கமலின் மனசுக்குள்ளே





நான் வீழ்ந்தாலும் விதையாகத்தான் வீழ்வேன். மரமாக வளர்வேன். நான் தனி மரமாக அல்ல. சோலைவனமாகவே இருக்கிறேன்’’ என்றார் கமல். திரையுலகமே பரபரத்துக் கிடக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தின் எதிர்காலம் பற்றித்தான் எங்கே பார்த்தாலும் பேச்சு. அதற்கும் முன்பாக கமலின் பொருளாதாரம் பற்றித்தான் அனேகம் பேர் மறைமுகமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

கமலே சொல்லிக்கொண்ட மாதிரி அவர் திறமைசாலிதான்; சாமர்த்தியசாலி கிடையாது. எல்லாவற்றையும் கைமீறிப் போகாமல் வைத்துக்கொள்கிற பழக்கமும் கிடையாது. சர்வதேச நூலிழையில் பின்னப்பட்ட ‘தசாவதாரம்’ படத்துக்குப் பிறகு அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அமையவில்லை. ‘விஸ்வரூபம்’ அதை சாதிக்கும் என அவர் நம்பினார். இந்த முதலீட்டுக்கு நியாயமான வெற்றி கிடைக்கும் என படத்தை இழைத்து இழைத்துச் செய்தார். இதற்கு முன்பு கமல் படத்திற்கு இல்லாத செலவு இது. பிவிபி நிறுவனத்திற்கு என படத்தை ஆரம்பித்தவர், செலவு கைக்குள் அடங்காமல் போகவே, தானே படத்தை ஏற்றுக்கொண்டார். கமலின் பதற்றங்களுக்கும், இந்த நாட்டை விட்டு வெளியேறத் தயார் என உதடுகள் துடிக்கச் சொன்னதற்கும், ‘இந்தப் படம் தப்பு செய்தால் எழுந்திருக்க முடியாத அளவுக்குப் போய் விடுவோமோ’ என்கிற பின்னணியும் காரணம். ஆனால் இதுதான் கமலின் தைரியம். ஆரம்பத்திலிருந்தே அவரிடம் இருக்கிற தைரியம்.

‘‘சிந்திக்கிறதுதான் நம்ம வேலையே. நாம சிந்திக்க மறந்துட்டா அப்புறம் நம்பள வண்டியில கட்டி குதிரையா ஓட்டிடுவாங்களே! சேணத்தையும் போட்டு ரொம்ப ஈசியா வண்டியில பூட்டிடுவாங்க. சிந்திக்கத் தெரிஞ்சதாலதான் வண்டியில கட்டப்படாமல் நாம வண்டியை ஓட்டிட்டு இருக்கோம்! அதனால் சிந்திக்க வேண்டியது என் கடமை’’ என ஒரு பேட்டியில் சொன்னார் கமல். இந்த வேட்கைதான் படங்களை வேறு தரத்திற்குக் கொண்டுபோகும் உயரத் துக்கு அவரைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. சில விஷயங்களை அவசரத் தில் அவர் சொல்வதாகக் கூட தோன்றலாம். ஆனால் அதிலும் லாஜிக் இருக்கும். இந்தப் படத்திற்கு எழுந்த எதிர்ப்பின் தீவிரத்தை அவரது மனதால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘‘எனக்கு மதம் இல்லை, அன்பைத்தான் கடவுளாக ஒப்புக் கொள்கிறேன். என் கடவுளை நான் உணர்ந்துவிட்டேன்’’ என சொன்னவர், இப்படி ஒரு எதிர்ப்பைத் தாங்குவதற்கு பழகிக்கொள்ள முடியவில்லை.

கமல் எந்த வியாபாரமும் செய்ததில்லை, கல்யாண மண்டபம் கட்டி நிரந்தர ‘வருவாய்’ பார்த்தவரும் கிடையாது. அவருக்கு எதிர்ப்பு ஒன்றும் புதிது அல்ல. ‘சண்டியர்’ என்ற பெயருக்கு எழுந்த சர்ச்சையில் அதை விருப்பம் இல்லாமல் ‘விருமாண்டி’ ஆக்கியவர். ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ என ஆங்கிலப் பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியபோது, ‘என் தமிழ் உணர்வை யாரும் சந்தேகப்பட முடியாது’ என முரண்டு பிடித்தார். ‘ஹே ராம்’ படம் இரண்டு தரப்பினரின் எதிர்ப்பையும் சம்பாதித்தது. ‘இந்துத்வக் கோட்பாட்டை கொச்சைப்படுத்துகிறார்’ என சங் பரிவாரங்கள் சங்கு ஊத, ‘காந்தியை தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறார்’ என காங்கிரஸ் வரிந்து கட்டியது. படம் வெளிவந்தபிறகு இதை அசட்டுத்தனமாக அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். ‘ஹேராமி’ன் தோல்வியே அங்கேதான் ஆரம்பித்தது என ஒப்புக்கொண்ட மனது உடையவர் கமல்.

ஒரு தடவை ஒரு பேட்டியில் கமல் சொன்ன கதை இன்னும் கமலின் மனதை தெளிவாக உணர்த்தும். ‘‘கோடி ரூபாய் இருந்தா என்ன பண்ணுவேன்னு ஒரு பூசாரிகிட்டே கேட்டாங்க. ‘தங்கத்துலயே கோயில் கட்டுவேன்’னார் அவர். ஒரு ஆண்டிகிட்டே  கேட்டா, ‘தங்கத்துல ஒரு திருவோடு, அப்படியே திண்ணையில் படுக்க, தங்கத்துலயே ஒரு தலைகாணி’ன்னுதான் சொன்னான். புத்தி அப்படித்தான் போகும். நானும் அப்படித்தான். நான் சினிமா ஆள். இன்னும் பெரிசா, இன்னும் புதுசா, இன்னும் அடுத்த லெவலுக்கு போகத்தான் பிரியப்படுவேன்’’ என்றார் கமல். அதுதான் நடந்தது. இந்தத்தடவை இதற்கு கமல் கொடுத்த விலைதான் அதிகம்.

இதற்கு முன்னர் ஆரம்பித்த ‘மர்மயோகி’யும் உயிர்பெறவில்லை. அந்த சமயமே கையில் இருந்த ஸ்கிரிப்ட்தான் ‘விஸ்வரூபம்’. பணம் நிறைய வேண்டியிருக்கும் என்ற ஒரே காரணத்திற்காகவே தயாரிக்கிற ஆசையை மனசிற்குள் வைத்துப் பூட்டியிருந்தார் கமல். பி.வி.பி கணிசமாக பொறுப்பு ஏற்கவே, படத்தை ஆரம்பித்தார் கமல். சகோதரர் சந்திரஹாசனும், கௌதமியும் பெரும் உதவியாக இருந்தார்கள். எழுதிய ஸ்கிரிப்ட் படிதான் படத்தை எடுத்தார். ‘எழுத்துரிமை இவ்வளவு காட்சிப்பொருளாகும்’ என்பது அவர் எதிர்பார்க்காதது. தணிக்கையில் யாரும் ஆட்சேபணை எழுப்பவில்லை. எழுந்து நின்று, ‘‘நல்ல படம் எடுத்திருக்கீங்க சார்’’ என கை கொடுத்தார்கள். அப்புறம் ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, தாலிபன் என படத்திற்கு முன்னால் எழுந்த பேச்சுதான் எதிரியாக வந்து நின்றது.
‘விஸ்வரூபம்’ வெறும் பட ரிலீஸ் அல்ல. இது கமலின் வாழ்க்கை சார்ந்தது. தனது அக்கறை சார்ந்த இந்த சினிமாவிற்கு யார் மேலும் பந்தயம் கட்டாமல் தானே விளையாடினார். ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘தேவர்மகன்’ போன்ற படங்கள் கூட இப்போதைய சூழலில் எடுத்திருந்தால் வெளிவந்திருக்க முடியாது என்ற ‘பச்சை உண்மை’ கூட கலைஞன் கமலுக்குத் தெரியவில்லை என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

தனியாக இருக்கிறார் கமல். கமலின் ஆத்மார்த்த நண்பர்கள் தவிர, அவருக்கு பெரிய சம்பாத்தியம் எதுவும் கிடையாது. மக்களை சந்தோஷப்படுத்திய அளவுக்குக்கூட அவர் சந்தோஷமாக இல்லை என்பதுதான் உண்மை. இது அவராகவே விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கைதான். அதற்காக கமல் பாமரன் கிடையாது. சினிமாவையே வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டதால் வந்த விளைவுதான் இது. இதற்கு முன்னாலும், ‘அவர் கடனில் தவிக்கிறார்’ என செய்திகள் பரவின. ‘‘இப்போது கூட நான் ‘ஆடி’ காரில்தானே போகிறேன்’’ என்றார். ‘இப்போது கூட’ என்ற வார்த்தையைத் தான் கவனிக்க வேண்டும். ‘இது வரைக்கும்’ என்றுதான் அதற்கு அர்த்தம். கெட்டிக்காரத்தனமான வாதங்களுக்கு இங்கே பஞ்சம் கிடையாது; கெட்டிக்காரர்களுக்கும் பஞ்சம் கிடையாது. ஆனால், கமல் மாதிரியான நல்ல கலைஞனை காப்பாற்ற வேண் டிய பொறுப்பு தமிழனுக்கு இருக்கிறது.   
- நா.கதிர்வேலன்