வீல் ஆர்ட்டில் ஜில் லாபம்!





நம்பிக்கைதான் வாழ்க்கை. வாசலில் கோலமிடுவதில் தொடங்கி, வாஸ்துப்படி வீட்டை அமைப்பது வரை எல்லாமே நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் செய்யப்படுகிறது. வீட்டின் முகப்பில் கண்ணாடியோ, குதிரையோ, சக்கரமோ வைத்தால் வீடு சுபிட்சமாகும் என்பதும் ஒருவிதமான நம்பிக்கை. ‘வாஸ்துவாவது, அதிர்ஷ்டமாவது’ என்பவர்கள், இவற்றை வீட்டை அழகுபடுத்தும் அலங்காரப் பொருட்களாக வைப்பதும் உண்டு. சென்னையைச் சேர்ந்த இந்து செய்கிற விதம்விதமான வீல் ஆர்ட்டை, நம்பிக்கையுள்ளவர்கள் வாஸ்து அடையாளமாகவும், நம்பிக்கை இல்லாதவர்கள் அலங்காரப் பொருளாகவும் வைக்கலாம்.



‘‘வீட்டுக்குள்ள நுழையறபோது, ஒருத்தரோட கவனம் மொத்தமும் குவியற மாதிரியான பொருள் வச்சா நல்லதுங்கிற நம்பிக்கை ரொம்ப காலமா உண்டு. அப்படி அறிமுகமானதுதான் இந்த வீல் ஆர்ட். ஒரு கைவினைக் கலையா இதை செய்ய ஆரம்பிச்சேன். வாஸ்துக்காகவும், அழகுக்காகவும் நிறைய பேர் வந்து வாங்க, இன்னிக்கு இது எனக்கு முழுநேர பிசினஸாவே மாறிடுச்சு’’ என்கிறார் இந்து.
மரம், கிளே, பெயின்ட், பிரஷ், பசை, பளபளா கற்கள், கிளிஞ்சல், சிப்பி, தட்டையான முத்துக்கள், வார்னீஷ்... இவ்வளவுதான் இந்த வீல் ஆர்ட் செய்யத் தேவையான பொருட்கள். ‘‘மரச் சாமான்கள் விற்கிற கடைகள்ல மரம் வாங்கி, நமக்குத் தேவையான டிசைனை வரைஞ்சு, அளவு சொல்லி கார்பென்டர்கிட்ட கொடுத்தா, அதே மாதிரி வெட்டிக் கொடுப்பாங்க. பெரிய சக்கரம் செய்யறதா இருந்தா 8 மிமீ தடிமனும், சின்னதுக்கு 4 மி.மீ தடிமனும் இருக்கற மாதிரி வெட்டி வாங்கணும். அதுக்குப் பிறகு நமக்குத் தேவையான டிசைன், டெகரேஷன், கலர் பண்ண வேண்டியதுதான். ஒரு முழுநிலா சைஸ் சக்கரத்தை முழுசா முடிக்க ஒரு நாளாகும். மீடியம் அளவை 2 நாட்கள்லயும், பெரிசை 3 முதல் 5 நாள்லயும் முடிக்கலாம்.

பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களோட வரவேற்புல இந்த வீல் ஆர்ட்டை பார்க்கலாம். அதனால ஹோட்டல்கள், காப்பரேட் கம்பெனிகள்ல பேசி ஆர்டர் பிடிக்க முடியும். மத்தபடி கிரகப்பிரவேசம், கல்யாணம், வரவேற்புன்னு எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் அன்பளிப்பா கொடுக்கலாம். இந்த வீல் ஆர்ட்டையே சாவிகளை மாட்டி வைக்கிற கீ ஹோல்டராவும் மாத்திக் கொடுக்கலாம்’’ என்கிறார் இந்து.
அதிர்ஷ்டச் சக்கரம் அழைக்கிறது. தயாரா?
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்