சரக்குதான் பிரசாதம்!



டெல்லியில் ஒரு கிக் கோயில்

பெண்களும் குழந்தைகளும் கையில் ஒரு ஃபுல் பாட்டிலோடு பக்தி முகமாகக் கோயிலுக்குச் செல்வது எத்தனை விநோதம். ஆனால், டெல்லிவாசிகளுக்கு அது சாதாரணம். டெல்லியின் பழமையான கோயில்களில் ஒன்றான கில்காரி பாபா பேரோநாத் கோயிலில் மது வகைகள்தான் காணிக்கை;

அதுவேதான் பிரசாதம். மதுவிலக்கெல்லாம் டெல்லியில் பேசினால் மதப் பிரச்னை ஆகிவிடும் போல. இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் பைரவருக்கு மதுவென்றால் அவ்வளவு பிரியமாம்!

டெல்லியின் பிரபல ரயில் நிலையங்களான நிஜாமுதீன் மற்றும் புதுடெல்லி ரயில் நிலையங்களிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள புரானகிலாவில் இருக்கிறது இந்த ஸ்பாட்.‘‘52 வகையான பைரவர்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அதில் இங்கிருப்பது இரண்டு வகையான பைரவர்கள். ஒன்று தூதியா பைரவர்... இன்னொன்று கில்காரி பைரவர். இதில் தூதியா பைரவருக்கு பாலில்தான் அபிஷேகம் செய்வார்கள். அங்கே காணிக்கையாகவும் பிரசாதமாகவும் தரப்படுவது பால்தான். ஆனால், கில்காரி பைரவருக்கு உகந்தது மது வகைதான்.

ஒரே கோயில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இந்த இரண்டு பைரவர்களும் இங்கே வீற்றிருக்கிறார்கள்!’’ என்கிறார் இந்தக் கோயிலின் சீனியர் பண்டிட்டான மகாந்த் கங்காநாத். இருந்தாலும் பால் பைரவரை விட மது பைரவர்தான் பவர்ஃபுல் என நம்புகிறார்கள் மக்கள். பீர், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் என திரவ போதையில் என்னென்ன வகை உண்டோ அத்தனையும் இங்கே படைக்கப்படுகின்றன. சரக்கு பாட்டிலோடு சாரை சாரையாக மக்கள் இங்கே போவதும் வருவதுமாய் இருப்பது கண் கொள்ளாக் காட்சி.

பிராகாரத்தின் நுழைவாயிலில் மதுவையே எரிபொருளாகக் கொண்டிருக்கும் மெகா சைஸ் விளக்கு ஒன்று ஒளிர்கிறது. பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வேண்டுதல்களைக் கூறி, எரியும் தீயில் காணிக்கைகளாக பணத்தைப் போடுகின்றனர். கோயில் பூசாரிகள், பக்தர்கள் கொண்டுவரும் மது பாட்டில்களைத் திறந்து கொஞ்சமே கொஞ்சம் மதுவை மட்டும் அந்த விளக்கில் ஊற்றுகிறார்கள். அபிஷேகத்திற்கு தேவை என்றாலும் அதற்கு இன்னொரு பெக் தனியே எடுத்துக் கொள்கிறார்கள். மதுவினால் ஆன இந்த விளக்கு, அணையா விளக்காக வருடம் முழுவதும் எரிந்துகொண்டே இருக்குமாம்.

இப்படி கோயிலில் எடுத்துக்கொண்ட மதுவைத் தவிர மிச்சமெல்லாம் கோயில் பிரசாதம்தான். அதை பக்தர்கள் தாங்களே குடித்துவிடலாம்; அல்லது வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். கோயில் வாசலில் பிச்சை கேட்பவர்களுக்கு எக்காரணம் கொண்டும் மதுவைத் தரக் கூடாது என்பது கோயில் உத்தரவு. ஆனால், யாருமே அதை மதிப்பதாகத் தெரியவில்லை.

நம் ஊர் கோயில்களில் சர்க்கரைப் பொங்கல், சுண்டல் பிரசாதம் தருவது போல இங்கு சரக்கு பிரசாதத்தை வாசலில் தருகிறார்கள். மது கிடைக்கும் என்பதற்காகவே எப்போதும் கோயில் வாசலில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடிமகன்கள் ஆவலோடு காத்துக்கிடக்கிறார்கள். அவர்கள் கையில் ஒரு யூஸ் அண்ட் த்ரோ கிளாஸ் மட்டும் ரெடியாக இருக்கும். பெண்களும் குழந்தைகளும் காணிக்கை போக மீதி சரக்கை அந்த யாசகர்களுக்கு ஊற்றிக் கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள்.

‘‘சாதாரண நாட்களில் இங்கே சுமாராகத்தான் கூட்டம் இருக்கும். ஆனால் வாரக் கடைசி நாட்களில் நிற்க இடமில்லாத அளவுக்கு கூட்டம் வரும். எனவே நான் வாரக்கடைசிகளில் மது அருந்துவதற்காக இங்கே வந்துவிடுவேன்!’’ எனத் துவங்குகிறார் ரிக்‌ஷா ஓட்டுனரான ராஜ்குமார். ‘‘அவ்வப்போது கோயிலே எங்களுக்குப் பிரசாதம் வழங்கும். பக்தர்களும் வழங்குவார்கள்.

நாள் முழுக்க போதை இறங்காமலே சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கலாம். மதுவைத் தவிர, ரொட்டி, சப்ஜி, இனிப்பு, கேசரி போன்றவையும் இங்கு பிரசாதமாகத் தரப்படும் என்பதால் ராஜ வாழ்க்கைதான்!’’ என்கிறார் ராஜ்குமார். வார நாட்களில் இவ்வளவு பிரசாதம் கிடைக்காது என்பதால்தான் இவர் ரிக்‌ஷா இழுத்தல் என்ற தொழிலையே செய்கிறார். இல்லாவிட்டால் இங்கேயே செட்டில் ஆகிவிடும் உத்தேசம் அவர் கண்களிலேயே தெரிகிறது.

இந்தக் கோயிலில் பிரசாதமாகக் கிடைக்கும் மதுவை அருந்தினால் உடம்புக்கு கெடுதல் விளையாது என்றும் நம்புகிறார்கள் இங்குள்ள மக்கள். ‘‘இந்த மதுவில் போதை கூட கம்மியாகத்தான் இருக்கும். பைரவருக்கு படைக்கும்போதே அவர் இதில் உள்ள போதையை உறிஞ்சி எடுத்துவிடுவார்!’’ என சீரியஸாக விளக்கம் தருகிறார் ராஜ்குமார்.

இந்தக் கோயிலின் பிராகாரங்களும் சுற்றுச் சுவர்களும் சமீபத்தில் அமைக்கப்பட்டது போலத்தான் தெரிகின்றன. ஆனால், இது 5 ஆயிரம் வருடங்கள் பழமையான கோயில் என்கிறார்கள். மஹாபாரத காலத்தில் பாண்டவர்கள் யாகம் நடத்தியபோது, தீய சக்திகள் அதைத் தடுக்க சதி செய்தனவாம். அந்தத் தீய சக்திகளை விரட்டுவதற்காக இந்த பைரவரை காசியில் இருந்து தன் தோள்களில் வைத்து தூக்கி வந்தானாம் பீமசேனன். ஆக, இந்தக் கோயிலைக் கட்டியதே பீமன்தான் என்கிறார்கள்.

இதற்கும் இன்றுள்ள நம்பிக்கைகளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை.  இன்றைய நிலவரப்படி பெரும்பாலும் வாடகைக் கார் வைத்திருப்பவர்களும், டிரைவர்களும்தான் இங்கே அதிகம் வருகை தருகின்றனர். காரணம், வாகனம் உள்ளிட்ட இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் இவரை வழிபட்டால் தடைகள் எல்லாம் ஹாரன் அடிக்காமலேயே விலகி ஓடுமாம். நம்மூர் பாடிகாட் முனீஸ்வரர் போல டெல்லியின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து ஆடி, ஜாகுவார் கார் முதல் ஆட்டோ, டூவீலர் வரை புதிய வாகனம் வாங்கும் அனைவரும் இங்கு முதல் பூஜை போட்டே செல்கிறார்கள்.

மது படைப்பது தவிர, இந்தக் கோயிலில் பைரவருக்கு நான்- வெஜ் படையலும் உண்டு. பெரும்பாலும் படைக்கப்படுவது சிக்கன்தான் என்றாலும் ஆட்டுக்கறி உள்ளிட்ட வேறு இறைச்சிகளும் பைரவரின் சைடுடிஷ் மெனுவில் உண்டாம். இப்படி இறைச்சியும் சரக்கும் எப்படி ஒரு கோயிலுக்குள் நுழைந்திருக்க முடியும்? அதற்கு அனுமானமாக ஒரு விளக்கமும் சொல்லப்படுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் இந்தப் பகுதி அடர்ந்த காடாகவும் இது ஒரு காட்டுக் கோயிலாகவும் இருந்திருக்கிறது.

டெல்லியில் இருந்து காட்டுக்கு வேட்டைக்காகவும் சின்ன பிக்னிக் போலவும் வரும் மக்கள் இந்தக் கோயில் அருகே தங்குவார்கள். அவர்கள் சமைக்கும் இறைச்சியையும் குதூகலத்துக்கு குடிக்கும் மதுவையும் இங்குள்ள பூசாரிகளுக்கு காணிக்கையாகக் கொடுத்து அவர்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டதால்தான் இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கும் என்கிறது அந்தத் தரப்பு. ஆனால், மக்களின் நம்பிக்கைக்கு முன்னே, எந்த ஆராய்ச்சிகளும் எடுபடுவதில்லை.

‘‘நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தக் கோயிலுக்கு வருவேன். சக்தி வாய்ந்த இந்த பைரவருக்கு மது அபிஷேகம் செய்து வேண்டினால், நினைத்த காரியம் நடக்கும். நானே இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்!’’ எனச் சான்றளிக்கிறார் டாக்ஸி ஓட்டுநரான யோகேஸ்வர். இந்த மாதிரி தீவிர பக்தர்கள் இருக்குற வரைக்கும் கில்காரி பைரவரை யாரும் அடிச்சுக்க முடியாது!இந்த பிரசாத மதுவில் போதை கூட கம்மியாகத்தான் இருக்கும். பைரவருக்கு படைக்கும்போதே அவர் இதில் உள்ள போதையை உறிஞ்சி எடுத்துவிடுவார்!

- டெல்லியிலிருந்து

டி.பிரபாகரன்
படங்கள்: சீனிவாசன்