விரட்டி விரட்டி காதலிக்கிறேன்...




இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் ஆல்ரவுண்டராக சக்ஸஸ் முகம் காட்டும் சசிகுமார், எந்த பந்தைப் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறார். ‘போராளி’க்குப் பிறகு சசிகுமார் தயாரித்து நடிக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்’. இம்முறை தனது உதவியாளர் பிரபாகரனையே இயக்குனராக்கி அழகு பார்த்திருக்கிறார்.

‘‘சமீபத்தில் என் அப்பா காலமாகிட்டார். அந்த சமயத்தில்கூட நிறுத்தாம நான்ஸ்டாப்பா ஷூட்டிங் போனது. மொத்தம் மூன்று மாதங்கள்... ஒருநாள்கூட ஷூட்டிங்கை நிறுத்தாம, மொத்த படத்தையும் முடிச்சுட்டோம். அத்தனை பேரோட உழைப்பையும் கொட்டி ‘சுந்தர பாண்டியனை’ உருவாக்கியிருக்கோம்’’ என தாடியைத் தடவியபடி படம் பற்றிப் பேச ஆரம்பித்தார் சசிகுமார்.
‘‘அழகான கிராமம், அன்பு நிறைஞ்சு கிடக்கும் குடும்பம், அட்ட காசமான காதல், கலகலப்புக்கு பஞ்சமில்லாத காமெடி, அவ்வப்போது தலைநிமிர்த்தும் ஆக்ஷன், கைகொடுக்கும் நட்புன்னு ரசிகர்களுக்கு ஃபுல் ஃபீல் கொடுக்குற மாதிரியான படம்தான் இது.

விவசாயக் குடும்பத்துல பிறந்து, கல்லூரி முடிச்சுட்டு கிராமத்துல இருக்கும் இளைஞன் சுந்தர பாண்டியன் கேரக்டர்தான் என்னோடது. எனது முந்தைய படங்களில் என்னைத்தான் பொண்ணுங்க சுத்தி வருவாங்க. இதுல கொஞ்சம் மாற்றம். நான்தான் விரட்டி விரட்டிக் காதலிப்பேன், தேனி, உசிலம்பட்டி, கண்டமனூர் கிராமங்கள்தான் கதைக்களம். கதைப்படி என்னோட சொந்த ஊரு கண்டமனூர்; கதாநாயகி லக்ஷ்மி மேனனுக்கு உசிலம்பட்டி. ஊரு விட்டு ஊரு போயி, நாயகியோட மனசில இடம் பிடிக்க துரத்திக்கிட்டே இருப்பேன்.



என்னை ஆக்ரோஷமான இளைஞனாகவே பார்த்து சலித்தவங்களை, சுந்தர பாண்டியனோட சேட்டை ரொம்பவே ரசிக்க வைக்கும். அப்படியொரு ஜாலி பேர்வழியா வர்றேன். லக்ஷ்மி மேனன் நொடிக்கு நூறு ரீயாக்ஷன் காட்டி ஆச்சர்யப்படுத்தறாங்க. நீளமா டயலாக் இருக்கற காட்சியில் கொஞ்சம்கூட பிசிறு தட்டாம பேசி நடிச்சாங்க. அவங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு.

ஏற்கனவே இரண்டு படங்களில் ஹீரோவா நடிச்சிருக்கும் விஜய் சேதுபதி இதில் கேரக்டர் ரோல் பண்ணியிருக்கார். நான் கூப்பிட்டதுமே, ‘உங்களுக்காக எந்தக் கேரக்டரா இருந்தாலும் பண்றேன் சார்’னு வந்தார். அப்புறம் அப்புக்குட்டி, சூரின்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. குரங்கணியில் ஷூட்டிங் நடந்தபோது மலைக்கு மேலே ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஏறணும். யூனிட்டில் சில பேர் மயங்கிக்கூட விழுந்துட்டாங்க. ஆனாலும், ‘இது உங்க படம். உங்களுக்காக நாங்க எப்படி வேணும்னாலும் கஷ்டப்படுவோம்’னு சொல்லி ரொம்ப ஒத்துழைச்சாங்க. இதுக்கு கைமாறா நான் என்ன பண்ணப் போறேன்னு தெரியல. ‘பசங்க’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கார். ரகுநந்தன் இசையில் பாட்டெல்லாம் சூப்பரா வந்திருக்கு...’’
‘ஒரு தயாரிப்பாளரா, புதுமுக இயக்குனரை நம்பி படம் எடுப்பது ரிஸ்க்குன்னு நினைக்கறீங்களா?’ என்றால் சசிகுமார் சிரிக்கிறார்.

‘‘நானும் புதுமுக இயக்குனரா இருந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். ஓடுற குதிரை மேல பணம் கட்டுறதைவிட, புதுசா குதிரை வாங்கி அதை ஓடவிட்டு, அது ஜெயிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு எனக்கு நினைப்பு. அதுல தான் ஒரு த்ரில் இருக்கு. வெற்றி, தோல்வி மேல் எனக்கு நம்பிக்கையும் இல்லை; லாப நஷ்டம் பற்றிய கவலையும் இல்லை. ஒருத்தனுக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்க்காமலே அவன் தோற்றுடுவான்னு அவநம்பிக்கையை விதைக்கக்கூடாது. வாய்ப்பு வந்தால்தான் திறமையை நிரூபிக்க முடியும். இந்த விஷயத்தில் ஆர்.பி.சௌத்ரியைத்தான் முன்னுதாரணமாக நினைக்கறேன்.

எத்தனை இயக்குனர்கள், கலைஞர்களை அவர் அறிமுகப்படுத்தியிருப்பார்! அவர் வாய்ப்பு கொடுத்திருக்கலைன்னா, நிறைய பேர் அடையாளமே தெரியாம போயிருப்பாங்க. நான் அவரை நேரில் பார்த்துப் பேசினதுகூட இல்லை. ஆனால் அவரைப் பார்த்துத்தான் எனக்கு தைரியம் வருகிறது. இந்த தைரியம் எல்லாருக்கும் வந்தா, நிறைய திறமைசாலிகளை கோடம்பாக்கத்துல கண்டெடுக்கலாம். என்னோட அடுத்த மூணு படங்களையும் புதுமுக இயக்குனர்களே இயக்கப் போறாங்க. அடுத்த படத்தை முத்தையா இயக்கறார். ராஜபாளையத்தில் நாளைக்கு ஷூட்டிங் தொடங்குது. ‘சுந்தர பாண்டியனை’ ரிலீஸ் பண்ணியபிறகு அந்தப் படத்தைப் பற்றி விரிவா பேசுறேன்’’ என விடை கொடுக்கிறார் சசிகுமார்.
- அமலன்