இப்போ காதல்னு சொன்னால் சிரிப்புதான் வரும்!
டைரக்டர் ராம் தடாலடி
‘‘கிட்டத்தட்ட ‘தரமணி’ ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது!’’ - சொல்லிவிட்டு சோபாவில் ரிலாக்ஸாக சாய்ந்து அமர்ந்துகொள்கிறார் இயக்குநர் ராம். இப்போது மேலும் கூடுதலாக மிஷ்கினின் ‘சவரக்கத்தி’யில் தன்னை பட்டை தீட்டிக்கொண்டு இருக்கிறார் ராம். ‘ஐஸ்’ காபியை அருந்தியபடி சூடு பிடிக்கிறது உரையாடல்.‘‘ சென்னையில் தரமணிக்கு அந்தப் பக்கம் புதிய சென்னை ஆரம்பமாகி விட்டது.
 மகாபலிபுரம், வேளச்சேரி, ஈ.சி.ஆர்... எல்லாத்திலும் நிறைய மாற்றம். ஐ.டி மக்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்னு பொறாமைப்பட்டது போய் அவர்களுக்காக பரிதாபப்படவும் வேண்டியிருக்கு. ஒருவித மல்ட்டி கல்ச்சரில் சிக்கித் தவிக்கக்கூடிய, இவர்களிடம் ஊடுருவிச் செல்லக்கூடிய உறவைப் பற்றிய கதைதான் ‘தரமணி’!’’ ‘‘காதல் படம்... அதுவும் உங்களிடமிருந்து என்றால்...?’’
‘‘மகத்தான காதல்னு ஒண்ணு இருக்கா? இருக்கிறது என்றால் அதை எப்படிக் கண்டுகொள்வது? அப்படி யாராவது கண்டுபிடித்து இருக்கிறார்களா? இதையெல்லாம் பேசற ஏஜ் ஓல்டு ஸ்டோரி. உலகம் தோன்றிய கணத்திலிருந்து ஆண், பெண் காதலித்து, திருமண பந்தத்தில் நுழைந்து, பல அர்த்தங்களில் கேள்வி கேட்கப்பட்டும் தீராதது காதல். ‘தரமணி’, முடிந்த அளவு அதற்கு விடை காண முயலும்!’’‘‘காதலின் சிக்கலான அம்சங்கள் பத்திப் பேசுமோ..?’’
 ‘‘ ‘தரமணி’யை ஆடியன்ஸ் ஃப்ரெண்ட்லின்னு சொல்லலாம். நிஜமாகவே வயதுக்கு வந்த எல்லோருமே சந்தித்த, சந்திக்கிற, சந்திக்கப் போகிற உருவச் சாயலில் உள்ள படம்தான் இது. ‘தங்க மீன்களு’க்கு குழந்தைகளோடு வந்து பார்த்துச் செல்ல முடிந்தது. ‘தரமணி’க்கு தயவுசெய்து குழந்தைகளோடு வராதீங்க! காதல்தான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று இன்னமும் நான் நம்புகிறேன். அதுதான் இயற்கை. காதல் மகத்தானது. அதற்கு பால், ஜாதி, மதம் கிடையாது. அது ஒரு பரம்பொருள்!’’
‘‘இப்படியெல்லாம் சொன்னால் இன்றைய இளைஞர்கள் சிரிக்கிறார்களே?’’‘‘உண்மையில் காதலை அருமையா பண்றவங்க அவங்கதான். நாம் ஒரு பொண்ணு பின்னாடி நடந்து போறதை காதல்னு நினைச்சோம். அசராமல் திரும்பத் திரும்ப கடிதம் எழுதுவதை காதல்னு கணக்கு பண்ணினோம். பேச மட்டுமே மூணு வருஷம் காத்திருந்தது காதல் எனப்பட்டது. பையன் காதல் சொன்னால் பெண்களுக்கு பதில் சொல்லத் தெரியாது... தெரிந்தாலும் பதில் சொல்லக்கூடாது என சமூகம் சொல்லியிருக்கும். கதிரின் ‘இதயம்’ தாண்டி, ‘ஓடிப்போலாமா’ வரை வந்தோம்.
நாம் பெண்களோடு பழகியதே இல்லை. இன்றைக்கு பசங்க பெண்களோடு பழகுறாங்க. தங்களை மாதிரியேதான் இவங்களும்னு அவங்களுக்குத் தெரியுது. பெரிய தேவதைன்னு மயக்கமெல்லாம் இப்ப இல்லை. நமக்கு பெண் உடலே தெரியாது. இன்னிக்கு டூ மச் ஆஃப் போர்னோகிராஃபி... காமம் கைபேசியிலேயே இருக்கு. அவங்களுக்குக் காதல்னா சிரிப்பு வரத்தான் செய்யும்.
கைபேசி வந்தபிறகு காதலைக் கண்டுபிடிக்கிறது இளைஞர்களுக்கே சவால்தான்!’’‘‘ஆண்ட்ரியாவின் கேரக்டர் தேசிய விருது அளவிற்கு இருக்குனு பேசிக்கிறாங்க...’’ ‘‘ஆங்கிலோ இந்தியப் பெண்தான் ஆண்ட்ரியா. ஆனா, அட்சர சுத்தமான தமிழ்ப் பேச்சு. அபாரமான உயரமே அழகு. படம் முடிகிற வரை ஸ்கிரிப்ட்டை அங்குலம் அங்குலமா ஞாபகம் வச்சுக்கிற நடிகை. இப்படி ஒரு நடிகையோடு படம் பண்றது ஈஸி.
ஒருநாள் கூட நேரம் தவறியது கிடையாது. நான் டயலாக்கை கடைசி மூணு நிமிஷத்திற்கு முன்னாடிதான் கொடுப்பேன். திடீர்னு ரோட்ல இறங்கி நடக்கணும்னா நடந்துடுவாங்க. ‘பர்மிஷன் வாங்கியிருக்கீங்களா, பாதுகாப்பு இருக்கா, யாராவது கையைப் பிடிச்சு இழுத்திட்டா என்ன பண்றது’ன்னு எந்தக் கேள்வியும் கிடையாது. தேசிய விருதெல்லாம் நாம் டிசைட் பண்றதில்லை. அவங்க அப்படி முடிவெடுத்தால் எனக்கு சந்தோஷமே!’’‘‘ ‘சவரக்கத்தி’... மிஷ்கினோடு அனுபவம் எப்படியிருக்கு?’’
‘‘ ‘தங்கமீன்களி’ல் நான் நடிச்சது விபத்து. என் கதை, வசனம், எனக்கு ஈஸி. தவிர எனக்கு வராததை படத்தில் வைக்கமாட்டேன். இப்ப கதையைப் புரிஞ்சிக்கிட்டு நடிக்கணும். அதை விடவும் கஷ்டம், இது காமெடி படம். திடீர்னு கூப்பிட்டு கதை சொன்னார். ‘ஆளை விடுங்க’ன்னு சொல்லிட்டேன். ‘உன்னை நடிக்க வைக்கலாம். அதை எங்கிட்டே விட்டுடு.
தெரியாம நான் கூப்பிடமாட்டேன்’னு சொன்னார். எனக்கு இங்கே எல்லாமே புதுசு. ராஜ்குமார் சந்தோஷிகிட்டே ஸ்கிரிப்ட் ரைட்டரா இருந்தேன். பாலுமகேந்திராகிட்ட ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் இரண்டு நாள் வேலை செய்தேன். இவ்வளவுதான் என் அனுபவம். நடிப்பு நல்லா வந்திருந்தா, டைரக்டர் மிஷ்கின் பொறுப்பு. இல்லாட்டா என் தப்பே!’’‘‘ஹீரோவா இருக்குறது எப்படி இருக்கு?’’
‘‘ரொம்ப நல்லாயிருக்கு. புக் கொண்டு போய் இடைவேளையில படிச்சுக்கிட்டே இருக்கலாம். ஆர்ட்டிஸ்டா இருக்கிறது பரம சுகம். ஜூஸ் கொடுப்பாங்க. டயத்தில் நல்ல ருசியான சாப்பாடு கெடைக்குது. நாம டைரக்டர்னு தலைக்கு மேலே கொஞ்சம் கர்வம் ஆடும். அதை கண்டுக்காம இருந்தா ரொம்ப ஈஸி. நான் நடிக்கிறது நல்லாயிருக்குன்னு வேற சொல்றார் மிஷ்கின். பார்க்கலாம்!’’
‘‘அடுத்து நீங்க எடுக்கப் போற படத்தில் எப்படி நடிக்கப் போகிறேன்னு கவலையா இருக்குனு சொல்றாரே மம்முட்டி!’’‘‘ஆச்சரியம். இப்பவும் இருக்கிற அந்தக் கவலைதான் அவருக்கு அழகு. பத்து வருஷமா என் மனதில் இருக்கிற கதை. என்னைப் பொறுத்தவரை மம்முட்டி, கமல், மனோஜ் பாஜ்பாய் இவர்களில் ஒருத்தரால்தான் அதைப் பண்ண முடியும். எனக்கு கமல் சார்கிட்டே போகத் தெரியாது.
மம்முட்டிக்குத் தெரிஞ்ச விவேக் என்ற நண்பரிடம் சொன்னேன். திடீர்னு மம்முட்டி என்னைக் கதை கேட்க அழைத்தார். 20 நிமிஷம்தான் சொன்னேன். அவ்வளவுதான் என்கிட்ட கதை இருந்துச்சு. பிடிச்சிருந்தா இதை விரிவுபடுத்துறேன்னு சொன்னேன். அடுத்த தடவை சந்திச்சு முழுசா கதையைச் சொன்னேன். அவ்வளவு நாள் கழிச்சும் முதல்ல சொன்ன கதையை ஞாபகம் வச்சிருந்தார்.
‘இந்த இடம் மாறியிருக்கே’ன்னு கேட்டார். ஆச்சரியம் தாங்க முடியலை. எனக்கு நடிக்கிறவங்களை கிணத்தில தள்ளுற மாதிரி தள்ளிவிட்டு ‘நடி’ன்னு சொல்லித்தான் பழக்கம். அவரை சந்தித்த ஏழு தடவையும் ஒவ்வொரு படிப்பினை இருக்கு. டிசம்பரில் படம் ஆரம்பமாகும். தேனப்பன் தயாரிக்கிறார். அது இன்னொரு திக்குமுக்காடல் அனுபவமா இருக்கும்!’’
- நா.கதிர்வேலன்
|