சமூகத்தை தலைகீழா மாத்துற சக்தி காதலுக்குதான் இருக்கு



மனித உரிமைக்கு எதிரான வக்கிரங்கள், ஜாதிய வன்முறைகள், கௌரவக் கொலைகள், காவல் சித்திரவதைகள், கொத்தடிமை கொடூரங்களுக்கு எதிராக தமிழகத்தில் ஒலிக்கும் குரல்களில் பிரதானமானது கதிர்-திலகத்தின் குரல்கள்.

இந்த காதல் தம்பதியை அடையாளப்படுத்த ‘எவிடென்ஸ்’ என்ற வார்த்தை போதும். மனித உரிமைத் தளத்தில் இணைந்து பணியாற்றிய தலித் சமூகத்தைச் சேர்ந்த கதிரையும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திலகத்தையும் இல்லறத்தில் இணைத்தது, முதிர்ச்சியான காதல். கடும் பாறைகளைக் கிளர்ந்து வேர் பரப்பிய அந்தக் காதலின் வெம்மை இன்றளவும் இருவரையும் சூழ்ந்து நிற்பதுதான் சுவாரஸ்யம்.

கதிருக்கு சொந்த ஊர் லால்பேட்டை. வளர்ந்தது விருத்தாசலத்தில். அப்பா வனத்துறை ஊழியர். ஏழ்மையும், அடக்குமுறையும் சூழ்ந்த வாழ்க்கை. திலகத்தின் குடும்பம் வசதியானது. அப்பா, கம்யூனிஸ்ட். ஊரில் பெரிய குடும்பம்.  ‘‘இரு வேறு நிலையில இருந்த எங்க ரெண்டு பேரையும் இணைச்சது ஒரே மாதிரியான சிந்தனைதான். தீண்டாமையையும், புறக்கணிப்பையும் நேரடியா அனுபவிச்சவன் நான். என்னோட அனுபவமும், என் நண்பர்களோட அனுபவமும்தான் என்னை இந்த தளத்துக்கு நகர்த்திக் கொண்டு வந்துச்சு.

அப்போ எனக்கு பத்து வயசு. ஒரு ஜாதிப் பஞ்சாயத்து, ரெண்டு பேரால கற்பழிக்கப்பட்ட என் உறவுக்காரப் பெண்ணுக்கு 80 ரூபாய் அபராதம் கொடுத்து வழக்கை முடிச்சு வச்சுச்சு. ஒரு டீக்கடை சேர்ல நான் உக்காந்ததுக்காக, தண்ணி ஊத்தி அதைக் கழுவி விட்டுட்டு, எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டு என்னைக் கூட்டிக்கிட்டு வந்தார் என் பெரியப்பா. இந்த மாதிரி பல சம்பவங்கள்... அடக்குமுறைக்கு உட்பட்டு பொருமிக்கிட்டே வாழ்ந்த எங்க பெரியவங்க, அடுத்த தலைமுறை இந்தக் கொடுமையில இருந்து வெளியே வரணும்ங்கிறதுல உறுதியா இருந்தாங்க. கடன்பட்டாவது எங்களைப் படிக்க வச்சாங்க. நாங்களும் அந்த உணர்வோட தான் வளர்ந்தோம்.

ஆனா, ஆண்டாண்டு காலமா முடங்கிக் கிடந்த ஒரு சமூகம் விழிப்பு வந்து எழுந்திருப்பதை மேல இருக்கவங்க விரும்பல. 8வது படிக்கும்போதே, ஜாதிக்கலவரத்துல பெட்ரோல் குண்டு வீசுனதா வழக்குப் போட்டு எங்களை போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வச்சாங்க. கல்லூரிக் காலத்தில ஜாதிய உணர்வைக் கடந்த சமூக உணர்வு மனசுக்குள்ள வந்துச்சு. கையெழுத்துப் பத்திரிகை, இலக்கியம், வாசிப்புன்னு நிறைய பயிற்சிகள் கிடைச்சுச்சு. என் மனசுக்கு உகந்த ஒரு வேலையைச் செய்யணும்ங்கிற உந்துதல்ல ‘மக்கள் கண்காணிப்பகத்துக்கு’ வந்தேன். அங்கேதான் திலகத்தைப் பாத்தேன். என்கவுன்ட்டர்கள், கொத்தடிமை மீட்பு, காவல் மரணம்னு நிறைய பிரச்னைகளை ரெண்டு பேரும் கையாண்டோம்.

என்னை விட சமூக அக்கறையும், கொடுமைகளுக்கு எதிரான கோபமும் திலகத்துகிட்ட இருந்துச்சு. பருவ வயதுக்குள்ள ஈர்ப்பா இல்லாம, மேம்பட்ட புரிதல் எங்களுக்குள்ள வந்த பிறகு, காதலைப் பகிர்ந்துக் கிட்டோம். முதல்ல காதலைச் சொன்னது நான்தான். திலகம் ஒரு புன்னகையால அதை ஏத்துக்கிட்டாங்க. முன்னைவிட உத்வேகமா வேலை செஞ்சோம். களம், எங்க காதலை வளர்த்துச்சு. பள்ளிப்பாளையத்துல 58 கொத்தடிமைகளை மீட்கப் போனபோது அங்கிருந்த ஆட்கள் என்னைக் கட்டி வச்சு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த முயற்சி செஞ்சாங்க. எல்லாரையும் அதிரச் செய்த அந்த சம்பவத்தை திலகம் சாதார ணமா எடுத்துக்கிட்டு, ‘நம்ம வேலையில இதுமாதிரி பல பிரச்னைகளைக் கடக்க வேண்டியிருக்கும். கலங்காதீங்க’ன்னு உற்சாகப்படுத்தினாங்க.

3 வருடங்கள் எங்க காதலை மனசுக்குள்ளயே பொத்தி வச்சு பாதுகாத்தோம். ‘வாழ்க்கையில இணைஞ்சா என்னென்ன விளைவுகள் வரும்? எதிரும் புதிருமா நிக்கிற இரண்டு சமூகங்கள் எங்களை எப்படி எடுத்துக்கும்? எதையெல்லாம் இழக்க வேண்டியிருக்கும்?’ எல்லாத் தையும் விவாதிச்சபிறகு குடும்பத்துக்கு சொன்னோம். எங்க வீட்டுல சந்தோஷமா ஒத்துக்கிட்டாங்க. திலகத்தோட அப்பா, இடதுசாரி சிந்தனையாளர். ஜாதி, மத உணர்வுகளைக் கடந்தவர். அவரும் என்னை ஏத்துக்க முன்வந்தார். ஆனா அவரோட உறவுகள் அவ்வளவு எளிதா அங்கீகரிக்கலே. பொருமலும் குமுறலும் எழத்தான் செஞ்சுச்சு. வெறும் 20 பேர் முன்னிலையில திருமணம் முடிஞ்சது.

திருமணம் எங்களுக்கு பெரும் பொறுப்புணர்ச்சியை உருவாக்குச்சு. அவமதிச்ச, அங்கீகரிக்க மறுத்த உறவுகளுக்கு முன்னாடி சகல புரிதல்களோட வாழ்ந்து காட்ட வேண்டிய கடமை உணர்ச்சியை காதல் ஏற்படுத்துச்சு. ஒரு கட்டத்துல மக்கள் கண்காணிப்பகத்துல இருந்து வெளியே வந்தேன். அடுத்து என்னன்னு தெரியாம தவிச்சேன். திலகம் கொடுத்த உத்வேகத்துலதான் ‘எவிடென்ஸ்’ அமைப்பைத் தொடங்குனேன். முன்னைவிட உற்சாகமா, களத்துக்குப் போனேன். 12 வருடங்களாச்சு. திலகத்தோட அருகாமைதான் என்னை இயங்க வைக்குது.

எங்க காதலுக்கு திலகம் கொடுத்த விலை அதிகம். திலகத்தோட சகோதரிக்கு நெடுநாள் திருமணம் முடியல. பார்க்க வந்த மாப்பிள்ளைகள் எல்லாம், ‘அக்கா ஊரறிந்த ஒரு தலித்தை திருமணம் செஞ்சுக்கிட்டதை’ கேள்விப்பட்டு விலகிப் போனாங்க. திருமணம் தடைபட அதுதான் காரணம்ங்கிறதைக் கூட திலகம் நெடுநாள் என் கவனத்துக்குக் கொண்டு வரல. அண்மையில எல்லாரும் சேர்ந்து, சீரும் சிறப்புமா அவங்க கல்யாணத்தை முடிச்சு வச்சோம்.

இன்னைக்கும் அவங்க ஊருக்கு என்னை அழைச்சுக்கிட்டுப் போகும்போது திலகத்துக்கு ஒரு பயம் இருக்கும். எப்பவும் அவங்க பார்வை என் மேலயே படிஞ்சிருக்கும். அந்த அக்கறை தான் காதல். ஜாதி, மதம், இனம்னு முள்வேலிகளால பாகுபட்டுக் கிடக்கிற இந்த சமூகத்தை தலைகீழா மாற்றிப் போட்டு புனரமைக்கிற சக்தி காதலுக்கு மட்டும்தான் இருக்கு. ஆனா, அதைச் சமூகக் குற்றமா சித்தரிச்சு இடையூறு செய்ய இங்கே நிறைய சக்திகள் முளைச்சுக்கிட்டிருக்கு. அந்த இடையூறுகளைக் கடந்து, முன்மாதிரி தம்பதிகளா வாழ்ந்து காட்ட வேண்டிய நெருக்கடி காதல் தம்பதிகளுக்கு இருக்கு.

ஒருத்தர் மேல ஒருத்தர் காட்டுற அக்கறை, மௌனத்தைக் கூட மொழிபெயர்த்து அறியிற புரிதல், யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத அன்பு, எந்த எதிர்ப்பையும் கடந்து நிக்கிற உறுதி... இதுலதான் காதலோட வெற்றி இருக்கு!’’ - உணர்ச்சிபூர்வமாகப் பேசுகிற கதிரை காதல் ததும்பப் பார்க்கிறார் திலகம். வெட்கப்பட்டுச் சிரிக்கிறான் 4ம் வகுப்பு படிக்கும் கவின் கணியன்.

காதல் எனப்படுவது யாதெனில்...

இசையமைப்பாளர் அனிருத்

இசையில் உள்ளவனுக்கு காதல் இல்லாமல் வேலை இல்லை. மனசிலிருந்து, ஆன்மாவிலிருந்து வர்ற இசைக்கு காதல்தான் அடிப்படை.

காதல் எனப்படுவது யாதெனில்...

நடிகர் அதர்வா

தைரியம், சந்தோஷம், நல்ல ஃபீலிங் எல்லாம் தருவது..! எனக்கு
ஃப்ரண்ட்ஷிப்புக்கு அடுத்தபடியான நல்ல மூவ்... காதல்தான்!

 வெ.நீலகண்டன்
படங்கள்: நம்பிராஜன்