மைக்ரோசாஃப்ட் இந்தியர்!



‘‘புதுமையின் மீது ஆர்வமும் கற்றுக்கொள்வதில் தாகமும் கொண்டவன் என என்னைச் சொல்லலாம். என்னால் படிக்க முடிந்ததைவிட அதிக புத்தகங்களை நான் வாங்குகிறேன். என்னால் கற்க முடிவதைவிட அதிக ஆன்லைன் வகுப்புகளில் நான் சேர்கிறேன்.

புதிய விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை என்றால், உன்னதமான வேலைகளையோ, பயனுள்ள வேலைகளையோ உங்களால் செய்ய முடியாது என நான் நம்புகிறேன்’’ - இப்படி தன்னைப் பற்றி அறிமுகம் தருகிறார் சத்யா நாதெள்ள. உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கும் இந்தியர்.

சத்யாவைவிட அதிக சம்பளம் வாங்கும் இந்திய ஐ.டி நிறுவனத் தலைவர்கள் உண்டு. சத்யாவின் ஆண்டுச் சம்பளம் ஏழரை கோடி ரூபாய். ‘டி.சி.எஸ்’ சந்திரசேகரன் (ரூ.11.6 கோடி), ‘ஹெச்.சி.எல்.’ வினீத் நாயர் (ரூ.8.42 கோடி), ‘ஐகேட்’ அசோக் வேமுரி (ரூ.8.17 கோடி) என இங்கேயே பலர் வாங்கினாலும், சத்யாவின் பெருமைகள் வேறு! மைக்ரோசாஃப்ட் என்பது கம்ப்யூட்டரை உலகுக்கே கொடுத்த முதன்மை நிறுவனம். சத்யாவுக்கு முன் இந்தப் பதவியில் இருந்தவர்கள் இரண்டே பேர்தான். இருவருமே அமெரிக்கர்கள். இப்போது அந்த நிறுவனத்தை மட்டுமில்லை... டெக்னாலஜி கருவிகளின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கப் போகிறவராக சத்யா இருக்கிறார்.

ஆமையை முயல் முந்திய கதையாக ஆகிவிட்டது மைக்ரோசாஃப்ட்டின் நிலைமை. கம்ப்யூட்டர்களின் ஜாம்பவானாக அந்த நிறுவனம் இருந்தது; இருக்கிறது. ‘அடுத்த கட்ட தொழில்நுட்பப் புரட்சியாக ஸ்மார்ட் போன்களும், டேப்லட்டுகளும் இருக்கும். அவை கம்ப்யூட்டர் பயன்பாட்டையே புரட்டிப் போட்டுவிடும்’ என்பதையும் முன்கூட்டியே அந்த நிறுவனம் கணித்தது. ஆனால் அதில் முன்னணி வகிக்கத் தவறி விட்டது.

முதுமையின் சுவடுகள் தன் மீது படிவதை உணர்ந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பதவியிலிருந்து இறங்கினார். ஸ்டீவ் பால்மர் அடுத்து வந்தார். அவர் மிகச் சிறந்த வியாபாரி. ஆனால் டெக்னாலஜி விஷயங்களில் அனுபவம் குறைவு. இதனால் நிறுவனம் இன்னும் தடுமாறியது. வேறு வழியின்றி அவர் ராஜினாமா முடிவை அறிவிக்க, சுமார் ஆறு மாதங்களாக டெக்னாலஜி உலகில் சல்லடை போட்டுத் தேடி பில் கேட்ஸ் கண்டெடுத்த முத்து, நம் சத்யா.

‘‘சத்யாவிடம் அபாரமான எஞ்சினியரிங் திறமை இருக்கிறது. நிறுவனத்தின் பிசினஸ் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான பார்வை இருக்கிறது. எல்லோரையும் ஒருங்கிணைக்கும் பண்பு இருக்கிறது’’ என புகழ்கிறார் பில் கேட்ஸ். அது மட்டுமில்லை... நிறுவனத்தின் சேர்மன் பதவியிலிருந்து இப்போது பில் கேட்ஸ் விலகுகிறார். சத்யாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக புது வேலையில் சேரப் போகிறார்.

46 வயது சத்யா, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் 22 ஆண்டு களாகப் பணிபுரிகிறார். இந்தியாவில் அவர் கல்லூரிப் படிப்பை முடித்த காலத்தில் ‘சன் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும்’ என்பதே பெரும்பாலான ஐ.டி. இளைஞர்களின் கனவாக இருந்தது. அப்போது சன் கம்ப்யூட்டர்ஸ் பெரிய நிறுவனம். ஆனால், ‘மைக்ரோசாஃப்ட் நிறுவனம்தான் எதிர்காலத்தில் பிரமாண்டமாக வளரும்’ என ஒரு மாணவனாக இருந்தபோதே கணித்தவர் சத்யா.

ஸ்டீவ் பால்மர் பதவிக்கு வந்தபோது ‘‘எனக்கு நிறைய டெவலப்பர்கள் வேண்டும்’’ என்று அறைகூவல் விடுத்தார். புதிது புதிதான புரோக்ராம்கள் மூலம்தான் நிறுவனம் வளர முடியும் என நினைத்தார். ஆனால் சத்யாவின் மந்திரம், ‘புதுமை’. இவர் பதவியேற்ற பிறகு நிறுவனத்துக்குள் புழங்கும் ஒவ்வொரு மெயிலிலும் ‘இன்னோவேஷன்’ என்ற வார்த்தை ஏராளமான முறை இடம் பெறுகிறது.

சத்யாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் பிடிக்கும். திறமையும், யுக்தியும், விசாலமான அறிவும் இருப்பவர்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிகிற விளையாட்டு அது! ‘‘டீம் ஒர்க், தலைமைக்குணம் இரண்டையும் நான் இந்த ஃபார்மேட் கிரிக்கெட்டில்தான் கற்றுக் கொண்டேன்’’ என்கிறார் சத்யா. டெஸ்ட் கிரிக்கெட் போலவே மைக்ரோசாஃப்ட் இப்போது பழமை தட்டிப் போய் இருக்கிறது. சத்யா மாயாஜாலங்கள் நிகழ்த்துவார் என நம்புவோம்.

- அகஸ்டஸ்