ஒப்புதல் பேட்டி ஓஹோ!




‘நமது ஆரோக்கியம் உள்ளங்கையில் உள்ளது’ என்ற அக்குபிரஷர் உண்மையைப் படித்து வியந்தேன். இதைத்தான் நம் முன்னோர்கள் ‘விரல் நுனியில் விஷயம்!’ என்ற பழமொழி மூலம் உணர்த்தினார்களோ?!
- எஸ்.கோபாலன், சென்னை.

நம் ஜனாதிபதியின் அரசு கார் பற்றிய செய்திகள் வியப்பாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. மக்கள் சேவை செய்ய வருபவர்கள், மக்களைப் பார்த்தே பயந்து, இப்படிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களை நாடுவது ஏனென்பதுதான்
புரியவில்லை!
- வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை.

செல்போன் டவரின் கதிர்வீச்சு பாதிப்பால் புற்றுநோய் மட்டுமல்லாமல், இன்னும் ஒரு டஜன் நோய்கள் வர வாய்ப்புள்ளதை படித்ததும் இதயத்தில் ஷாக் அடித்தது. இவையெல்லாம், டவர்கள் அல்ல... அரசாங்கம் செய்யும் தவறுகள்!
- வி.சி.கீதா ராமு, பெங்களூரு.

‘நானும் அனிருத்தும் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்... வெளியான போட்டோ வெறும் கிராஃபிக்ஸ்... யாரோ நடிகை செய்த சதி...’ என்றெல்லாம் கதை சொல்லாமல், ஆன்ட்ரியா கொடுத்திருந்த ஒப்புதல் பேட்டி... ஓகோ! அப்புறம் அதென்ன சார்... கிஸ்ஸிங் போட்டோவை அவ்வளவு சின்னதா வச்சுட்டீங்க? அவங்களே ஒரிஜினல்தான்னு ஒப்புக்கறாங்க... சும்மா ரெண்டு பக்கத்துக்கு வச்சு பார்டரெல்லாம் கட்டி பட்டையக் கிளப்பியிருக்க வேண்டாமா?
- எஸ்.பால்பாண்டி, திருப்பூர்.

போட்டித் தேர்வுகளில் தொடங்கி, நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது வரை இளைஞர்களை கரம் பிடித்து அழைத்துச் சென்று நல்ல எதிர்காலத்தைக் காட்டியிருக்கிறது ‘வேலை கிடைச்சாச்சு’ பகுதி. இப்படிப்பட்ட டைமிங் மினி பகுதிகளை அடிக்கடி எதிர்பார்க்கிறோம்!
- ஈ.விஷால், புதுச்சேரி.

கிஃப்ட், தெரபி, ஃபேஷியல் என்று பலவாறாகப் பயன்படும் களிமண்ணை இனி யாரும் தரம் தாழ்த்திப் பேச முடியாது. காந்திஜி தினம் களிமண் பூசிக் குளிப்பார் என்பது அரிய தகவல்!
- கே.வனிதா பிரபு, தஞ்சாவூர்.

நம்முள் புதைந்திருக்கும் ‘மிருக நேயத்தை’ ‘நிழல்கள் நடந்த பாதை’ மூலம் புரிய வைத்துவிட்டார் மனுஷ்ய புத்திரன். பிராணிகள் மீது அருவருப்பு காட்டும் என் மனோபாவமே இப்போது அடியோடு மாறிவிட்டது.
- இரா.கமலக்கண்ணன், சித்தோடு; தேவிமைந்தன், சென்னை.

‘எழுத்து சோறு போடாது’ என்று சொல்கிற உலகத்தில்... எழுத்திடம் சோற்றை எதிர்பார்க்காத இலக்கியவாதிகள் புதிய வரவு. ‘எமக்குத் தொழில் எழுத்து’ பகுதியில் கவிஞர் பாரிகபிலனின் வார்த்தைகள் இதைத்தான் சொல்
கின்றன.
- கண்ணதாசன், திருவண்ணாமலை.

ஆல்தோட்ட பூபதியின் ‘சிற(ரி)ப்பு பட்டிமன்றம்’ படித்து இன்னும் கூட சிரித்து முடிக்கவில்லை. எப்படித்தான் அவரால் இத்தனை வி.ஐ.பிக்களின் மேனரிசங்களை கவனித்து எழுத முடிகிறதோ? ஒருவேளை, ரூம் போட்டு யோசிப்பாரா?
- டி.வி.மைக்கேல், பழனி.