‘‘இயற்கைதான் உலகத்திலேயே சிறந்த கருணையுள்ள தாய். மணல் திருட்டு, மரம் வெட்டுவது, ஏரி, குளங்களை ரியல் எஸ்டேட் போட்டு விற்பது என மனிதர்களால் தினம் சுரண்டப்பட்டாலும், நமக்காக மழை தருகிறது இயற்கை. ‘வானத்துல இருந்து இறங்கி வருகிற அமிழ்தம்’ என்று மழையைச் சொன்னார் வள்ளுவர். அமிழ்தத்தில் கழிவு நீர் கலந்து நஞ்சாக மாற்றுகிறவர்களையும் மன்னித்துக் காப்பாற்றுகிற இயற்கை அன்னையின் கருணை பொய்க்கும்போது, மனிதர்கள் தத்தளிப்பார்கள். ‘வறண்ட ஆறுகளிலும், குளங்களிலும், ஏரிகளிலும் தண்ணீர் கொண்டு வந்தால்தான் மக்களின் வாழ்க்கை வளமாகும்’ என்கிற உயர்ந்த நோக்கத்தோடு இயங்கி வருகிற ‘சிறுதுளி’ அமைப்பில், என்னைப்போல இருக்கிற ஒவ்வொருவரின் பங்களிப்பும் சிறுதுளிதான். தண்ணீர் வருவதற்கு முன்னால், விழிப்புணர்வு வர வேண்டியது அவசியம். அதுதான் எங்கள் முன்னால் இருக்கிற பெரிய சவால்!’’
- எமதர்மனிடமிருந்து சத்யவானை மீட்டு வந்த சாவித்திரியைப் போல, காணாமல் போன ‘நொய்யல்’ ஆற்றை மீட்டு வந்த திருப்தியோடு பேசுகிறார் வனிதா மோகன். கோவை மாநகரத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ள எல்.ஜி. குடும்பத்தின் வாரிசு, ‘ப்ரிகால்’ நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வழி நடத்தும் ஆளுமை நிறைந்த துணைத்தலைவர் என பல அடையாளங்கள் இருந்தாலும், ‘சிறுதுளி’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் என்கிற அடையாளம்தான் தன் மனதுக்கு ரொம்ப நெருக்கமானது என்கிறார் வனிதா.
‘‘ஒரு ஊருக்குள்ளதான் எல்லாருக்கும் வீடு இருக்கும். ஆனா கோயம்புத்தூரே எங்களுக்கு வீடு மாதிரி. போலித்தனம் இல்லாத சிரிப்போடு மக்கள் வாழும் இடத்தில், ஊர்ப்பாசம் இயற்கையாக வந்துடும். அந்த ஊர்ப்பாசம்தான் ‘சிறுதுளி’ அமைப்பின் வெற்றி. எதையும், யாரையும் எதிர்த்து நிக்கிற பலத்தை இந்த ஊரும் மக்களும்தான் தந்தாங்க.
வசதியான குடும்பத்தில் பொண்ணா பொறந்தாலும், ஒரு பையனுக்குரிய சுதந்திரத்தோடு வளர்த்தாங்க பெத்தவங்க. என்னை எவ்வளவு சுதந்திரமா எங்கப்பா வளர்த்தார்ங்கிறதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன். கார் ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்திட்டிருந்த காலம். ‘எல்’ போர்டு போட்டு வண்டி ஓட்டும்போது, அப்பா என் பக்கத்தில் உட்கார்ந்திருக்காரு. ஒரு ஜங்ஷன்ல, எல்லா பக்கமும் இருந்து வேகமா வண்டிகள் வர்ற இடத்துல நடுவில மாட்டிக்கிட்டேன். பதற்றத்துல உடம்பெல்லாம் வியர்த்துப் போச்சு. அப்பா கைகட்டி அமைதியா உட்கார்ந்துக்கிட்டிருக்காரு. ‘என்ன பண்றதுப்பா’ன்னு கேட்டப்ப, ‘இது உன் பிரச்னை. நீயே தீர்வு தேடு. இன்னைக்கு நான் பக்கத்துல உட்கார்ந்திருக்கேன். நாளைக்கு என்ன பண்ணுவ? நான் இல்லேன்னு நினைச்சு, நீயே வெளில வா’ன்னு சொன்னார். மத்த வண்டிக்காரங்க அடிச்ச ஹாரன் சத்தத்துலயும், மனசுல ஆழமாக பதிஞ்ச விஷயம் அது.
சின்னச்சின்ன விஷயங்கள்ல, வாழ்க்கைக்குத் தேவையான பெரிய பாடத்தை என் வீடு சாதாரணமாக கத்துக் கொடுத்துடும். ‘வீட்டுக்குள்ளேயே இருக்காதே. உலகம் தெரியாம போயிடும். வெளியில போய் உனக்குப் பிடிச்சதை செய். பொதுவா வசதிகளும், வாய்ப்புகளும் நம்மை முடக்கிப் போட்டுடும். நம்முடைய பலவீனமா மாறிடும். பணம் காசு இல்லாமகூட இருந்துடலாம். தேடல் இல்லாம இருந்துடக் கூடாது’ன்னு சின்ன வயசுலேயே புரிஞ்சது. தொழில்ல அடைகிற வெற்றி நமக்கு மட்டும் இல்லாம, சமுதாயத்துக்கும் பயன்படணும்னு நினைப்பார் அப்பா. எல்லா பிசினஸ்லயும், சமூகத்திற்கு ஒரு பங்கு இருக்கிற மாதிரி பார்த்துக்குவார். தவறுகளில் இருந்துதான் கத்துக்க முடியும்னு உறுதியா சொல்லுவார். ‘போய் ஏதாவது புதுசா செஞ்சு, தப்பு செஞ்சு கத்துக்கோ’ என்று சொல்கிற தந்தை கிடைச்சது என் பாக்கியம்.
அப்பாவுக்கு தொழிலோடு சேர்த்து சமூக அக்கறை இருந்தால், அம்மாவுக்கு அது முழு நேர வாழ்க்கையா இருந்தது. சிறப்புக் குழந்தைகளுக்கான ஒரு பள்ளியை நடத்திட்டிருந்தாங்க அம்மா. அந்தப் பள்ளியும், குழந்தைகளும், எங்க கும்பத்தில் ஒரு அங்கம். நாங்க அந்தக் குழந்தைகளோடு இருப்பதும், பள்ளியின் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதும் அடிக்கடி நடக்கும். சமூக சிந்தனைகளோடு வளர்த்தாங்கன்னு சொல்றதைவிட, நாங்க அப்படி வளரக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கித் தந்தாங்க.
என் கணவரும், எங்கப்பா மாதிரியே அமைஞ்சார். ‘உனக்குப் பிடிச்சதை செய். ஒழுங்கா செய்’னு சொல்லிட்டே இருப்பார். திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள், குடும்பம்னு செட்டில் ஆகிற மனநிலையில்தான் இருந்திருக்கேன். ‘ஸ்காட்லாந்து போய் படிச்ச எம்.பி.ஏ படிப்பை வீணாக்காதே. பிசினஸ்ல ஏதாவது செய்’னு அவர் சொல்லிட்டே இருப்பார். அப்படித்தான் நான் ‘ப்ரிகால்’ நிறுவனத்துக்குள் வந்தேன். அது என் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை. எனக்கு இயற்கை மேல ஆர்வம் அதிகம் உண்டு. பிசினஸ்ல டார்கெட் வச்சு சம்பாதிச்சுக் குவிக்கணும்னு யோசிச்சது இல்லை. வெளிப்படையா சொல்றதா இருந்தால், எனக்கு அதில் விருப்பமும் இல்லை. கணவனும் மனைவியும் வேலைக்குப் போவது காலத்தின் கட்டாயமா இருந்தாலும், குழந்தைகள் கடுமையா பாதிக்கப்படுறாங்க. என் பிள்ளைகளுக்கு அது நடக்க வேணாம்னு தோணுச்சு. ‘குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, விவசாயத்தில் ஏதாவது செய்ய விரும்புறேன்’னு சொன்னேன். ஆபீஸுக்கு குழந்தைகளை கூட்டிட்டுப் போக முடியாது. ஆனா, விவசாயத்துல அது சாத்தியம். உலகத்திலேயே ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்யுற சிறந்த வேலை விவசாயமாதான் இருக்க முடியும். வயல்வெளியின் ஓரத்தில், ஒரு மரத்தில் தூளிகட்டி, குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு, வேலை செஞ்சிக்கிட்டே தாலாட்டு பாடுவாள் தாய். அம்மாவின் குரல் கேட்டு அப்படியே தூங்கிப்போகும் குழந்தை. விவசாய வேலை செய்கிற பெண்கள்தான் தாலாட்டுப் பாடல்களைக் கண்டுபிடிச்சதா சொல்லுவாங்க.
இருக்கிற பிசினஸை விட்டுட்டு, ‘விவசாயம் பண்ணப்போறேன்’னு சொன்னால், அதிர்ச்சிதானே ஆவாங்க. என் கணவர், ‘பரவாயில்லை, உனக்குப் பிடிச்சதை செய்’னு சொன்னார். விவசாயம் எவ்வளவு கஷ்டமானது என்று அப்போதுதான் புரிந்தது. விவசாயிகளைக் கையெடுத்து கும்பிடத் தோன்றியது. ஒரு ரூபாய் முதல் போட்டால் பத்து ரூபாய் திரும்பி வருகிற தொழிலில்தான் அதிக ஆர்வம் வரும். விவசாயத்தில் ஒரு ரூபாய் போட்டால், அதுவே திரும்பி வருமான்னு கேள்விக்குறியா இருந்துச்சு. அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தால்தான், மண்ணில் இருந்து பொன் விளையும்னு புரிஞ்சது. குழந்தைகளை வளர்ப்பதுபோல பயிர்களையும் வளர்க்கணும்னு தெரிய ஆரம்பிச்சப்ப, எனக்குள்ள இருந்த இயற்கை நேசம் லட்சியமா மாறிடுச்சு.
சின்ன வயசுல என் பாட்டி வீட்டுக்குப் போறப்ப வழியெல்லாம் பெரிய பெரிய குளங்கள், ஏரிகள் இருந்தன. அதில விளையாடிக்கிட்டே போவோம். உடம்புல ஓடுற ரத்த ஓட்டம் மாதிரி நிலத்தில் விளையுற பயிர்களுக்குத் தண்ணீர் அவசியம். மழைக்காலங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து ஏரி நிரம்பும், ஏரியில் வழியும் தண்ணீர் குளத்தை நிரப்பும். நம்ம முன்னோர்கள் இதையெல்லாம் திட்டமிட்டு உருவாக்கி விவசாய த்தை சாத்தியமாக்கினாங்க. ஆனா, சின்ன வயதில் நான் விளையாடின ஏரிகளும் குளங்களும் என் கண்ணெதிரே வற்றிப்போய் மண்மேடா இருந்தது மிகப்பெரிய சோகத்தைத் தந்தது. தொடர்ந்து விவசாயம் செய்வது ‘ரிஸ்க்’ எடுப்பதற்கு சமம்னு சொன்னாங்க. ரிஸ்க் தெரிஞ்சு நான் விலகிட முடியும். கால் ஏக்கர், அரை ஏக்கர்னு வாழ்க்கையையே விவசாயத்தில் முதலீடு செஞ்சிருக்கிற மக்கள் என்ன பண்ணுவாங்க? அதை நினைக்க ஆரம்பிச்சப்ப நான் திரும்ப புதுசா பொறந்தேன்னு சொன்னாலும் பொருந்தும்.
சுயநலமாக சிந்திக்காமல், எல்லாருக்காகவும் யோசிச்சா நல்லா இருக்குமேன்னு தோணுச்சு.
40 வருஷத்துக்கு முன்னால நான் பார்த்து செழிப்பா இருந்த பகுதி, திடீர்னு ஏன் வறண்டு போச்சுன்னு மனசுக்குள்ள கேள்வி குடைய ஆரம்பிச்சது. இயற்கையோடு இணைந்து நான் வாழ்ந்த மகிழ்ச்சியான வாழ்க்கை என் பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போனதற்கு நானும் ஒரு வகையில் பொறுப்பு என்கிற குற்றவுணர்ச்சி வந்தது. 2001 முதல் மூணு வருஷம் மழை சுத்தமா இல்லை. நாட்டுக்கே சாப்பாடு போட்ட விவசாயிகள் சாப்பிட உணவு இல்லாமல், சோறுபோட்டவர்களுக்கே ‘கஞ்சி ஊற்ற’ கஞ்சித்தொட்டி திறந்தார்கள். என்னை வெகுவாகப் பாதித்த காலம் அது.
கணவர்கிட்டே இதைப்பத்தி பேசினப்ப, ‘என்ன பண்ணணும்’ என்று கேட்டார். ‘விவசாயத்துல லாபம் இல்லைன்னு பின்வாங்கி வேற தொழிலில் ஈடுபடுவதைவிட, அதையே லாபம் வர்றமாதிரி
செஞ்சா நல்லா இருக்கும். அது நமக்கும் நன்மையா இருக்கும்; சாதாரண மக்களுக்கும் நன்மை தர்ற மாதிரி இருக்கும். ஏரி, குளங்களை ஏன் தூர்வாரக்கூடாது?’ன்னு கேட்டப்ப, கணவர் அதிர்ச்சி அடைஞ்சிருக்கலாம். ‘இது அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை. தனியார்
நிறுவனங்கள் என்ன பண்ண முடியும்’ என்கிற கேள்வி இயல்பாக மனசுக்குள் வந்திருக்கும். ‘லாப நஷ்டம் பத்தி யோசிக்காம, நல்ல விஷயம் தோணும்போது செஞ்சிடணும். உன் விருப்பப்படி செய்’னு சொன்னார் அவர். ‘ப்ரிகால்’ நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பாக, சில தூர்ந்து போன குளங்களைத் தூர் எடுக்க முடிவெடுத்தோம். குடிதண்ணீர் கிடைக்கவே அல்லாடுகிற, மழை இல்லாத காலத்தில், குளங்களைத் தூர் எடுப்பதை மற்றவர்கள் எப்படிப் பார்த்திருப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. நம்முடைய முயற்சிகளுக்கு ஆதரவு இருக்கலாம்; எதிர்ப்பும் இருக்கலாம். ஏளனம் இருந்தால் அது துரதிர்ஷ்டமானது. அதை எதிர்கொள்வது பெரிய சவாலாக இருந்தது. (திருப்பங்கள் தொடரும்...)
படங்கள்: புதூர் சரவணன்