ஒருதலை ராகம் ரூபா இப்போது...





‘வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது...’ என ‘ஒரு தலை ராகமாக’ சங்கர் யாருக்காக உருகி உருகிப் பாடினாரோ, அதே ரூபாதான். ஹப்பா... நம்பவே முடியவில்லை. பழைய ரூபாவின் அடையாளம் வற்றாமல் இளமை தொற்றிய அதே முகம். தெலுங்கு சினிமா, திருமணம் என்று ஆந்திராவில் தஞ்சமடைந்த ரூபா, நீண்ட பல வருடங்களுக்கு பிறகு கோடம்பாக்கத்தில். பரஸ்பரம் நல விசாரிப்புடன் தொடங்கியது ரூபாவுடனான உரையாடல்...

‘‘அப்பா ரகுராமையாவும், அம்மா லட்சுமிதேவியும் ஒரு காலத்தில் கன்னட சினிமாவில் ஃபேமஸ். அப்பா பத்மஸ்ரீ விருது வாங்கினவர். நான் வளர்ந்தது, படிச்சதெல்லாம் சென்னையிலதான். பி.ஏ வரலாறு படிக்கும்போது பத்மா சுப்ரமணியம் அம்மாகிட்ட பரதம் கத்துக்கிட்டேன். ‘எங்கிட்ட டான்ஸ் கத்துக்க வர்ற பொண்ணுங்கள்லாம் சினிமாவுக்கு போயிடுறாங்க. நீயும் போயிடாதே’ன்னு ஒரு கண்டிஷனோடதான் அவங்க கிளாஸ் எடுத்தாங்க. எனக்கும் சினிமா ஆசை இருந்ததில்ல. ஆனா சூழ்நிலை... வேற மாதிரி ஆயிடுச்சு’’ என்று பேச்சைத் தொடங்கிய ரூபா, மெல்ல தன் சினிமா பிரவேசத்துக்குள் பிரவேசித்தார்.

‘‘ஆரம்பத்துல தெலுங்குல ஒரு ஆர்ட் ஃபிலிம்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. அதுல என் நடிப்புக்கு பாராட்டு கிடைச்சதால மனசில சின்னதா சினிமா ஆசை எட்டிப் பார்த்துச்சு. எங்கேயோ என்னோட போட்டோவ பார்த்துட்டு ‘ஒருதலை ராகம்’ வாய்ப்பு வந்துச்சு. டி.ராஜேந்தர் சார் சொன்ன கதை பிடிச்சதால நடிக்க சம்மதிச்சேன். பாட்டும் படமும் அப்படியொரு ஹிட்டாகும்னு எதிர்பார்க்கல. அடுத்தடுத்த வாய்ப்புகள்.

‘வசந்த அழைப்புகள்’, ‘ஆடுகள் நனைவதில்லை’ன்னு பதினைஞ்சு படங்களுக்கு மேல தமிழ்ல பண்ணினேன். அதே நேரத்தில் கன்னடம், தெலுங்குன்னு மற்ற மொழிகளிலும் பிஸியாகிட்டேன். மதுவை கல்யாணம் பண்ணின பிறகு சினிமாவில் நடிக்கறதை விட்டுட்டேன். அப்புறம் பையன் பொறந்தான். குடும்பத்துக்காக நம்மளை அர்ப்பணிக்கிறதில் உள்ள ஆனந்தம் அற்புதமானது. மகன் நிஷாந்த் கொஞ்சம் வளர்ந்ததும் சீரியல்கள்ல நடிச்சேன். 7 நந்தி அவார்டுகள் கூட வாங்கியிருக்கேன். நிஷாந்த் இப்போ எஞ்சினியரிங் ஃபைனல் இயர். அவனுக்குன்னு ஒரு பக்குவம் வந்துட்டதால மறுபடியும் நடிக்கலாம்னு தோணுச்சு. தெலுங்குல ‘கிருஷ்ணம் வந்தே ஜெகத் குரும்’ படத்துல ஒரு நல்ல கேரக்டர் பண்ணியிருக்கேன்.’

‘‘தமிழ்ப் படங்களில் நடிக்கிறீங்களா?’’
‘‘ஆந்திராவில் இருந்தாலும், அடிக்கடி இங்க வர்றதுண்டு. கோயில்களுக்கு போறதுன்னா எனக்கு அவ்வளவு ப்ரியம். திருப்பதி, திருவண்ணாமலை, சிதம்பரம், ஸ்ரீரங்கம்னு ஆன்மிகப் பயணம் கிளம்பிடுவேன். அப்படி வந்த நேரத்தில் தமிழ் சினிமா வாய்ப்புகள் வந்திருக்கு. சசிகுமார் படத்துல கூட வாய்ப்பு வந்துச்சு. இன்னும் எதுவும் முடிவாகலை. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்னா மட்டும் நடிப்பேன். பார்ப்போம்.’’

‘‘ ‘ஒரு தலை ராகம்’ நினைவு இருக்கா?’’
‘‘ம்... மறக்க முடியுமா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிதம்பரம் கோயிலுக்கு போனப்போ. மாயவரத்துக்கு போகணும்னு ஆசை வந்துடுச்சு. அங்கதான் ‘ஒருதலை ராகம்’ ஷூட்டிங் நடந்துச்சு. ஏ.வி.சி காலேஜ், நாங்க தங்கியிருந்த லாட்ஜ்னு எல்லா இடங்களையும் போய்ப் பார்த்தேன். நிறைய மாறிடுச்சு. ஆனாலும் பழைய நினைவுகள் எனக்குள்ள புகுந்து ஆனந்தக் கண்ணீர் வர்ற அளவுக்கு உருகிட்டேன். டி.ராஜேந்தர், உஷா எல்லாரையும் பார்க்க ஆசையா இருக்கு.’’

‘‘உங்க காலத்தில் முக பாவங்கள் பேசிச்சு. இன்றைய ஹீரோயின்கள் எப்படி?’’
‘‘புதுசா வர்றவங்க டேலன்ட்டாவே இருக்காங்க. ‘அங்காடி தெரு’வில் அஞ்சலியின் நடிப்பு ரொம்பப் பிடிச்சிருந்தது. அனுஷ்கா, நயன்தாரான்னு எல்லாருமே நல்லா நடிக்கிறாங்க. பிரபுசாலமனோட ‘மைனா’, ‘கும்கி’ படங்களை பார்த்தேன். ரொம்ப அழகா பண்றார். நான் நடிக்க ஆரம்பிச்சதிலிருந்து இப்ப வரைக்கும் டைரக்டர்ஸ்தான் நிஜமான ஹீரோக்கள்னு சொல்வேன். தமிழ் டெக்னீஷியன்கள் மீது எனக்கு தனி மரியாதை உண்டு.’’
வெல்கம் ரூபா!
- அமலன்
படங்கள்:புதூர் சரவணன்