காதல் ஸ்பெஷல் : கவிஞர்கள் ரசித்த காதல் கவிதைகள்



நம்ம சினிமாவில் பாடல் என்றாலே காதல்தான் சப்ஜெக்ட். காதலைப் பிழிந்தெடுக்கும் பாடலாசிரியர்களுக்கே சில காதல் கவிதை வரிகள் கிளர்ச்சியூட்டியிருக்குமே..! ‘‘மற்ற கவிஞர்கள் எழுதிய கவிதைகளில் நீங்கள் ரசித்த வரிகளைச் சொல்லுங்களேன்’’ என இவர்களிடம் கேட்டோம். அவற்றைப் பகிர்கிறார்கள் இங்கே...

அண்ணாமலை

ஆலயத்தையும் முகப்பையும்
தாண்டி நீள்கிறது
பக்தர்களின் வரிசை
வாசலிலேயே
கிடைத்துவிடுகிறது
எனக்கு
உன் தரிசனம்!
- க.ரவிச்சந்திரன்

பழனிபாரதி


மொத்தத் தடாகத்திற்கும்
ஒற்றைத் தாமரை.
பார்த்து பார்த்து
மலர்ந்து கொண்டிருந்தேன்.
அவள் வந்து பூ விரும்பினாள்.
தவிர்க்க முடியவில்லை
கொய்து கொடுத்தேன்
இரு கை நிறைத்த தாமரையை
ஏந்தி அவள் நுகர்கையில்
அவளிடம் ஒரு தாமரை
தடாகத்தில் ஒரு தாமரை
தவிர
என்னிடமும் ஒன்று மலர்ந்திருந்தது
இப்போது.

 கல்யாண்ஜி

விவேகா


போகும்போது
உன்னுடன் கொண்டு வந்த
எல்லாவற்றையும்
எடுத்துக்கொள்கிறாய்.
ஆனால்,
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சி விடுகிறது.
நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்தும் இராத
அந்த இடம்.

- மனுஷ்யபுத்திரன்

பா.விஜய்


நீ என்
கவிதைகளை ரசிப்பதாகக்
கூறிய பிறகு
என் கவிதைகளெல்லாம்
உன்னை மட்டுமே
ரசிக்கத் தொடங்கி விட்டன.
படித்து முடிந்ததும்
கொடுத்ததைத்
திருப்பி வாங்கிக் கொள்வதற்கு
இது
புத்தகமல்ல
இதயம்
கை நழுவ
விட்டால்தான்
உடைந்து போகும்
என்பதற்கு
இது
கண்ணாடியல்ல
மனது
மாபெரும் கூட்டத்தின்
மத்தியிலும்
என் கண்கள்
கேட்டுக்கொண்டே
இருக்கின்றன...
நீ
எங்கிருக்கிறாய் என்று

- மு.மேத்தா

நா.முத்துக்குமார்


‘உன்னைத்தான் நினைத்துக்
கொண்டிருந்தேன்’
- உனது அந்தப் பொய்யில்
ஒரு வசீகரம் இருக்கிறது
ஒரு அழைப்பு இருக்கிறது
ஒரு கருணை இருக்கிறது
சமயத்தில் ஒரு முத்தத்திற்கு
நிகராக இருக்கிறது அது.
மற்றபடி உண்மையாகவே
யாரும் யாரையும்
நினைத்துக்கொள்ள வேண்டும்
என்று எந்த அவசியமும் இல்லை

- மனுஷ்யபுத்திரன்

கபிலன்

என்னை விட்டுவிட்டு
சாமிக்கு
மாலை போடுகிற உரிமை
உனக்கு
உண்டென்றால்
உன்னை விட்டுவிட்டு
வேறோர்
ஆசாமிக்கு
மாலை போடுகிற உரிமை
எனக்கும் உண்டுதானே!

- அறிவுமதி

மதன் கார்க்கி

காலந்தோறும் காதல்
காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார்- இன்னும்
அரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடியுன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி
சமய காலம்
வெண்ணிலவால் பொங்குதியோ
விரகத்தால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான் விடுக்கும்
பெருமூச்சால் பொங்குதியோ
பண்ணளந்த மால்வண்ணன்
பள்ளி கொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே

- வைரமுத்து