த்ரிஷா இல்லனா நயன்தாரா’



வெர்ஜின்(!) பையன் ஜி.வி.பிரகாஷ், வெர்ஜின் பெண்ணைத் தேடி ‘அலைவதே’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’.பேச்சுலராக இருந்துகொண்டு வாழ்க்கையை வாழ்ந்துவிடத் துடிக்கும் ஜி.வி... அவர் பிறந்த அதே தேதி, நேரத்திலேயே பிறந்து அதே காலனியிலேயே ‘சிறப்பாக’ வளரும் ஆனந்தி, மனிஷா யாதவ்...

ஆனந்தி யுடன் முதல் காதலில் மொக்கை வாங்கி, சடுதியில் மனிஷா யாதவுக்குத் தாவும் ஜி.வி., கடைசியில் அவரது ‘வாழ்க்கை லட்சியமான’ வெர்ஜின் பெண்ணை மணம் முடித்தாரா... அதை அடைய அவர் செய்யும் தகிடுதத்தங்கள் பலித்தனவா... இதுவே த்ரி(இ)நயன்...

பிரபல ஹாலிவுட் படங்களில், சிற்சில தமிழ் சினிமாக்களில் ‘டும்டும்டும்’ கொட்டப்பட்ட கதைதான். அதையே ஜி.வியை வைத்து செக்ஸ் காமெடியாக்கி சிரிப்பு மேளா ஆக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ஜோடிகளுக்கு இடையேயான காதல் பிளஸ் மோதலில் கொஞ்சம் செக்ஸ் கலந்து கதையோடு தருவதே ஹாலிவுட் பாணி.

அதற்காக மொத்தப் படமும் செக்ஸ் ஒன்றை மட்டுமே கதையாகக் கொண்டிருந்தால் என்ன செய்வது? இந்த மாதிரியான படங்களில் நடுநடுவே கிளாமர் காட்சிகள் ஒன்றிரண்டு வந்து திணறடிக்கலாம். படம் ஆரம்பித்த கணத்திலிருந்தே அதையே செய்து கொண்டிருந்தால் எப்படி?

எதிரே பார்க்கிற பொண்ணை எல்லாம் காதலித்துக்கொண்டு, தடவிக்கொண்டு, முதல் பெண் பின்வாங்கியதும் அடுத்த பெண்ணைத் தேடிப் போகிற ஜி.வி.பிரகாஷுக்கு வேண்டியது எல்லாம் வெர்ஜின் பெண்தானாம். ‘டார்லிங்’ வந்தபோது, ‘அடுத்த படத்தில் நடிப்பதைப் பார்க்கலாம்’ என்று எல்லோரும் சொன்னதற்கு பழி தீர்த்துவிட்டார் ஜி.வி. ஆட்டம், பாட்டம், போதை, கவர்ச்சி, முத்தம் என விளையாடிவிட்டார். இத்தனை படங்களில் மெலடி இசையால் மயக்கிய ஜி.விக்கு இப்படி ஒரு படமா! முதல் தர இசையைத் தந்தவர் இப்படியான படங்களில் நடிப்பது தகுமா?

பெரிய ‘கயல்’ கண்களை உருட்டி மிரட்டி ரசிக்க வைத்த ஆனந்தி, கொஞ்சம் போர்வையை உதறி எறிந்திருக்கிறார். மனிஷா யாதவ் சொல்லவே வேண்டாம். எடுத்திருக்கிற கேரக்டரை ‘டாம்பாய்’ போல அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். குரூப் ஸ்டடி அட்டூழியங்களும், பொம்மையை வைத்துக்கொண்டு ஜிவி ரிகர்சல் செய்வதும், ஜிவி - ஆனந்தி முதல் சந்திப்பின்போது பைப் உடைந்து தண்ணீர் பீறிடுவதும்... முழுக்க காமரசத்தில் இளைஞர்களைக் குளிப்பாட்டுகிறார் இயக்குநர்.

படத்தில் யாருக்கும் செக்ஸ் தவிர எந்த வேறுவித பிரச்னைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘வெர்ஜினா இருக்கிறதெல்லாம் டைனோசர் காலத்திலேயே போச்சுடா!’ என விடிவி கணேஷ் அருளும் வார்த்தைகளுக்கு இளைஞர் கூட்டம் விசிலடிக்கிறது. (அடப் பாவிகளா!) சாதாரணமாகப் பேசுகிற வார்த்தைகளைக் கூட புழங்க விடாமல் செய்கிறார்கள். காம அத்தியாயங்களே படம் என்று நினைத்தால், இதையும் ‘காமெடி’ என நீங்கள் நினைத்தால் ரொம்ப ஸாரி!

அணுக்க, நுணுக்க, நல்ல விவரணைக்குள் புகுந்து ஆரோக்கிய டிராக்கிற்கு மாறியிருக்கும் தமிழ் சினிமாவை காத தூரத்துக்கு தள்ளி நிறுத்தியிருக்கிறார்கள். பெண்களை இந்த அளவுக்கா இழிவுபடுத்துவீர்கள் ஆதிக் ரவிச்சந்திரன்? செல்வராகவன் இந்த மாதிரி பரீட்சித்து இருக்கிறார். ஆனால், அவரின் நுட்பமும், பேக் ஸ்டோரியும் யோசிக்க வைக்கும்.

ஆனால் இங்கே யோசித்ததெல்லாம் செக்ஸ்தான்! ஜி.வி.க்கு வேண்டியது வெற்றியாக இருக்கலாம்; ஆனால் இப்படிப்பட்ட வெற்றியைக் கொண்டாட முடியுமா உங்களால்?இது இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்லோ பாய்சன்!

- குங்குமம் விமர்சனக் குழு