குறை



‘‘பையனுக்கு வர்ற இடத்தையெல்லாம் தட்டிக் கழிக்காதீங்கம்மா. கல்யாணத்துக்கு காலம் அமைஞ்சு வரும்போதே முடிச்சுடணும்!’’ என்பார் தரகர். ஆனால் லட்சுமி அம்மாளோ ஆயிரம் குறை சொல்வாள்.‘‘பொண்ணுக்கு இருவத்தி மூணா? வயசு அதிகமா தெரியுதே?’’‘‘23 அதிக வயசா?’’

‘‘ஆமாம். என் பையனுக்கு 24தானே? கொஞ்ச நாள்ல அவ இவனுக்கு அக்கா மாதிரி தெரிய ஆரம்பிச்சிடுவா! சரிப்படாது, வேற இடம் பாருங்க!’’ என்பாள்.‘‘பொண்ணு கறுப்பா இருக்காளே...’’‘‘இந்தப் பொண்ணு ரொம்பக் குள்ளமா இருக்காளே...’’‘‘பொண்ணுக்கு கூடப் பிறந்தவங்கன்னு யாரும் இல்லையா? நாளைக்கு மாமனார், மாமியாரை என் பையன்தான் தூக்கி சுமக்க வேண்டி வரும். வேற இடம் பாருங்க!’’ - இப்படியே பல காரணங்கள் சொல்வாள்.
காலம் ஓடியது.

‘‘தரகரே, கொஞ்சம் மனசு வைங்க. பொண்ணுக்கு என்ன வயசா இருந்தாலும் பரவால்ல. வேற ஜாதியா இருந்தாலும் பரவால்ல. கலர்கூட பரவாயில்ல. எப்படியாவது முடிச்சுடணும். இந்த இடத்தை முடிச்சுக் கொடுங்க!’’ - லட்சுமி அம்மாளேதான் இப்படிச் சொன்னாள்.

தரகர் அதை மதிக்கவில்லை. ‘‘இந்த இடம் செட்டாகாதும்மா. பையனுக்கு 36 வயசாச்சு. பொண்ணுக்கு சித்தப்பா மாதிரி இருக்கும்னு சொல்றாங்க. வேற இடம் பாருங்க!’’ என்றார் அவர்.இடையில் 12 ஆண்டுகள் கடந்திருந்தன.      
                   

எஸ்கா