நேர்மையின் விலை உயிர்



நேர்மையையும் அறத்தையும் நீதியையும் உண்மையையும் சொல்லிச் சொல்லி பிள்ளைகளை வளர்த்த மண்ணில், ‘நேர்மையாக இருக்காதீர்கள். ஏனெனில், நேராக இருக்கும் மரம்தான் முதலில் வெட்டப்படும்’ என வாழ்க்கைத் தத்துவம் கற்பித்து, நெளிவு சுளிவுகளைத் தெரியப்படுத்தி வளர்க்கிறோம்.

 மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நேர்மையாகக் கடமையைச் செய்வது என்பதே உயிருக்கு ஆபத்தான விஷயமாக இந்த மண்ணில் மாறிவிட்டது. சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமடைந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா, இதற்கு கசப்பான உதாரணமாகி இருக்கிறார்.

போலீஸ் பயிற்சி முகாமில் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுக்கும் அளவுக்கு ஆர்வமான அதிகாரியாக இருந்தவர். ‘நாம் செய்வது மிக உன்னதமான ஒரு பணி. மக்களைக் காக்கும் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம். எந்த சூழலிலும் நேர்மை தவறக்கூடாது. எவ்வளவு தடைகள் வந்தாலும் தன்னம்பிக்கையோடு போராடித் தகர்க்க வேண்டும்’ என பயிற்சியாளர்களிடம் முழங்கியவர்.

‘இந்த வேலைக்கு நான் பொருத்தம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொள்வது எவ்வளவு பெரிய முரண்? டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது என்பது கிட்டத்தட்ட சிவில் சர்வீஸ் தேர்வு போன்ற கடினமான விஷயம். அதில் தேர்ச்சி பெற்று காக்கி உடை அணிந்தவர், எப்படியாவது இதிலிருந்து விடுபட வேண்டும் என திரும்பவும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத முயன்றது ஏன்?

சென்சிடிவ்வான கோகுல்ராஜ் கொலை வழக்கில், ‘சம்பந்தம் இல்லாதவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கட்டாயப்படுத்துகிறார்கள்’ என தோழிகளிடம் புலம்பியிருக்கிறார். உயர் அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடிகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் விஷ்ணுப்பிரியா.

அரசுத் துறைகளில் ‘நேர்மை’ என்பது டைனோசர் காலத்து வார்த்தையாகிவிட்டது. ஒருவர் நேர்மையாக இருக்க விரும்பினாலும், அவர் அதிகாரத்தின் எந்தப் படிநிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து அவரது நேர்மைக்கு சோதனைகள் ஏற்படும். அதிலும் காவல்துறையில் இந்த சோதனையைத் தாங்கும் வலிமை சிலருக்கே இருக்கும். கீழ்நிலையில் இருக்கும் ஒரு அலுவலர், தனக்கு மேல்நிலையில் இருக்கும் அலுவலருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என ஒரு பட்டியலே உண்டு. ‘நான் நேர்மையானவன். என்னால் இதைச் செய்ய முடியாது’ எனச் சொல்லிவிட்டு இருந்துவிட முடியாது. கீழ்நிலையில் நேர்மை காட்டினால் சுட்டெரித்து விடுவார்கள். மேலதிகாரி என்றால் எள்ளி நகையாடுவார்கள்.

சில நியதிகளை இங்கே மாற்ற முடியாது. மாதா மாதம் செய்ய வேண்டியது என சில ‘கடமைகள்’ ஒவ்வொரு துறையிலும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன, குறுநில மன்னர்கள் கப்பம் கட்டுவது போல! ‘பங்களா செலவு’ என ஒன்று சொல்வார்கள். உயர் அதிகாரிகள் தனியாகவோ, குடும்பத்துடனோ வந்து தங்கினால் செய்யும் செலவுகள். பல ஊர்களில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சின்ன ஹோட்டலில்கூட ஐயாயிரம் ரூபாய்க்கு அக்கவுன்ட் இருக்கும். ஊரே மிரளும் இன்ஸ்பெக்டரை, ‘‘இதுக்கு மேல ஒரு காபிகூட தர முடியாது. பழைய பாக்கியை செட்டில் பண்ணுங்க’’ என்று கூனிக்குறுக நிற்க வைப்பார்கள். தங்கள் சம்பளத்தையே இப்படி அத்துமீறல் உயரதிகாரிகளுக்கான செலவுகளில் இழந்து தவிப்பவர்களும் உண்டு. 

‘‘என் கைகளைக் கறைப்படுத்திக்கொள்ள மாட்டேன். மேலே கேட்பவர்களுக்கு நீங்கள் எதையாவது பார்த்துச் செய்யுங்கள்’’ என தங்கள் கண்ணெதிரே நடக்கும் வசூலைக் கண்டுகொள்ளாமல் புழுங்குவார்கள் சில அதிகாரிகள். அல்லது, முக்கியத்துவம் இல்லாத நாற்காலிகளுக்கு தங்களை நகர்த்திக்கொள்வார்கள். சிலர் நகர்த்தவும் படுவார்கள். தென் மண்டல ஐ.ஜி.க்கும், மாநகரப் போக்குவரத்துக் கழக பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் ஒரு ஐ.ஜிக்கும் ஒரே சம்பளம்தான்; ஒரே மாதிரி அலவன்ஸ்கள்தான்.

ஒரே தகுதிகள்தான். ஆனால் அதிகாரம் மட்டும் வித்தியாசப்படும். எல்லா துறைகளிலும் இப்படி நவீனமயமாக்கப்பட்ட ‘தண்ணியில்லாக் காடு’கள் உண்டு.
இதையெல்லாம் தாண்டி உறுதியோடு போராடுகிற சகாயம் போன்றவர்களை ‘விளம்பரப் பிரியர்கள்’ என தயவு தாட்சண்யமின்றி சொல்கிற விமர்சகர்களைப் பெற்றிருக்கும் பாக்கியம் நமக்கு உண்டு. நேர்மையாக இருப்பதற்கு சகாயம் கொடுத்த விலை, இருபதுக்கும் மேற்பட்ட டிரான்ஸ்பர்கள்! விஷ்ணுப்பிரியா கொடுத்திருக்கும் விலை, அவரது உயிர்!

இளவரசர் மரணம்!

33 என்பது ஹார்ட் அட்டாக்கில் இறக்கிற வயதல்ல! துபாய் மன்னரின் மூத்த மகன் ஷேக் ரஷீத் பின் முகமது கடந்த சனிக்கிழமை இறந்துவிட்டார். இங்கிலாந்தில் படித்தவர், துடிப்பான இளைஞர், விளையாட்டு வீரர், அரபு எமிரேட்ஸின் ஒலிம்பிக் கமிட்டி தலைவராக இருந்தவர், பந்தயக்குதிரைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியவர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர் என அத்தனை பெருமைகளும் அவரோடு மறைந்துவிட்டன.

மன்னரின் மூத்த மகன் என்பதால், துபாய் இளவரசர் பொறுப்புக்கு இவர்தான் முதலில் வந்தார். ஆனால் பல சர்ச்சைகள் சூழ்ந்ததால், சில ஆண்டுகளுக்கு முன்பு இவரை நீக்கிவிட்டு இவரது தம்பியை இளவரசர் ஆக்கினார் மன்னர். இப்போதுகூட, ‘அவர் ஹார்ட் அட்டாக்கில் இறக்கவில்லை. ஏமன் நாட்டின் கிளர்ச்சியாளர்களோடு அரபு எமிரேட்ஸ் படை போர் நடத்துகிறது. அந்தப் போரில்தான் அவர் இறந்தார்’ என வதந்தி ஒரு பக்கம் கிளம்பியிருக்கிறது.

- அகஸ்டஸ்