காதல் ஸ்பெஷல் : காதல் apps



160 சி.சி அப்பாச்சியா இருந்தாலும் 220 சி.சி பல்சரா இருந்தாலும் அது 80 சி.சி ஸ்கூட்டிக்குப் பின்னாலதான் போகணும். அது மாதிரிதான் புதுசு புதுசா என்ன டெக்னாலஜி வந்தாலும், அது பல கோடி வருஷம் பழமையான காதலுக்கு உதவி செய்யிற சைடு கேரக்டராதான் இருக்கும். இன்றைய இளசுகளின் காதல் ஏரியாவுக்கு யூரியா போடும் ஹாட் ஆண்ட்ராய்டு ஆப்ஸ் இதோ...

காதலர்களுக்கு இடையே பொருத்தம் பார்க்கவே, மெரினா பீச் கிளி போல எக்கச்சக்க ஆப்கள் கடை விரித்திருக்கின்றன. லாஜிக்கே இல்லாமல் பெயரை வைத்து பொருத்தத்தை பர்சன்டேஜில் காட்டுவது, நியூமராலஜி அல்வா தருவது என்றிருக்கும் மற்ற ஆப்களுக்கு மத்தியில் இது ஓரளவு ஓகே! பெயர், பிறந்த தினம் மட்டுமல்லாமல்,

காதலர்கள் இருவர் பற்றியும் 60 வித கேள்விகளைக் கேட்கிறது இது. அதை வைத்து அவர்களின் ரசனைகளைக் கணக்கிட்டு மனவியல் ரீதியாக பொருத்தத்தைக் கணக்கிடுகிறது. மகிழ்ச்சி, நம்பிக்கை, நெருக்கம் என மூன்று விதத்தில் இங்கே பொருத்தம் பார்க்கலாம். இது தவிர, காதலியோடு சேர்ந்து விளையாட விளையாட்டுகளும் எஸ்.எம்.எஸ் அனுப்ப கணிவான வார்த்தை பிட்டுகளும் எக்ஸ்ட்ரா இணைப்பு!

காதலர்களுக்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோ ஃப்ரேம்கள் இதில் நூற்றுக்கணக்கில் உண்டு. கேமராவில் போட்டோ எடுக்கும்போதே நமக்குத் தேவையான ஃப்ரேமை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே எடுத்த போட்டோவையும் அழகான ஃப்ரேமுக்குள் வைத்து செதுக்கலாம்.

Tom loves angela

குழந்தைகளின் ஹீரோ டாக்கிங் டாமையும் அதன் பெண் பதிப்பு ஏஞ்சலாவையும் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இப்போது டாம், ஏஞ்சலாவை டாவடிக்கும் சீசன். ஏஞ்சலா வீட்டு பால்கனிக்கு சுவரேறி வரும் டாம், நாம் சொல்வதை அப்படியே ஏஞ்சலாவிடம் சொல்லும். அது ஏஞ்சலாவுக்குப் பிடித்திருந்தால் ரொமான்ஸ்... இல்லாவிட்டால் பளார்! நாமே ஏஞ்சலாவிடம் டாமுக்காக சாட் பண்ணவும் முடியும். தப்பித் தவறி டாமைத் தொட்டுவிட்டால் அது ஏஞ்சலாவுக்கு முத்தம் தந்து செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொள்ளும். காதலியோடு விளையாட இப்போதைக்கு நம்பர் ஒன் கேம் இதுதான்.

Fake call and sms

இந்த ஆப்பில் காதல் இல்லை என்றாலும் காதலர்களுக்கு இது சார்லி, தாமு ரேஞ்சுக்கு உதவுகிறது. நாம் விரும்பும் பெயரில் விரும்பும் நம்பரிலிருந்து நமக்கு கால் வருகிற மாதிரியும் எஸ்.எம்.எஸ் வருகிற மாதிரியும் இதன் மூலம் செய்ய முடியும். தேவையில்லாத மீட்டிங்கில் மாட்டிக் கொண்டால், ஒபாமாவிடமிருந்தே கால் வருவது போல ஃப்லிம் காட்டித் தப்பிக்க முடியும். ‘நைட் ஸ்டடிக்கு வா’ என நண்பனின் எஸ்.எம்.எஸ்ஸை வீட்டில் காட்டி விட்டு ஊர் சுற்றலாம். அலுவலகத்திலும் அர்ஜன்ட் கால் என பரபரப்பு காட்டி, டேட்டிங்கில் பங்சுவல் காட்டலாம்!

Finger print love scanner

இதுவும் பொருத்தம் பார்க்கிற மேட்டர்தான். ஆனால், கைரேகையை ஸ்கேன் செய்து விசேஷமாக உருவாக்கப்பட்ட அல்காரிதம் கொண்டு பொருத்தத்தை அறிவிக்கிறது என்கிறார்கள். ‘இது சும்மா ஜாலி விளையாட்டு தான். ரொம்ப எங்களை நம்பாதீங்க!’ என இந்த ஆப்பே ஆரம்பத்தில் சொல்லிவிடுகிறது. ஆனாலும் காதலர்கள் மத்தியில் இது சூப்பர் ஹிட்!

Love life 2

‘டிரெண்டுக்கு ஏத்த மாதிரி ஃபேஷனா இருக்கணும்... எல்லாரும் நம்மை விரும்பணும்... பார்ட்டி அது இதுன்னு எப்பவும் ஜாலியா இருக்கணும்... இதற்கெல்லாம்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா? அப்படியே வாழ்ந்துக்கோ’ என்கிறது இந்த ஆப். இங்கே நீங்கள் நடிகர், மாடல், பாப் சிங்கர் என உங்கள் கரியரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எல்லோரும் விரும்பும் வி.ஐ.பியாக வாழ்ந்து பார்க்கலாம். வேண்டிய உடைகளை கடைக்குப் போய் தேர்ந்தெடுத்து உடுத்தலாம், கேர்ள் ஃப்ரெண்டோ, பாய்
ஃப்ரெண்டோ... வேண்டியவர்களோடு பார்ட்டிக்குப் போகலாம். உங்கள் கனவு வாழ்க்கை இங்கே கேரன்ட்டி!

Touch me love you

‘அவ கிடைக்காட்டா என்ன? நினைவுகள்லயே அவளோட வாழ்ந்துடறேன்’ என்கிற 80’ஸ் ஹீரோக்களுக்கு ஏற்ற ஆப். கிட்டத்தட்ட இது ஒரு உருவமற்ற காதலிதான். குறிப்பிட்ட போட்டோவை அப்லோட் செய்து, நாம் விரும்பும் பெயரைக் கொடுத்துவிட்டால் போதும்... அதன் பின் தேவையானபோதெல்லாம் இந்த ஆப்போடு உறவாடலாம். செல்போன் ஸ்கிரீனைத் தொட்டாலே, ஆப் நம்மோடு காதல் மொழி பேசும். அடிக்கடி லவ் ப்ரபோஸ் பண்ணும். ஒரு அன்பு வார்த்தை, அக்கறையான அறிவுரை எப்போதும் இதனிடம் கிடைக்கும். மனிதர்கள் மாதிரி இல்லை!

-நவநீதன்