தாகத்தில் தவிக்கும் சென்னை



இன்று சென்னை மக்களுக்கு மிகவும் பிடித்த இசை, தண்ணீர் லாரியின் ஹாரன் சத்தம்! எந்தத் தெருவில் பார்த்தாலும் குடங்களோடு அணிவகுத்து நிற்கிறார்கள் பெண்கள். லாரி ஓசை கேட்டாலே பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. சண்டை, சச்சரவு, அடிதடி என தண்ணீரால் ஏற்படும் களேபரம் சொல்லி மாளவில்லை.

குழாய்களில் தண்ணீர் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாது. அதிர்ஷ்டம் இருந்தால் சாக்கடை கலக்காத குடிநீர் கிடைக்கலாம். தினமும் ஒரு பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி... இன்னொரு பக்கம் தண்ணீர் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.

புறநகரங்களில் போர் வாட்டரை தனியார் லாரிகளில் பிடித்து வந்து மனசாட்சியே இல்லாமல் குடம் 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். வேறு வழியில்லாமல் அதை வாங்க போட்டி போடுகிறார்கள் மக்கள். இன்னொரு பக்கம் கேன் வாட்டர். இப்படி, மக்களைத் தண்ணீருக்காகத் தவிக்க வைத்திருக்கிறது அரசு. வணிகப் பொருட்கள் வரிசையில் தண்ணீரும் வந்து விட்டது. இன்று குடும்ப பட்ஜெட்டில் தண்ணீருக்கு பிரதான இடம் இருக்கிறது. சராசரியாக 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் தண்ணீருக்கு மட்டும் மாதம் ரூ.2000 செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

‘‘முன்பெல்லாம் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணி வரும். இப்போ 4 நாளுக்கு ஒருமுறைதான் வருது. அதுவும் மஞ்சள் நிறத்துல வருது. பிடிச்சு ஒரு நாள் முழுக்க தெளிய வைப்போம். கீழே மண்ணு மாதிரி படிஞ்சிடும். வடிகட்டி குடிப்போம். அந்த தண்ணியும் குடும்பத்துக்கு 1 குடம் கிடைச்சா பெரிசு. குடிக்கவும், சமைக்கவும் கேன் வாட்டர்தான்...’’ - அலுத்துக் கொள்கிறார் வேளச்சேரி கணேஷ் நகரைச் சேர்ந்த அமுதா.

ஐ.சி.எப். ஆலன் தெருவில் வசிக்கிற பானுமதியின் ஆதங்கம் இன்னும் சோகம். ‘‘குழாய்ல தண்ணி வர்றதேயில்லை. வந்தாலும் பயன்படுத்த முடியாது. நாத்தமடிக்கும். அதைக் குடிச்ச பல பேருக்கு வாந்தி, பேதின்னு பெரிய பிரச்னையாயிடுச்சு. புழங்கக்கூட அதைப் பிடிக்கிறதில்லை. எல்லாருமே வாட்டர் கேன்தான் வாங்குறோம். காலையில பால் வருதோ இல்லையோ, வாட்டர் கேன் வந்தாகணும். வந்தாதான் சமையலை ஆரம்பிக்கலாம்...’’ - வேதனை தொனிக்க சிரிக்கிறார் பானுமதி.

சென்னையின் மக்கள்தொகை சுமார் 80 லட்சம். 426 சதுர கி.மீ. பரப்பில் விரிந்து கிடக்கும் இம்மாநகரத்தின் குடிநீர்த் தேவையை, பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், போரூர் ஏரிகள் நிறைவு செய்து வருகின்றன. சராசரியாக சென்னைக்கு நாளொன்றுக்கு 1200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், 550தான் மெட்ரோ வாட்டர் மூலம் வினியோகிக்கப்படுகிறது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் சொற்பத் தண்ணீர் கிடைக்கிறது. மற்றபடி தனியார் வணிகத்தின் மூலமாகவே சென்னையின் தாகம் தீர்கிறது.  தண்ணீர் விற்பனை, பல நூறு கோடிகள் புழங்கும் பரபரப்பான தொழிலாக மாறிவிட்டது.

‘‘மழைதான் சென்னையின் குடிநீருக்கான ஆதாரம். மழை இல்லாவிட்டால் தண்ணீர் பஞ்சம் வந்துவிடும். ‘மழைநீரை சேகரியுங்கள்’ என்று மக்களிடம் சொல்கிற அரசு, மழைநீரை சேகரிக்க என்ன செய்துள்ளது? புதிதாக ஒரு குளம் வெட்டியிருப்பார்களா? இருக்கும் நீர்நிலைகளை சுத்தப்படுத்தி தண்ணீரை சேகரிப்பதற்கு பதிலாக ஏரிகளில் குடியிருப்புத் திட்டங்களை உருவாக்கி கான்க்ரீட் காடாக மாற்றுகிறார்கள்.

சென்னையில் வினியோகிக்கப்படும் பெரும்பங்கு குடிநீர் பூந்தமல்லி, திருப்போரூர், பஞ்செட்டி, திருவள்ளூர், ஆரணியாறு, கொசஸ்தலையாறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1,416 ஏரிகள், 1,896 குளங்கள் உள்ளன. இந்த நீர்நிலைகளை தூர்வார ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனதோ தெரியவில்லை.

தரமற்ற தண்ணீரை மக்கள் தலையில் கட்டும் தனியார் முதலாளிகளை ஒடுக்க வேண்டிய அரசு, அவர்களுக்குப் போட்டியாக வியாபாரம் செய்கிறது. பணம் இருப்பவர்களுக்கு நல்ல தண்ணீர், இல்லாதவர்களுக்கு சாக்கடை கலந்த தண்ணீர் என்பதே அரசின் கொள்கையாக இருக்கிறது...’’ என்று குமுறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் கருப்பையா.

தினமும் சென்னையில் 2 கோடி லிட்டர் கேன் வாட்டர் விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீரின் தரம் குறித்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை விதிமுறைகளை பெரும்பாலான உற்பத்தியாளர்கள் மதிப்பதேயில்லை. ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத தண்ணீரை விற்பது சட்டப்படி குற்றம். ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 350 நிறுவனங்கள் மட்டுமே முறையாக பதிவுபெற்றுள்ளன. ஆனால் 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் குடிநீர் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன்புவரை ரூ.15க்கு விற்ற 20 லிட்டர் வாட்டர் கேன் இப்போது 40 ரூபாய்.

தரமற்ற கேன் வாட்டரைக் குடிப்பதால், சுவாச மண்டலத் தொற்று, நிமோனியா, காலரா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அதுபற்றி யாருக்குக் கவலை? ‘‘பக்கத்துல புழல் ஏரி இருக்குன்னுதான் பேரு. ஆனா, லாரியை எதிர்பார்த்துதான் காத்துக் கிடக்க வேண்டியிருக்கு. சண்டை, சச்சரவுன்னு தண்ணிப் பிரச்னை பெரிசாகிட்டே இருக்கு. எங்க பகுதிக்கெல்லாம் மெட்ரோ வாட்டர் கனெக்‌ஷனே கொடுக்கலே. ஆனா, தண்ணி வரி கட்டுன்னு நோட்டீஸ் அனுப்புறாங்க. வரி வாங்குறதுல காட்டுற ஆர்வத்துல ஒரு பங்கை மக்களுக்கு நல்லது பண்றதுல காட்டலாம்ல...’’ என்று கோபமாகக் கேட்கிறார். அம்பத்தூரைச் சேர்ந்த லோகேஸ்வரி.

இன்னொரு அபாயமும் சென்னையைச் சூழ்ந்திருக்கிறது. சென்னையின் நிலத்தடி நீர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழை பெய்யும்போது 16% நீராவது நிலத்துக்குள் சென்றால்தான் நிலத்தடி நீர் மட்டம் சரியாக இருக்கும். ஆனால் சென்னையில் 8% நீர் கூட நிலத்தடிக்குச் செல்லவில்லை. சமீப ஆண்டுகளில் சென்னையின் நிலப்பரப்பில் கடல்நீர் 10 முதல் 15 அடி தூரம் ஊடுருவி வந்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

2021ம் ஆண்டில் சென்னையின் குடிநீர் தேவை, 198 கோடி லிட்டராக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இருக்கும் நீர்நிலைகளை மேம்படுத்துவதோடு புதிய நீர்நிலைகளை உருவாக்கி பாதுகாக்கவும், நிலத்தடி நீரை உயர்த்தவும் திட்டங்கள் உருவாக்கினால் மட்டுமே மக்களின் தாகம் தீர்க்கமுடியும். ஆனால் அதற்கான நடவடிக்கைகளோ, திட்டங்களோ இன்றுவரை அரசிடம் இல்லை என்பதுதான் பெரும் சோகம்.

1 லாரி தண்ணீர் ரூ.1500

சென்னையில் பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தண்ணீருக்கு மாதம் ரூ.3000 முதல் ரூ.4000 வரை செலவு செய்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமின்றி புழங்குவதற்கும் இவர்கள் பணம் கொடுத்தே தண்ணீர் வாங்குகிறார்கள். 12,000 லிட்டர் கொண்ட 1 லாரி தண்ணீர் ரூ.1500 வரை விற்கப்படுகிறது. அடுக்ககங்கள், தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர் விற்பனை செய்வதற்கென்றே 4000 லாரிகள் சென்னையில் ஓடுகின்றன.

காய்ந்த ஏரிகள்!

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3,231 மில்லியன் கன அடி. இந்த ஏரிக்கு ஆந்திராவில் இருந்து வந்து சேர வேண்டிய தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. போதிய மழை இல்லாததால் ஆந்திர தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. இங்கும் இப்போது போதிய அளவுக்கு தண்ணீர் இல்லை. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இந்த ஏரிகள் முழுமையாக நிரம்பினால் 11.5 டி.எம்.சி. தண்ணீர் சென்னைக்குக் கிடைக்கும். ஆனால், தற்போது அவற்றில், 1 டி.எம்.சி. தண்ணீர் கூட இல்லை.

சுருங்கும் ஏரி!

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரி, பெருமளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள் பொதுமக்கள். சமீபத்தில்கூட தனியார் நிறுவனங்களுக்கு வசதியாக இந்த ஏரிக்குள் சாலை போட அரசு முயன்றதை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. சென்னை உயர் நீதிமன்றமும் இதில் தலையிட்டது. இந்த ஏரியின் மொத்தப் பரப்பையும் மீட்டு தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்