க காதலுக்கு காரணமான அந்தக் குழந்தையை ஒரு வயசுக்குள்ளயே தத்துக் கொடுத்துடணும்னு அந்த ஹோம்ல உறுதியா இருந்தாங்க. அப்பதான் அது அம்மா அப்பாவா நினைச்சு வளரும் கிறது அவங்க பாயின்ட். எங்களுக்கும் அது புரிஞ்சது. ஆனா, எங்க கல்யாணம் எங்க கையில இல்லாத நிலைமையில எதுவும் செய்ய முடியல. கடைசியில எங்களை மாதிரியே ஒரு தம்பதி அந்தக்  குழந்தையைத் தத்து கேட்டு வர... நாங்க விட்டுக் கொடுத்துட்டோம். கல்யாணத்துக்குப் பிறகு கல்யாணக் களையையும் தாண்டி இந்த வருத்தம் எங்ககிட்ட தெரிஞ்சது. எங்களுக்குன்னு ஒரு குழந்தை  பிறந்தா வருத்தம் மறைஞ்சிடும்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா, எங்க குழந்தை 7ம் மாசமே பிறந்து 21 நாள்ல இறந்துடுச்சு’’ - கலங்கிய கண்களோடு திலக் இதைச் சொன்னபோது தனலட் சுமியின் உணர்வு நமக்குப் புரிந்தது.

‘‘இப்ப எங்களுக்கு ஒண்ணும் வருத்தமில்ல... திரும்ப அதே இடத்துல நிக்கறோம். அதே மனநிலை இருக்கு. ஒரு குழந்தையைத் தத்து எடுக்கறோம். அதுக்காகத்தானே சேர்ந்தோம். அந்த நோக்கம்  நிறைவேறப் போகுது. பிரசவம், குழந்தையோட இழப்புன்னு இப்ப தனத்துக்கு உடம்பும் மனசும் கொஞ்சம் சரியில்ல. கொஞ்சம் தேறட்டும்... ஆதரவற்ற குழந்தைன்னு முத்திரை விழாம ஒரு குழந் தையை எங்களால வாழ வைக்க முடியும்!’’ தீர்க்கமாகச் சொல்லி வழியனுப்பினார் திலக்ராஜ்.

காதல் எனப்படுவது யாதெனில்...

‘‘காதல் புனிதங்களின் கட்டவிழ்ப்பு...
நம் ஆளுமையின் விழிப்புணர்வு...
நிரந்தர தோழமைக்கான வலைவீச்சு...
காதல் சாதி கொல்லும் பாசக்கயிறு!’’

நிர்மலா கொற்றவை

காதல் எனப்படுவது யாதெனில்...

‘‘தனிமையில் சிரிப்பது
போர்வைக்குள் அழுவது
உள்ளங்கையில் பெயர் எழுதுவது
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒத்திகை
பார்ப்பது..!’’

ஒளிப்பதிவாளர் செழியன்

காதல் எனப்படுவது யாதெனில்...

‘‘அவன் அவளாகி
பின் அவள் அவனாகி
பின் அவனும் அவளும் அவர்களாகி
பின் அவர்கள் அவன் அவளாகி
பின் அவர்களே எல்லாமுமானது!’’

டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்