எங்கே ஆளைக் காணோம் என்று நினைப்பதற்குள் வந்து நிற்கிறார் பேரரசு. தன் அடுத்த அதிரடியாக பாஸ்கர் சினி ஆர்ட்ஸின் 'திருத்தணி’ படத்தில் வழக்கமான தன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் பொறுப்போடு இசையமைப்பாளராகவும் ஆகியிருக்கிறார். அவரது படம் தரும் எதிர்பார்ப்புக்குப் பொருத்தமாக அவர் படப் பாடல்களும் தனித்துவத்துடன் இதுவரை ரசிக்க வைத்திருக்கின்றன. இப்போது அவரே இசைத்திருக்கும் பாடல்கள் வெளியாகும் நிலையில், நாம் பெறப்போகும் அனுபவத்துக்கு முன்னான அவரது அனுபவத்தைக் கேட்டோம்.
‘‘என் படப் பாடல்களை நானே எழுதறதுக்கு தனிக்காரணம் கிடையாது. கதையா யோசிச்சு திரைக்கதை, வசனம் எழுதும்போதே, கையோடு பாடல்களையும் எழுதிடும் வழக்கம் இருந்தது. நானே ஒரு டியூன்ல அதை எழுதுவேன். அதை இசையமைப்பாளர்கள் அவங்க ட்ரென்டில புதுசா இசையமைச்சு வெளியாகும்போது ஹிட் வரிசையில வந்தது. டியூனோட எழுதற என்னோட வழக்கமும், ஆறு படங்களுக்கு பாடல்கள் உருவாக்கப்படறதை பக்கத்திலேர்ந்து பார்த்த அனுபவங்களும் சேர்ந்து, ‘நாமே ஏன் இசையமைக்கக் கூடாது...’ன்னு கேள்வி எழ, அதை செயல்படுத்திட்டேன்.
எந்த இசைக்கருவிகளையும் நான் கத்துக்கலை. கேள்வி ஞானம் மட்டும்தான் என் குரு. காதால் கேட்டதிலிருந்து கத்துக்கிட்டு, என் மனசுக்குள் எழற டியூன்களை வாயால சொல்லியே பாட வைக்கிறேன். இப்படியேதான் பாடல்களுக்கான இசையையும் சொல்லி அமைச்சேன். படத்தோட ரீரெக்கார்டிங்குக்கு மட்டும் வேற இசையமைப்பாளரைப் பயன்படுத்தலாம்னு ஒரு யோசனை இருந்தது. அதையும் முயற்சி செய்து பார்க்கலாமேன்னு தோண, செய்து பார்த்தப்ப சரியா வந்தது.
இந்தப் படத்துல அஞ்சு பாடல்கள் என்னோட பட வெரைட்டிலயே இருக்கு. ‘வாண வேடிக்கை வெடிடா... இந்த வானம் நமக்கே புடிடா...’ங்கிற மாஸ் பாடலை திப்பு பாடியிருக்கார். அடுத்து ஒரு மெலடி. என் படங்கள்ல இதுவரை இல்லாத ஐட்டமா கிளாசிக்கல்ல ஒரு பாடல் போட்டிருக்கேன். ரெண்டு குத்து. ‘யம்மா யம்மா ஒத்துக்கிறியா..? சும்மா சும்மா கத்துக்கிறியா..?’ங்கிற பாடல் வரிகளைக் கேட்டாலே யார் பாடியிருப்பாங்கன்னு உங்களால கண்டுபிடிச்சுட முடியும். அது டி.ஆரேதான். அவரோட அனுராதா ஸ்ரீராமும் பாடியிருக்காங்க. டி.ஆரோட ‘யம்மாடி... ஆத்தாடி...’ங்கிற சூப்பர்ஹிட் பாடலை எழுதியது நான்தான்ங்கிறது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தப் பாடலைப் பாடி முடிச்சுட்டு, ‘இதுவும் சூப்பர் ஹிட்டாகும்...’னு சொல்லிட்டுப் போனார் அவர். அடுத்த குத்தான ‘வண்ணாரப்பேட்டை வண்ணாரப்பேட்டை படவா... படவா...’ங்கிற பாடலை திப்புவும், கிருஷ்ணவேணி பேரரசுவும் பாடியிருக்காங்க...’’
‘‘உங்க மனைவி..? உங்க இசைங்கிறதால அவங்க பாடினாங்களா..? இல்லை அவங்களை பாடகியாக்கவே நீங்க இசையமைப்பாளரானீங்களா..?’’
‘‘நல்லா கேட்டீங்க... இது எல்லாமே தற்செயல்தான். அவங்க வீட்டுக்குள்ள நல்லா பாடிக்கிட்டிருப்பாங்க. படத்துல பாட வைச்சா சரியா வருமான்னு டிராக்ல பாட வச்சுப்பார்த்தேன். பாடியது என் மனைவிதான்னு தெரிஞ்சா கேட்கிறவங்க எனக்காகவே நல்லா இருக்குன்னு சொல்லிட வாய்ப்பு இருக்கிறதால, யாருக்கும் சொல்லாம ரெக்கார்ட் பண்ணி பொதுவா போட்டுக் காண்பிச்சேன். அதுல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும் ஒருத்தர். எல்லோரும் ‘வாய்ஸ் நல்லா இருக்கு...’ன்னு பாராட்ட, ஸ்ரீகாந்த் தேவா ஒருபடி மேலே போய் ‘என் அடுத்த படத்துல வாய்ப்புத் தர்றேன்...’னு சொல்லிட்டார். பிறகுதான் விஷயத்தை சொன்னேன். ஆனாலும் கொடுத்த வார்த்தைக்காக ஒரு படத்துல அவங்களைப் பாட வச்சுட்டார் ஸ்ரீகாந்த் தேவா.
படத்தைப் பொறுத்தவரை ‘பழனி’க்கு அடுத்து பரத் இதுலயும் ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். தனிக் காமெடியனே தேவையில்லைங்கிற அளவில சுனேனா செய்திருக்க காமெடிகள் பேசப்படும். சின்ன வயசு பரத்துக்கு தங்கையா என் மகள் சுகிஷாவும் நடிச்சிருக்கா...’’
‘‘அப்ப நீங்களும் இருப்பீங்களே..?’’
‘‘இருக்கேன். ஆனா என்ன கேரக்டர்ங்கிறது சஸ்பென்ஸா இருக்கட்டும்..!’’
‘பழனி’ படத்துல ‘திருத்தணி’யா வந்தார். இப்ப ‘திருத்தணி’யில ‘பழனி’ ஆவாரோ..?
- வேணுஜி