பெண்களின் சேலை டிசைன்களில் நாளுக்கொரு அறிமுகம்.... ஜர்தோசி, ஆரி, மிர்ரர் ஒர்க் என அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் ஃபேஷன், ‘கட்டில் எம்பிராய்டரி’ முறையில் தைக்கப்படுகிற ஸ்டோன் வேலைப்பாடுகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமியின் கைவண்ணத்தில், சாதாரண சேலைகூட டிசைனர் சேலை அளவுக்கு பிரமாண்ட அழகு பெறுகிறது.
‘‘சாதாரண எம்பிராய்டரின்னா, அதுக்கான நூல் வச்சுத் தைக்கிறது. இந்த ஸ்டோன் ஒர்க் எம்பிராய்டரியை ஒயர்ல தைக்கணும். ஸ்டோன் ஒர்க் செய்த சேலை, சுடிதாரெல்லாம் கடைகள்லயும் கிடைக்குது. ஆனா அதெல்லாமே மெஷின்ல பண்றது. செயற்கையா தெரியும். ரொம்ப நாள் உழைக்காது. கையில பண்ற ஸ்டோன் ஒர்க், எத்தனை வருஷமானாலும் அப்படியே இருக்கும்’’ என்கிற ஜெயலட்சுமி, ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?‘‘கட்டிலுக்கான முதலீடுதான் பெரிசு. எம்பிராய்டரிக்கான கட்டில்னு ஆர்டர் கொடுத்து செய்து வாங்கணும். அதுக்கு ரூ.5 ஆயிரம் செலவாகும். அடுத்து புடவை, சல்வார், பாவாடைன்னு ஏதோ ஒரு மெட்டீரியல். அச்சு மாவு, டிசைன் பேப்பர், கட்டில் குரோஷா ஊசி, ஒயர், விதம்விதமான வடிவங்கள் மற்றும் கலர்ல ஸ்டோன்ஸ், சமிக்கி... இதுக்கெல்லாம் ரூ.2 ஆயிரம் தேவை.’’
என்ன ஸ்பெஷல்?‘‘பொதுவா எம்பிராய்டரின்னா, கையால வரைஞ்சோ, டிரேஸ் எடுத்தோ, அது மேல டிசைன் போடுவோம். ஆனா இதுல வேற முறை. அச்சு மாவை மண்ணெண்ணெய்ல கரைச்சு வச்சு, டிசைன் பேப்பரை துணி மேல பொருத்திட்டு, அதுக்கு மேல ஊசியால துளைகள் போட்டுட்டு, கரைச்சு வச்ச மாவை மேல ஊத்தி, அரை மணி நேரம் கழிச்சு, அதை எடுத்துட்டு, துணியில பதிஞ்சிருக்கிற டிசைன் மேல எம்பிராய்டரி செய்யணும். எந்த டிசைனா இருந்தாலும் துல்லியமா வரும். நுணுக்கமான டிசைன்களைக்கூட போடலாம். சேலை, சல்வார், பாவாடை, சட்டை, காக்ரா சோளி, பிளவுஸ், பட்டு சேலைன்னு எல்லாத்துலயும் செய்யலாம்.’’
எத்தனை நாள் வேலை?‘‘பழகற வரைக்கும் ஒரு சேலை முழுக்க போடறதுக்கு ஒரு மாசம்கூட ஆகும். பயிற்சி செய்து, நல்லா பழகிட்டா, ரெண்டே நாள் போதும்.’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?‘‘டிசைனைப் பொறுத்து குறைஞ்சது 500 ரூபாய்லேருந்து, அதிகபட்சமா 5 ஆயிரம் வரைக்கும் வாங்கலாம். ஜவுளிக் கடைகள்ல சாம்பிள் காட்டி, மொத்தமா ஆர்டர் எடுக்கலாம். கல்யாணம், பண்டிகைகள், சீசன்ல நிறைய ஆர்டர் கிடைக்கும். 50 சதவீத லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?‘‘பத்து நாள் பயிற்சிக்கு ரூ.2,500 ரூபாய் கட்டணம்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்